Nov 2017 – Rali – Venpa

ராலியின் வேண்வெண் முயற்சி #576:

பிள்ளைக் கறிகேட்க

    ஈசனே எப்படி

உள்ளம்தான் வந்தது

    உன்செயல் ஊரினில்

உள்ள புராணத்தில்

    இல்லாப் புதுவழக்கம்

பிள்ளையை வெட்டுதல்

    செய்வதார் என்றெண்ண

மெள்ள நினைவினில்

    வந்தது நீசொந்தப்

பிள்ளைத் தலைகொய்த

    சேதி.

 

 

அழையாத பேய்மழை தந்தெங்கள் எல்லாப்

பிழையும் கழித்திடுவாய் போற்றி.

 

வானாகிக் கோனாகித் தேனாகி ஊனாகித்

தானாகி யோனுனைக் காப்பான்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #577:

முந்தியவன் பாபுனைய

    உந்தியவன் முக்கால

சந்தியவன் கங்கைநீர்

    சிந்தியவன் நல்லோரின்

புந்தியவன் வேதவீணைத்

    தந்தியவன் முத்தொழிலில்

பிந்தியவன் ஆஞ்சநேய

    மந்தியவன் நாதனும்

நந்தியவன் காளையும்

    அந்தியவன் ஐங்கர

தொந்தியவன் அப்பனடி

    போற்றி.

(அந்தியவன் = நெருங்கியவன்)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #578:

ஆணவம் நீயடக்க

    வந்திடுவாய் இந்திரன்

ஆணவம் தட்சனின்

    ஆணவம் கீரனின்

ஆணவம் நான்முகன்

    ஆணவம் ஆழியின்

ஆணவம் மாமுனி

    ஆணவம் ஏமனின்

ஆணவம் ராவணன்

    ஆணவம் நானுமிங்கு

ஆணவம் பெற்றால்

     அடக்கநீ வருவாயே

ஆணவம் பெற்றிடச்

    செய்.

 

கந்தனும் அண்ணனும்

    நந்தனும் போற்றிடும்

சுந்தரன் வாழ்த்திட

    வாழி.

 

ஆவென்று வாய்பிளக்க நான்பார்க்க அந்தாதி

பாவென்று பாடிய பாவலன் நீயென்னை

வாவ்வென்று சொல்வதோ சொல்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #579:

இப்போது வாழ்த்தவோர்

    எண்ணம் உதித்தது

அப்பனே வாழ்த்தினேன்

    ஏற்றுக்கொள் ஏற்றதைத்

தப்பாமல் என்கணக்கில்

    சேர்த்துக்கொள் என்மனம்

எப்போது மாறுமோ

    நானறியேன் மாறிநான்

தப்பாய் உனையெண்ணித்

    தூற்றிடலாம் என்பதனால்

அப்போதைக் கிப்போதே

    சொன்னேன்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #580:

பேறானான் கங்கைநீர்

    ஆறானான் நற்சமயம்

ஆறானான் தீச்சுடலை

    நீறானான்  அண்டத்தின்

ஈறானான் வீரத்தில்

    ஏறானான் மங்கையோர்

கூறானான் வேதத்தின்

    சாறானான் நாமுண்ணும்

சோறானான் நூற்றுக்கு

    நூறானான் மாயைக்கு

வேறானான் சேவடி

    போற்றி

 

ராலியின் வேண்வெண் முயற்சி #581:

பாதிதான் கொண்டீர் தலையில் பிறைமதி

பாதிதான் கொண்டீர் உடம்பில் மலைமகள்

பாதிதான் கொண்டீர் உடம்பில் திருமாலை

பாதிதான் உண்டீர் திருப்பாற் கடல்நஞ்சு

பாதிதான் கண்டீர் அடியார் திருமணம்

பாதிதான் தந்தீர் அவரது கண்பார்வை

பாதிதான் செய்வீர் படைத்தழிக்கும் வேலையை

பாதிதான் செய்வீர் எதையும்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #582:

ஆட்டுவான் ஓட்டிலுண்டி

    ஈட்டுவான் பக்தியை

ஊட்டுவான் நல்வழி

    காட்டுவான் இன்னிசை

கூட்டுவான் ஆகமங்கள்

    தீட்டுவான் அன்பரிடம்

மாட்டுவான் பாலனாயுள்

    நீட்டுவான் நல்வீணை

மீட்டுவான் பார்நிலை

    நாட்டுவான் ஊழித்தீ

மூட்டுவான் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #583:

ஊரறிய ஈசனின்

    பாடலைத் தப்பென்றாய்

கோரகோரன் தன்நெற்றிக்

    கண்திறந்தும் குற்றமென்றாய்

நேரடியாய் ஈசனே

    கற்றுத் தரவிடாது

நீரடக்கும் குள்ளமுனி

    வாய்த்தமிழ்க் கற்றிடுவாய்

கீரனே நீயன்றோ

    வீரன்.

 

நம்கையில் இல்லைகாண்

    வாழ்வின் நிகழ்வேதும்

நம்கையில் உண்டுநம்

    செய்கை.

 

என்சாரம் உண்டெனினும்

    உன்சாரம் நன்றென்றும்

சம்சாரம் இன்றில்லை

    வாழ்வு.

 

நாரணன் தங்கையாம்

    வாரணன் அன்னையாம்

ஆரணங்கு வாழ்த்திட

    வாழி

 

ஆரணங்கு தேவியின்

    அம்சமே கட்டியநாம்

வேறணங்கைக் காணா

    தவரைநாம் கண்டாலோ

போரணங்கு ஆவாள்

    அவள்.

 

ஆசுதோஷி யாமவன்

    கூசுமின் தேவியண்ணன்

வாசுதேவன் அன்பனவன்

    வீசுதென்றல் போன்றவன்

தூசுமின்றிக் கொல்பவன்

    பூசுநீறில் வாழ்பவன்

மாசுமறு நீங்கியவன்

    பேசுதமிழ் தந்தவன்

பாசுபதம் ஏந்தியவன்

    போற்றி.

 

கல்யாணம் ஆனதும்

    காட்டுக்குப் போவென்ற

கல்மனம் கொண்டகுலம்

   பற்றிநான் பாடவோ

தில்லில்லை நண்பாநீ

    அன்றோ ஒருராமன்

கல்யாண ராமன்நீ

    பாடு.

 

நளாயினி husband புலம்பல்:

ஈரணங்கு கொள்வதே

    ஆண்கள் வழக்கமன்றோ

நாரணன் மால்மருகன்

    ஆதவன் சந்திரன்

கோரகோரன் அன்பனாம்

    சுந்தரன் அர்ஜுனன்

சோரன் யதுநந்தன்

    என்றெல்லா ஆண்களுமே

ஓரணங்கா கொண்டனர்

    ஏதோயென் பூர்வகதி

கோரநோய் உற்றேன்

    பழிசொல் லலாமாநீர்

ஓரவஞ்ச னையாயென்

    னையே.

 

இல்லாளைப் பாடுகையில்

    பொல்லாங்கு கூறினால்

பல்லேதும் மிஞ்சுமோ

    என்றுசொல்லி பூமியில்

வல்லாரும் அஞ்சுவர்

    என்றிருக்க இங்குநம்

இல்லாளைப் பொல்லாங்கு

    சொல்வோமோ நாம்மறந்தும்

தில்லாங்கு தீந்திமி

    தோம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #589:

பெண்ணையே பாடுங்கள்

    இல்லையேல் உள்மனத்துப்

புண்ணையே பாடுங்கள்

    இல்லை அனந்தமாம்

எண்ணையே பாடுங்கள்

    இல்லையேல் நீலமேக

விண்ணையே பாடுங்கள்

    இல்லை இறைக்கடைக்

கண்ணையே பாடுங்கள்

    இல்லைகண் ணன்தின்ன

மண்ணையே பாடுங்கள்

    எல்லோரும் ஏதேனும்

பண்ணையே பாடுங்கள்

    இங்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #590:

ஆடுமண்ணல் யானைக்காய்

    ஓடுமண்ணல் தங்கையை

நாடுமண்ணல் பார்வதி

    கூடுமண்ணல் காலனைச்

சாடுமண்ணல் கொன்றைப்பூ

    சூடுமண்ணல் சட்டங்கள்

போடுமண்ணல் அண்டத்தை

    மூடுமண்ணல் கௌரிக்காய்

வாடுமண்ணல் நால்வரும்

    பாடுமண்ணல் ஞானியர்

தேடுமண்ணல் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #592:

ஆண்டவன் உள்ளான்

    இரணியன் போலின்று

ஆண்டவனெங் கேயென்று

    கேட்போரும் உள்ளனர்

வேண்டிய தூண்களும்

    உண்டு இனிவர

வேண்டுவது அச்சிறுவ

    னே.

 

நரஹரியைப் பாடினீர் நன்றாய் இகமும்

பரமும் மகிழ்ந்தே இருப்பீர்.

 

தியானம் தராது அமைதி எவர்க்கும்

தியாகம் தருமே அமைதி.

 

தரகனா வேண்டும் இறைவனைக் காண

நரர்நேரே செல்லலாம் அங்கே.

 

ஆரணங்கை அண்டினீர்

     என்றும் அருள்வாள்சம்

பூரணி ராணி

    அவள்.

 

எப்போதும் நம்முடன் கொள்ள இயலாத

எப்பொருள் மீதுமாசை கொள்வது வீணேகாண்

அப்பொருளைக் கொள்வதும் வீணே.

 

தீராதே ஏழ்மை பணத்தால் பணத்தின்மேல்

தீராத ஆசை ஒழித்திட்டால் மட்டுமே

சாராது போகுமாம் ஏழ்மை.

 

எண்ணிய வண்ணமே எல்லாம் நடந்திட

எண்ணும் வரையில்லை சாந்தி.

 

ஆசை அறுத்தல் தருமின்பம் இல்லையே

ஆசை நிறைவே றினால்.

 

அரிதெங்கும் சீடன் குருவன்று எங்கும்

அரிது பணிசெய்வோர் மேலாளர் அன்று

அரிதெங்கும் பக்தனிறை யன்று.

 

போகம் தனக்கு சுகவாழ்க்கை வேண்டுதல்

யோகம் பிறருக்காய் வேண்டல்.

 

யோகியாய்ப் பாதிபோகி யாய்மீதி உள்ளவர்

போகியே ஆவாருண் மையில்.

 

முடியாத துண்டோ இறைவனுக்கு உண்டு

அடியாரைத் தள்ளி இருத்தல்.

 

ஆசை அறுமின்னா

    சையறுமின் நன்றறுமின்

ஆசையீ சன்பாலே

    ஆயினும் என்றறைந்து

ஆசை விடச்சொன்ன

    நம்திரு மூலருக்கு

வீசை பெறுவரோ

    மாமிசம் தின்றுதலை

மீசை மழித்திடும்

   ‌பௌத்தர்.

 

புவிபோற்றும் கொல்லாமை

  ‌‌சொன்னபுத் தரைத்தான்

அவித்திறைச்சி தின்பரவர்

 ‌‌‌சீடர்.

 

யுகந்தோறும் மாறும்

    தருமம் சிறிதாய்

இகவாழ்வில் ஆடு

    அசுவம் இடுவர்

ஜகம்காக்க அந்தணர்

    அன்று சமைத்து

சுகம்காண அன்று

    அவர்யாகம் காக்கும்

முகமறியும் வைரிகொல்ல

    கொள்வார் படையை

முகமில்லா வைரிக்கு

    யாகம்.

 

 

 

 

Advertisements

Nov 2017 – Rali – Venpa – Modi

ராலியின் வேண்வெண் முயற்சி #591:

பள்ளமும் மேடுமாய்ப் பாய்ந்து மதுரையில்

வெள்ளம் இறைவன் வரச்செய்ய லாமோடி

கள்ளமற்ற மாணிக்க வாசகரை அவ்வரசன்

கள்ளனென்று சொல்லி இருண்ட சிறையினில்

தள்ளல் சரியாகு மோடி.

 

 

Oct 2017 – Rali – Venpa

சுரரு மசுரரும் வீழ்ந்து வணங்கும்

புரமூன்றின் சுந்தரி காதல் புரியும்

அரனையன் சேவடி போற்றி.

 

அறச்செயல் பேணாத செல்வம் சிறிதும்

குறையா துயர்தந்து நிற்கும்.

– உத்தவ கீதை

 

ராலியின் வேண்வெண் முயற்சி #546:

உரத்தைத் தருவாள்

    சிரத்தை அறுப்பாள்

கரத்தை உயர்த்தி

    வரத்தைத் தருவாள்

தரத்தைத் தருவாள்

    பரத்தை மறைப்பாள்

கரத்தைப் பிடிப்பான்

    துணை.

(சிரத்தை அறுப்பாள் = சின்னமஸ்தா)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #547:

தோல்தரித்து வெண்ணீறு பூசி இடதிசை

பால்மங்கை கொண்டு கணேசன் திருவரங்க

மால்மருகன் நந்திதேவன் சூழவாழ் நீள்சடை

மேல்மதியான் சேவடி போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #549:

விண்ணமர் தேவர் தொழுமயன் ஆழ்வார்தம்

பண்ணமர் கண்ணன் அடிமுடி தேடிகாண

வொண்ணாமல் நின்றயீசன் செந்தீச் சுடலைசேர்

சுண்ணமெய்யன் சேவடி போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #551:

அணிவது பாம்பு அரையில் அணியும்

துணியோ திசையெட்டு என்று விளங்கி

பணியும் மனிதர்க்குச் சட்டென் றருளும்

மணிநீல கண்டன் துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #552:

மலையப்பன் தங்கை

    மலைமகள் மன்னன்

கலைமகள் அண்ணன்

    அவள்பதி ஐந்தாம்

தலைகிள்ளும் யாருக்கும்

    என்றும் புரியா

நிலைகொள் இறைவன்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #553:

தன்னப்பன் வீட்டில் பிறந்து வளர்ந்ததாம்

இன்னொரு பெண்ணைச் சடையில் ஒளித்துவைத்த

பின்னும் பதிபக்தி பண்ணும் மலைமகள்

மன்னவன் சேவடி போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #554:

புகைசூழும் காட்டில்

    சிகைபறக்க ஆடும்

பகையிலா வேந்தன்

    மிகையிலா தேவன்

நகைத்து எரிக்கும்

    குகைவாழ் முனிவர்

வகைசெய்த வேதநாதன்

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #557:

மாதவன் மச்சாண்டி வேதவழி தேவண்டி

ஆதவன் பல்லை உடைத்தாண்டி பார்வதி

மாதவள் உள்ளத்துள் என்றும் இருப்பாண்டி

ஏதவன் பேரென்று கேளேண்டி கண்மூடி

மாதவம் செய்யுமீ சண்டி.

 

இருமா திருந்தாலே போதாது என்றும்

ஒருமா திருத்தல் மறுமா தறியா

திருத்தலே நோயிலாது செய்யும்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #558:

எட்டநின்று உம்மை எழுப்பினால் கண்திறந்து

சுட்டெரிப்பீர் உம்பசிக்கு உண்டிவகை சேகரித்துக்

கிட்டே வருவோரின் கண்ணைப் பறித்திடுவீர்

புட்டுதின்று ஊரே அடிவாங்கச் செய்திடுவீர்

சட்டமென்று பேசி அடிமையாய் ஆக்குவீரும்

கிட்டே வருவார் எவர்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #559:

(தீபாவளி!)

நரகனாம் தன்மகனை என்றும் உலகம்

சரவெடி மத்தாப்பு விட்டுசதுர் தசியாம்

இரவில் மகிழ்ந்து புதுத்துணி போர்த்தி

தரமாய் இனிப்புண்டு எண்ணவைத்த தேவி

தரணியாம் பூமித்தாய் போற்றி.

 

நரக சதுர்தசி செவ்வாய் இரவில்

வருகுது தருவீர் கவிதை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #560:

நஞ்சுதின்ன வேண்டிகோடி தேவர் ஒருபக்கம்

நஞ்சுதின்னா தீரென்று தேவி ஒருபக்கம்

கெஞ்சநஞ்சை நெஞ்சின்மேல் வைத்தாய் அவஸ்தையில்

மிஞ்சுவோர் உண்டோசொல் உன்னை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #561:

கருகுவார் தீக்காட்டில் ஆடுவான் உள்ளம்

உருகுவார் நெஞ்சத்தை நாடுவான் நஞ்சைப்

பருகுவான் நான்முகம் ஐந்தாம் தலையைத்

திருகுவான் சங்கத்தில் தன்தமிழ்ப் பாடல்

செருகுவான் தானாய் இருந்து உலகாய்ப்

பெருகுவான் சேவடி போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #562:

ஞான முதல்வன் கணேசன் இளையோனாம்

ஞானம் தரும்கந்தன் போட்டனரே போட்டியொரு

ஞானப் பழம்பெறவே இப்போட்டி வைத்தது

ஞானப் பிறப்பிடம் அம்பிகை ஈசனும்

ஞானக் கொழுந்தொன்று ஞானத்தை உண்பதால்

ஞானம் பெருகுமோ ஞானத்தின் மேலின்னும்

ஞானத்தைச் சேர்த்திடினும் ஞானமன்றோ மாந்தருக்கும்

வானவர்க்கும் மற்றவர்க்கும் சற்றும் விளங்காது

ஏனய்யா இப்படியோர் கூத்து.

 

பயந்து அலறிய தேவர் இறைவா

தயவுசெய் என்றுசொல்ல வேண்டுமோ ஈசன

பயந்தந்தான் நஞ்சுண்டு காத்து.

 

ஞானமொழி குன்றுதோறும் பேசும் முருகன்

ஞானப் பழமின்றி போனால் சிறிதும்

ஞானநிலை குன்றுவானோ சொல்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #563:

ஆசை அறுத்தல் அவசியம் என்றயெண்ணம்

வீசையும் இல்லாது வாழ்வை சுகத்தையும்

காசையும் தேடிக் கழிக்கும் எனக்கொரு

ஓசையும் இல்லாதோர் லின்கீழ் அமர்ந்தேயென்

மாசைக் களைவான் துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #564:

ஒருகாலால் வேகமாய்க் கூற்றை உதைக்க

பெருமடியோ காயமோ கால்சுளுக்கோ புண்ணோ

ஒருகாலைக் கீழேநீ வைக்கா திருக்க

ஒருகேள்வி வந்தது இன்று.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #565:

இட்டிலியும் சாம்பாரும் மிக்சரும் லட்டுவும்

பட்டாசும் புத்தாடை எல்லாமும் எல்லோரும்

கட்டாயம்‌ பெற்று மகிழவைத்த பூதேவி

விட்டுவி டாதெம்மைக் கா.

 

குப்பையே போடலா காதென்னும் எண்ணத்தை

அப்பனே மக்களுக்குத் தா.

 

பெற்றவன் சொற்குற்றம் அற்றவன் அன்றுபொருட்

குற்றம்தான் பெற்றவன் வீதியில் விறகுகள்

விற்றவனைப் போற்றினாய் வாழி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #567:

வரைமகள் மங்கை மணந்தவன் போற்றி

தரைதீநீர் ஆகாசம் காற்றானான் போற்றி

அரைமேல் புலித்தோல் அணிந்தவன் போற்றி

கரையிலா சம்சார ஆழியில் மூழ்கிப்போய்

நரைபெற்றேன் காத்திடுவான் போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #568:

எப்படி நீதுணிவு பெற்றாய்சொல் நக்கீரா

முப்புரம் சுட்டவன் நீவணங்கும் சுப்பனின்

அப்பன் அகத்தியர் கற்கதமிழ் ஆதியில்

செப்பியவன் தப்பவன் பாடலென்று சங்கத்தில்

வெப்பம் தருமவன் நெற்றிக்கண் காட்டியும்

எப்படிச் சொன்னாய்தப் பென்று.

 

சம்பந்தர் முன்தோடு பூண்டுநின்ற சீர்காழி

அம்பிகை நாதனுடன் பிள்ளை கணேசனும்

தம்பியும் வாழ்த்துவர் உன்னை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #569:

ஏசிடுவாள் பார்வதி என்று ஒளிந்தகங்கை

வீசி சிகையைப் பரமனாட இங்கினி

பூசி மெழுகுதல் வீணென்று தெம்பாய்க்கை

வீசி நடந்தாள் மனிதரின் மாசுபோக்கக்

காசி நகருள் விரைந்தே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #570:

மாய்த்தவன் அண்டத்தே ஞானப் பழமென்று

காய்த்தவன் அம்புவிட்ட மன்மதனைக் கண்திறந்து

தீய்த்தவன் பார்வதி காதல் மணாளனாய்

வாய்த்தவன் சற்றே நகைத்தபடி முப்புரம்

சாய்த்தவன் அன்புடன் கேட்டுத் துணியொன்று

தோய்த்தவன் உய்ந்திட வைத்தவன் ஆநிரை

மேய்த்தவன் கோனவன் ஏய்க்கவந்த சுந்தரரை

ஏய்த்தவன் சேவடி போற்றி.

 

ஆறுபொறி ஆகிப்பின்

    ஆறுமுகம் ஆனபொருள்

ஏறுமயி‌‌ லேறியுனைக்

    காப்பான்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #571:

( மதுரை மணியின் ‘சேவிக்க வேண்டும் ஐயா சிதம்பரம்’ ஞாபகம் வந்த விளைவு)

சோதிக்க வேண்டுமா ஐயா சிதம்பர

ஆதிதேவா அன்பரைப் பாடாய்ப் படுத்தியேனும்

சோதிக்க வேண்டுமா ஐயா அடியார்கள்

சூதில்லா பக்தர்கள் ஐயாநீ செய்வது

நீதியாமோ ஐயாவுன் மேல்பக்தி கொண்டோரில்

பாதிப்பேர் ஓடிவிட்டார் ஐயா இருக்கிற

மீதிப்பேர் கேள்வியிது ஐயா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #572:

இருந்த இடமே தெரியாது அண்டம்

திருந்த அழிப்பான் திரண்ட விஷத்தை

அருந்துவான் மாணிக்க வாசகரை அன்பாய்

குருந்த மரத்தின்கீழ் ஆட்கொள்வான் சற்றும்

திருந்தாத பாவிநான் என்பிறவி நோய்க்கு

மருந்தாவான் சேவடி போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #573:

முற்றும் பனிசூழ் மலையாமென் வீட்டில்நான்

பெற்றேன் வளர்த்தேன் அருமையாய் என்பெண்ணை

சற்றும் அவளுக்கு வெப்பம் தெரியாது

பற்றி எரியும் நெருப்பின் நடுவிலே

பற்றி எரியும் நெருப்பைக்கைக் கொண்டவன்

உற்றவன் ஆனானே பெண்ணுக்கு என்செய்வேன்

பெற்றவன் என்கவலை தீர.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #574:

வாரமும் ஆனாய்நீ மாதமும் ஆனாய்நீ

நேரமும் ஆனாய்நீ நால்வகை வேதத்து

சாரமும் ஆனாய்நீ வீரமும் ஆனாய்நீ

தீரமும் ஆனாய்நீ கோரமும் ஆனாய்நீ

பாரமென்று எண்ணியென்னை நெஞ்சினில் ஈரமின்றி

தூரமாய் நிற்றல் முறையோ.