Jan 2017 – Pithan

பித்தன் 124.

கல்லாலடியில் கண்மூடித்

     தவமிருந்து

நல்லதோர் காஞ்சியில்

     நடமாடிய சிவனே

வில்லையுடைத்து

     சீதையை மணந்து

வில்லாலடித்து அசுரனை

     வதைத்த ராமனே

நால்வேதப் பொருளறியா

     பிரமனை சிறைவைத்து

சொல்லியுன் தந்தைக்குப

     தேசித்த வேலவனே

நல்லோர் வாழுமிப்

     புவியில் கலந்த

புல்லுருவிகளை களைய

     நீவரும்நாள் எந்நாளோ.

 

 

பித்தன் 125.

நடுக்கடலில் அலையின்றி

     நன்னீ ரிருப்பதுபோல்

அடுக்கிவரு மெண்ணமது

     அமைதி யடைந்திட

கடுகளவுன் எண்ணமதில்

     கண்ணனை நினைவுற

சடுதியில் வந்துனக்கு

     சாந்தி யளித்திடுவான்.

 

பித்தன் 126.

வாழவந்தநம்

          மெல்லோரையும்

வாழவைக்க

          வந்திடுவான்

ஆழமான அடிமனதில்

அழகாக வீற்றிருப்பான்

குழந்தையாக

          இருந்தநம்மை

கிழவனாக ஆகும்வரை

நிழலெனத்

          தொடர்ந்திடுவான

     நிம்மதியளித்திடுவான்

வேழமுகத்தானை நாம்

     வணங்கி வாழ்ந்திடுவோம்.

 

 

பித்தன் 128.

கண்ணனை அடைய நீ

     பாவை நோன்பேற்றாய்

வண்ணமலர் மாலைகளை

     சூட்டிக் கொடுத்தாய்

என்னதவம் செய்தாரோ

     ஆழ்வார் உனையடைய

என்னதவம் செய்துநீ

     அரங்கனுடன்

          கலந்தாயோ

இன்றுனை நினைந்து

     மகிழ்ந்தோம்

          கோதைத்தாயே.

 

பித்தன் 130.

கார்மேகம் மழைபொழிய

நாற்றுகள் மூழ்கிவிடும்

காற்றலைகள் வீசிட

சார்புகள் சரிந்துவிடும்

பார்ப்பனர்கள் வேதமதை

பார்முழுது மோதினால்

கார்மேகம் கலைந்துவிடும்

காற்றலைக ளோய்ந்திடும்

பார்முழுதும் பஞ்சமது

நற்பஞ்சாய்ப் பறந்திடும்.

 

 

Jan 2017 – Suresh

விடமுண்ட கண்டன் விடையேறு பரமன்

இடங்கொண்ட வுமையாள் மனங்கொண்ட கள்வன்

படங்கொண்ட பாம்பாய் எதிர்கொண்ட வினைகள்

தடம்மாறி விலக தடுத்தாள வருக.

 

மதியொடு நதியும் மாலுடன் பிறப்பும்

மழுவொடு மானும் மருள்தரு டமருகம்

விதிமுடி சூலமும் வெந்தழல் கண்நுதல்

கதியென அழைத்தேன் காத்திட வருக.

 

பிறவிகள் பற்பல பிழைத்திட சலித்தேன்

துறவெனு மறுநிலை துணிந்திட மறுத்தேன்

அறவழி அதுவெது அறிந்திட விழையேன்

உறவெனக் குனதருள் உணர்த்திட வருக.

 

தன்பிள்ளை போலிறையைப் பாவித்தே இராமனுக்கு

தான்சுவைத்த கனிகளையே படைத்தாள் பசியாற்றித்

தாயாகி நின்றசபரி தனக்குவமை இல்லாதாள்.

 

பேயுருக் கொண்டென் பெம்மான் பதமலர்

தாயவள் காரைக்கா லம்மையே நாடினாள்

தூயநற் சொல்செயல் துளியு மில்லாத

நாயெனக் குன்கழல் நாடுதல் தரமோ?

 

காலமதை நிறுத்தி யுன்மேல் பக்திநிறை

பாலன் ஒருசிறுவன் என்றும் பதினாறாய்

ஞாலமது வியக்க பதினாறும் பெற்றுய்ய

காலனை யொறுத்தநின்றன்

ஜாலமென் சொல்வேனையா.

 

Jan 2017 – SKC

அரங்கத்தில் உறங்கும் அரங்கனைக் கொஞ்சம்

மறந்தே புறந்தள்ளி மனம் தவித்துப் பின்

திருந்தி மனந் தெளிந்து திருமாலடி கண்டு

பிறந்தே பெற்றதோர் பேதைமை தொலைத்து உயிர்

துறந்து உடல் துஞ்சுமுன் தொழுது அவன் பாதம்

இருந்தேன் கிடந்தேன் இனி வேறுண்டோ?

 

தேடும் கல்வியும் தின்னச் சோறும்

வாடும் பயிரும் வற்றிய நீரும்

நாடும் கண்டு நலிந்தே இருக்க

மாடு இளைத்தும் கொம்பிளைக் காதென

கூடும் மனிதர் தோளை நிமிர்த்திப் படும்

பாடும் தீர்ந்து பலவும் அடைய இறை

நாடும் நிலையை நாளும் மறந்தே

ஆடும் மயிலோன் அடி பணிந்திலரே!

 

பிறந்தோம் பிறவறியாது பிறந்தே வளர்ந்தோம்

புரியா திருந்தோம் இருந்தே இறந்தோம்

இறந்தே துறந்தோம் உடலைத் துறந்தே மறந்தோம்

மறவோம் வேலைக் கரந்தனில் ஏந்தும்

கந்தன் வழித் துணையே.

 

எமை வளர்த்த அன்னை எம் இளவயதில்

உமை யன்றி வேறு ஒருவர் உண்டோ ? – சுமை

கொண்டு இவ்வாழ்வில் சோர்வுற அவளைக்

கண்டு மகிழ்ந்தோம் யாம்.