July 2017 – BKR

அங்கமாய் மங்கைகொண்டான் தங்கிடும் கங்கைகொண்டான்

சங்கத் தமிழ்வளர்த்த சங்கரன்தான் –  சங்கினைப்

பங்கிடும் கீரனைத்தன் கங்கினால்  சுட்டுமங்காத்

தங்கமாய் ஆக்கிவைத்த ஈசன்.

 

 

முத்தன் முதுபெரும் சித்தன் உயிர்க்கெல்லாம்

அத்தன் உமையவள்மேல் பித்தன் அழிவிலா

நித்தன் அடியார்க்கு பக்தன் எனைப்பிரியா

முத்தான சொத்தாம் சிவன்.

 

 

இகத்தில் சகத்தின் சுகத்தில் மிகுத்துப்

பரத்தில் கருத்தைப் பொருத்தா திருக்கும்

எனக்கும் இனிக்க மணித்தாள் மனத்துள்

பதிக்கும் பதியே சிவம்.

 

 

 

ஆடி என்ற உச்சரிப்புடன், ஆனால் ஆடிமாதம், ஆடுதல் என்ற பொருள் வராதவாறு எழுத, எனக்கு நானே வைத்த போட்டியின் விளைவு!!

கண்ணாடி போல்மனத்தான் காருண்யம் பொங்குகடைக்

கண்ணாடி வந்தோர்க் கருளுபவன் – பெண்ணாடித்

தன்தேகம் பாதிதந்தான் தன்சீடர் நால்வரின்

சந்தேகம் தீர்த்த சிவன்.

 

 

 

பெண்கொண்டான் தேகமதில் கண்கொண்டான் வெண்ணுதலில்

தண்கொண்ட கங்கை தலைகொண்டான் – மண்ணுண்ட

மால்காணாக் கால்கொண்டான் மோனப் பொருளாக

ஆல்கண் டமர்ந்த சிவன்.

 

 

 

ஆக்கியவன் அண்டம் இயங்க ஒருகாலைத்

தூக்கியவன் மாயைதனை நீக்கியவன் – தீக்கண்ணால்

தாக்கி இருவினைகள் போக்கித்  திருவருளைத்

தேக்கிடுவான் எங்கள் சிவன்.

 

 

நால்வர்க்கு ஆல்நிழலில் மோனத்தால் முக்திதந்தான்

நால்வர் நவில்தமிழை நாடிநின்றான் – காலமெலாம்

தேடிடும் தேவர்க்கும் சிக்காது என்மனத்தைத்

தேடியாட் கொண்ட சிவன்.

Advertisements

June 2017 – BKR

விழியில் தழலன் அழிவாம் தொழிலன்

எழில்மீன் விழியாள் கொழுநன் – அழியாக்

கிழவன் அழகன் தொழுவார் பழிகள்

மழுவால் அழிக்கும் சிவன்.

 

 

காலமே வென்றவன் ஆலமே மென்றவன்

மாலயன் காணாது நின்றவன் – ஆலவாய்

மன்றுளான் சீலமே நின்றுவாழ் நெஞ்சிலே

ஒன்றிவாழ் எங்கள் சிவன்.

 

 

ஞாயிறும் திங்களும் கண்களில் கொண்டுசெவ்

வாயினில் வேதம்கொள் அற்புதன் செவ்வியா

ழன்ன குரலுடையான் வெள்ளிப் பனிமலையான்

என்ஈச னிந்தச் சிவன்.

 

 

சிரித்தே புரத்தை எரித்தான் கரித்தோல்

உரித்தே தரித்தான் மரித்தோர் – எரித்த

தரைக்கே திரிந்தான் திரியும் நரியைப்

பரியாய்த் திரித்த சிவன்

 

 

 

திரியாப் பிறைதான் சிரமேல் தரித்தான்

அரிவை அரையாய் இருக்கப் – பிரியா

திணைந்தும் மணப்பூங் கணையான் சுணங்கத்

தணலால் தகித்த சிவன்.

 

 

உண்டவிடம் கொண்டவனைக் கொன்றுவிடா தென்பதனை

அண்டத்தின் தாய்நீ அறியாயோ? – உண்டவுடன்

தாவிக் கழுத்தை அழுத்தியதும் ஏனென்று

தேவியிடம் கேட்டுநின்றேன் நான்.

 

இமையார் நலங்காக்க நஞ்சுண்டான் நாதன்

உமைநா னவன்வயிற்றில் தாங்கிச் – சுமந்ததோர்

சுற்றும் பிரபஞ்சம் பேணக் கழுத்தணைந்தேன்

குற்றமென்ன சொல்லென்றாள் தாய்.

 

 

 

ஆடைவிட்டு நீராடும் கோபிகையர் ஆடைகளைத்

தேடி ஒளித்தேநீ சேர்த்தனையே – மூடன்

துரோகிஅத் துச்சன்செய் தீமைக் கழுத

துரோபதிக் காகவோ சொல்.

 

 

அன்னைக்கும் மேலாய் அருள்பொழியும் ஈசனவன்

மன்னிப்ப தன்றிக் கடிவானோ – பண்ணும்

வினைகட் கெதிர்வினைகள் தாமேகி நிற்க

முனிவதுவோ முன்னவனை நாம்?

 

 

 

தாமரைக் கண்ணனவன் தாமரைகை யேந்தியவன்

தாமரைப் பூவமர்ந்தான் தானும்அத் – தாமரை

உந்தியில் கொண்டானும் காணா  வடிவினன்நான்

வந்தித்து ஏத்தும் சிவன்.

 

  1. தாமரைக் கண்ணன் =

தாம்+அரைக்கண்ணன்

முக்கண்ணனின் மூன்று கண்களில் ஒன்றரை அன்னையினுடையவை; ஒருகண் கண்ணப்பர் தந்தது; மீதி அரைக்கண்ணே அரனுடையது (காளமேகம் வாக்கு).

தாமரை கையேந்தியவன்

தா+மரை = தாவும் மான்

ஈசன் மான் ஏந்திய கையினன்.

மற்ற வரிகளில் வரும் தாமரைகள் வழக்கமான பொருள் கொண்டவையே.

“அரைக்கண்ணனும், மானேந்திய கையனுமாகி, அயன், அரி காணா வடிவு கொண்டவனே நான் வந்தித்துத் துதிக்கும் சிவன்”.

 

 

பஞ்சாக் கரனவன் பஞ்சக் கரன்தாதை

மிஞ்சா துலகழித்து மிஞ்சுபவன் – செஞ்சடைமேல்

பிஞ்சாம் பிறையணிந்தோன் நெஞ்சில் நிறைந்தேஎம்

சஞ்சலங்கள் தீர்க்கும் சிவன்.

குறிப்பு:   பஞ்சாக்கரன் = பஞ்ச + அக்ஷரன் = ஐந்தெழுத்தினன்

 

APRIL 2017 – BKR – வெண்பா

ஆலமே உண்டான் அதனால்தன் கண்டத்தே

நீலமே கொண்டான் நினைப்போர் நலம்காக்கும்

சீலமே கண்டான் எனக்குள்  அமர்ந்தருளும்

ஆலவாய் அம்மைக்கு நாதன்.

 

 

வேதியன் வேடமேற்று சூதிலாச் சுந்தரன்பால்

வாதிடும் வாஞ்சைகொண்டோன் பேதமில் அன்பினாலே

ஓதுவார் மீதுமாறாக் காதலாய்க் காக்குமெங்கள்

மாதொரு பாகனாம் நாதன்.

 

 

 

அண்டவிடான் ஆசைகளும் ஆத்திரமும் நம்மனதை

அண்டவிடான் அஞ்ஞானம் நம்மதியை – பண்டைவினை

அண்டவிடான் நாளுமவன் பாதமே வேண்டிநாம்

அண்டவிடா தீவான சிவன்.

 

 

பார்ப்பவன் அன்பினால்  என்னையும் தன்னிடத்

தீர்ப்பவன் தீயவன் நல்லன்  எனாதெனை

ஏற்பவன் தீராத முன்வினை யாவையும்

தீர்ப்பவன் தன்னிலே என்னையே ஒன்றெனச்

சேர்ப்பவன் தானே சிவன்.

 

 

அரனவன் தில்லைப் பரனவன் மூலப்

பிரணவன் மானும் மழுவுமே ஏந்தும்

கரனவன் சந்ததம் சிந்தித்து வாழச்

சரணவன் பாதம் எனக்கு.

 

 

விடைமீ தமர்ந்தான் விடம்மென்று தின்றான்

சடைமீது கங்கை சுமந்தான் – மடந்தை

ஒருபாகம் கொண்டான் உயர்ந்தோங்கி நின்றான்

திருமா லயன்தேடு மீசன்.

 

 

அழல்கொண்ட கையான் அலர்தாழை சூடி

அழகென்ற சொற்கழகு தந்தான் – கழல்கண்டு

மையல் உறுவோர் மனம்நாடி வாழும்என்

மையார் தடங்கண்ணி நாதன்.

 

 

காவிரி பொங்கிடுங்கால்  கொள்ளுவதால் கொள்ளிடமாம்

பாவிரித்து நண்பர்கள் பாடிடவே – தாவி

அமிழ்தாய்ப் பொங்கும்  கவிவெள்ளம் கொள்ளும்

தமிழின்ப மென்னும் நதி.

 

 

தாழ்ந்தமனம் கொண்டும்நான் வீழ்ந்துவிடாக் காரணத்தை

ஆழ்ந்திங்கு நோக்கிஅறிந்துகொண்டேன் – தாழ்ந்தபொருள்

தேடி உவந்தேற்றுப் பேணும்என் ஈசனவன்

நாடியுற்றான் என்மனத்தும் தான்.