Feb 2018 – Rali – Venpa – Modi

ராலியின் வேண்வெண் முயற்சி #637:

பந்தமறு என்றுவேதம் சொல்லியும் பார்வதி

கந்தனண்ணன் என்றுயீசன் வாழலா மோடிகேள்

வெந்தபூமி தன்னிலே பந்தமின்றி ஆடுதலை

எந்தநாளும் எண்ணவேண்டா மோடி.

Advertisements

Feb 2018 – Rali – Venpa

அன்னநடை ஆஹாயென் பார்பேத்தி தத்திவரும்

சின்னநடை காணா தவர்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #636:

ஆறணி ஆண்டவன்

    மாறவைத்த பார்வதி

கூறணி மேனியன்

    சீறரவம் சிந்துநஞ்சுச்

சாறணி சீதளன்

    மீறவொண்ணா மூத்தவன்

சோறணி சோதியன்

    பேறனைத்தும் தந்திடும்

நீறணி நாதன்

    துணை.

 

அவனியில் உண்டோ அழகு குழந்தை

தவழ்ந்துவரும் காட்சியைப் போல்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #638:

துளைக்கர பிள்ளையும் செந்தமிழ் கேட்டு

திளைத்திடும் கந்தனும் நந்தியும் சூழ

வளைக்கர வஞ்சியுடன் எல்லோர்க்கும் முன்னே

முளைத்திடும் மன்னன் துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #639:

உருகும் பனிமலை வாழ்மகள் எண்ணி

உருகும் அழகன் பிரமன் தலையைத்

திருகும் திலகன் அமரரின் கங்கை

பெருகும் நதிநீர் நிறைக்கும் சடையன்

முருகும் அறிவும் உடைத்தோன் தகப்பன்

சருகும் தொடாது அமர்ந்தாள் அரசன்

பருகும் விடத்தை உமையாள் தடுக்க

கருகும் கழுத்தன்  துணை.

 

பாடும் புலவராம் உங்களன்பு பெற்றேன்

நீடூழி வாழ்வீரே நீவிர்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #640:

விண்ணுளான் ஈரேழு

    மண்ணுளான் பர்வதப்

பெண்ணுளான் வேதத்தின்

    கண்ணுளான் நால்வரின்

பண்ணுளான் மேனியில்

    புண்ணுளான் போற்றிடும்

தண்ணுளான் கீழுளான்

    அண்ணுளான் எப்போதும்

தெண்ணுளான் ஐந்தெனும்

    எண்ணுளான் நெற்றியில்

கண்ணுளான் பாதம்

    துணை.

(அண் = மேல்; தெண் = தெளிவு)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #641:

விரிவான் எவர்க்கும்

    புரியான் நுதல்கண்

பொரிவான் உமையைப்

    பிரியான் மறையில்

தெரிவான் அழிவில்

    மரியான் மயானம்

திரிவான் பதங்கள்

    துணை.

 

நரியைப் பரியாக்கி மன்னனின் கோபம்

சரியான பின்னே மறுபடி ஏனோ

நரியாக்கி வாட்டுவான் பித்தன்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #642:

சுட்டமேனி சாம்பலைப் பூசிடும் சேகரன்

சட்டமெல்லாம் சொல்லும் மறைகாட்டும் மாயவன்

அட்டதிக்கு மட்டும் அணிந்திடும் ஆண்டவன்

கெட்ட அரக்கன் புயங்கள் நெரித்தவன்

தொட்டமன்னன் மேலும் அடிவிழச் செய்தவன்

வட்டமிட்ட பிள்ளைக்கு மாங்கனி தந்தவன்

சுட்டபழம் என்றகந்தன் பாடமொன்று கேட்டவன்

திட்டமிட்ட சுந்தரர் ஏமாறச் செய்தவன்

எட்டநின்ற நந்தனை உள்ளே அழைத்தவன்

நட்டமாடும் நம்பன்  துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #643:

அரையில் அரவம்  அணியும் இமய

வரைமகள் வேந்தன் இலங்கை அரசன்

இரைக்க நெரித்த நிகமாந்த நேயன்

கரையிலா பாலாம் கடலை அமரர்

அரைக்கப் பிறந்த விடமுண்ட கண்டன்

நுரைநீர் சடையன் துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #644:

நதிசூடும் நாயகன் தீந்தமிழ் நால்வர்

துதிசூடும் தூயவன் மேனியில் பாதி

சதிசூடும் சங்கரன் சென்னியில் பாதி

மதிசூடும் மன்னன் துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #645:

தென்பாண்டி நாடாளும் ராணி கணவன்நீ

தன்பாட்டு வீதியில் பிச்சை எடுத்ததைத்

தின்பது கண்டு நகைக்கிறார் மக்களென்று

துன்பம் அடைவாளே  காதல் மனைவியும்

என்பது எண்ணீரோ ஈசா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #646:

மின்னொத்த மேனியாள் சேர்ந்தாடக் கூத்தாட

உன்னொத்த பேருண்டோ சோர்ந்துபோய் வாடுவதில்

என்னொத்த பேருண்டோ எண்ணிக் கருணைசெய்

பொன்னொத்த வண்ணனே நீ.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #647:

உமையாளும் ஈசன் அறிவிலேன் வாழ்வின்

சுமையாவும் தானே சுமந்து உலகில்

எமையாளும் நாதன் எருதேறி என்றும்

இமையாத முக்கண்ணன் போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #648:

வேகம் குறைத்திடுவான்

    மோகம் குறைத்திடுவான்

தேகம் உடன்வரும்

  ‌‌சோகம் குறைத்திடுவான்

மேகமாய்த் தோன்றிநம்

    தாகம் குறைத்திடுவான்

ஏகம்ப எந்தை

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #649:

மண்ணாள்வர் போற்றும் மதிமுகம் மெல்லிடை

கண்வாள் குமரி கணவன் முயன்றிடும்

விண்ணாள்வர் கண்படாது நின்றதோர் நாயகன்

எண்தோள் இறைவன் துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #650:

தில்லை எனவுரைத்த பேர்க்குக் கவலையும்

தொல்லை தரும்நோயும் செல்வம் குறைதலும்

இல்லை எனவே சிதம்பரம் என்னும்நற்

சொல்லை தினம்சொல்வாய் நாவே.

 

 

 

 

Feb 2018 – Ravindran

உமையொடு உறையும் நாத

அரவமொடு கங்கை  சிரந்தவழ

மதியொடு சிகையும் திகழ

உடுக்கையோ டோர் கரமும்

மான்மழுவொடு மறுகரமும்

தீயோடு கரமேந்தி யவன்

தூக்கியாடுவான் இடக்கால்

அம்பலவாண னென் னாருயிர்

சபாபதி வாழும் தில்லைபோல்

நான் எங்கும் கண்ட தில்லை.