May 2017 – Shanthi

அருகு அணிந்தோனை

ஆரணப் பொருளோனை

இபமாமுகன்தனை

ஈசன் மைந்தனை

உரகம் அணிந்தோனை

ஊழி முதல்வனை

எங்கும் நிறைந்தோனை

ஏற்றம் மிகுந்தோனை

ஐந்து கரத்தனை

ஒற்றை மருப்பனை

ஓங்கார வடிவோனை

ஔவைக்கு அருள்வோனை

கண நாதனைக்

காரிய முதல்வனைக்

கருத்தில் நிறுத்தி

அடி பணிவோமே.

 

கருப்பற்றூறி இருந்து

பிறப்புற்று ஆங்கண்

விருப்புற்றூறி  அதன்கண்

துன்புற்றிருந்து பின்னே

இறப்புற்றே மாயும் எம்மை

பற்றற்றிருக்கப் பணித்து

உற்றதுணையாய் நின்தாள்

பற்றி இருக்கஅருள்வாயே

ஆற்றுப்படை கொண்ட முருகா

சீற்றமொடு வரு சூரனை இரு

கூற்றாகப் பிளந்த சூரா

ஆற்றொணாக் காதலொடு கரம்

பற்றி வள்ளிக்குறத்தியை மண

முற்ற பெருமானே தெய்வக்

களிற்றின் மணவாளா

 

பஞ்சாட்சரம் அதை தினமும் துதிக்க

பஞ்சாய்ப் பறந்திடும் பாவங்கள் யாவும்

தஞ்சம் என்றவன் திருத்தாள் பற்றிட

நஞ்சுண்ட நாதன் நமைக் காத்தருள்வான்

 

 

நரிதனைப் பரியாக்கிப் பரியதை நரியாக்கி

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படியதுவும் பட்டு

தருமிக்குப் பாட்டெழுதி கீரனுக்கு முக்கண் காட்டி

கூடல் மாநகரினிலே ஆடல் பல புரிந்தவன்

 

 

அர்த்த நாரியை உமையொரு பாகனை

இருவினை களைவோனை

முக்கண்ணனை

நான்மறை போற்றும்

ஐந்தெழுத்து மந்திரத்தால்

அறு பொழுதும் ஓத எழு பிறப்பும் அறுமே

எண்திசை போற்றிட நவநிதியும் சேருமே

பத்துடை அடியவர் வாழ்த்திடுவாரே

சிவாய நம ஓம் சிவாய நம ஓம்

 

அரி அயன் தேடி அறிதற்கு

அரிதாக நின்ற நெடுமாயன்

விரித்த செஞ்சடையன் புரம்

எரித்த முக்கண்ணன்

 

 

ஆலம் உண்ட கண்டன்

காலனை உதைத்த காலன்

மாலன் தங்கை மணாளன்

ஞாலம் காக்கும் தயாளன்

 

 

அந்தம் ஆதியறு நாதன்

கந்தன் உரை செய்த சீடன்

விந்தை பலபுரி விநோதன்

அனந்த நடமிடும் புலியூரன்

 

 

விண்ணுக்கும் மண்ணுக்கும் சோதியன்

உண்ணாமுலை அன்னை பாகன்

அண்ணாமலை உறை நாதன் அவனை

எண்ணாதிருப்பவர் வீணரே

 

 

Rali – Dec 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #187:

அழலாய் நிமிர்ந்த அமரர் பதியே

கிழவனாய் ஏய்த்துக் குறமகளை ஏற்ற

அழகனை வாழ்த்தும்நீ வாழ்த்து குலத்து

வழக்குப் படிமணந்த என்னை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #188:

உற்றகல்வி இல்லாள் மனைமக்கள் என்றெல்லாம்

பெற்றும்நான் சற்றுமுன்மேல் பக்தியிலேன் காத்தருள்வாய்

நெற்றிவிழி பெற்ற பரமா.

 

 

ராலியின் வேண்வெண் முயற்சி #189:

பண்ணாத தர்மமும் பண்ணிய குற்றமும்

மண்பெண்பொன் என்று கழித்ததுவும் உன்பதம்

எண்ணா ததுவும் பொறுத்தருள வேண்டுவேன்

வெண்ணாவல் கீழுறை ஈசா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #190:

சென்றது உன்பதம் எண்ணாதே என்காலம்

இன்னும் இருப்பது எத்தனை நாட்களோ

என்னும் உணர்வுமில் லேன்கதி உண்டோசொல்

மின்னேர் சடையா எனக்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #191:

எல்லாம் இருந்தும் லயிக்குமுள் பக்தியிலேன்

பல்லா யிரமெண்ணம் ஓடுமென் உள்ளத்துன்

கல்யாண லீலை மறந்தேனெனை மேருவை

வில்லாகக் கொண்டநீ காப்பாய்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #195:

சோதித்தாய் அன்று முனிமனைவி கற்பினை

சோதித்தாய் நல்லடியார் பற்பலர் பக்தியினை

சோதித்தாய் நக்கீரன் கல்வியைத் தாங்கமாட்டேன்

சோதியாதே என்னை எதற்கும்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #196:

வளைநழுவ உன்மேனி காமுற்ற பெண்டிர்

களைகளைய நீமதுரை வீதி அலைந்து

வளைவிற்றாய் சற்றும் அலையாதே எந்தன்

களைதீர்உன் இல்லத் திருந்தே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #197:

தண்ணீருன் கையாலே பெற்ற பெரும்பேறு

எண்ணிறந்த பாண்டிய வீரர்பெற் றார்அவர்

மண்மன்னன் பக்தியாலாம் என்செய்வோம் உன்னடி

எண்ணாத மன்னர்கீழ் நாங்கள்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #198:

பாட்டு எழுதினாய் பத்திரர் சேரநல்

நாட்டில் பொருள்பெற நல்தருமி பொன்பெற

பாட்டு கொடுத்தாய் கவியிவர் பாராட்ட

பாட்டு தருவாய் எனக்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #199:

அருணகிரி போல்நான் இளமை கழித்து

ஒருநாள் வெறுத்தாலே போதுமா நானும்

ஒருகோ புரமேறி வீழ்தல்தே வையா

முருகா எனக்கு அருள.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #200:

எல்லாம் தெரிந்த அகத்தியர் கீரர்க்கு

தொல்யாப்பு சொல்லித் தருதல் பெருமையே

அல்ல தமிழறியா மூடன் எனக்குநீ

சொல்லித் தருதல் பெருமை.

 

ராலி க. நி. தெக்காலம்  #423

ஓதிடும் மறையின் அருளொலியில் ஓர்

ஆதியிலா வெளியில் அந்த காரிருளில்

சோதியிலென எங்கு முள விடையேறும்

வேதியனை ராலி வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #424

அலைமிகும் பிறவிக் கடல் தப்பி உய்ய

கலை தரும் நற்பெரி யோர் திருப்பாதம்

தலைவணங்கி இன்புற ராலி அரக்கன்தலை

தலைவிரலால் கடுத்தானை கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #425

பாயும் மூச்சடக்கி பிழையும் மனமடக்கி

காயும் சினமடக்கி காமமும் தானடக்கி

ஓயும் நினைவுடன் பக்தியுற பார்த்தனுக்கு

ஆயுதம் தந்தானை ராலி அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #426

கணம்தோறும் கருத்தே காத்திருந்து

உணவும் உயர்வளமும் தந்திருந்து

குணம்தரும் மேலோர் உறவுதரகங்கை

மணவாளனை ராலி வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #427

பொங்கும் ஆனந்தம் முழு நிறைவாய்த்

தங்கும் ஆதியந்தமிலா மூலப் பொருளை

எங்குமென்றும் நன்றுணர ராலி வேதம்

அங்கம் ஆறானானை அண்டுவ தெக்காலம்?

 

ராலியின் வேண்வெண் முயற்சி #201:

நக்கீரர் தேவமாதர் கூந்தல் நறுமண

மிக்கது என்பதறி யாரென்று நீஅறிந்தே

சிக்கவைத் தாய்நெற்றிக் கண்ணைத் திறக்கவே

சொக்கா இதுஒரு சாக்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #202:

பிள்ளையார் அப்பனே உன்தம்பி ஏமாற

மெள்ளநீ சுற்றிப் பழமன்று பெற்றது

உள்ளம் வருத்தவே வள்ளிக்காய் தம்பிபோட்ட

கள்ளமாம் நாடகம் சேர்ந்தாய்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #203:

பித்தளையி ரும்பை ரசவாதம் செய்துநீ

அத்தனையும் பொன்னாக்கி பக்தைத் கருளினாய்

பித்தனே என்மனப் பீடம்பொன் ஆக்கவேஏன்

இத்தனை யோசனை சொல்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #204:

படைத்துலகம் காத்து அழித்தலின் என்னுள்

அடைந்தயிருள் போக்கல் பெரிது.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #205:

மூச்சை வெளிவிட்டு மீண்டும் பெறாவிடில்

ஆச்சு மனிதர்  கதை.

.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #206:

பிணமென நாம்விலகும் அந்தவொன்று இந்தக்

கணம்நம் உடன்வாழ் கிறதே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #207:

அடுத்து வருவது நாளையோ அன்றி

அடுத்த பிறவியோ சொல்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #208:

நாளை விழிப்போமா எங்கு விழிப்போம்நீ

வேளை விடாதிதை எண்ணு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #209:

சொத்துமற் றெல்லாம் அழியுமெனும் எண்ணமே

சொத்தாகும் என்றும் நமக்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #210:

நஞ்சுண்பாய் நச்சுப்பல்  பாம்பணிவாய் நள்ளிரவில்

அஞ்சாது பேயுடன்  ஆடுவாய் ஏனெனது

நெஞ்சில் நுழையவே  அச்சம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #211:

கனலேந்தி காட்டினில் ஆடும் கபாலி

மனமிரங்கி மூடனென்னைக் கா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #212:

மன்னருக்கு மன்னனாம் நீவீடு வீடாய்ப்போய்த்

தின்ன இரவலச் சோறுபெறும் நாடகம்

தன்தலைநீ கிள்ளிய துன்பம் அயன்மறக்க

உன்னால் தினமரங்கேற்  றம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #213

வேண்டவும் உன்னை நினைந்துதினம் பாடவும்

மாண்டு பிறவி முடிந்துநான் போகும்முன்

நீண்ட எரிதழல் மேனியரு ணாசலா

தூண்டுவாய் நீஎனை யே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #214:

மயங்கியுன் சொல்மறந்த மாந்தர் தமக்கு

பயமொடு பக்திவரத் தந்தனையோ இந்தப்

புயலும் மழையும் அவையிரண்டும் அஞ்சும்

கயல்விழி மங்கை மணாளா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #215:

எத்தனை நல்பாண பத்திரர் காத்திட

எத்தனை நல்விறகு வேண்டுமென காற்றடித்து

இத்தனை தொல்மரம்  சாய்த்திட்டாய் போதுமா

பித்தனே இன்னும்தே வையா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #216

பணம்புகழ் சுற்றம் எதுவுமே தீக்கு

உணவாம் நமக்கு  உதவா உதவும்

பிணம்புகும் காடாடும் ஈசனது பாதம்

மணமலர் கொண்டருச் சித்தல்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #217:

மங்கை மனம்போல் அலைபாயும் தேவலோக

கங்கை சடையில் ஒடுக்கினாய் அங்கேயும்

இங்கேயும் நில்லாத என்மனம் உன்மீது

தங்க ஒடுக்கமாட் டாயா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #218:

தொலைபேசி இல்லை அலைபேசி இல்லை

தொலைக்காட்சி இல்லை இணையமும் இல்லை

தலைபோகும் யந்திர வாழ்வு நிறுத்த

கொலைப்புயல் நீயே துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #219:

காலை மடக்கி ஒரேகாலைக் கீழ்வைத்து

காலையும் மாலையும் ஆடும் நடராஜா

நூலைக்கற் றானுயிர்க் காலனை உன்னெந்தக்

காலைநீ வைத்துதைத் தாய்?

 

ராலியின் வேண்வெண் முயற்சி #220:

உலவாக் கிழிதந்தாய் பாண்டி யனுக்கு

உலவா அரிசிதந்தாய் வேளா ளனுக்கு

உலவா நிஜபக்தி வேண்டினேன் ஈசா

உலவாக் கருணைகொள் வாய்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #221:

திருமாலாம் காலையில் மாலை சிவனாம்

இருவரை வேண்டவே சொன்னார் பெரியோர்

திருமாலோ பள்ளிகொள்ள ஈசனோகூத் தாட

தருவதுயார் நன்மை நமக்கு?

 

ராலியின் வேண்வெண் முயற்சி #222:

ஆடிய என்மனம் கட்டி நிறுத்திட

ஆடிய பாதம் துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #223:

புயலென்செயும் இன்னும் மழையும்தான் என்செயும்

வயலூரான் எந்தன் துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #224:

மனமலைந்தும் ஏதோ முயன்றுநான் உன்னை

தினமும் நினைந்தும் கவனிக்க மாட்டாய்

கணமும் பிணமானால் தானருள் வாயோ

பிணக்காட்டில் நீவாழ் வதால்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #225:

மூன்றுகண் கொண்டது மூன்றுபுரம் சுட்டது

மூன்றுபிள்ளை பெற்றது பின்னர் அறுபத்து

மூன்றுபேரைக் காத்தது போதாது நாளைநான்

மூன்றாம்கால் ஊன்றும்முன்  கா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #226:

வரம்பெற்று உன்தலை மீதேகை வைக்கத்

துரத்தவே ஓடினாய் அன்றசுரன் முன்னே

வரம்பெறு தல்துரத்தல் செய்யேனுன் எண்ணம்

வரவழி செய்தாலே போதும்.

 

ராலி க. நி. தெக்காலம்  #428

சுமை யாவையும் களைந்து கருத்தில் கனிவாய்

அமைந்து நெஞ்சத்து இருள் இல்லாது விரட்டி

எமை அருகில் அழைத்தருள ராலி சற்றும்

இமையா முக்கண்ணனை இறைஞ்சுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #429

சாத்திரம் வேதமுடன் ஏழுலகம் படைத்துத்தான்

மாத்திரம் தனித்துத் களித்தசுகம் போதுமென

காத்தழிக்கும் காரியமே னெனறிய மகனாய்

சாத்தனைப் பெற்றானை ராலி சாற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #430

ஆதியிலும் இன்றும் நாளையும் பெரும்

சோதியாய் சொல்ல வொணா னந்தமாய்

மீதியிலாது மேவும் விதமறிய ராலிதிரு

ஆதிரை நாளனை நாடுவ தெக்காலம்?

 

ராலியின் வேண்வெண் முயற்சி #227:

கரிக்குரு விக்குப தேசம்செய் தென்றும்

புரியா திருப்பான்தாள் வாழி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #228:

வழக்கு உரைத்தாய்நீ மாமனாய் வந்து

வழக்குத் தொடுத்தாய்த் திருநாவ லூரில்

வழக்கே வழக்கமாய் ஆனதால் உன்மேல்

வழக்கிட்டால் தானருள் வாயோ?

 

ராலியின் வேண்வெண் முயற்சி #229:

நாரைக்கு முக்தி தருவாய்நீ கல்லினுள்

தேரைக் குயிரும் தருவாய் முழுகாமல்

ஊரையே காப்பாய் எனைக்காக்க நான்வேறு

யாரைத்தான் தேடுவேன் சொல்.

 

ராலி க. நி. தெக்காலம்  #431

ஏகமாய் என்றும் ஆனந்தமாய்ப் பின்னும

நேகமாய் உலகெலாம் பூத்து விளைந்து

வேகமாய் மறையும் பொருளறிய மங்கை

பாகமாய் வைத்தானை ராலி பாடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #432

அன்பும் அறிவும் உயர் பேரானந்தமாய்

தன்னுள்ளே தானாய்த் தனியாய் விளங்கும்

இன்பத்தின் ஊற்றறிய நச்சரவு ஆமை

என்பொடு பூண்டானை ராலி ஏத்துவ தெக்காலம்?

 

ராலியின் வேண்வெண் முயற்சி #230:

பழம்பெற பூமியைச் சுற்றினாய் ஔவை

பழம்பெற நீமரம் ஏறினாய்வள் ளிக்காய்

கிழவனானாய் நானறியேன் பக்திநிலை உன்னைத்

தொழவழி காட்டு எனக்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #231:

ஆண்டு புதிதாய்ப் பிறக்கும் அதுமீண்டும்

மீண்டும் பிறக்கும் விடிவிலா சம்சாரக்

கூண்டினில் மாட்டினேன் தாண்டவம் ஆடிடும்

ஆண்டவா மீட்டிடுவாய் என்னை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #232:

விடுவாய் அரசன் பிரம்பால் அடிக்க

விடுவாய் மலைவேடன் காலால் உதைக்க

விடுவாய் நதியுன் தலைமேல் குதிக்க

விடுவாய்நான் உன்கால் பிடிக்க.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #235:

சந்தக் கவிதையும் மீந்தாத நல்லுணவும்

சிந்திடும் புன்னகையும் ஆனந்த உள்ளுணர்வும்

எந்தவொரு நேரமும் யாவரும் பெற்றுவாழ

வந்தாய் பதினேழாம் ஆண்டு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #236:

கிட்டே வரலாம் ஒருமுட்டும் மாடுவுன்

கிட்டே வரலாம் கொடும்நச்சுப் பாம்புவுன்

கிட்டே வரலாம் பிசாசுபேய் நான்மட்டும்

கிட்டே வரஏன் தடை?

 

 

Sep 15, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #16:

உன்னைச் சிறிதேனும்

      நம்பாது தன்செயல்

தன்னைநம் பும்கசிபு

      வையே கிழித்தநீ

உன்னையும் நம்பாது

      என்னையும் நம்பாத

என்னைக் கிழிப்பது

      என்று?

 

பித்தன் 32.

இச்சையுடன் பத்தினியை பக்கத்திலே நிறுத்தி

அச்சமின்றி அரிசிதனை இருவேளை தீயிலிட்டு

முச்சந்தியையும் முனகாமல் நீ முடித்தால்

மிச்சமுள்ள நாட்களை நீ மகிழ்ச்சியாக வாழ்ந்திடலாம்

 

பித்தன் 33.

(ஒரு கிராமத்தின் கற்பனை).

காவிரியில் நீராடி காலாற நான் நடக்க

ஆவியுடன் காபிதனை என் மனைவி தானளிக்க

ஆவிபறக்கும் செய்திகளை எந்தை தான்படிக்க

நீவிவிட்ட கூந்தலுக்கு எண்ணையை என் தாயளிக்க

கூவிவிற்கும் காய்கனியை என் அத்தை தான் வாங்க

தாவிக்குதித்து பாண்டியை என் மகளாட

பாவிப்பயல் படிக்காமல் மிதிவண்டியில் என் மகன் ஓட

காவிப்பல் தெரிய வெற்றிலையை என் பாட்டி இடிக்க

பாவிஎமன் வந்திடுவான் கூட்டுக்குடும்பம் தனைக்கலைக்க

கூவிடுவீர் அதற்குமுன் கோவிந்தன் நாமம் ஆயிரத்தை.

 

பித்தன் 34

பத்தாம் வயதினிலே குறும்புகளை நிறுத்தி

இருபதாம் வயதினிலே கல்விதனை கற்று

முப்பதாம் வயதினிலே அம்மிதனை மிதித்து

நாற்பதாம் வயதினிலே நன்மக்களை பெற்று

ஐம்பதாம் வயதிலே அளவுடன் பொருள் சேர்த்து

அறுபதாம் வயதினிலே அலுவலகம் தான் விடுத்து

எழுபதாம் வயதினிலே இந்திரியங்கள் பழுதடைந்து

என்பதாம் வயதை நான் அடையுமுன் எனைக்

காக்க ஒரு குரு வருவாரா எனக் காத்திருப்பேன் பக்தியுடன்.

 

பித்தன் 35.

பாசமுடன் பசு ஒன்று வளர்த்தேன் பால் அளித்தது

நேசமுடன் நாய் ஒன்று வளர்த்தேன் வீட்டை காத்தது.

தாஸனாக கிளி ஒன்று வளர்த்தேன் திரும்ப பேசியது

ஆசையுடன் காளை ஒன்று வளர்த்தேன் நிலத்தை உழுதது

எனை வளர்த்த இறைவனுக்கு நான் என்ன அளிப்பேன் நின்

நாமம்தனை ஜபிப்பேன் காத்தருள் புரிந்திடுவாய்.

 

SKC:

மெட்டுக்குப் பாட்டெழுதி

மீதியை நூலாக்கி

கட்டுக் கட்டாய் விற்கும்

கவிஞர்கள் நடுவினிலே

எட்டும் அறிவு வரை

ஏற்றமிகு தமிழில்

இட்டுக் கட்டி இங்கு

என்னால் இயன்றதனை

தொட்டெழுதப் பணித்தவனை

தும்பிக்கை நாதனை தலை

குட்டிப் பணிந்து

கும்பிட்டு அவன் தாளை

விட்டு விடாது என்

வினை தீர்க்கப் பணிந்திடுவேன்.

 

ராலி க. நி. தெக்காலம்  #389

காமமும் கோபமுமாய்ச்

    செல்லும் வாழ்வு

ஈமச்செயலுடன் முடியும்

    சட்டென சற்றும்

தாமதமிலாது நல்வழிநாட

    ராலி சடையுள்

சோமனை வைத்தானை

    வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #390

இயங்கும் பொருளில்

    எலாம் உள்ளிருந்து

மயக்கும் பொருளில்

    எலாம் உள்ளிருந்து

தயங்காது தருணத்தில்

    அருளும் அட்ட

புயங்கப் பிரானை ராலி

    பிடிப்ப தெக்காலம்?

 

BKR:

காரணமே இன்றிக் கருணைமிகக் கொண்டுநமைப்

பூரண மாக்கும் புனிதனவன் – நாரணனும்

நான்முகனும் காணாத சோதியாய்ப்  பூமியொடு

வான்முகமாய் நின்ற  சிவன்.

 

BKR:

தடியால் அடித்தாலும் நீர்விலகா தங்ஙனமே

படியாது பாய்மனமி ருந்தும் – அடியேனை

நாளுமே நீங்கார் குருநாதர் நானுமவர்

தாளினை நீங்குவதும் இல்.

 

BKR:

@SKC,

தும்பிக்கை யான்மீது

          நீங்காது நீவைத்த

நம்பிக்கை காக்கும் உனை

 

SKC:

@BKR !

வாழும் இவ்வாழ்வில்

வழி நடத்துவதென்னை

வேழ முகத்தோன் துணை

 

Rali:

@BKR

தளைபிழை நான்காணும்

      முன்நீ திருத்தல்

விளையாட்டோ உந்தனுக்கு

      சொல்.

 

Suresh:

தேடிப்பிடித்து சொல்போடு முன்னே

ஓடிப்பிடித்து குறைகூறல் என்னே

நாடிப்பிடித்து நல்லகவி யமுதம்

கூடிப்பருகி குலவுவோம் கண்ணே

 

Suresh:

ஓமென்ன ஒலியா சொல்லா அறிந்திலனே

நாமென்ன உருவா அறிவா தெளிந்திலனே

நீ எந்தன்  குருவா பரமா உணர்ந்திலனே

தாயென்றே அறிவேன் அரனே உன்சரணே.

 

BKR:

@சுரேஷ்

அரனைத் தாயென் றறிந்தபின் வேறு

அறிதற்கொன் றுண்டோ புகல்.

 

SKC:

வாடிய பயிர் கண்டு

வாடும் குணம் விடுத்து

மூடு பனி வாழ்வில்

முயங்கியே இம்மாந்தர்

ஓடி அங்கிங்கு

உடல் இளைத்தே அலைந்து

வீடு மனை வாங்கி

வீணடித்து தம் வாழ்வை

காடு வழி போகும்

காட்சியைக் கண்டு உனைத்

தேடியே சரணடைந்தேன்

தென்மதுரை நாயகியே !