Sep 2017 – Shanthi

ஐந்தெழுத்து மந்திரம் கொண்டவர் ஒருவர்

எட்டெழுத்து மந்திரம் கொண்டவர் ஒருவர்

அடிமுடி காணாது நின்றது ஒருவர்

அளப்பறிய ரூபம் காட்டியது ஒருவர்

மாதுக்கொரு பாகம் ஈன்றவர் ஒருவர்

திருமார்பினில் தேவியைத் தரித்தவர் ஒருவர்

எல்லைக் காட்டில் களிநடம் புரிவதொருவர்

அலைகடல் மீதில் அறிதுயில் புரிவதொருவர்

சாம்பல் பூசித் திரிபவர் ஒருவர்

சாம்பல் நிறத்தில் இருப்பவர் ஒருவர்

சொக்கன் எனப்படுபவர் ஒருவர்

சொக்க வைக்கும் வடிவினர் ஒருவர்

அரவுதனை மாலையாய் அணிந்தவர் ஒருவர்

அரவணையின் மேல் துயில்பவர் ஒருவர்

பார்த்தனுக்கு அஸ்திரம் கொடுத்தவர் ஒருவர்

ரதம் செலுத்திய சாரதி ஒருவர்

அரனாய் அரியாய் நின்றபோதிலும்

இருவரும் ஒன்றென்று அறிந்திடுவோமே.

 

ஆதிமுதல் நாயகனின்

பாதி உருவானவளே

பூதியணி தேவி அனு

பூதி நிலை அருள்வாயே

 

திருவுடை நாதனவன்

திருமார்பில் உறைபவளே

கருணை பொழி கடைவிழியால்

திருவாழ்வு அருள்வாயே

 

வாகீசன் வாக்கிலுறை

வாக்தேவி கலைவாணி

வாக்கிலும் மனதிலும்

வந்தெமக்கு அருள்வாயே

 

மலைமகளும் அலைமகளும்

கலைமகளும் கூடியே

நிலமதனில் உறைவோர்க்கு

நலங்கள் பல அருள்வாரே

 

வெண்கலை இடையுடுத்தி

வெண்வீணை கையேந்தி

வெண்கமலத்தின் மிசை

வெண்கலையென ஒளிரும்

வேணி கலைவாணி நின்

கலையன்ன மனமும் சகல

கலைகளும் எமக்கருளி

கலையாது எமதகத்தே

கலைசூழ அமர்ந்திடுவாய்.

 

 

Advertisements

Jan 2017 – Rali – Venpa

ராலியின் வேண்வெண் முயற்சி #241:

நம்பிக்காய் பால்பழம்

    உண்டாய் உனதருமைத்

தம்பிக்காய்ப் பெண்ணைத்

    துரத்தினாய் ஔவையைத்

தும்பிக்கை ஏற்றி

    அனுப்பினாய் அப்பனே

நம்பினேன் கைவிடாதே

    என்னை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #242:

விற்பாய் விறகு

    நடந்து தெருத்தெருவாய்

விற்பாய் வளையலை

    வீடுவீடாய் மாணிக்கம்

விற்பாய் அரசனுக்குப்

    போதும் வியாபாரம்

கற்பிப்பாய் பக்தி

    எனக்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #243:

மதியாத மாமனாரும்

    காலால் மிதியும்

சதியென ஓடும்

    மகனும் முதுகில்

பதிந்த பிரம்படியும்

    தன்தலைநீ கிள்ள

விதியின் சதியாம்

    கவனி.

(விதி = ப்ரஹ்மா.  ப்ரஹ்மாவுக்கு 5 தலைகள். அவர் பொய் சொன்னதால் ஸ்வாமி ஒரு தலையைக் கிள்ளி விட்டார்)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #244:

எளிதில் களிக்கும்

    தனிகுணமும் வெள்ளைப்

பளிங்கொத்த மேனியும்

    கல்லால் அடியில்

தெளிவூட்டும் மோனமும்

    தேவ நதிநீர்

தெளிக்கும் சடையும்

    கழுத்தை வளைத்து

நெளிந்திடும் பாம்பும்

    அணிவாய் அருள்வாய்

துளியேனும் பக்தி

    எனக்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #248:

யாரும் வராத

    அமைதி நிலவுமிடம்

ஊருக்கு அப்பால்

    மயானமென்று போனாய்நீ

தீருமுயிர் தீர்ந்தபின்

    நிச்சயம் அத்தனை

பேரும் வருவோமே

    அங்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #249:

படமெடுத்து என்னுள்ளே

    உன்னை நிறுத்தி

விடவிடாது ஆடுமுன்

    திட்டம் அறிந்தேன்

படமெடுக்க மாட்டேன்

    பயமின்றி உந்தன்

நடனம் நிறுத்தி

    அமர்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #250:

நான்யாரென் றேகேட்டுப்

    பேருண்மை காணுதல்

தான்வாழ்வில் பேரின்பம்

    என்றுரைத்த மெய்ஞ்ஞானக்

கோன்ரமணா உன்னடி

    போற்றி.

 

 

நூல்கோத்த ஊசியின்

    பின்னே அறுந்திடாது

நூல்போகச் செய்யிறை

    வாழி.

 

வங்கக் கடல்கடைந்த

    மாதவன் ஆசியவன்

தங்கை மணாளனென்

    நாதனீசன் ஆசியுடன்

செங்கதிர் சூரியன்

    ஆசிசேர்ந்து பொங்கட்டும்

மங்களம் எங்கும்

   மிகவே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #253:

ஏகா அநேகா

    திருவடி வேண்டினேன்

மாகாளி தோற்கவெட்டா

    தூரம்கால் தூக்கினாய்

ஆகாது நான்தொடல்

    என்றே உமையொரு

பாகா மறுகால்

    தொலைத்தாய்.

 

@ தமிழின்ப அன்பர்காள்:

தமிழின்ப அன்பர்கள்

    இல்லத்தே பொங்கட்டும்

தமிழுடன் பொங்கலும்

    சேர்ந்து.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #254:

நெகிழ்ந்துனைப் பாடிய

    சுந்தரர் வாட

மகிழ மரத்தில்

    ஒளிந்தவரை ஏய்த்து

மகிழ்நல் மனத்துடையோன்

    வாழி.

 

⁠⁠⁠ராலியின் வேண்வெண் முயற்சி #256:

தருமத்தின் மேன்மை

    அறிவோம் இறைவன்

வருதல் உலகில்

    முயன்று உழைத்தல்

தருமத்தைக் காக்கவே

    என்றுணர்ந்து காப்போம்

தருமம் உயர்ந்தது

    என்றே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #257:

ஆனந்தத் தாண்டவம்

    கண்டதும் கண்ணனும்

ஆனந்தம் கொள்ளநீ

    கண்ணனின் காளிங்க

ஆனந்த நாட்டியம்

    கண்டுவக்க வந்தது

ஆனந்த பக்திபாவம்

    மண்ணில்.

 

அவல்தந்த ஏழை

    குசேலனுக்குக் கண்ணா

நவநிதி தந்தாய்நீ

    வாழி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #259:

விண்ணில் வளரும்

    பிறைமதியும் விண்ணின்கீழ்

மண்ணில் வளரும்

    இறைநதியும் மண்ணின்கீழ்

மண்ணுள் வளரும்

    இரைப்பாம்பும் மேலணிந்து

அண்ணலிம் மூவுலகும்

    காப்பான்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #260:

ஒருபிள்ளை அத்தை

    கணவனைக் குட்ட

ஒருபிள்ளை மாமா

    கரணமிடச் செய்ய

ஒருதலையை மைத்துனன்

    வாடநீ கிள்ள

இருமாது சக்களத்தி

    சண்டை இடவுன்

திருக்குடும்பம் தெய்வீகம்

    தான்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #262:

பாண்டியன் வேண்ட

    இடதுகால் தூக்கிய

தாண்டவம் மாற்றி

    வலதுகால் தூக்கிய

தாண்டவம் செய்தருள்

    செய்த மதுரைவாழ்

ஆண்டவா உன்னிருகால்

    போற்றி.

 

⁠⁠⁠ராலியின் வேண்வெண் முயற்சி #263:

தாழ்ந்தது உன்னுலகு

    என்றே அகத்தியனை

வாழ்த்திநீ இவ்வுலகு

    தாழ்த்த அனுப்பினாய்

தாழ்ந்துதாழ்ந்து தாழ்ந்தேதான்

    போனது போதுமையா

தாழ்த்தியது வேண்டும்

    உயர்த்த.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #264:

சம்பந்தி வேடுவன்

    வந்தமைந்த இன்னொரு

சம்பந்தி சாபம்

    பலபெற்ற இந்திரன்

சம்பந்தம் எல்லாம்

    சம்மதமே என்றாலென்

சம்பந்தம் வேண்டாம்

    எனாதே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #266:

வறுத்தும் வினையொரு

    நாளொழியும் என்று

பொறுத்தாரே பூமியாள்வார்

    காண்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #268:

சிரித்தாய் குமிண்சிரிப்பாய்

    மூன்று புரத்தை

எரித்தாய் மதயானை

    போர்த்திய தோலை

உரித்தாய் பெருமானே

     நால்வர் அறிய

விரித்தாய் மறைப்பொருள்

    அன்று.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #270:

இருமணம் கண்ட

    பொழுதும் முதலில்

ஒருமணம் கண்ட

    பொழுதும் இராத

ஒருசுகம் கண்டாயோ

    ஆண்டியாய்க் கந்தா

ஒருவனாய் நின்ற

    பொழுது.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #271:

தனித்துநான் யாவுமாய்

    நின்றபோதும் இன்றும்

பனித்தலையன் பாதம்

    துணை.

 

 

 

 

Dec 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #186:

பெண்ணை இடம்வைத்தாய்

      நில்லாது ஓடுமொரு

பெண்ணைத் தலைக்குமேல்

      வைத்தாயுன் மார்பினில்

மண்ணிலூறும் பாம்பையே

      வைத்தாய் எனக்குமிடம்

வெண்நாவல் உள்ளானே

      தா.

 

Suresh:

சொல்லத் தரமோ

சொல்லிறந்த பரம்பொருளை

வெல்லத் தகுமோ

ஓயாத பிறவித்தளை

உள்ளம் புகுமோ

உலகாளும் ஈசனருள்

இன்னும் வரமோ

ஏதெனினும் யான்வேண்டேன்.

 

Suresh:

அண்டத்தி லுள்ளவை எவையோ வவையே

பிண்டத்தி லுண்டுகாண் என்றன னென்பாட்டன்

அண்டத்தி னொருகூறும் அறந்தி லேன் யான்

பிண்டத்தை இதுகாறும் பேணவும் செய்திலேன்

கண்டத்தில் திருநீலம் கொண்டவெம் சிவனே

தொண்டனெனக் கொருவழியைக் கூறுவாய் பரனே.

 

பித்தன் 117.

(ஒரு சிலேடைக் கவிதை)

சனிநீராடினால் சங்கடங்கள் ஏதுமில்லை

சனிநீராடினால் சங்கடங்கள் சேர்ந்திடும்

தனித்தவம் புவனத்தில் செய்திட்டாலும்

தனித்தவம் புவனத்தில் ஏதுமில்லை.

 

பித்தன் 119.

ஏன் மரமாய் நிற்கின்றாய் என்பர்

இன்னமும் உன் மனம் என்ன கல்லா என்பர்

இன்னமும் மாடாய் உழைக்கச் சொல்வர்

உன் தலையில் களி மண்ணா என்பர்

தன் மனைவியைச் சனி என்றும்

தன் மகனைக் கழுதை என்றும் கூறுவர்

ஆண்டவன் படைப்பில் அனைத்தும்

ஒன்றென்று அறியாதவர்.

 

பித்தன் 120.

கருவினுள்ளே நம்மைக் காத்திடுவான் இறைவன்

உருவம் வெளி வந்தவுடன் காத்திடுவாள் அன்னை

பருவம்நாம் அடையும் வரை காத்திடுவார் தந்தை

பருவம் நாம் அடைந்த உடன் அணைத்திடுவாள் மனைவி

உருவமிது தேயும்போது காத்திடுவான் மகன்

உருமாறி நாம் செல்லும் போது உடனிருப்பான் இறைவன்.

ஒருவன் ஆதியுமந்தமும் இறைவன் கையில்.

 

பித்தன் 121.

கார்த்திகைத் திருநாளாம் களிப்படையும் நன்னாளாம்

கார்த்திகேயன் தந்தைக்கு உபதேசித்த நன்னாளாம்

ஓர் அடியில் வாமனன் மாபலியை உயர்த்திட்ட நன்னாளாம்

வார்த்தெடுத்த செம் பொன்னாய் வளர்ந்திட்ட சிவனை

பார்த்திடவே பிரமனும் பெருமாளும் சென்ற நன்னாளாம்

பார்புகழும் ராலித் தமிழின்ப நண்பர்கள் சேர்ந்தெழுதும் கவிதைகளை

நேர்த்தியாக இறைவன் ஏற்றிடும் நன்னாளாம்.

 

Suresh:

இருண் டவானி லுதித்ததோ ரிரவிபோல்

மருண்ட மான்மழு விரலிடை ஏந்தியே

பொருளினை யுரைத்துப் பொருளாய் நின்ற

அருளொளி சிவனே அருணா சலனே.

 

SKC:

நந்தியின் கழுத்தைப் பற்றி

நயமுறச் செவியில் ஓதி

மந்தையாய்க் கூடி நின்று

மாலைகள் கையில் ஏந்தி

விந்தையாம் மனிதர் இவரும்

வேண்டுதல் செய்யக் கண்டு

நொந்தவர் நந்தி யங்கு

நோக்கியே உம்மை வேண்ட

அந்தகம் வரும் வேளை

அடி பணிந்தே இங்கு

முந்தியே முறையிட்டோரின்

முன்வினை தீர்த்தருள்வாய்

எந்தையே எம்பிரானே!

இவரோடு இணைந்தேன் நானே!

 

SKC:

பாவை நோன்பிருந்து பாரதக் கண்ணனை

சேவித்து எழுந்து செம்மண் கோலமிட்டு – நாவில்

பாசுரங்கள் பல கூறி பரந்தாமனைப் போற்றும்

மாசிலா மங்கையிவள் காண்.

 

SKC:

வாசலில் கோலமிட்டு வண்ண மலர் சூட்டி

பாசவேர் அறுக்கும் பரம்பொருள் உனைப் பற்றி

வீசும் பனிக் காற்றில் வேண்டி நான் பூசித்தேன் என்

ஆசை தொலைப்பதற்கு அருள்வாய் பெருமானே.

 

SKC:

முன்பிணியாம் மோகத்தை

முற்றும் நான் தொலைத்து

முன்னவனின் மூத்தவனின்

முறைமாமன் உனைக் கண்டு

முன்பனியில் மோகித்தேன்

முழுநிலவாம் நினதெழிலில் உன்

முன் பணியா மூடரிவர்

முன்வினையும் தீர்த்து அருள்வாய்.

பித்தன் 122.

ஆதவன் உதிக்குமுன் அதிகாலைத் துயிலெழுந்து

மாதங்களில் சிறந்த கண்ணனை மனதிற்கொண்டு

பேதமின்றி தோழிகள் பலர் புடைசூழ

வேதத்தின் பொருளான பாசுரம் தனையுதிர்த்து

நாதரூபமாய் நன்னாளில் அரங்கனுடன் கலந்த

கோத மாதாவை நாம் போற்றிப் பணிந்திடுவோம்.

 

SKC:

பொல்லாத புயலில் புரண் டங்கு

தள்ளாத மரங்கள் தவித் திருக்க

இல்லாத மின்சாரம் எனை வருத்த

செல்லாத நோட்டும் சீர் குலைக்க வாழ்வில்

எல்லாம் முடிந்தது என்றே இவ்வேளை

சொல்லாமல் போனாலும் சுகமே.

 

BKR:

திரியப் பழுதாகும் பால்போல் வெளியே

திரியப் பழுதாகும் உள்ளம் – திரியா

துறையத் தயிராகும் பால்போலத் தன்னுள்

உறையுமனம் மேன்மை பெறும்.

 

Suresh l:

ஆண்டு வரும் போகும் கடந்து

ஆண்ட வரும் மாறிடுவர் அதுபோலே

யாண்டும் மாறாதே நங்கள் திருப்பாவை

தீண்டாத் திருமேனி அரங்கன் மேல் நப்பின்னை

ஆண்டாள் தமிழ்ப்பாவை கொண்ட திருக்காதல்

வேண்டு வரம் பெற யானும்  வேண்டுவன்

மீண்டு வொருபிறவி மாயா மேதினியில்

வேண்டா வெனவே யிறைஞ்சி நின்பாதம்

ஈண்டு வுனைத் தொழுதேன் எமக்கருள்வாய்

ஆண்ட வனேவேங் கடவா ஆதிமூலா

பாண்டவனின் பார்த்த சாரதியே பதமருள்வாய்.

 

Gopi:

சிரிப்பால் சகல உலகையும்

சினத்துடன் சீரழித்த சூரறை

சுக்குசுக்காக்கிய சீரன்

காதலனை கண்டும்காணாக்

கண்பார்வையால் காக்கும்

கமலக்கண்ணாள் முறுவலில் கவிழ்ந்தானே!

 

SKC:

ஆரத்தி எடுத்துப் பின் ஆராதனை செய்து உளம்

தேறத் துதித்து திருச்சீரலை உறை

சூரத்தலை கொய்த சுப்பிர மணியனின்

வீரத்தை வியந்து வேண்டி நின்றேனே!

 

Rali: @சுரேஷ்:

கோவர்தன கிரிதாரி கோகுல புரவாசி

கோவிந்தன் நினைவு வராத வாழ்வென்ன

வாழ்வு?