Jan 2018 – VKR

கையசைத்து விடைபெற்றாள் காலமகள் பதினேழாள்

காதலோ கசப்போ கடந்துபோம் என்றுசொல்லி

முக்காடிட்டே முகந்தெரியாள் ஆனாலும்

நட்போடு பதினெட்டை நாடு.

 

Advertisements

Oct 2017- Exchanges

 

போட்டுடைத்த குடம்

 

SKC:

பொத்தல் குடமாய்ப் போகுமிவ் வுடலை

நித்தம் பேணி நிலையென நம்பி

பித்தாய் அலைந்து புலம்பித் தவித்து

அத்தா! உன்னை அடி பணிந்திலனே!

 

BKR:

@SKC’:

 

பொத்தல் குடம்தான் உடலமென் றாலும்

அத்தன் அமரும் ஆலய மன்றோ

இத்தே கம்ஒரு கோவில் என்றே

சித்தர் மூலர் செப்பிய சொல்லும்

சத்திய மன்றோ கவிசே கரரே

நித்தமு மிதனைப் பேணியே நாமும்

பித்தனைப் பணிதல் பாவமு மாமோ?

சத்தில தென்றிதைத் தள்ளிவி டாது

முத்திக் குதவும் மூலப் பொருளாய்

வித்தகன் அருள்பெறப் பயனிடல் நலமே.

 

SKC’:

@BKR:

 

உடலை வருத்தி உரியோன் நினைந்து

சுடலை ஏகுமுன் சூக்குமம் அறிதல்

திடமாய் இல்லை தெளிவாம் இதுவே.

 

உடல் கொண்டு பேரின்பம்  உய்ந்தோர் குறைவே…

 

BKR:

 

உடலின் துணையின்றி விடுதலை சாத்தியமன்று.

உடலை வெறுத்தல் அவசியமில்லை. அது தவறான கருத்தும் கூட.

உடலின் உண்மையான உபயோகத்தை உணர்ந்து அதைத் தக்கபடி பேணி, அதை ஓடமாக்கிப் பிறவிக்கடல் தாண்டுவதே உரிய வழியும் யோகமுமாகும்.

உடல் பற்றிய உரிய கண்ணோட்டத்தால் ஊனுடம்பை ஆலய மாக்கி சீவனாகிய சிவனைப் பூசிப்பதே உடல் எடுத்ததன் நோக்கம்.

உண்மையான ஞானிகள் உடலை வெறுப்பதில்லை.

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்றதும் திருமூலர் தான்.

 

SKC’:

@  BKR:

ஆனால் ஞானிகள் உடலைப் பேணியதும் இல்லை.

 


 

நஞ்சுண்டன்

 

Rali:

 

நஞ்சுதின்ன வேண்டிகோடி

தேவர் ஒருபக்கம்

நஞ்சுதின்னா தீரென்று

தேவி ஒருபக்கம்

கெஞ்சநஞ்சை நெஞ்சின்மேல்

வைத்தாய் அவஸ்தையில்

மிஞ்சுவோர் உண்டோசொல்

உன்னை.

 

BKR:

@Rali:

 

நஞ்சுண்டான் அல்லற் கிரங்கினை நீவாழி

கொஞ்சமென் ஐயம் களைவாயே – நஞ்சுகண்

டஞ்சினரே அன்றியத் தேவர் சிவனையுண்ணக்

கெஞ்சியதாய்க் காதையுண்டோ கூறு.

 

Rali:

@BKR:

 

பயந்து அலறிய தேவர் இறைவா

தயவுசெய் என்றுசொல்ல வேண்டுமோ ஈசன்

பயந்தந்தான் நஞ்சுண்டு காத்து.

 

BKR:

@Rali:

 

விண்ணவர் வேண்டியதோ காத்திடுவா யென்பதே

உண்ணுதல் ஈசனே தேர்ந்தது – மன்னனவன்

ஆலத்தை ஆரமுதாய் மாற்றி யிருந்தாலும்

சாலப் பிழைத்திருப்பர் தேவர்.

 


 

ஞான முதல்வன்

 

Rali:

 

ஞான முதல்வன் கணேசன் இளையோனாம்

ஞானம் தரும்கந்தன் போட்டனரே போட்டியொரு

ஞானப் பழம்பெறவே இப்போட்டி வைத்தது

ஞானப் பிறப்பிடம் அம்பிகை ஈசனும்

ஞானக் கொழுந்தொன்று ஞானத்தை உண்பதால்

ஞானம் பெருகுமோ ஞானத்தின் மேலின்னும்

ஞானத்தைச் சேர்த்திடினும் ஞானமன்றோ மாந்தருக்கும்

வானவர்க்கும் மற்றவர்க்கும் சற்றும் விளங்காது

ஏனய்யா இப்படியோர் கூத்து.

 

BKR:

 

ஞானப் பழம்வென்ற மோனப் பொருளான

ஆனை முகத்தோன் அருகிருக்க – ஏனன்று

சிந்தியாது அஃதிழந்த கந்தனைத் தேடியந்த

மந்திரத்தைக் கேட்டான் சிவன்?

 

Rali:

 

ஞானமொழி குன்றுதோறும் பேசும் முருகன்

ஞானப் பழமின்றி போனால் சிறிதும்

ஞானநிலை குன்றுவானோ சொல்.

 

BKR:

@Rali:

 

ஈன்றோர் பெருமை எடுத்துரைக்க ஈசனவன்

சான்றீந்த நாடகமீ தென்றாலும்  – ஆன்றபொருள்

ஆனைமுகன் கண்டவிதம் ஆறுமுகன் காணாமல்

போனதுபோல் காட்டியதேன் கூறு.

 


 

ஊற்றுப் பெருக்கும் உப்பில்லா கவியும்

 

SKC’:

 

ஊற்றுப் பெருக்காய் உன் கவி மேலெழும்ப

ஆற்று மணலாய் அதிலங்கு யாம் நனைந்து

போற்றிப் புகழ்தலன்றி புனைதலுண்டோ கவிதை?

 

BKR:

@SKC’:

 

ஊற்றுப் பெருக்காக நீரெழும்பி மேல்வருதற்

காற்று மணல்தானே ஆதாரம் – சாற்றுதமிழ்ச்

சந்தக் கவியூற்றை யாம்சுவைக்கச் சந்திரனும்

இந்திரனும் தந்திடுவார் காண்.

 

SKC:

@BKR:

 

ஒப்பிலா உம் கவிதை உடன் வரக் கண்டு

உப்பு சப்பிலா எம் கவியும் ஓய்ந்ததே இன்று.

 

BKR:

 

அப்பன் அருளால் ஆனந்தப் பாவியற்றி

தப்பாமல் தந்துமகிழ் சேகரனே – உப்புசப்

பில்லாத துன்கவிதை என்றே தமிழுலகில்

சொல்லுவார் யாவருளர் கூறு.

 

குறையோ மிகையோ புகலாது பாடல்

முறையா யுரைக்கும் செயலால் – நிறைவாக

உப்பாது சப்பாது உண்மைதரும் உன்கவியே

உப்புச்சப் பில்லாக் கவி.

 

SKC:

@BKR:

 

செப்பினாய் நன்மொழி சிந்தை குளிர

அப்பனவன் அருளன்றி அவன்தன் மகன்

சுப்பனும் உடன் சேர சுரக்கும் தமிழ்க் கவியன்றோ?

 

SKC:

@BKR:

 

உப்பைக் குறைத்து உணவருந்த

செப்பினார் மருத்துவர் சிலகாலம்

உப்பிலாக் கவி எழுதிட இவரும்

ஒப்பவும் இல்லை ஒருநாளும்

தப்பில்லாமல் எழுதுமைய்யா

தானே வரும் பிற யாவும்

செப்பினான் எந்தை சிவபாலன்

தப்பாதவன் தன் தாள் பணிந்தேன்.

 


 

குப்பை வெளி

 

Rali :

 

நரகனாம் தன்மகனை என்றும் உலகம்

சரவெடி மத்தாப்பு விட்டுசதுர் தசியாம்

இரவில் மகிழ்ந்து புதுத்துணி போர்த்தி

தரமாய் இனிப்புண்டு எண்ணவைத்த தேவி

தரணியாம் பூமித்தாய் போற்றி.

 

 

Pithan:

 

நரகசதுர் தசியினிலே இரவினிலே கண்விழித்து

தரமானபுத் தாடையணிந்து

கரங்களிலே தீபமேந்தி

சரவெடிகள் படபடக்க

நரகாசுரனை நல்வதம் செய்த நாரணனை நாம்

கரங்குவித்து வணங்கிடுவோம்.

 

VKR:

 

நரகன் என்போன் நம்முறை காரிருள்,

கருமை போக்கிடும் அறிவே ஞாயிறு,

நொடியில் பளிச்சிடும் நுண்மனம் திறக்கவே,

விடியலில் ஏற்றுவோம் விளக்கை.

 

BKR:

@VKR:

 

பண்டிகையின் உட்கருத்தை

விண்டுரைத்தீர் நீர்வாழி!!

 

Rali :

 

இட்டிலியும் சாம்பாரும் மிக்சரும் லட்டுவும்

பட்டாசும் புத்தாடை எல்லாமும் எல்லோரும்

கட்டாயம்‌ பெற்று மகிழவைத்த பூதேவி

விட்டுவி டாதெம்மைக் கா.

 

 

தமிழின்ப அன்பர்காள் இந்நன்னாள் ஒவ்வோர்

நிமிஷமும் இன்பம் பெறுவீர்.

 

 

SKC:

 

சரம் சரமாய்க் கவிதை சக்கரமாய் கற்பனை

உரமாய் ஒரு ராலி உறுதுணையாய் நம் கீரன்

தருமே நல்மகிழ்வைத் தானிந்த நாளிதுவே.

 

தீவிளிக்குத் தீவிளி

பா விளிக்கும் VKR வாழ்க!

 

Ravindran K:

 

காது பிளந்தது வெடிஓசையிலே வீதி நிரம்பியது

வெடிக் குப்பையாலே வானம்

மறைந்தது மாயப் புகையாலே

வயிறு முட்டியது அளவறியாம

லுண்ட  தின்பண்டத்தாலே

மன முவகை கொண்டது அணிந்த  புது  உடையாலே களிப்பு

வந்தததெம் நண்பர் கூட்டத்தாலே

ஆயிரமா யிரம் ஆண்டாண்டாய் உவகை யோங்கி

இன்பம் பொங்கிட வந்ததே தீபாவளி!

ஒளிமிகு நன்னாளா மிது

இன்பம் பொங்கும் தீபாவளி!  சிறுவர் மகிழ்ந் தாடியோடிட

வந்திடு மானந்த தீபாவளி!

 

 

SKC:

 

தீபாவளி

குப்பை வெளி.

 

 

வானம் இங்கு வண்ணம் துறந்து

ஊனம் கொண்டது உயிரை இழந்து

காணும் வெளியில் கழிவை நிறைத்து

நாணும் இவர் செயலால் நலிவாய்த் தலை குனிந்து.

 

 

சுற்றுப் புறத்தை சுத்தப் படுத்த

முற்றும் அறிந்தோர் முன்னர் செப்ப

கற்றும் தெளியார் காதைப் பூட்டி

குற்றம் புரிந்தார் குப்பை கூட்டி.

 

 

Rali :

@SKC:

 

குப்பையே போடலா காதென்னும் எண்ணத்தை

அப்பனே மக்களுக்குத் தா.

 

 

பட்டாசு ஊரெல்லாம் மக்கள் வெடிக்கவே

கொட்டிக் கிடக்குதேடி குப்பைதீ பாவளி

மட்டுந்தான் காரண மோடிகல் லாதாரும்

பட்டம் படித்தோரும் சற்றும் அறிவிலாது

கொட்டுவேன் குப்பையை சாலையில் என்றின்றி

கொட்டுவேன் குப்பையை என்வீட்டுக் கென்றயிரு

தொட்டியில் என்றிருந்தால் எப்பவும் சாலையில்

கொட்டிக் கிடந்திடு மோடி.

 


 

சிந்தனையில் நிறை சிவன்

 

 

BKR:

 

மன்னவன் நான்மறை சொன்னவன் முடிவிலா

முன்னவன் இன்னமு தன்னவன் – பன்னிரு

கண்ணவன் சொன்னசொல் கொண்டவன் என்னையும்

இன்னருளால் ஈர்த்த சிவன்.

 

SKC:

@BKR:

 

அன்னவன் வேத முன்னவன் நமையாள்

தென்னவன் பிட்டு தின்னவன் புகழ்

சொன்னவன் நீ வாழி.

 

BKR:

 

வேழம் உரித்தணிந்தான் வேதம் விரித்துரைத்தான்

தோழனாய்ச் சுந்தரர்க்குத் தோள்கொடுத்தான் –

காழியின்

சம்பந்தர் பாடத் தமிழ்கொடுத்த சங்கரன்தான்

எம்பந்தம் போக்கும் சிவன்.

 

Rali :

@BKR:

 

சம்பந்தர் முன்தோடு பூண்டுநின்ற சீர்காழி

அம்பிகை நாதனுடன் பிள்ளை கணேசனும்

தம்பியும் வாழ்த்துவர் உன்னை.

 


 

ஒளிந்தும் ஒளியாமலும்

 

 

Rali :

 

ஏசிடுவாள் பார்வதி என்று ஒளிந்தகங்கை

வீசி சிகையைப் பரமனாட இங்கினி

பூசி மெழுகுதல் வீணென்று தெம்பாய்க்கை

வீசி நடந்தாள் மனிதரின் மாசுபோக்கக்

காசி நகருள் விரைந்தே.

 

 

BKR:

ராலிக்கு கங்கையின் விளக்கம்:

 

ஈசனிடம் பாசமுற்ற மாசில்லா தேவியவள்

ஏசுவா ளென்றஞ்சி ஓடவில்லை –  நேசித்தும்

காசித் தலத்தில் தனிநிற்கும் தம்பதியைப்

பேசி இணைக்கவந்தேன் நான்.

 

 

Rali :

@BKR:

 

 

கங்கை தன் வக்கீலுக்குச் சொல்லிக் கொள்வது.

” ஐயா வக்கீல், விஷயம் அதுவல்ல. கேளும்! ”

 

ஈசன் சடைக்குள் ஒளிந்திருந்தேன் சட்டென்று

ஈசன் சடைவிரித்து ஆடநான் எவ்விடம்

வாசம் புரிந்திருந் தேனென்று ஊரெல்லாம்

பேசவைத்துப் பார்த்தான் அரன்.

 

 

SKC:

 

ஒளிவதற்கு இடமில்லை உனக்கினி என்றே

களிநடம் ஈசன் புரிந்த காரணம் அதுவோ?

 


 

பொய்கை நாதன்

 

 

SKC:

 

நெருப்புப் பொறியாகி நீ இங்கு வெளியாகி

விருப்பமுடன் வாயு வேண்டி உனைச் சேர்க்க

பொறுப்புடை கன்னியர் பொய்கையில் உனைப் பேண

தருக்கின்றி நீயும் தான் மலையி லமர

மறக்கவும் இயலுமோ மால்மருகா உன் புகழை?

 

 

Rali :

@SKC:

 

 

ஆறுபொறி ஆகிப்பின் ஆறுமுகம் ஆனபொருள்

ஏறுமயி‌‌ லேறியுனைக் காப்பான்.

 


 

சோதனை மேல் சோதனை

 

Rali : ( மதுரை மணியின் ‘சேவிக்க வேண்டும் ஐயா சிதம்பரம்’ ஞாபகம் வந்த விளைவு)

 

சோதிக்க வேண்டுமா ஐயா சிதம்பர

ஆதிதேவா அன்பரைப் பாடாய்ப் படுத்தியேனும்

சோதிக்க வேண்டுமா ஐயா அடியார்கள்

சூதில்லா பக்தர்கள் ஐயாநீ செய்வது

நீதியாமோ ஐயாவுன் மேல்பக்தி கொண்டோரில்

பாதிப்பேர் ஓடிவிட்டார் ஐயா இருக்கிற

மீதிப்பேர் கேள்வியிது ஐயா.

 

SKC:

@Rali :

 

என்ன கவி பாடினாலும்

உந்தன் கவி போல் வருமோ ?

 

BKR:

@Rali :

 

சோதித்தான் உண்மை அவர்மேன்மை என்றேனும்

பாதிக்கச் செய்தானோ கூறு.

 


 

 

பாட்டுக்கு பாட்டெடுத்து

 

 

Rali :

 

இருந்த இடமே தெரியாது அண்டம்

திருந்த அழிப்பான் திரண்ட விஷத்தை

அருந்துவான் மாணிக்க வாசகரை அன்பாய்

குருந்த மரத்தின்கீழ் ஆட்கொள்வான் சற்றும்

திருந்தாத பாவிநான் என்பிறவி நோய்க்கு

மருந்தாவான் சேவடி போற்றி.

 

BKR:

ராலி மன்னிக்க!

உன் பாடலைப் பொருள் மாறாது என் பாணியில் எழுதிப் பார்த்தேன்😋😋😋

 

அண்டம் அழிப்பான் அழகே வடிவான

கண்டம் கருக்கவிஷம் – உண்பான்

மணிவா சகரையாட் கொள்வானென் சென்மப்

பிணிக்குமருந் தாவான் சிவன்.

 

Rali :

@BKR:

 

உன்பாணி போல்வருமோ என்பாணி நன்றுநன்று

என்பாருன் பாணிகண்டோர் யாரும்.

 


 

தூரத்தே நெருப்பு

 

Rali :

 

வாரமும் ஆனாய்நீ மாதமும் ஆனாய்நீ

நேரமும் ஆனாய்நீ நால்வகை வேதத்து

சாரமும் ஆனாய்நீ வீரமும் ஆனாய்நீ

தீரமும் ஆனாய்நீ கோரமும் ஆனாய்நீ

பாரமென்று எண்ணியென்னை நெஞ்சினில் ஈரமின்றி

தூரமாய் நிற்றல் முறையோ.

 

BKR:

@Rali :

 

சூரன் தமிழ்மதுரைக் காரன் விடநாக

ஹாரன் மதனசம் ஹாரன் சிரமதில்

நீரன் அடியவர்பால் ஈரன் துணைவராது

தூரனாய் நிற்பனோ சொல்.

 

Rali :

@BKR:

 

நாகஹா ரன்புகழ் பாடினாய் என்றும்நீ

ஏகநேகன் வாழ்த்தவே வாழி.

 


 

 

 

Sep 2017- Exchanges

 

நிலையாமை

 

Pithan:

 

கரணங்கள் போட்டாலும் மரணம் விட்டிடாது

சரணமெற்றே நாம்

பரமனைத் தொழுதிட்டால் பிறப்பிறப்பின்றி

பரமனில் கலந்திடலாம்.

 

Rali:

 

மரணத்தை எண்ணுவோம் பித்தனின் சொல்லாம்

மரணத்தை எண்ணுவோம் எத்தனை குட்டிக்

கரணங்கள் போட்டிடினும் நில்லா நெருங்கும்

மரணம் விடாதிங்கு நம்மை.

 

BKR:

 

ஒருகனவு நீங்கி மறுகனவு சேர்க்கும்

ஒருகதவு தானே மரணம்? – மரணம்கண்

டஞ்சாது அவ்வுறக்கம் விட்டு விழிப்புறவே

நஞ்சுண்டான் தாள்பணிவோம் நாம்.

 

தோற்றம் சதகோடி கூற்றம் சதகோடி

மாற்றமிலா இந்தச் சுழல்நடுவே – கூற்றம்கண்

டஞ்சோம் பிறவிச் சுழல்நீங்க ஈசன்தாள்

நெஞ்சில் பதித்திடுவோம் நாம்.

 


 

அரனின் நாடகம்

 

Rali :

 

அரவும் அதன்நஞ்சும் எல்லா உலகும்

இரவும் பகலும் படைத்தோனை எந்த

அரவுநஞ்சும் என்செய்யும் கங்கை ஒளித்த

அரன்செயல் இல்லாள் மறக்கவே போட்ட

பரமனின் நாடகம் என்பேன்.

 

BKR:

ராலிக்கு விடையோனின் விடை

 

கங்கை சடைகொண்டும் பொங்கு விடமுண்டும்

தங்கும் தரணியைநான் தாங்கிடினும் – பங்கான

நல்லாளை நம்பவைக்கும் நாடகமாய் நீகண்டாய்

பொல்லாக் கலியிதுவே காண்.

 


 

கூந்தலும் வேந்தனும்

 

Rali :

மறுத்தேன் மணமில்லை பெண்கூந் தலுக்கு

உறுதியாய்ச் சொல்கிறேன் தேவமாத ருக்கும்

நறுமணம் இல்லையென் றாலவரை ஈசன்

ஒறுத்திட லாமோடி அண்டத்து அன்னை

அறுசமய ஆதிமகள் பற்றியும் சொன்னால்

பொறுத்து இருக்கலா மோடி.

 

 

BKR:

 

ஐயத்தை வேந்தனோ வாய்விட் டுரைக்கவில்லை

ஐயம் தீர்ப்போர்க்கே ஆயிரம் பொன்னென்றான்

 

ஐயன் அளித்தகவி ஐயத்தைக் கண்டறிந்து

அரசன் அகமகிழ அரும்விளக்கம் தந்ததனால்

அகன்றதுஎன் ஐயமென  அரசனுமே கூறியங்கு

ஆவலுடன் தானளித்த ஆயிரம்பொன் பரிசதனை

அருந்தமிழை மேற்காட்டி நிறுத்துவது நேர்முறையோ?

 

போட்டியின் விதிமன்னன் மனக்கருத்தைக் குறிப்பறிந்து

வாட்டத்தைச் போக்குவதென் றறியாரோ அவைத்தலைவர்?

 

பரிசை வழங்கியபின் வேறோர் சபைகூட்டி

வரிவரியாய் வாதிடவே வரிந்துகச் சைகட்டி

அரிவையம் பாகனையே அவைக்கிழுத்தால் ஆகாதோ?

 

கூந்தலுக் கியற்கையாய் மணமில்லை யென்றால்

வேந்தர்க்குத் தானேபோய் விளக்கிடலாம் அன்றோ?

 

மன்னன் குறைதீர்க்க இயலாமை தானே

சொன்ன பதிலுக்குள் குறைகாணத் தூண்டியது?

 

தீக்கணன்தன் தேவிபற்றிச் சாற்றியதால் சீறவில்லை

 

முக்கூடல் தமிழவையில் முதற்புலவ னாயிருந்தும்

நக்கீரன் செய்தபிழை நாட்டினர றிந்திடவே

முக்கண்ணன் முன்னின்று முழுநீதி நாட்டினன்காண்!

 

Rali:

மன்னன் ‘பெண்கள் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?” என்று கேட்டதாகத் தான் இத்தனை நாள் நினைத்திருந்தேன்.

 

BKR:

 

அப்படி வெளிப்படையாகக் கேட்டிருந்தால் நக்கீரர் உடனே பதிலளித்திருப்பாரே!!

 

 

Rali :

@BKR:

 

உண்டென்றால் இல்லையே என்றுமில்லை என்றாலோ

உண்டென்றும் சொல்வதாய்த் திட்டமிட் டாரோநம்

பண்டைத் தமிழ்க்கீரன் அன்று?

 

BKR:

@Rali :

 

உளதை இலதென்றும் இன்றேல் உளதென்றும்

களவாய்க் கபடம் புரிந்து – பலவாறு

சிக்கலாய்த் திட்டம்தான் தீட்டுவரோ நக்கீரர்

சொக்கேச னுக்கே வெளிச்சம்.

 

Rali :

 

களித்திருளில் ஆடிடும் சொக்கனுக்கு எல்லாம்

வெளிச்சமே என்றும் உணர்.

 


 

தாயுமானவன்

 

Rali :

 

பேயுமஞ்சும் காட்டினில் மாயுமுயிர் சென்றபின்

தீயுமுடல் காயும் பிணத்திடை ஆடிடும்

தாயுமான ஈசன் துணை.

 

BKR:

@Rali :

 

சிரபுரத்து ஈசனைச் சிறப்புறப் பாடினாய்.

இருப்பினும்……………

 

தாயுமான ஈசனை நீயுமேத்திப் பாடினை

ஆயினுமோர் ஐயம் அடியனுக்கு – தீயினில்

காய்ந்து மடிவ துடலன்றி எக்காலும்

மாய்தல் உயிர்க்குண்டோ கூறு. .

 

Rali :

@BKR:

 

உயிர்:

குடித்தலும் உண்டே அழித்தலும் உண்டே

இடித்ததே மாய்ந்ததென் றால்.

 

SKC:

@ BKR:

 

சாயும் உடல் விடுத்து மாயம் உயிர் ஆவதை

மாயும் உயிர் என்பரோ தாயுமானவர் கவியில் ?

 

BKR:

@Rali :

 

உடலும் எரிந்து உயிரதுவும் மாயுமென்றால்

நடமிடுமீ சர்க்குத் துணையார்? – சுடுகாட்டில்

பேயனோ டாடிவரும் பேய்களெலாம் தீயினில்

மாயா உயிர்களன்றோ சொல்!

 

Rali :

@BKR:

 

துணையெதற்கு ஏகநேக ஈசனுக்கு நாதன்

துணையன்றோ எல்லா உயிர்க்கும்.

 


 

 நீத்தார் நினைவில் நீங்கார்

 

பித்தன்:

 

அரைத்திங்கள் ஆவணியில்

கரைகாணா நீத்தார்கள்

தரைநோக்கி வந்திடுவர்

முறையே நாமவர்க்கு

இரைத்திட்ட எள்நீரை

நிறைவாக ஏற்றிட்டு

குறைவின்றி நம்மை

நிறைவுடன் வாழவைப்பார்

நம்பிடுவோம் நிச்சயமாய்.

 

Rali :

@பித்தன்:

 

நீத்தாரின் தாகம் பசிதீர்க்கும் காலமிது

பித்தனின் சொல்கேட்போம் நாம்.

 

நீத்தார்வாழ் பூமியில் நர்த்தனம் செய்திடும்

கூத்தனடி போற்றுவோம் இன்று.

 


 

 

நீ பாதி நான் பாதி

 

 

SKC:

 

மாளாத காதல் நோயாளன் போல் மருந்துண்டும்

தாளாத தலைவலி தவிர்த்திலனே.

 

BKR:

@ SKC:

 

கோளாலே வாராது காணிது இல்லாள்சொல்

கேளாமை யாலே வரும்.

 

Ravindran K:

 

மழையும் காற்றும் வந்து போய் விடும்

நோயும் நொடியும் நம்மிடம் சடுதியில்  சேர்ந்திடும்

மனதை ஆட்டிப் படைத்து உடலை வாட்டி வதைத்து

நொந்தபின் ஒடிடும் கவலையைக் களை

நண்பா பொறுத்திருப்பாய் மாறிவிடும்.

 

Rali :

 

இருமி வருந்தலின் தூக்கம் மயக்கம்

தரும்மருந் துண்ணல் சிறப்பு.

 

Rali :

@BKR:

 

இல்லாள்சொல் கேளாது நோயில் விழுந்திடினும்

இல்லாள்சொல் கேட்டதால் நோயில் விழுந்திடினும்

இல்லாள்சொல் கேட்பது நன்று.

 

BKR:

 

இல்லாள்சொல் கேட்கும்நோய் கொண்டநற் கேள்வர்க்கு

இல்லாமை இல்லாது போம்.

 

SKC:

 

வம்பெதற்கு ஐயா வயதான காலத்தில்

நம்புவோம் நம் மனையாளை.

 

BKR:

@SKC:

 

நம்பியே கட்டியதால் நன்மையன்றி யேநமக்கு

வம்பு வருமோநீ கூறு.

 

SKC:

 

நம்பினார்க் கெடுவதில்லை

நான்கு மறைத் தீர்ப்பு.

 

Rali :

@SKC:

 

நலம்குன்றி நற்கவிதை பாடாத சேகர்

நலம்பெற்றாய் ஆயிரம் பாடு.

 

Rali :

@BKR:

 

ஆதியந்தம் இல்லான் அரனுக்கும் நம்முயிர்

பாதியாம் இல்லாள் அனைவரின் சார்பாயும்

வாதிடும் பீகேயார் வாழி.

 


 

 

Rali :

 

அன்று அகலிகை சாபம் அடைந்துபுகழ்

குன்றிய இந்திரன் பெண்ணை மனைவியாய்த்தன்

குன்றமர் பிள்ளைக்கீ சன்பார்க் கலாமோடி

அன்றுமுதல் இன்றுவரை எத்தனையோ இந்திரன்

சென்றனர் சம்பந்தி வேறொரு இந்திரன்

என்று இருக்கலா மோடி.

 

BKR:

@Rali :

 

இந்திரன் பெண்ணாள் குணவதி என்பதால்

கந்தனுக் கீசன் மணமுடித்தான் – சொந்த

மகளிருந்தால் ஈசன் வலியவே விண்ணோன்

மகனுக் களிப்பானோ கூறு.

 

Rali :

@BKR:

 

இதனால்‌ தாங்கள் மன்னருக்குக் கூற விரும்பும் கருத்து?

 

BKR:

 

தாயைப் போலப் பெண்

தந்தையைப் போல மகன்.