Suresh – Apr 23, 2016

விந்தையெனப்பெரியோர்

வியந்துரைக்கக் கேட்டவர்பின்

மந்தையிலோர் ஆடுபோல்

மயங்கியே திரிந்தேன்யான்

எந்தையைத்தேடி எங்கெங்கோ

அலைந்தோய்ந்து

சிந்தையுள்நான் உறங்க

சிவமங்கு சிரிக்கலாச்சே

 

எக்காளமிட்டுன்னை

என்றும் நினையாதே

சொக்காயின்பின்னே

சோர்விலா தலைந்தோய்ந்தேன்

அக்காளைமீதேறியென்

அம்மையுடன் வருவாயே

சொக்கா எனைக்காக்க

சிவகுருவே சுந்தரனே

 

மாறனொருபுறம் மலர்க்கணைகள் தொடுத்திருக்க

காலனொருபுறம் கயிறோடே காத்திருக்க

பாலனிவன்பாவம் என்செய்வேன் காத்திடுவாய்

ஞாலம்வழுத்தும் நற்குருவே சரணடைந்தேன்

SKC – Dec 15, 2015

வெள்ளிப் பனியாய் மழைவீழ

வெள்ள மொன்றாய் உருவெடுக்க

பள்ளி செல்லும் பாலகர்கள்

படிப்பதனை மறந்து இங்கே

துள்ளித் திரிந்து தூரலிலே

துடுக்குடனே தினம் மகிழ

அளளித் தந்து பொருள்தன்னை

அகமகிழ்ந்த பெரியோரும்

கிள்ளித் தந்து கேட்டதனை

கடமை முடித்த மற்றோரும்

வள்ளிக் கணவன் அருளுடனே

வளமாய் வாழ்க இக்காலம்!

 

வந்தாரை வாழ வைக்கும்

வளம் பெருக்கும் சென்னையென

எந்தாயக மக்கள்

இறுமாப்பாய் சொல்லி இங்கு

சிந்தாமல் புன்னகையை

செருக்குடனே தினம் அலைய

பந்தாடிய பருவமழை

பதைபதைக்க வைத்த நிலை

கந்தா! இவர் மதி தெளிந்து

கரையேறுவ தெக்காலம்?

 

அருணன் முகிலின் இடையே மறைய

வருணன் ரமணன் வழியாய்ப் பொழிய

பெருகும் வெள்ளப் புனலில் மாந்தர்

சருகாய்த் தவித்து சலனித் திருக்க

உருகும் அன்பின் உணர்வால் உவந்து

கருணை மிகவோர் கனிவுடன் உதவ

தருமம் உலகில் தளிராய்த் துளிர்க்க எம்

உருவும் உயிரும் உனையே துதிக்க

கரும வினைகள் கடிதே கழிய

குருவே! உன்னருள் கொள்வ தெக்காலம்?

 

அண்டை அயலாரை

அறியாத மனிதர்களும்

தொண்டுள்ளம் கொண்டிங்கு

துயர் களைந்த காட்சியினை

கண்டு அகமகிழ்ந்து

களிப்புற்று நன்றி சொல்ல

பண்டரி நாதன் தாள்

பணிதல் நான் எக்காலம்?

BKR – Oct 15, 2015

# ப. பி.

ஒருகோடி ஆகமங்கள் கற்றுணரந் தாலும்

பெருயோக சித்திபெற் றாலும் – குருவருளால்

வைத்த படியிருக்க மாட்டாத மாந்தர்க்கு

சித்த சலனம் தினம்.