Jan 2017 – ப.பி.

Rali: #ப.பி.

செம்மான் மகளைத்

    திருடும் திருடன்

பெம்மான் முருகன்

    பிறவான் இறவான்

– கந்தரனுபூதி

 

Rali: # ப.பி

சங்குச் சக்கரச்

    சாமி வந்து

ஜிங்கு ஜிங்குன்னு

     ஆடுமாம்

உலகம் மூணும்

      அளக்குமாம் அது

ஓங்கி வானம்

        பிளக்குமாம்.

 

BKR: # ப.பி

செம்மான் மகளைத்

    திருடும் திருடன்

பெம்மான் முருகன்

    பிறவான் இறவான்

சும்மா இருசொல்

       லறவென் றலுமே

அம்மா பொருளொன்

       றுமறிந் திலனே

– கந்தரனுபூதி

 

Suresh:

#பபி:

கந்தரனு பூதிபெற்றுக்

கந்தரனு பூதிசொன்ன

எந்தையருள் நாடி

இருக்குநா ளென்னாளோ

 

SKC:

#ப.பி.

உண்ணும் சோறு பருகும் நீர்

தின்னும் வெற்றிலையும் எல்லாம்

கண்ணன் எம்பெருமான் என்றென்றே

கண்கள் நீர் மல்கி

மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்க

அவன் ஊர் வினவி

திண்ணம் என் இளமான் புகும் ஊர்

திருக் கோவிலூரே.

– திருவாய்மொழி.

 

SKC:

#ப.பி.

நன்றாய் ஞானம் கடந்து போய்

நல்லிந்திரியம் எல்லாம் ஈர்த்து

ஒன்றாய்க் கிடந்த அரும்பெறும் பாழ்

உவப்பில் அதனை உணர்ந்து உணர்ந்து

சென்றாங்கு இன்ப துன்பங்கள்

செற்றுக் களைந்து பசை யற்றால்

அன்றே அப்போதே வீடு

அதுவே வீடு வீடாமே.

– திருவாய்மொழி.

 

SKC:

#ப.பி

துறப்பு எனும் தெப்பமே துணை செயாவிடின்

பிறப்பு எனும் பெருங்கடல் பிழைக்கல் ஆகுமோ !

— கம்பன்

 

Rali:

#ப.பி

இன்பமெல்லாம் தருவாள்

துன்பமெல்லாம் இழைப்பாள்

– பாரதி

 

 

 

Dec 2016 – #ப.பி.

Rali: #ப.பி.

வில்லாலடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்

கல்லாலெறியப் பிரம்பாலடிக்கக் களிவண்டு கூர்ந்

தல்லாற்  பொழிற்றில்லை அம்பலவாணர்க்கோர் அன்னைபிதா

இல்லாததல்லவோ இறைவா கச்சி ஏகம்பனே.

– பட்டினத்தார்

 

BKR: #ப.பி.

தூசா மணியும் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினதன் பருளால்

ஆசா நிகளம் துகளா யினபின்

பேசா அனுபூ திபிறந் ததுவே

(அருணகிரிநாதர்- கந்தரனுபூதி)

 

VKR: #ப.பி.

பொன்போலக் கள்ளிப் பொரிபறக்கும் கானலிலே

என்பேதை செல்லற் கியைந்தனளே -மின்போலலும்

மானவேள் முட்டைக்கும் மாறாத தெவ்வர் போம்

கானவேள் முட்டைக்கும் காடு.

 

விழுந்நதுளி அந்திரத்தே வேம்என்றும்

வீழின் எழுந்து சுடர் சுடுமென்றும்-செழுங்கொண்டல்

பெய்யாத கானகத்தே பெய்வளையும் சென்றனளே

பொய்யாமொழிப் புலவர் போல்.

 

Rali: #ப.பி.

ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்

மாயாப் பிறவிமயக்கு அறுப்பது எக்காலம்?

– பத்திரகிரியார்

 

SKC: #ப.பி.

கஞ்சி குடியாளே கம்பன்சோ றுண்ணாளே

வெஞ்சினங்க ளென்றும் விரும்பாளே – நெஞ்சதனில்

அஞ்சுதலை யாவார்க் காறுதலை யாவாளே

கஞ்சமுக காமாட்சி காண்.

(ஒப்பிலாமணிப் புலவர்)

 

SKC: #ப.பி.

பக்தியொடு சிவ சிவா என்று திருநீற்றைப்

பரிந்து கையால் எடுத்துப்

பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு

பருத்த புயமீதில் ஒழுக

நித்த மூவிரல்களால் நெற்றியில் அழுந்தலுற

நினைவாய்த் தரிப்பவர்க்கு

நீடு வினை அணுகாது தேக பரிசுத்தமாம்.

(குமரேச சதகம்)

 

SKC: #ப.பி.

வீரம் சொரிகின்ற பிள்ளாய் உனக்கும் பெண் வேண்டு மென்றாய்

ஆரும் கொடா ருங்களப்பன் கபாலி யம்மான் திருடன்

ஊரும் வெங்காடு நின்றன் முகம் யானை உனக்கிளையோன்

பேரும் கடம்ப னுன்றாய் நீலி நிற்கும் பெருவயிறே.

(நிந்தனைத்துதி – அந்தகக்கவி)

 

Rali: #ப.பி.

கல்லா நெஞ்சின்

நில்லான் ஈசன்

சொல்லா தாரோ

டல்லோம் நாமே.

– ஆளுடைப் பிள்ளையார் திருஞான சம்பந்தர்

 

BKR: #ப.பி..

(பெரியது என்று வள்ளுவர் கூறும் மூன்று விஷயங்கள்)

 

நிலையில் திரியா தடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.

 

காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

 

பயன்தூக்கார் செய்த உதவி  நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.

 

12/11/16

Rali: மஹாகவி பாரதி வாழ்க!

இன்று அவர் பிறந்த நாள்

 

Rali: #ப.பி.

நம்பினார் கெடுவதில்லை நான்குமறைத் தீர்ப்பு

அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்.

– மஹாகவி பாரதி

 

பஞ்சுக்கு நேர்பல துன்பங் களாமிவள்

பார்வைக்கு நேர்பெருந் தீ.

– மஹாகவி பாரதி

 

அக்னிக் குஞ்சொன்று கண்டேன்

அதை ஆங்கே பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு.

– மஹாகவி பாரதி

 

எள்ளத்தனைப் பொழுதும்

      பயனின்றி இராதெந்தன் நாவினிலே

வெள்ளமெனப் பொழிவாய்

      சக்திவேல் சக்திவேல் சக்திவேல்.

 

தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்

தருமமறு படிவெல்லும் எனுமி யற்கை

மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்

வழிதேடி விதியிந்தச் செய்கை செய்தான்

கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று

கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்

தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.

– மஹாகவி பாரதி

 

ஓடி வருகையிலே கண்ணம்மா

      உள்ளம் குளிருதடீ

ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்

      ஆவி தழுவுதடீ

 

உச்சி தனைமுகர்ந்தால் கருவம்

      ஓங்கி வளருதடீ

மெச்சி உனையூரார் புகழ்ந்தால்

      மேனி சிலிர்க்குதடீ.

– மஹாகவி பாரதி

 

தீக்குள் விரலை வைத்தால்

      நந்தலாலா நின்னைத்

தீண்டுமின்பம் தோன்றுதடா

      நந்தலாலா.

– மஹாகவி பாரதி

 

பெற்ற தாயும்

      பிறந்த பொன்னாடும்

நற்றவ வானிலும்

      நனி சிறந்தனவே.

– மஹாகவி பாரதி

 

VKR: #ப.பி.

சொல் புதிது

பொருள் புதிது

சுவை புதிது.

-பாரதி.

 

உண்மையின் பேர்தெய்வம் என்போம் அன்றி

ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்

உண்மைகள் வேதங்கள் என்போம் பிறிது

உள்ள மறைகள் கதையெனக் கணடோம்.

கடலினைத் தாவும் குரங்கும் வெங்

கனலில் பிறந்ததோர் செவ்விதழ் பெண்ணும்

வடமலை தாழ்ந்ததனாலே தெற்கில்

வந்து சமன்செய்யும் குட்டை முனியும்

நதியு னுள்ளேமுழு கிப்போய் அந்த

நாகர் உலகிலோர் பாம்பின் மகளை /

விதியுறவே மணம் செய்த திறல்

வீமனும் கற்பனை யென்பது கண்டோம்.

கவிதை மிகநல்ல தேனும் அக்

கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்

புவிதன்னில் வாழ்வுநெறி காட்டி நன்மை போதிக்கும்

கதைகள் அவைதாம்.

(புதுமைக்கவி பாரதி)

 

Suresh: #ப.பி.

நல்லதோர் வீணைசெய்தே அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி

நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

– மஹாகவி பாரதி

 

BKR: #ப.பி.

கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு

கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்

(மஹாகவிபாரதி)

 

Suresh: #ப.பி.

பாட்டின் அடிபடு

பொருளுன் அடிபடு

மொலியிற் கூட

களித்தாடுங் காளி

சாமுண்டி கங்காளி

( மஹாகவி பாரதி)

 

SKC: #ப.பி.

தேடிச்சோறு நிதம் தின்று பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்

வாடித் துன்பமிக உழன்று பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்

கூற்றுக் கிரையானப்பின் மாயும் பல

வேடிக்கை மனிதரைப் போலே நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ?

( மஹாகவி பாரதி)

 

இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென

இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்

இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்

பொருட்கெல்லாம் இயற்கை யாயின்

இடையின்றிக் கலைமகளே நினதருளில்

எனதுள்ளம் இயங்கொணாதோ?

( மஹாகவி பாரதி)

 

பித்தன்: #ப.பி.

உடம்பால் அழியின் உயிரால் அழிவர்

திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

(திருமூலர்).

 

SKC: #ப.பி

ஆவீன மழை பொழிய வில்லம் வீழ

அகத்தடியாள் மெய்ந்நோவ வடிமை சாவ

மாவீரம் போகுதென்று விதை கொண்டோட

வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்

சாவோலை கொண்டொருவ னெதிரே செல்லத்

தள்ளவொண்ணா விருந்து வரச்

சர்ப்பந் தீண்டக்

கோவேந்த ருழுதுண்ட கடமை கேட்கக்

குருக்களோ தட்சணைகள் கொடுவென் றாரே.

(இடுக்கண் ஒருங்கே வருதல் – இராமச்சந்திரக் கவிராயர்)

 

Rali: #ப.பி.

சதுரம்மறை தான்துதி செய்து வணங்கும்

மதுரம்பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா

இதுநன்கிறை வைத்தருள் செய்க எனக்குன்

கதவம்திருக் காப்புக்கொள்ளும் கருத் தாலே.

– திருஞான சம்பந்தர்

 

Rali: #ப.பி.

தந்தையார் போயினார் தாயாரும் போயினார்

    தாமும் போவார்

கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார்

    கொண்டு போவார்

எந்தநாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால்

    ஏழை நெஞ்சே

அந்தண் ஆரூர் தொழுது உய்யலாம்.

– திருஞான சம்பந்தர்

 

Muthumani: #ப.பி.

‘நடமாடித் தோகை விரிக்கின்ற

மாமயில்காள் உம்மை

நடமாட்டங் காணப் பாவியேன்

நானோர் முதலிலேன்

 

குடமாடு கூத்தன் கோவிந்தன்

கோமிறை செய்துஎம்மை

உடைமாடு கொண்டான் உங்களுக்கு

இனியொன்று போதுமே!

(ஆண்டாள்)

 

Rali: #ப.பி.

சக்கரத்தை எடுப்பதொரு கணம்

    தருமம் பாரினில் தழைத்தல் மறுகணம்

இக்கணத்தில் இடைக்கணம்

    ஒன்றுண்டோ?

– பாரதி

 

SKC: # ப.பி.

முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னவர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும்

கன்னம்களவு மிகுந்திடும் காசினி

என்னரும் நந்தி எடுத்துரைத்தானே.

– திருமூலர் திருமந்திரம்

 

VKR:# ப.பி.

ஆநிரை குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காப்பான் எனின்

(குறள்)

 

 

 

 

 

Nov 2016 – #ப.பி.

BKR:  #ப.பி.

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் – சபைநடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டாத வன்நன் மரம்.

(ஔவையார்)

 

Rali: #ப.பி

குதம்பைச் சித்தர் பாடல்:

வெட்டவெளி தன்னில் மெய்யென் றிருப்போர்க்கு

பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய்

பட்டயம் ஏதுக்கடி?

 

VKR: #ப.பி.

ஆர்பிழியுண்போரும் தோப்பபாக்குனரும் நீத்தோரும்

நேர் பழங்கள் நட்டிடும் நெல்லையே – சூர்படுத்தோன்

மாதுருக் கங்காதரனார் மாதுருக் கங்காதரனார்

மாதுருக் கங்காதரனார் வாழ்வு.

 

BKR: #ப.பி.

காளமேகப் புலவர் எழுதிய சிலேடை கீழே:

ஆவருடன் பாவலரும் ஆறுகால் வண்டினமும்

காவலரைச் சூழும் கலைசையே – பாவாய்

அரிவையம் பாகத்தான் அரணொருமூன் றெய்தான்

அரிவையம்பா கத்தான் அகம்.

 

Rali:

சிலேடைப் படித்துப் புரிந்தி ருந்தால்

சிலேடை எனக்குவந்தி ருக்கும்.

 

Rali: #ப.பி.

சிவவாக்கியர்:

நட்டகல்லை தெய்வமென்று

      நாலுபுஷ்பம் சாத்தியே

சுற்றிவந்து மொணமொணவென்று

      சொல்லும் மந்திரமேதடா

நட்டகல்லும் பேசுமோ

      நாதனுள் இருக்கையில்

சுட்டசட்டி சட்டுவம்

      கறிச்சுவை அறியுமோ.

 

BKR: # ப.பி

என்னிலே இருந்தவொன்றை  யானறிந்ததில்லையே

என்னிலே இருந்தவொன்றை யானறிந்துகொண்டபின்

என்னிலே இருந்தவொன்றை யாவர்காணவல்லரோ

என்னிலே இருந்திருந்து யானறிந்துகொண்டேனே.

(சிவவாக்கியர்)

 

பித்தன்: # ப.பி

அந்திகாலம் உச்சிமூன்றும்

    ஆடுகின்ற தீர்த்தமும்

சந்திதர்ப் பணங்களும்

    தபங்களும் செபங்களும்

சிந்தை மேவுஞானமும்

    தினம்செபிக்கும் மந்திரம்

எந்தை ராம ராம ராம

     வென்னும் நாமமே.

(சிவவாக்கியர்).

 

BKR: # ப.பி

மண்கலம் கவிழ்ந்தபோது

     வைத்துவைத்தடுக்குவார்

வெண்கலம் கவிழ்ந்தபோது

  வேணுமென்று பேணுவார்

நம்கலம் கவிழ்ந்தபோது

   நாறுமென்று போடுவார்

எண்கலந்து நின்றமாயம்

  என்னமாயம் ஈசனே!!

(சிவவாக்கியர்

 

SKC: #ப.பி.

வெம்புவாள் விழுவாள் பொய்யே; மேல் விழுந்

              தழுவாள் பொய்யே;

தம்பலந் தின்பாள் பொய்யே; சாகின்றே னென்பாள்

                      பொய்யே;

அம்பிலுங் கொடிய கண்ணாள்

ஆயிரஞ் சிந்தையாளை

நம்பின பேர்க ளெல்லாம்

நாயினும் கடையா வாரே!

Rali: #ப.பி.

நந்த வனத்திலோ ராண்டி அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்

கொண்டுவந் தானொரு தோண்டி மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.

(கடுவெளிச் சித்தர்)

 

BKR: # ப.பி

முக்கண்ண னென்றரனை

        முன்னோர் மொழிந்திடுவர்

அக்கண்ணர்க் குள்ள

       தரைக்கண்ணே – மிக்க

உமையாள்கண் ஒன்றரை

     ஊன்வேடன் கண்ஒன்று

அமையும் இதனாலென் றறி.

 

Rali: #ப.பி.

காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே

பாலுண் கடைவாய்ப் படுமுன்னே மேல்விழுந்தே

உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே

குற்றாலத் தானையே கூறு.

(பட்டினத்தார்)

 

BKR: # ப.பி

விட்டேன் இருவினைவிரும்பேன் வீணருடன்

கிட்டே னவருரைகேட்டு மிரேன் மெய்கெடாதநிலை

தொட்டேன் சுகதுக்க மற்றுவிட்டேன் தொல்லைநான்மறைக்

கெட்டே னெனும்பரம் எனைநாடி வந்திங் கிருக்கின்றதே

(பட்டினத்தார்)