Jan 2017 – GRS

எங்கேயோ எப்போதோ நடந்தெல்லாம்

இங்கேயே இப்போதே தெரிகிறதே – மங்காத

பண்புகளோடு மனஞ்சேர் அன்பு

நண்பர்களோடு கழிக்கும் காலம்

 

இனிதுண்ணல் இன்னிசை கேட்டல்

நனிதுணை உடற்சேரல் – அனுபவ

ஞானமிவைக்கெல்லாம் மென்மேல்

தியானம் கூடிய நிலை.

 

விந்தையிவ்வுலகில் நீயெனில் வைத்த

சிந்திக்கவொண்ணா பாசம்- எந்தையின்

தாயே உறவுகளின் உணர்வு வெறும்

மாயையா மயக்கம் தெளி

 

நானோரு விளையாட்டு பொம்மையா பாடலில்

நானொரு ஒப்புமை காணவில்லை-தானோறு

பொம்மையும் படைக்கவில்லை அவள் தானாய்

நம்பி படைத்தது புருஷார்த்தமே

 

நன்னிலம் யாவும் பரவி அவளுளலெனில்

என்னிலுமில்லையோமவள் – சொன்ன

ஒருகதையும் சீராய்ந்து கேட்க ஒரு

அருகதை எனக்கிலையோ?

 

BKR:

எங்கோயெப் போதோ நடந்தவை எல்லாமும்

இங்கேயிப் போதே தெரிகிறதே -மங்காத

பண்புக ளோடு மனஞ்சேரும் அன்புடைய

நண்ப ருடன்கழிக்கும் காலம்.

 

 

Jan 2017 – Pithan

பித்தன் 124.

கல்லாலடியில் கண்மூடித்

     தவமிருந்து

நல்லதோர் காஞ்சியில்

     நடமாடிய சிவனே

வில்லையுடைத்து

     சீதையை மணந்து

வில்லாலடித்து அசுரனை

     வதைத்த ராமனே

நால்வேதப் பொருளறியா

     பிரமனை சிறைவைத்து

சொல்லியுன் தந்தைக்குப

     தேசித்த வேலவனே

நல்லோர் வாழுமிப்

     புவியில் கலந்த

புல்லுருவிகளை களைய

     நீவரும்நாள் எந்நாளோ.

 

 

பித்தன் 125.

நடுக்கடலில் அலையின்றி

     நன்னீ ரிருப்பதுபோல்

அடுக்கிவரு மெண்ணமது

     அமைதி யடைந்திட

கடுகளவுன் எண்ணமதில்

     கண்ணனை நினைவுற

சடுதியில் வந்துனக்கு

     சாந்தி யளித்திடுவான்.

 

பித்தன் 126.

வாழவந்தநம்

          மெல்லோரையும்

வாழவைக்க

          வந்திடுவான்

ஆழமான அடிமனதில்

அழகாக வீற்றிருப்பான்

குழந்தையாக

          இருந்தநம்மை

கிழவனாக ஆகும்வரை

நிழலெனத்

          தொடர்ந்திடுவான

     நிம்மதியளித்திடுவான்

வேழமுகத்தானை நாம்

     வணங்கி வாழ்ந்திடுவோம்.

 

 

பித்தன் 128.

கண்ணனை அடைய நீ

     பாவை நோன்பேற்றாய்

வண்ணமலர் மாலைகளை

     சூட்டிக் கொடுத்தாய்

என்னதவம் செய்தாரோ

     ஆழ்வார் உனையடைய

என்னதவம் செய்துநீ

     அரங்கனுடன்

          கலந்தாயோ

இன்றுனை நினைந்து

     மகிழ்ந்தோம்

          கோதைத்தாயே.

 

பித்தன் 130.

கார்மேகம் மழைபொழிய

நாற்றுகள் மூழ்கிவிடும்

காற்றலைகள் வீசிட

சார்புகள் சரிந்துவிடும்

பார்ப்பனர்கள் வேதமதை

பார்முழுது மோதினால்

கார்மேகம் கலைந்துவிடும்

காற்றலைக ளோய்ந்திடும்

பார்முழுதும் பஞ்சமது

நற்பஞ்சாய்ப் பறந்திடும்.

 

 

Jan 2017 – Suresh

விடமுண்ட கண்டன் விடையேறு பரமன்

இடங்கொண்ட வுமையாள் மனங்கொண்ட கள்வன்

படங்கொண்ட பாம்பாய் எதிர்கொண்ட வினைகள்

தடம்மாறி விலக தடுத்தாள வருக.

 

மதியொடு நதியும் மாலுடன் பிறப்பும்

மழுவொடு மானும் மருள்தரு டமருகம்

விதிமுடி சூலமும் வெந்தழல் கண்நுதல்

கதியென அழைத்தேன் காத்திட வருக.

 

பிறவிகள் பற்பல பிழைத்திட சலித்தேன்

துறவெனு மறுநிலை துணிந்திட மறுத்தேன்

அறவழி அதுவெது அறிந்திட விழையேன்

உறவெனக் குனதருள் உணர்த்திட வருக.

 

தன்பிள்ளை போலிறையைப் பாவித்தே இராமனுக்கு

தான்சுவைத்த கனிகளையே படைத்தாள் பசியாற்றித்

தாயாகி நின்றசபரி தனக்குவமை இல்லாதாள்.

 

பேயுருக் கொண்டென் பெம்மான் பதமலர்

தாயவள் காரைக்கா லம்மையே நாடினாள்

தூயநற் சொல்செயல் துளியு மில்லாத

நாயெனக் குன்கழல் நாடுதல் தரமோ?

 

காலமதை நிறுத்தி யுன்மேல் பக்திநிறை

பாலன் ஒருசிறுவன் என்றும் பதினாறாய்

ஞாலமது வியக்க பதினாறும் பெற்றுய்ய

காலனை யொறுத்தநின்றன்

ஜாலமென் சொல்வேனையா.