Jun 2017 – Suresh

வாலைச் சுட்டதீயாலொரு

வம்சம் அழிந்ததுகரி

காலைச் சுட்டதீயாலொரு

கல்லணை பிறந்ததுபாவை

மாலைசுட்ட தீயாய்

அரங்கனில் கலந்ததின்று

சேலை சுட்டதீயில்

சென்னை தீய்ந்தது.

 

தீயது பற்றித்

தீயது விலகுமோ?

தீயது பற்றித்

தீயது அழியுமாம்

தீயது பற்றித்

திருவளர் மேனி

தீயுமுன் பற்றுக

திருமலர்த் திருவடி.

 

நீறுதான் பூத்ததோ

நீருந்தான் போதுமோ

நீரதே உணவென்றநிலை

நேருமோ நெசவாளிக்கு

நீயிதை விதியென்பாயோ

விளம்பிடு ஹேவிளம்பி

 

தணலெறி ஞாயிறு

கண்ணுத லாகி

தண்ணொளி இருவிழி

திங்களு மாகி

சிறுநகை செவ்வாய்

இதழ்க்கடை தேக்கி

பரவழி விழைவார்க்

கற்புத னாகி

குரவர்க ளருள்கவி

யாழனு மாகி

சிரமெனும் வெள்ளிப்

பனித்தலை உடையவன்

சிரமங்கள் தருசனி

விலக்கிட வருக

 

பிச்சை பிழையல்ல

பேணுமொரு தர்மமாம்கேள்

பரமனே யாயினும்

பாமர னாயினும்

சாத்திரம் உரைத்திடும்

ஆத்திரம் தவிர்த்திடு

பாத்திரம் அறிந்திடு

பிச்சை யெனப்பெற்றான்

ஒருசிறுவன் சிறுநெல்லி

பிச்சை யெனக்கேட்டான்

அரசகுரு பெருவிரலை

கர்ணன் கவச

குண்டல மிழந்ததும்

கண்ணனின் மாயையால்

பண்ணிய வெல்லாப்

புண்ணியம் ஈந்துபின்

இன்னுயிர் இழந்ததும்

மகுட மிழந்தேராமன்

மரவுரி தரித்ததும்

கோட்டினைத் தாண்டிசீதை

கேட்டினை அடைந்ததும்

மாவலியின் சிரமதனில்

மாலவனின் காலடியென

நீளுமிவ் வரலாறு

என்றாலும் நேரிழையே

இட்டார் பெரியோராம்

இடாதார் இழிகுலமாம்

இட்டுவிடு இருகரமும்

ஏந்தியொரு ஏழைவர

கிட்டுவது என்றுனக்கும்

பொன்நெல்லி யாகட்டும்.

 

இருதார மவனுக்குண்டு

இருபிள்ளை யவையாண்பிள்ளை

இருப்பது குளுகுளு இமயம்

இருள் இல்லை

தலையில் மதியன்

பெரு நெருப்

புடையான் கண்ணில்

மறுபேச்சு சொல்வாரில்லை

இன்னும் என்ன

குறைதான் கண்டீர்

இறைவனாம் சிவனின்

வாழ்வில்?

 

இரண்டொரு வார்த்தைசொல்லி

இருமுக மத்தளமானேன்

இனியுமொரு முறைதான்சிவனை

குறைகூறத் துணிவேனோசொல்

 

சதியினால் சரிந்திடாரே

சனியினால் கலங்கிடாரே

விதியினை மாற்றும்திருகண

பதிகாதை அறியாயோநீ?

 

தென்னாட்டுடைய சிவனையெவரும்

பண்ணாலடித்தால் சினந்தேயெழுவார்

 

ஒரு பழம் காட்டித்தானே

இருவரை அனுப்பிவிட்டு

புருவவில் நல்லாளோடு

இருந்திட விழைந்தானெந்தை

 

பாதியை யுமைக் களித்தான் தனது

மீதியை ஈந்தான் பரந்தா மனுக்கு

ஆதியு மந்தமு மீதியுமிலா னெனினும்

நாதியவனேயாவான் நமக்கென்றும்

சோதியுருவான சிவன்

 

வீதியில் ஓடேந்தி இரந்து உண்டானவன்

வாதினில் தோற்று கீரனுக் கருதினான்

ஆதிசேடனின் ஆயிரநாவினால்

ஓதியுரைக்க வொண்ணா

சோதியுருவான சிவன்

 

 

தோரண மாயிரம் சூடிய கூடலில்

வாரண மாயிரம் வரிசையில் வணங்கிட

பூரண பொற்குடம் போலவாம் மங்கை

நாரணன் தங்கை நற்கரம் பற்றினன்.

 

ஆயிர மாயிரம் பேரிகை முழங்கிட

பாயிர மாயிரம் அடியவர் பாடிட

வேயுறு தோளினள் சாய்ந்திடு மார்பினன்

பெய்திட பூமழை தீவலம் வந்தனன்

 

நாரணன் கொண்டிட மீதியைத் தந்தவன்

காரண காரியம் ஆனவன் பூரணன்

நாணமாம் அணிபுனை நங்கைமீ னாளெனும்

ஆரணங் கவளொடு மாலைகள் மாற்றினான்

 

தாயவள் திருக்கரம் மாயவன் தந்திட

தாயுமா னவனதைத் தன்கரம் ஏந்திட

தாயவள் திருமணம் சேயவர் காண்பரோ

நாயினேன் கண்டிலேன் நானிலம் கண்டதை.

 

மத்தளம் ஒலித்திட மலர்மழை பொழிந்திட

நித்திலம் பிழைத்திடு பாண்டியன் மகளவள்

கைத்தலம் பற்றிநாண் கழுத்தினில் சூட்டியே

வைத்தனன் குங்குமம் வையகம் வாழ்த்திட

 

அஞ்சன மையிடு

அஞ்சுக விழிமலர்

தஞ்சமென் றுறைந்தவள்

நெஞ்சகம் நிறைந்தவன்

பிஞ்சொரு பாலகன்

அஞ்சியே கெஞ்சிட

வெஞ்சினம் கொண்டொரு

கூற்றினை அழித்தவன்

மஞ்சன தரிசனம்

மனமதில் நிறைந்திட

எஞ்சிய நாளிதை

எண்ணியே கழிந்திட

அஞ்செழுத் தையேநின்

ஆடலும் கண்டிட

கொஞ்சமே னும்கருணை

கொண்டெம்மை காத்தருள்வாய்

 

 

May 2017 – Suresh

மாதம் மும்மாரி பேராசை கொண்டிலேம்

போதும் ஒருமாரி என்றே இறைஞ்சினோம்

ஏதுமறி யாதவள்போல் ஏனிந்த நாடகமோ

சூதறியா சனம்மகிழ பொழிந்திடுக தேன்மாரி

 

நல்லவர் பொருட்டிங்கு

அல்லவர்க்கும் பெய்யுமாம்

வல்லவர் கூறிய

நல்லறம் அறிந்தோம்.

நல்லதோர் மானிடர்

இல்லையோ ஆயினும்

புல்லுண்டு பூவுண்டு

நல்லபல நிழல்மரங்கள்

சொல்லொணாத் துயருற்று

அல்லாடும் விலங்கினங்கள்

பொல்லாத வெயிலில்

நில்லாமல் ஊர்வனவும்

நல்லுயிராம் இன்னபிற

பல்லுயிரும் வாழ்ந்திடவும்

சில்லென்று மழைபொழிய

சிவனருளை வேண்டுவனே.

 

உடனிருக்கும் சிவனை உள்ளுணர்நதார் தமக்கு

கடனில்லை வேண்டு வது

 

குழவியும் மழலையில் கவிதரக் காரணன்

நிழல்தரு ஆலின் கீழமர் பூரணன்

அழலது இருகர மேந்திய சூரனின்

கழலது பற்றிக் கடைத்தே றாமல்

உழல்வதே வாழ்வென உறுதி கொள்வாரோ?

 

திருவடி யொன்று திகம்பர வெளியினில்

மறுவடி கீழே மண்ணுயிர் காத்திட

சிறகடி சிறுகிளி சிரமது அறியுமோ?

புதரடி நாகமும் பதமலர் காணுமோ?

மறுபடி மறுபடி பிறவிகள் விழையார்

குருவடி பற்றிட திருவடி காணுவார்.

 

தொண்டு உனக்கேதும் செய்து அறியாது

உண்டு உறங்கி வீணாய் வாழ்ந்தேன்

வண்டு உருவாகிக் கனியைக் காலன் கவரும் முன்னே

அண்டுவ துன்பாதம் அருளிச் செய்கவே.

 

 

 

 

Apr 2017 – Suresh

ஒரு பாலன் அபயம்கேட்க

உடனோடிக் கூற்றழித்தாய்

ஒரு குழவி அழுகை கேட்டு

நினைந்தோடிப் பாலளித்தாய்

ஒரு மாதின் சேயைக்காக்க

விரைந்தோடித் தாயுமானாய்

இதுகாறும் நானும் கேட்டும்

இரங்கிவரும் நாளென்னாளோ?

 

புனைந்தெழுத வல்லேன் அல்லேன் சிவனருளால்

நனைந்தெழுது நற்பேறு நான் பெற்றேன்  அல்லேன்

நினைந்தழுத குழவிக்கு நீயமு தளித்தவாறே

உறைந்துவிடு முன்னரிவ் வடியவனைக் காத்திடவும்

விரைந்து விடையேறி வருக.

 

வேண்டாம லீவான்தான்

வெண்பிறை யணிந்தோன்

வேண்டாம லிருக்குமோ

சேய்?

 

கண்டவரும் விண்டவரும்

தண்டமிடு தாயுமவன்

கண்டமதில் கருநீலம்

கொண்டதொரு குலம்காக்க

கண்டரவர் திருநீலர்பிற

தொண்டரவர் துயர்நீக்க

கண்டமணி விடையேறி

சண்டியொடு வருகவே.

 

ஈவானும் அவனே ஈந்து மீந்து

ஈவா னவனும் சிவனே.

 

தள்ளாடும் கள்ளுண்ட பொன்வண்டு தள்ளாடும்

உள்ளாடும் உறவெண்ணி நிறைமாது தள்ளாடும்

தள்ளாடும் தென்றலிடை நதிநாணல் தள்ளாடும்

கண்ணோடு கண் நோக்க இறைநெஞ்சும் தள்ளாடும்.

 

துள்ளுநடை தெள்ளுதமிழ்

பள்ளுகவிப் பாக்கள்பல

வெள்ளமெனப் பெருகிவர

கொள்ளிடமோ தமிழின்பம்?

 

தும்பிக்கை யானைத் தொழுது நல்லதொரு

நம்பிக்கை தானுடனே துவக்கிடுவோ மிந்நாளை

கோரப்புயல் வெள்ளமென வேரருத்தாள்  துர்முகியே

பாரத்தனையும் செழிக்க பாரியென வான்பொழிய

பேரெடுக்க வந்தவளே விளம்பியே நீவருக.