Sep 2017 – Suresh

குமரன்கை வேலானாய்

பிரமன் சிரம்கொய்த

பரமனின் பாதியானாய்

சிரமமெனப் பாராது

சிறுவன் குரல் கேட்டு

அமரமெனக் கருளாயோ

நீ

 

 

Advertisements

Sep 2017 – Shanthi

ஐந்தெழுத்து மந்திரம் கொண்டவர் ஒருவர்

எட்டெழுத்து மந்திரம் கொண்டவர் ஒருவர்

அடிமுடி காணாது நின்றது ஒருவர்

அளப்பறிய ரூபம் காட்டியது ஒருவர்

மாதுக்கொரு பாகம் ஈன்றவர் ஒருவர்

திருமார்பினில் தேவியைத் தரித்தவர் ஒருவர்

எல்லைக் காட்டில் களிநடம் புரிவதொருவர்

அலைகடல் மீதில் அறிதுயில் புரிவதொருவர்

சாம்பல் பூசித் திரிபவர் ஒருவர்

சாம்பல் நிறத்தில் இருப்பவர் ஒருவர்

சொக்கன் எனப்படுபவர் ஒருவர்

சொக்க வைக்கும் வடிவினர் ஒருவர்

அரவுதனை மாலையாய் அணிந்தவர் ஒருவர்

அரவணையின் மேல் துயில்பவர் ஒருவர்

பார்த்தனுக்கு அஸ்திரம் கொடுத்தவர் ஒருவர்

ரதம் செலுத்திய சாரதி ஒருவர்

அரனாய் அரியாய் நின்றபோதிலும்

இருவரும் ஒன்றென்று அறிந்திடுவோமே.

 

ஆதிமுதல் நாயகனின்

பாதி உருவானவளே

பூதியணி தேவி அனு

பூதி நிலை அருள்வாயே

 

திருவுடை நாதனவன்

திருமார்பில் உறைபவளே

கருணை பொழி கடைவிழியால்

திருவாழ்வு அருள்வாயே

 

வாகீசன் வாக்கிலுறை

வாக்தேவி கலைவாணி

வாக்கிலும் மனதிலும்

வந்தெமக்கு அருள்வாயே

 

மலைமகளும் அலைமகளும்

கலைமகளும் கூடியே

நிலமதனில் உறைவோர்க்கு

நலங்கள் பல அருள்வாரே

 

வெண்கலை இடையுடுத்தி

வெண்வீணை கையேந்தி

வெண்கமலத்தின் மிசை

வெண்கலையென ஒளிரும்

வேணி கலைவாணி நின்

கலையன்ன மனமும் சகல

கலைகளும் எமக்கருளி

கலையாது எமதகத்தே

கலைசூழ அமர்ந்திடுவாய்.

 

 

Suresh – ஆடியின் நாயகி – அந்தாதி

ஆடியின் நாயகி – அந்தாதி

ஆடியின் நாயகி #1

ஆடிய பாதம் அருகமர் நாயகி

ஆடிவரும் காற்றில் அசைந்தாடு குழலோடு

ஆடியெதிர் அதனில் அதிரூப வதனமொடு

ஆடிடு மலர்ப்பொன் ஆரங்கள் அழகூட்ட

ஆடிக்கூத் தாடிவரும் அன்பர்கள் புடைசூழ

ஆடியின் வீதியில் அழகுமலர்ப் பல்லக்கில்

ஆடியே அசைந்துவர ஆடியும் பிறந்ததே.

 

ஆடியின் நாயகி #2

பிறந்த மலர்பறித்துப் பிரியமுடன் தான்தொடுத்து

விரிந்தநின் கூந்தலிலும் வரிசங்குக் கழுத்துவழி

பரந்தநின் மார்பினிலும் தவழ்ந்திடவே சூட்டிடுவேன்

கறந்த பாலன்ன களங்கமிலா காமாக்ஷி

மறந்தும்நின் நேசம்நான் மறவாத வரமருள்வாய்.

 

ஆடியின் நாயகி # 3

வரமொன்று பெறவேண்டி  யுனைநாடி வந்தேன்

தவமென்று சிவமெண்ணி கடலோரம் நின்றாய்.

கடல்நடுவே தவிகலங்கள் கரையறிய விளக்காம்

கண்ணீரின் துளிமூக்கில் மாணிக்க ஒளியாம்

சிவன்வரவும் வரம்தரவும் தவமிருக்கும் குமரி

உவந்தெமக்கும் அருள்தருவாய் எம்தாயும் நீயே.

 

ஆடியின் நாயகி # 4

நீயே நிலவும் நிலவின் ஒளியும்

ஒளியின் சிதறல் பலவாம் கதிரும்

கதிர்கள் சுட்டும் உருவாம் பொருளும்

பொருளை அறியும் உணர்வும் அறிவும்

அறிவது அறியாப் பரமாம் சிவமும்

சிவமதை வென்றதுன் திருக்கடைக் கண்கள்

எனைக்கடைத் தேற்றவும் உன்சரண் புகுந்தேன்

தாய்அபிராமி தயைபுரிவாயே.

 

ஆடியின் நாயகி # 5

புருவமிரு வில்வளைத்து பூங்கணையுன் கண்தொடுக்க

புரமெரித்த கண்குளிர பரமனவன் மையலுற

கருவமிகு நின்கொங்கை காணாது நாணுற்று

சிரம்குனிந்து சீரங்க பரந்தாமன் உன் தமையன்

கரம்சேர்க்க சுந்தரனைக் கரமபிடித்த நாயகியே

கோலாட்சி மதுரையில் செய் மீனாட்சி உமையவளே.

 

ஆடியின் நாயகி # 6

அவளே அகிலங்கள் ஈன்றவ ளாயினும்

அவளே பாலா என்றொரு குழவியாய்

பவளச் செவ்வாயினில் சிறுகிளி மழலையும்

தவழ்ந்திடு குழல்நடுப் பிறைநுதல் சாந்தும்

குவளையா மிருமலர்க் கண்களில் அஞ்சனம்

களபச் சிறுகையிற் சூடிய கருவளை

விளங்கிடு பொன்னா பரணங்கள் அணிந்தே

திகழ்ந்திடு வண்ணப் பட்டாடையில் அருளிடும்

அழகினைக் கண்டவர் விண்டிடல் ஏலுமோ

புகழ்ந்திட மொழிநமை இகழ்ந்திடு மாமே.

 

ஆடியின் நாயகி # 7

மேருவினில் பூசித்துன் மேன்மையினைத் தானுணரும்

மேதாவிலாசமெனக்கு உபதேச மாகவில்லை.

ஊருக்குள் சின்னதொரு கோவிலுண் டங்குசென்று

தீபமேற்றி வழிபட்டால் தீராதோ என்பாவம்.

யாருக்கு மெளியவளாம் தேவியுனைப் பாடுகிறேன்

பாமரனுக் கருளாயோ பராசக்தி மாரியம்மா

 

ஆடியின் நாயகி # 8

அம்மாயெனும் மந்திரச்சொல் ஆயிரம் வரமருளும்

அம்மாயெனு மொருதெய்வம் கேளாமல் வரமருள்வாள்

அம்மாயென்று அழைத்திடவே ஆநிறைக்கும் பால்சுரக்கும்

அம்மாயென்று உன்னைத்தான் அழைத்தேனே என்னைக்கா

ஆனைக்கா உறைபவளே அகிலாண்ட ஈஸ்வரியே

 

ஆடியின் நாயகி # 9

ஈஸ்வரியே உன்புகழை அனுதினமும் துதியாது

ஐஸ்வரியம் எட்டுவகை அவையெவையும் யான்வேண்டேன்

தாயறியா மாந்தருக்கும் தனையறியாப் பித்தருக்கும்

வாயறியா ஜீவனுக்கும் வழியறியா நீத்தாருக்கும்

ஊனறியா உயிரன்ன உறவான உணர்வே

உண்ணா முலையே அண்ணா மலைக்கிணையே.

 

ஆடியின் நாயகி # 10

இணையுனக் கேதுமுண்டோ ஈரேழுலோகம் போற்றும்

ஈசனை இருகைநோக ஓடேந்தி இரக்கவைத்தாய்

இடுகாட்டின் இருளில்அவனை ஒரு காலில் ஆடவைத்தாய்

இன்னமும் நீயும்ஆடி காலாலே மிதித்தாய்காளி

கழுத்தையும் நெறித்தாய்அவனை கலங்கிட உயிர்கள்யாவும்

கடுநஞ்சு நெஞ்சிறங்காமல் காத்திடவாம் உன்விளையாட்டு

இன்னலை ஊடலென்றே இசைவுடன் ஏற்பான்எந்தை

இன்முகம் மட்டும்போதும் இறைவியே எந்தனுக்கு

சிதம்பரனின் இரகசியமே சிவகாமி சுந்தரியே

 

ஆடியின் நாயகி # 11

சுந்தரி திரிபுர மெரித்தவன் நாயகி

இந்திரன் தேவர்கள் நான்முகன் மாயவன்

தொந்தியோ டொருமகன் மயில்மிசை அறுமுகன்

தந்தியை மீட்டியே வாணியும் இவரொடு

வந்தனம் சொல்லியே திருமலர் தூவிட

நந்தி முதல்வரும் நான்மறை ஓதிட

எண்திசை பாலர்கள் பண்ணிசை பாடிட

எழுந்தருள் வாள்எங்கள் புவனேஸ் வரிதாய்

லலிதாம்பிகையே.

 

ஆடியின் நாயகி # 12

அம்பு கையில் பிடித்தல் அழகாமோ

அம்பிகைக்கு என்றுஓர் ஐயம் எழவேண்டா

அம்பும் அவையல்ல நறுமலர் கோர்த்தசெண்டாம்

அம்புலி சிரமதில் அணிந்த எம்மான்

அம்பலத் தரசன் அவனாம் சிவனை

வம்புக்கு இழுத்து தவமது கலைத்து

செகமது இயங்க வண்டார் குழலி

விருத்த நாயகி செண்டால் அடிக்கும்

திருவிளை யாட்டாம்.

 

ஆடியின் நாயகி # 13

திருவிளை யாடல்கள் பலபுரிந் தாய்அம்மையே

ஒருவிளை யாடலில் கஜமுகன் தோற்றம்

மறுவிளை யாடலில் அறுமுகன் ஐக்கியம்

உருவிளை யாடலால் உன்பதி இடப்புறம்

பெருவிளை யாடலோ தில்லையின் எல்லையில்

சிறுவிளை யாடலாய் என்வரம் கேட்டேன்

சிறுவாச் சூர்உறை மதுரமே காளியே

மறுபடி பிறவாப் பெருவாழ் வருள்வாய்.

 

ஆடியின் நாயகி # 14

அருள்வாய் என்றே திடமாய் இருந்தேன்

கருவாய் பிறந்தேன் உருவாய் வளர்ந்தேன்

ஒருவாய் சோற்றுக்கும் வருவாய் வளர்க்கவும்

தெருவாய் அலைந்தேன் கொடுவாள் குறுமதி

கெடுப்பார் நட்பினில் நடுவாய் நின்றிடும்

நல்லறம் மறந்தேன் திருவாரூர் உறை

கமலமே அம்பா மலர்வாய் திருவாய்

மதிகதி யெனும்வரம் மதிபுனல் சூடிடு

மகேசனின் சதியே

 

ஆடியின் நாயகி # 15

சதியே நீயந்தப் பரமனுக் காயினும்

விதியால் பிறந்தாய் மதுரையம் பதியில்

நதியாம் நறும்புனல் வைகைக் கரையில்

மதியால் மாண்பால் மாநிலம் ஆள்கையில்

பதியாய் சொக்கன்நின் கரமது பற்றிட

கதியென நீயும் அவன்சரண் புகுந்தாய்

பதித்தே மனதில் மதுரை மீனாட்சி

துதிப்பேன் மலரடி மறவா திருப்பேன்.

 

 

ஆடியின் நாயகி# 16

மறவா திருப்பேன் நின்னிரு திருவடி

அறவா ணர்களின் குருவா னவளே

உறவா யிருந்திட நின்விழி தண்ணொளி

பிறவா ழியைநான் பெரிதாய் நினையேன்

பிரமா புரத்துறை பெரியநா யகியே.

 

ஆடியின் நாயகி # 17

நாயகி யாயிரு நானிலம் காத்திடு

தாயவ ளாயிந்தத் தனயனைக் காத்திடு

மாசறு கங்கை தானெழில் கூட்டிடும்

காசியில் தானுறை கருணைவி சாலாட்சி

தாசனிவ் வடியவன் தந்திடுவேன் நினக்கு

ஆசனம் என்மனதில் அமர்ந்தருள வருக.

 

ஆடியின் நாயகி# 18

வருகையை நோக்கிநான் உவகையுடன் இருந்தேன்

கருகமணி மாலையொடு மெருகுமிகு அணிகளொடு

மிருகநய நீகாண சருகும்உயிர் பெற்றிடுமே

உருகுமிவ் வடியவனின் உள்ளம் அறியாதவளோ

தருமமிது வல்லவே திருநெல்லை அம்மையே

கருமமது தொலைத்திடவுன் தரிசனமும் காணேனோ

 

ஆடியின் நாயகி # 19

காணேன் கடையேன் என்ற றிந்தும்

வீணே அலைந்தேன் நினைத் தேடி

மானைத்தன் விரலிடை ஏந்திய நின்பதி

ஆனைக்கும் சிலந்திக்கும் அருளியது அறியாயோ?

ஏனெனக் கருளாய்சொல் இடைமருதூர் சுந்தரியே.

 

ஆடியின் நாயகி# 20

சுந்தரி நின்னெழில் பாடிடப் பணித்தாய்யானும்

அந்தகன் அழகியலை அறியாத மூடன்மேலும்

சொந்தமாய்ப் பாடிடவும் சந்தமென் வசமாயில்லை

வந்தனம் செய்தேயுன்னை வாழ்த்திட முயலுகின்றேன்

சந்தனமேனி யதனில் சந்திரவதன மென்றால்

செந்தா மரையும்ஊடி நொந்துதான் போனதந்தோ

சுந்தரத் தோளிரண்டில் சொந்தங்கொண் டாடுகூந்தல்

செந்தாழை மடலைச்சூட சந்திரன் நாணமுற்றான்

மந்தனம் பின்னேவீரம் அந்தரம் ஆடும்ஆரம்

நந்தன முறுவல்கண்டு எந்தையும் வீழ்ந்தான்அந்தோ

கந்தனை முந்தினான் தொந்தியன் அந்தத்

தந்தமுக னவன்வழியில் புந்தியில்உன்னை வைத்து

வந்தனம் நானும்செய்ய சௌந்தர வல்லிநீயும்

கந்தகம் வேலாம்விழியால் எந்தனைக் காப்பாய்தேவி

 

ஆடியின் நாயகி# 21

தேவியுன் திருமுகமோ திலகமதோ மைவிழியோ

பூவிரியும் மலர்ச்சரமோ நீள்சடையோ தாடகமோ

மேவியுன் மேல்விரியும் பூந்துகிலோ பொன்மணியோ

தாவியுன் தோளமர் சிறுகிளியோ கருவளையோ

மூவுலகும் தான்ஒடுங்கும் பூவனைய பொற்பாதம்

பாவியெதைப் பாடுவனோ கூறிடுவாய் யானறியேன்

பூவுலகின் கயிலையதாம் திருமயிலை தானுறையும்

காவியமே நின்பாதம் சரணடைந்தேன் கற்பகமே

 

ஆடியின் நாயகி# 22

கற்பகமே நின்னருமை தானறியா மாந்தர்களும்

பொற்பதமே யதன்பெருமை ஏதறியா மூடர்களும்

சொற்பதமே நினைப்பாடத் தேடியலை பாவலரும்

கற்றவரும் விற்பன்னரும் நான்மறை நூல் பண்டிதரும்

நிற்பனவும் பற்பலவாம் உயிரினமும் உய்த்துணரா

அற்புதமே நின்சரணே ஆதிஅன்ன பூரணியே

 

ஆடியின் நாயகி# 23

பூரணி பார்கவி சங்கரி சங்கரன்

தோளணி வாரணி வாரண வாகனன்

இந்திரன் வணங்கிடு நாரணி நான்முகி

தாரணி உயிர்வரக் காரணியே கர்ப்ப

ரட்சாம் பிகையே

 

ஆடியின் நாயகி# 24

கர்ப்பத்தை ரட்சித்தாய் அம்பிகையே உமையவளே

உற்பத்தி யானவுயிர் உத்தமனாய் உலகினிலே

நற்புத்தி சொற்புத்தி உடையவனாய் வளர்ந்திடவும்

சர்ப்பத்தை உன்தோளில் ஆரமென அணிந்தவளே

சமயமெதும் பாராமல் சடுதியில் அருள்பவளே

சமயபுரத்தவளே மாரியம்மா அருள் புரிவாய்

 

ஆடியின் நாயகி# 25

அருள்தருவாள் அவ்வுலகேகிட

பொருள்தருவாள் இவ்வுலகிருந்திட

மருளது கொண்ட மாந்தரின் மனதில்

இருளது நீக்கி இன்புறச் செய்வாள்

உருள்வது ஈராம் உலகம் ஏழினில்

உழல்வதாம் உயிர்கள் உய்ந்திட உபாயம்

உயர்ந்ததோர் மந்திரம் ஓம்சக்தி ஓம்

 

ஆடியின் நாயகி# 26

ஓம்சக்தி மந்திரத்தை ஒருமன தாகஓதி

தாமரை மலர்களோடு மங்கலக் குங்குமத்தால்

வாமனன் தங்கைநல்லாள்  வேற்காட்டு

வேதவல்லி நாமம்தான்

மனம்நிறுத்தி நேமமாய் நாம்துதிக்க

நாமென்ற அகந்தைநீங்கி நற்றவம் தான்கைகூடும்

பாவந்தான் பறந்துஓடும் பாரினில் உண்மைகண்டீர்

 

ஆடியின் நாயகி# 27

கண்டீரோ கஜமுகனின் தாயவளைக் கண்டீரோ

கண்டீரோ கரிவரதன் சோதரியைக் கண்டீரோ

கண்டீரோ கண்டநீலம் கொண்டவனின் சரிபாதி

கண்டிடவும் வேண்டுமம்மா கண்ணா யிரம்கோடி

கண்ணுடைய நாயகியின் கம்பீரம் காண்பதற்கு

 

ஆடியின் நாயகி# 28

காண்பதுவும் நின்னுருவே கேட்பதுவும் நின்புகழே

வீணெதற்கு என்வாழ்வு நின்அருமை பாடாது

நானிருக்கும் நாள்வரைக்கும் என்கவியில் நீயிருக்கத்

தானெனக்கு வரமருள்வாய் தவக்கோலக் காமாட்சி

 

ஆடியின் நாயகி# 29

காமாட்சி நின்கரும்பு வில்லெதற்கு அம்பெதற்கு

கோலாட்சி தன்மனதில் தான்புரிந்த ஈசனிடம்

மீனாட்சி ஏந்தியவாம் வில்லம்பு தோற்றதனால்

தேனாட்சி நின்குரலில் சிவன்புகழை நீபாடி

பூநாச்சி நின்வில்லில் மலர்க்கணைகள் தொடுப்பாயோ

 

ஆடியின் நாயகி# 30

தொடுத்திடவோ பூமாலை

மலர்ச்சரமும் நீசூட உடுத்திடவோ பட்டாடை

பொன்னாரம் நீயணிய கொடுத்திடவோ வெண்பொங்கல்

சிறுசுண்டல் நீயுண்ண எடுத்திடவோ ஒருமெட்டு

நீகேட்டுத் தானுறங்க படைத்திடவோ மனக்கோவில்

மலைராணி நீவசிக்க

 

ஆடியின் நாயகி# 31

நீவசிக்கும் மலையதனில் மேகங்கள் தான்பொழியும்

ஊர்பசிக்கு நெல்விளைய உனைவேண்டு

வாருண்டு நீபுசிக்க தயிரன்னம்

ஆசையுடன் தான்படைக்க தாமசிக்க லாமோசொல்

சாலிவா டீஸ்வரியே நீசிரிக்க வான்பொழியும்

நேரமுடன் வந்துவிடு