Apr 2017 – ப.பி.

Rali:

#ப.பி.

ஊனாகி ஊனில்

    உயிராகி எவ்வுலகும்

தானாகி நின்றதனை

    அறிவது எக்காலம்?

– பத்திரகிரியார்

 

SKC:

#ப.பி.

ஆன்மாவின் போதமருள் ஆசானாம் சங்கரன் அவ்

ஆன்மாவுக்கு அன்னியன் ஆவானோ ? – ஆன்மாவா

என்னகத் தேயிருந்து இன்று தமிழ்ச் சொல்வானும்

அன்னவன் அன்றிமற் றார் ?

– பகவான் ரமணர்

 

SKC:

#ப.பி.

முந்தை அறிஞர் மொழிநூல் பலநவிற்றும்

தந்தை எனைப் பிரியத்தான் செய்த – நிந்தை மிகும்

ஆண்டே விரோதி எனும் அப்பெயரும் நிற்கே தகுமால்

கண்டேது செய்யாய் இனி.

– மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் 15 வயதில் தந்தையை விரோதி ஆண்டில் இழந்த போது.

 

SKC:

#ப.பி.

அப்பனிரந்துண்ணி ஆத்தாள் மலை நீலி

ஒப்பறிய மாமன் உறிதிருடி – சப்பைக்கால்

அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத்தானுக்கிங்

கெண்ணும் பெருமை யிவை.

– காளமேகப் புலவர்

 

பித்தன்:

ப.பி.

யாவர்க்குமாம் இறைவர்க் கொரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக் கொரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரை தானே.

– திருமூலர்

 

SKC:

# ப. பி.

அன்பும் சிவமு மிரண்டென்பா ரறிவிலார்

அன்பே சிவமாவ தாரு மறிகிலார்

அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்

அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே.

– திருமந்திரம்

 

BKR:

# ப. பி.

மூவர் கோவையும் மூவிளங் கோவையும்

பாடிய எந்தன் பனுவல் வாயால்

எம்மையும் பாடுக என்றனிர் நும்மையும்

எங்ஙனம் பாடுகேன் யானே

களிறுபடு செங்களம் கண்ணிற் காணீர்

வெளிறுபடு நல்லியாழ் விரும்பிக் கேளீர்

புலவர் வாய்ச்சொல் புலம்பலுக் கிரங்கலீர்

அவிழ்ச்சுவை அல்லது தமிழ்ச்சுவை தெரியீர்

உடீஇர் உண்ணீர் கொடீஇர் கொள்ளீர்

ஒவ்வாக் கானத் துயர்மரம் பழுத்த

துவ்வாக் கனியெனத் தோன்றிய நீரே.

– ஒளவையார்

 

 

 

Advertisements

Jan 2017 – Pithan

பித்தன் 124.

கல்லாலடியில் கண்மூடித்

     தவமிருந்து

நல்லதோர் காஞ்சியில்

     நடமாடிய சிவனே

வில்லையுடைத்து

     சீதையை மணந்து

வில்லாலடித்து அசுரனை

     வதைத்த ராமனே

நால்வேதப் பொருளறியா

     பிரமனை சிறைவைத்து

சொல்லியுன் தந்தைக்குப

     தேசித்த வேலவனே

நல்லோர் வாழுமிப்

     புவியில் கலந்த

புல்லுருவிகளை களைய

     நீவரும்நாள் எந்நாளோ.

 

 

பித்தன் 125.

நடுக்கடலில் அலையின்றி

     நன்னீ ரிருப்பதுபோல்

அடுக்கிவரு மெண்ணமது

     அமைதி யடைந்திட

கடுகளவுன் எண்ணமதில்

     கண்ணனை நினைவுற

சடுதியில் வந்துனக்கு

     சாந்தி யளித்திடுவான்.

 

பித்தன் 126.

வாழவந்தநம்

          மெல்லோரையும்

வாழவைக்க

          வந்திடுவான்

ஆழமான அடிமனதில்

அழகாக வீற்றிருப்பான்

குழந்தையாக

          இருந்தநம்மை

கிழவனாக ஆகும்வரை

நிழலெனத்

          தொடர்ந்திடுவான

     நிம்மதியளித்திடுவான்

வேழமுகத்தானை நாம்

     வணங்கி வாழ்ந்திடுவோம்.

 

 

பித்தன் 128.

கண்ணனை அடைய நீ

     பாவை நோன்பேற்றாய்

வண்ணமலர் மாலைகளை

     சூட்டிக் கொடுத்தாய்

என்னதவம் செய்தாரோ

     ஆழ்வார் உனையடைய

என்னதவம் செய்துநீ

     அரங்கனுடன்

          கலந்தாயோ

இன்றுனை நினைந்து

     மகிழ்ந்தோம்

          கோதைத்தாயே.

 

பித்தன் 130.

கார்மேகம் மழைபொழிய

நாற்றுகள் மூழ்கிவிடும்

காற்றலைகள் வீசிட

சார்புகள் சரிந்துவிடும்

பார்ப்பனர்கள் வேதமதை

பார்முழுது மோதினால்

கார்மேகம் கலைந்துவிடும்

காற்றலைக ளோய்ந்திடும்

பார்முழுதும் பஞ்சமது

நற்பஞ்சாய்ப் பறந்திடும்.

 

 

Dec 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #186:

பெண்ணை இடம்வைத்தாய்

      நில்லாது ஓடுமொரு

பெண்ணைத் தலைக்குமேல்

      வைத்தாயுன் மார்பினில்

மண்ணிலூறும் பாம்பையே

      வைத்தாய் எனக்குமிடம்

வெண்நாவல் உள்ளானே

      தா.

 

Suresh:

சொல்லத் தரமோ

சொல்லிறந்த பரம்பொருளை

வெல்லத் தகுமோ

ஓயாத பிறவித்தளை

உள்ளம் புகுமோ

உலகாளும் ஈசனருள்

இன்னும் வரமோ

ஏதெனினும் யான்வேண்டேன்.

 

Suresh:

அண்டத்தி லுள்ளவை எவையோ வவையே

பிண்டத்தி லுண்டுகாண் என்றன னென்பாட்டன்

அண்டத்தி னொருகூறும் அறந்தி லேன் யான்

பிண்டத்தை இதுகாறும் பேணவும் செய்திலேன்

கண்டத்தில் திருநீலம் கொண்டவெம் சிவனே

தொண்டனெனக் கொருவழியைக் கூறுவாய் பரனே.

 

பித்தன் 117.

(ஒரு சிலேடைக் கவிதை)

சனிநீராடினால் சங்கடங்கள் ஏதுமில்லை

சனிநீராடினால் சங்கடங்கள் சேர்ந்திடும்

தனித்தவம் புவனத்தில் செய்திட்டாலும்

தனித்தவம் புவனத்தில் ஏதுமில்லை.

 

பித்தன் 119.

ஏன் மரமாய் நிற்கின்றாய் என்பர்

இன்னமும் உன் மனம் என்ன கல்லா என்பர்

இன்னமும் மாடாய் உழைக்கச் சொல்வர்

உன் தலையில் களி மண்ணா என்பர்

தன் மனைவியைச் சனி என்றும்

தன் மகனைக் கழுதை என்றும் கூறுவர்

ஆண்டவன் படைப்பில் அனைத்தும்

ஒன்றென்று அறியாதவர்.

 

பித்தன் 120.

கருவினுள்ளே நம்மைக் காத்திடுவான் இறைவன்

உருவம் வெளி வந்தவுடன் காத்திடுவாள் அன்னை

பருவம்நாம் அடையும் வரை காத்திடுவார் தந்தை

பருவம் நாம் அடைந்த உடன் அணைத்திடுவாள் மனைவி

உருவமிது தேயும்போது காத்திடுவான் மகன்

உருமாறி நாம் செல்லும் போது உடனிருப்பான் இறைவன்.

ஒருவன் ஆதியுமந்தமும் இறைவன் கையில்.

 

பித்தன் 121.

கார்த்திகைத் திருநாளாம் களிப்படையும் நன்னாளாம்

கார்த்திகேயன் தந்தைக்கு உபதேசித்த நன்னாளாம்

ஓர் அடியில் வாமனன் மாபலியை உயர்த்திட்ட நன்னாளாம்

வார்த்தெடுத்த செம் பொன்னாய் வளர்ந்திட்ட சிவனை

பார்த்திடவே பிரமனும் பெருமாளும் சென்ற நன்னாளாம்

பார்புகழும் ராலித் தமிழின்ப நண்பர்கள் சேர்ந்தெழுதும் கவிதைகளை

நேர்த்தியாக இறைவன் ஏற்றிடும் நன்னாளாம்.

 

Suresh:

இருண் டவானி லுதித்ததோ ரிரவிபோல்

மருண்ட மான்மழு விரலிடை ஏந்தியே

பொருளினை யுரைத்துப் பொருளாய் நின்ற

அருளொளி சிவனே அருணா சலனே.

 

SKC:

நந்தியின் கழுத்தைப் பற்றி

நயமுறச் செவியில் ஓதி

மந்தையாய்க் கூடி நின்று

மாலைகள் கையில் ஏந்தி

விந்தையாம் மனிதர் இவரும்

வேண்டுதல் செய்யக் கண்டு

நொந்தவர் நந்தி யங்கு

நோக்கியே உம்மை வேண்ட

அந்தகம் வரும் வேளை

அடி பணிந்தே இங்கு

முந்தியே முறையிட்டோரின்

முன்வினை தீர்த்தருள்வாய்

எந்தையே எம்பிரானே!

இவரோடு இணைந்தேன் நானே!

 

SKC:

பாவை நோன்பிருந்து பாரதக் கண்ணனை

சேவித்து எழுந்து செம்மண் கோலமிட்டு – நாவில்

பாசுரங்கள் பல கூறி பரந்தாமனைப் போற்றும்

மாசிலா மங்கையிவள் காண்.

 

SKC:

வாசலில் கோலமிட்டு வண்ண மலர் சூட்டி

பாசவேர் அறுக்கும் பரம்பொருள் உனைப் பற்றி

வீசும் பனிக் காற்றில் வேண்டி நான் பூசித்தேன் என்

ஆசை தொலைப்பதற்கு அருள்வாய் பெருமானே.

 

SKC:

முன்பிணியாம் மோகத்தை

முற்றும் நான் தொலைத்து

முன்னவனின் மூத்தவனின்

முறைமாமன் உனைக் கண்டு

முன்பனியில் மோகித்தேன்

முழுநிலவாம் நினதெழிலில் உன்

முன் பணியா மூடரிவர்

முன்வினையும் தீர்த்து அருள்வாய்.

பித்தன் 122.

ஆதவன் உதிக்குமுன் அதிகாலைத் துயிலெழுந்து

மாதங்களில் சிறந்த கண்ணனை மனதிற்கொண்டு

பேதமின்றி தோழிகள் பலர் புடைசூழ

வேதத்தின் பொருளான பாசுரம் தனையுதிர்த்து

நாதரூபமாய் நன்னாளில் அரங்கனுடன் கலந்த

கோத மாதாவை நாம் போற்றிப் பணிந்திடுவோம்.

 

SKC:

பொல்லாத புயலில் புரண் டங்கு

தள்ளாத மரங்கள் தவித் திருக்க

இல்லாத மின்சாரம் எனை வருத்த

செல்லாத நோட்டும் சீர் குலைக்க வாழ்வில்

எல்லாம் முடிந்தது என்றே இவ்வேளை

சொல்லாமல் போனாலும் சுகமே.

 

BKR:

திரியப் பழுதாகும் பால்போல் வெளியே

திரியப் பழுதாகும் உள்ளம் – திரியா

துறையத் தயிராகும் பால்போலத் தன்னுள்

உறையுமனம் மேன்மை பெறும்.

 

Suresh l:

ஆண்டு வரும் போகும் கடந்து

ஆண்ட வரும் மாறிடுவர் அதுபோலே

யாண்டும் மாறாதே நங்கள் திருப்பாவை

தீண்டாத் திருமேனி அரங்கன் மேல் நப்பின்னை

ஆண்டாள் தமிழ்ப்பாவை கொண்ட திருக்காதல்

வேண்டு வரம் பெற யானும்  வேண்டுவன்

மீண்டு வொருபிறவி மாயா மேதினியில்

வேண்டா வெனவே யிறைஞ்சி நின்பாதம்

ஈண்டு வுனைத் தொழுதேன் எமக்கருள்வாய்

ஆண்ட வனேவேங் கடவா ஆதிமூலா

பாண்டவனின் பார்த்த சாரதியே பதமருள்வாய்.

 

Gopi:

சிரிப்பால் சகல உலகையும்

சினத்துடன் சீரழித்த சூரறை

சுக்குசுக்காக்கிய சீரன்

காதலனை கண்டும்காணாக்

கண்பார்வையால் காக்கும்

கமலக்கண்ணாள் முறுவலில் கவிழ்ந்தானே!

 

SKC:

ஆரத்தி எடுத்துப் பின் ஆராதனை செய்து உளம்

தேறத் துதித்து திருச்சீரலை உறை

சூரத்தலை கொய்த சுப்பிர மணியனின்

வீரத்தை வியந்து வேண்டி நின்றேனே!

 

Rali: @சுரேஷ்:

கோவர்தன கிரிதாரி கோகுல புரவாசி

கோவிந்தன் நினைவு வராத வாழ்வென்ன

வாழ்வு?