Dec 2017 – Shanthi

அரங்கன் அவளை ஆண்டானோ

அவள் அரங்கனை ஆண்டாளோ

அன்றலர்ந்த மலரால் மாலை

இன்றளவும் சூடிக் கொடுத்திடவே

 

பறை தருவான் நமக்கே நாரணன் என்றே

பறை கூறி அழைத்துப் பாவை நோன்பிருந்தே

குறையொன்றும் இல்லாத கோவிந்தன் தன்னை

நிறைவாய்ப் பாடிய கோதாய் நீ வாழி

Advertisements

Nov 2017 – Shanthi

கொண்ட ஆரணங்கின் மனம் சுணங்காது

பிணக்கமின்றி இணங்கியே இருப்பின்

வையம் வணங்கிட வாழ்வாங்கு வாழ்வீர் காண்.

 

மாற்றானைக் கண்ணுற்ற மங்கையைக் கல்லாய் மாற்றியது உம் குலம்

மாற்றான் இல்லத்தில் சிறையிருந்த மங்கையை

ஆற்றாது தீயிற் புகவைத்ததும் உம் குலம்

வேரணங்கைக் கண்டால் கொண்ட அணங்கு போரணங்கு ஆவதில் குற்றமும் உண்டோ

கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவன்றோ

 

காசும் பணமும் இருப்பினும் குணமுள்ள பதியையே கொண்டவள் கொண்டாடுவாள்

குணமில்லையேல் மணத்தில் மணமில்லை

இருபாலரும் ஈட்டும் இந்நாளில்

இருவரின் குணமே வாழ்க்கைத் தேரின் அச்சாணி

 

அதர்மம் தலைவிரிக்கும் காலம்

தர்மமதை நிலை நிறுத்த வருவேனென்றான்

அரியுருருவில் வந்து தூணைப் பிளந்த அண்ணல்

பரிமேல் வருவது திண்ணம் கலி முடியும் காலம்

 

ஆசைக்கும் உண்டோ அளவுகோல் மேதினியில்

ஆசையே துன்பத்தின் வித்து

 

ஆசைப்பாடற்றே பற்றேயற்றே

மாற்றம் இலாதான் தாள் பற்றித் தேற்றம் பெற்றே

ஏற்றம் உற்றே உய்வோம் நன்றே

 

பிள்ளைகளும் காப்பகத்தில்

பெற்றோரும் காப்பகத்தில்

குடியிருக்க ஆளில்லை

கோடி ரூபாய் இல்லத்தில்

 

 

Oct 2017 – Shanthi

அணி அரங்கத்தே துயில் கிடக்கும் எம்கோவே

பணிபல முடித்தோம்  என்றுறங்குதியோ எம்தேவே

தணியாத காதலுடன் காண வந்தேன் உன் சேயே

மணிவிழி திறந்தென்னைக் காத்தருள்வாய் நீயே

மீனாக அவதரித்து வேதங்களைக் காத்ததோ

ஆமையாய் உருவெடுத்து ஆழ்கடலைக் கடைந்ததோ

வெண் வராகமாகி உலகை உய்வித்ததோ

சீறும் நரசிம்மமாய்த் தூணைப் பிளந்ததோ

வாமனனாய் வந்து மூவுலகும் அளந்ததோ

இராமனாய்  மும்முறை அவதாரம் செய்ததோ

கண்ணனாய் வந்து கேளிக்கை பல புரிந்ததோ

கல்கியாய் வருவதற்கு ஆயத்தம் செய்வதோ

எந்த களைப்பிற்காய் ஓய்வெடுத்தாய் நீயிங்கு

நீ அரங்கநாதனோ அன்றி உறங்கும் நாதனோ

கண்ணா கார்வண்ணா உன்னுறக்கம் துறவாயோ

உன் பக்தர் கலி தீரக் கமலக்கண் திறவாயோ

 

மன்றுள்ளே நின்று

அன்றாடிய பெம்மானைச்

சென்று தரிசித்து

மன்றாடி வணங்கிடின்

என்றென்றும் அவனருள்

குன்றாது கிடைத்திடும்

நன்றே விளைந்திடும்

தீதொன்றிலை காண்

அங்கிங்கெனாதபடி

எங்கும் நிறைந்தவனைப்

பாங்குடன் உமையவளை ஒரு

பங்கில் வைத்தானைப்

பங்கமிலாத் தீந்தமிழில்

இங்கு நாம் பாடத்

தீங்கொன்று வாராது

வாழ்வாங்கு வாழ்வோமே