Aug 2017 – Rali – Ekkalam

ராலி க. நி. தெக்காலம்  #457

இல்லாத நாளில்லை அப்பரம் பொருள்

செல்லாத இடமில்லை அப்பரம் பொருள்

அல்லாத தொன்றில்லை என மதிசூட

வல்லானை ராலி வழுத்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #458

விரியும்  உலகின் உள்ளிருந்தே எவர்க்கும்

தெரியா திருந்து தன்னில் தானே உவக்கும்

பெரியதோர் பொருளறிய மாலும் காணா

எரியானை ராலி  ஏத்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #459

தீயும் நீரும் விசும்பும் நிலமுமாய் தினம்

தேயும் வளரும் நிலவுமாய் தினம் உதித்து

மாயும் உயிராயுறை வதறிய ஆடல் நள்ளிருள்

பேயுடன் புரிவானை ராலி போற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #460

அன்றின் றெனாது என்றும் எங்கும்

சென்றும் காணாது மறைந்து என்றும்

நின்று காக்குமருளறிய தசமுகன் புயம்

வென்றானை ராலி வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #461

வாதம் செய்தறியாப் பொருள் ஆறங்க

வேதத்தினுள் உறை பொருள் வாரம் நாள்

மாதமென ஓடும் பொருளறிய தோடிடும்

காதனை ராலி கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #462

மெய்யான ஒரு பொருளாய் பாலுள்

நெய்யாய் உறை பொருளாய் ஏதும்

செய்யாது தன்னில் மகிழ் மூலமறிய

மையான கண்டனை ராலி கருதுவ தெக்காலம்?

 

 

Advertisements

Jul 2017 – Rali – Venpa

ராலியின் வேண்வெண் முயற்சி #463:

கோளறு நாயகன்

    கேளா தருளிறைவன்

வாளறு கண்ணினாள்

    வேந்தன் தகப்பனின்

தாளறு சண்டிகேசன்

    நாதன் உயிர்வகை

நாளறு காலகாலன்

    பத்துத் தலையலற

தோளறு ஈசனடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #465:

ஓங்குவான் மாலயன்

    பார்த்துநிற்க பொய்யுரைக்க

வாங்குவான் நான்முகன்

    சென்னியொன்று நில்லாது

நீங்குவான் தீயவர்

    நெஞ்சிருந்து தூங்காது

தூங்குவான் மோனத்தில்

    போதிக்க பக்தருக்காய்

ஏங்குவான் தன்னருள்

    தந்திட கங்கையைத்

தாங்குவான் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #466:

கண்மூடி மோனத்தில்

    நீயிருந்தாய் முன்னிருந்தோர்

மண்ணில் பெரிய

    முனிவராம் அவ்வாறே

மண்ணில் சிறியேனாம்

    என்னையும் நீயெண்ணிக்

கண்மூடிச் சற்றும்

    கவனியாது தூங்காதே

கண்திறந்து கொஞ்சமென்னைப்

    பார்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #469:

ஆறுதெய்வம் உண்டெனினும்

    தன்தலையில் கங்கையாம்

ஆறுதெய்வம் தாங்க

   சபாபதி போல்நமக்கு

வேறுதெய்வம் உண்டோ

   உலகில்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #471:

பருகலாமோ நஞ்சை

    மனையாள் தடுத்தும்

கருகலாமோ நஞ்சுகொஞ்சம்

    பட்டுனது கண்டம்

திருகலாமோ கிள்ளி

    பிரமன் தலையை

உருகலாமோ பக்தரைக்

    கண்டுனது நெஞ்சம்

செருகலாமோ சங்கத்தில்

    அன்பனுக்காய்ப் பாடல்

பெருகலாமோ கோபம்

    மதனவேளைக் கண்டு

சொருகலாமோ உன்கண்பொய்த்

    தூக்கத்தில் பக்கம்

வருகலாமோ என்றுநான்

    கேட்டால்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #472:

தூங்காதே அப்பா

    எழுந்திரு என்றுநமக்கு

ஓங்கி உரைத்த

    துறவிச் சிங்கவேள்

ஆங்கிலேயர் வேதாந்தம்

    கற்கவைத்த ஞானத்தீ

நீங்காது நம்மனத்தே

    வாழ்விவே கானந்தர்

பாங்காய் அவர்புகழ்

    பாடு.

(இன்று ஸ்வாமி விவேகானந்தர் ஆராதனை தினம்)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #473:

வேலொரு கைக்கொண்ட

    வேலனின் மூத்தசீடன்

ஆலொரு கல்லதன்கீழ்

    நால்வர் குருநாதன்

காலொரு கால்மீ

    தமர்தட் சிணாமூர்த்தி

நூலொரு கைக்கொண்ட

    வாணியின் அண்ணனம்

பாலொரு அன்புகொண்ட

    அம்மா ஒருபாகன்

மாலொரு பாகனெனும்

    சங்கர நாரணன்

போலொரு தெய்வமுண்டோ

    எங்கும்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #475:

சிறந்த துணிமணி

    மாலை அணிகள்

கறவைப் பசுமேய்க்கும்

    அண்ணன் அணிய

உறவாடும் தங்கைதன்

    வீட்டில் இருந்து

பிறந்த அகத்துக்குத்

    தந்தாள் உலகில்

பிறந்தமேனி யாய்த்திரிந்து

    ஆனந்தம் துய்க்கும்

துறவிக் கணவனை

   எண்ணி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #477:

பண்ணினான் அன்பரை

    எண்ணினான் நெற்றியில்

கண்ணினான் வாமத்தே

    பெண்ணினான் தீச்சுடலை

அண்ணினான் தென்னாட்டு

    மண்ணினான் எட்டாத

விண்ணினான் பார்வையில்

    தண்ணினான் நாமுய்யப்

பண்ணினான் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #478:

ஒடித்தான் சிவதனுசை

    மைத்துனன் வேதம்

படிக்கத் தலைநான்கு

    போதுமென்று இருக்க

இடித்தான் பிரமன்

     சிரமைந்து பெற்று

அடிமுடி தேடும்

    இவர்செயல் கண்டு

துடித்துநீ வேண்டுமென்று

    உன்மலர்ப் பாதம்

முடியொளித் தாயோ

    இறைவா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #479:

கதிகுதி கங்கை

    நதிபதி என்றால்

கொதிசதி வாழும்

    மதிபதி தேவ

ரதிபதி காய்ந்த

    விதிபதி மண்ணில்

நிதிபதி போற்றும்

    பசுபதி அன்னை

சதிபதி பாதம்

    துணை.

(நிதிபதி = குபேரன்; விதி = பிரமன்)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #480:

பாடாய்ப் படுத்திப்

    புடம்போட்டு அன்பரே

நாடார் எனினும்

    உயர்ஞானம் தந்திடும்

வாடாதோர் அன்பே

    சிவம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #481:

கல்லாத மூடரே

    ஆயினும்  பேராசை

கொல்லாத மூடரே

    ஆயினும்  கோயில்கள்

செல்லாத மூடரே

    ஆயினும்  நாமங்கள்

சொல்லாத மூடரே

    ஆயினும்  வேதவழி

நில்லாத மூடரே

    ஆயினும்  மீதமின்றி

எல்லார்க்கும் என்றும்

    கிடைத்திடும் காரணம்

இல்லாத அன்பே

    சிவம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #482:

களவற்ற காருண்யம்

    கொண்டொரே மெய்யாய்ப்

பிளவற்று எங்கும்

    பரவிநம்மைக் காக்கும்

அளவற்ற‌ அன்பே

    சிவம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #483:

கங்கை வடநாட்டில்

    ஓடவிட்டுப் பார்த்துநீ

அங்கேயே தங்கினால்

    நீரில்லாத் தென்னாட்டில்

எங்கள் கதியென்ன

    தென்னாட்டு தெய்வம்நீ

இங்கேயும் வந்துன்

    சடைவிரித்து வெள்ளமாய்

கங்கையை ஓடவிடு

    இன்றே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #484:

எந்தவூர் சென்றாலும்

    ஈசன் திருவடி

சிந்தனை முற்றும்

   மறந்தாலும் பாச

பந்தத்தில் அமிழ்ந்தாலும்

   நம்மைத் தொடர்ந்து

வந்துகாக்கும் அன்பே

   சிவம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #485:

விழித்திடும் போதும்

    உறங்கிடும் போதும்

ஒழியாத எண்ணங்கள்

    இல்லாது செய்து

அழித்திடும் அன்பே

    சிவம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #486:

விரிந்தது மீண்டும்

    சுருங்கித் திரும்ப

விரியும்முன் தன்னுடன்

    சேர்க்க விரும்பி

எரித்திடும் அன்பே

    சிவம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #487:

ஆடிய பாதத்தான்

    ஆறணியும் ஆண்டவன்

ஓடில்லா தேயிரவான்

    ஒப்பில்லா ஓரிறைவன்

மாடில்லா தேயூரான்

    மாசில்லா மனத்தினான்

வீடில்லா தேதிரிவான்

    வான்மதி தானணிவான்

கேடில்லா தேயருள்வான்

    கோவிலுள் தானுறைவான்

ஈடில்லா அன்பே

    சிவம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #488:

கவலையேன் மாந்தரே

    உம்மைத் தொடரும்

பவரோகம் எல்லாம்

    பறந்திடும் இன்றே

சிவலோக நாதனைக்

    கண்டால்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #492:

பெற்றவரைக் கேளாது

    செய்வானோ நானிலத்தே

கற்றவரும் போற்றிடும்

    ஞானஸோமாஸ் கந்தனென்றும்

சிற்றம் பலத்தானும்

    தேவியும் சண்முகனும்

சற்றும் பிரியாத

    சக்தி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #493:

நாழிநாழி தோன்றி

    அழியும் உயிர்களும்

ஆழிமேல் சாய்ந்தானும்

    வானுலக தேவரும்

ஏழிரண்டு லோகம்

    படைத்தானும் மாய்ந்திட

ஊழிதரும் அன்பே

    சிவம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #494:

ஆறாத ஆசையும்

    சான்றோர்சொல் கொஞ்சமும்

ஏறாத புத்தியும்

    ஈசன்மேல் பக்திசற்றும்

ஊறாத உள்ளமும்

    கொண்டிப் பிறவிகடைத்

தேறாத நம்மீது

    சற்றும் ஒருபோதும்

மாறாத அன்பே

    சிவம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #495:

சொந்தம்நீ அன்றிவேறு

    ஏதெங்கும் என்றுருகி

சந்தமாய்ப் பாடிய

    நால்வர் நடவாத

மந்தவூரில் நேரம்

    கடத்திய அற்பனென்னை

இந்தநம் புண்ணியமண்

    மீண்டும் பரிவுடனே

வந்துசேர்த்த ஈசனடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #496:

வறியவர்க்கும் செல்வம்

    உரியவர்க்கும் கல்லா

சிறியவர்க்கும் கற்ற

    பெரியவர்க்கும் தெய்வம்

அறிந்தவர்க்கும் மற்றவர்க்கும்

    பாய்ந்திடும் மண்ணில்

அறியாத அன்பே

    சிவம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #497:

நான்வந்த காரணம்

    நானே மறந்திடினும்

ஏனென்று ஆராய்ந்து

    தந்ததுடன் அஞ்ஞானி

நான்கேட்க எண்ணாத

    நன்மையும் தந்திடும்

ஏனெனா அன்பே

    சிவம்.

 

பேத்தியைப் பார்க்க

வெகுநாள் பொறுமையாய்க்

காத்திருந்து நேற்று

இரவு கிளம்பினேன்

தாத்தா பதவிபெற்ற

நான்.

 

கபாலி கடவுளாளும்

ஊரில் இருந்து

துபாய்நகர் வந்திறங்கி

இங்குள்ள வைஃபை

உபாயத்தைக் கொண்டு

எழுதும் கருத்து

அபாயம் எதுவுமின்றி

காக்கும்நம் தெய்வம்

சபாபதி என்பதே

ஆம்.

 

வேதாந்தம் பேசுவார்

‌‌‌‌    மாயையே என்றடித்து

வாதாடு வார்நம்மைப்

     பாசமறு என்றிடுவார்

சின்னஞ் சிறுகிளி

    பேத்தியின் பட்டுப்பூப்

புன்னகை காணும்

    வரை.

 

பேத்தியோடு நேரம்

    எ‌னக்குப் பொழுதுதினம்

மாத்திமாத்திப் போகிறது

    இங்கு.

 

ஆடிய பாதன்தன்

    காதலன் கீர்த்தியைப்

பாடியது கேட்பின்

    மனமகிழ்ந்து தன்கடைக்கண்

கோடி அசைத்தே

    அருள்வாள் பராசக்தி

பாடினார் சங்கரர்

    இந்தசேதி அன்னையை

நாடினால் அப்பன்

    விளையாடல் ஒவ்வொன்றாய்ப்

பாடிப் பணிதல்

    வழி.

 

எஞ்சாது உள்ளத்

    துயர்கள் பறந்திட

நஞ்சும் அமுதாக்கும்

    செந்தமிழ்ப் பாடல்கள்

கொஞ்சு மொழியில்

    வடித்தீர்.

 

நஞ்சுமில்லை அஞ்சனமும்

    இல்லை கதைகேளீர்

பிஞ்ஞகன் உச்சிமுடி

    தேடும் பிரமன்தான்

கொஞ்சமாய்ச் சொன்னவொரு

    பொய்யிது பார்த்தேன்நான்

அஞ்சன வண்ணநீல

    வானம் அவ‌ன்கழுத்து

மிஞ்சியவ் வானுக்கும்

    மேலே அவன்முடி

வஞ்சமில்லை மெய்யவன்

    நீலவானக் கண்டத்தான்

அஞ்சா துரைப்பீர்

    இதை.

 

உருப்படியாய் ஒன்றும்நான்

    செய்யாதும் உன்போல்

பெரியோர் பரிந்தெனை

    வாழ்த்தும் அரிய

பெரும்பேறு பெற்றேன்நீ

    வாழி.

 

ஆடிமாதக்‌ காற்றின்

    விசையும் இசையுமாகி

சூடில்லா தேயொளிர்வெண்

      சுத்தமலை மீதமர்ந்தான்

ஓடில்லா தேயிரவான்

    ஒப்பில்லா ஓரிறைவன்

மாடில்லா தேயூரான்

    மாசில்லா மனத்தினான்

வீடில்லா தேதிரிவான்

    வான்மதி தானணிவான்

கேடில்லா தேயருள்வான்

    கோவிலுள் தானுறைவான்

ஈடில்லா அன்பே

    சிவம்.

 

Jul 2017 – Rali – Venpa – Modi

ராலியின் வேண்வெண் முயற்சி #467:

உமையொரு பாகனென்றால்

    நீலநிறக் கண்டம்

உமையிடம் காணவேண்டா

    மோடிகேள் தங்கை

உமையாளும் அண்ணன்போல்

   நீலமாச்சே நீலம்

உமைமேனி மேல்தெரியு

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #468:

எந்தவொளி யுமில்லாது

    காட்டிலாடும் ஈசனுக்கு

அந்தகாரம் போகவொளி

    ஈசன் முடியமர்

சந்திரன் தான்தரு

    வானோடி மண்டுநீ

சந்திரன் சூரியன்

    கோள்களெல்லாம் விண்ணிலும்

இந்திர லோகத்தும்

    வீசுமொளி ஈசன்தான்

தந்தான் அறியவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #470:

களித்துச் சடைவிரித்து

    ஈசனாட்டம் ஆட

ஒளித்த நதிமதி

    வீழ்ந்துவிடு மேடி

துளியும் நிறுத்தாது

    பூமிசுற்ற நான்நீ

வெளியே விழுந்துவிட்டோ

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #474:

ஒருபாகம் பெண்ணாம்

    ஒருபாகம் மாலாம்

இருக்க அரனுக்

    கிடமில்லை யேடி

ஒருவரே மாலுமவன்

    தங்கையும் என்று

ஒருகணம் எண்ணவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #476:

உண்மை அறிவுபெற

    மாணவர் முன்னிருக்க

கண்மூடி மோனத்தில்

    இருக்கலா மோடியெங்கும்

விண்டவர் இல்லாதோர்

    உண்மை இதுவென்ற

உண்மை தெரியவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #491:

அண்ணன் இருக்க

    முருகனுக்குப் பெற்றவர்

பெண்பார்க்க லாமோடி

    பெற்றவரைக் கேளாது

பெண்ணை முருகன்

    விரும்பி மணம்செய்த

உண்மை தெரியவேண்டா

    மோடி.