June 2017 – SKC

 

 இளிச்சவாயன்

 

ஏழை இடையன் இளிச்ச வாயனை

வாழும் உலகில் வணங்குதல் நன்றென

ஆழி நாயகனை அடையும் வழியாய் நிலை

தாழாது இருக்கத் தந்தார் இடைக்காடர்.

 

ஏழை – இராமன் ( அரச போகம் இருந்தும் காட்டில் திரிந்தால் ), இடையன் – கண்ணன்

இளிச்சவாயன் _ நரசிம்மன்.


 

 

வள்ளிக் கணவன்

 

உள்ளிருக்கும் அரவை ஒருநாளும் தேடாது வெறும்

கல்லிருக்கும் அரவை கானகத்தில் தேடிப் பின்

தள்ளி அவற்றைத் தன் மனந் தெளிந்து

வள்ளிக் கணவனை வணங்கி யவனடி

பள்ளியே கொண்டார் பாம்புப் பிடாரன்.

 


 

சுட்ட பழம்

பழம் உதிர் சோலை வாழ் பழம் பெறா பாலன் அக்

கிழம் பெறக் கனிந்து பழம் உதிர்த்த பாங்கை

உளம் நினைந்து நானும் தொழும் வேளை தானே.

 


 

 

 நல்வேல் காக்க

 

இச்சையும் கிரியையும் இணை இரு மாதராய்

அச்சிறு முருகன் அணைத்த கோலமும்

அச்சமர் காணவே அன்னையும் அங்கு

மெச்சியே தந்த மேலாம் ஞான வேலும்

இச்சகம் தன்னில் என்றும் உடன் அருளி

நிச்சயம் நம்மை நின்றங்கு காக்கும்.

 


 

மருதாசலம்

 

இரு தாரம் உனக்கு இணையாய் கொண்டும்

ஒரு நாளும் மனம் உழலாது இங்கு

வருமடியார் தம் வாடுதல் போக்கும்

மருதாசலனே ! மனம் கனிந் தருள்வாய்.


 

பிச்சைக்காரன்

 

அன்புப் பிச்சை அன்னை தந்தையிடம்

பண்பு பிச்சை பணிவாய் குருவிடம்

இன்பப் பிச்சை இல்லாள் முன்னே

பின்போ பிச்சை பிள்ளைவரம் வேண்டி

துன்பப் பிச்சை தொடர நல்லுறவென

என்புதோல் பிச்சை எமக்கருள் ஈசனே !

முன்பு நீ பிச்சைக்கு முனைந்தது ஏனோ ?

 

பிச்சை எடுத்தும் பிள்ளைப் பேறின்றி

இச்சித்து இறைவனை இறைஞ்சுவோர் இங்குண்டு.

 

இச்சை இல்லையெனில் ஏது தவம் ? ஏதுறவு ?

தச்சன் மருகனவன் தருவதில்லை தானே இங்கு.

 

பிச்சை கொண்டே பெறுதல் அறமே

இச்சை கொண்டு இன்றே மறந்தோம்

பிச்சை யின்றி பெறுதலும் இல்லை அருட்

பிச்சை எடுத்தே பெரியோர் அன்று

இச்சக முய்தார் இதுவே உண்மை.

 


 

புலித்தோலினன்

 

ஆசையும் பாசமும் அனைத்துக் குப்பையும்

நேசித்தே இங்கு நிறையச் சேமித்து

ஈசனை நாளும் இடையறா திங்கு

பூசிக்க மறந்து போனதோர் வாழ்வை

ஏசுவதன்றி வேறு ஏதும் அறிகிலனே !

 


 

பூனையும் போகரும்

 

பூனைக்கு வேதமோதி புரியா மனிதரிடை நல்

ஆனைக் கோன் தம்பிக்கு அழகாய் சிலை அமைத்து புலிப்

பாணிக்கே வித்தை பலவும் புகட்டிப் பின் தேவ

சேனைக் கோ அடியும் சேர்ந்தார் நம் போகர்.

 


 

சிவ வாக்கியர்

 

பிறக்கும் போதே பரமனை அழைத்து

செருப்புத் தைக்கும் சித்தனைச் சேர்ந்து

விருப்பமுடன் பல வித்தைகள் கற்று

சிறப்பும் கொண்டார் சிவ வாக்கியரே.


 

நடமாடும் தெய்வம்

 

நடையாய் நடந்து நானிலம் அளந்து

தடையாம் பிறவி தவிர்க்கப் பணித்து

அடையும் உலகை அன்புடன் காட்டி

புடை சூழ் மனிதர் போற்றித் தொழுதிட

கடைப் பார்வையிலே கருணை ஈந்து உய்ய

விடை தெரியாது நாம் வேண்டித் தவிக்க

சடையோன் பாதம் சரண் புகுந்தாரே.

 

 

பெரியவா ஒருவர் பின்னவர் இருவர்

சரியாய் மூவர் சங்கர மடத்தில் என்

அறியா வயதில் அமர்ந்தே அருள

தெரியா உலகை தெய்வத்தின் குரல்

புரியச் சொல்ல புண்ணியம் பெற்றேன்

 


 

ஒளித்ததும் அளித்ததும்

 

நிலந்தனில் இங்கு நீ வந்துதித்து

புலம்பிய பெண்டிரின் புடவை ஒளித்ததேன்?

விளம்புவாய் கண்ணா! விரைந்தே அங்கு

அழுத பாஞ்சாலிக்கு ஆடை கொடுக்கவோ?

 


 

குறையொன்றுமில்லை

 

குறைமதி ஏற்றான் அவன் கொடும் விடம் உண்டான்

தரை விழும் கங்கை தலை சுமந்தான்

உறைவிடம் தன்னை ஓரிடுகாடாய்க் கண்டான்

அரையினில் புலித்தோல் ஆடை அணிந்தான்

இரந்தே உண்டு இன்பம் கொண்டான்

நிறை அவை யாவும் நீரே கொள்வீரென

குறைகளைக் கொண்டான் கொஞ்சும் உமைநாதன்.

 

 


 

குறையொன்று உண்டு

 

ஆடிய பாதம் ஆனந்தமாய் இன்றி

வாடிய குளிரால் வந்ததே அறிவாய்.

 

ஒடுக்கும் குளிரை உடனே நீக்க

அடுப்பின் கனலாய் அமைந்தது அக்கண்ணே.


 

விட்ட குறை

 

மதி உடையோனவன் தலை மதியொன் றெதற்கு

விதியின் விளைவால் வேண்டி அணிந்தான்


 

தொட்ட குறை

 

இருபிள்ளை பெற்றான் இல்லை குறையென்றாய்

சரி நூறு பெற்றும் சகுனியின் சதியால்

ஒரு பயனும் இன்றி உயிர் துறக்க கண்டு

திருத ராட்டிரன் திகைத்த தறியாயோ?

 


 

அரிதாரம்

 

இருதாரம் கொண்ட இன்னல் தெரியாது

அரிதார முகமாய் அமர்ந்தான் அச்சிவன்.


 

பாவம் பரமசிவம்

 

ஈவதற்கு பழமொன்று எடுத்து வர நாரதரும்

தாவியதைப் பெறவே தன்னையொரு பிள்ளை சுற்ற பழநி

போவதற்கு சண்டையிட்டு புறப்பட ஒரு பிள்ளை இனி

ஆவதொன் றில்லை யென அமர்ந்தானே அங்கு

பாவமந்த பரமசிவன்.


 

செயல் மறந்த சிவன்

 

அவளுமே அப்பன் வீடு அவசியம் செல்வேனென்றே

சிவனிடம் செப்பியிருக்க செயல் மறந்தான்

சிவனு மன்று.


 

 நொந்த சிவன்

 

தலையில் ஒரு பெண் தலைவலியாய் அமர மயில்

அலையும் மகனங்கு மலைமீதே ஏற

அலைந்து தன் அன்னை போல்

ஆங்கொருவன் பெண் தேட மலைமகள் தன் பங்காய்

மறுபாதி இடம் கொள்ள இலை நிம்மதி என்றே

இருந்தான் எம் சிவன்.

 


 

அமுதூட்டிய அன்னை

 

தாய்ப் பாலோடு தமிழ்ப் பாலூட்டி

வாய்த்தான் என் சேயென வரும் சிறுநகை கண்டுன் தோள்

சாய்ப்பால் நானும் சற்றே உறங்கும்

வாய்ப்பிங் கெனக்கு வந்ததும் நல் வரமே.

 


 

உருவாய் அழிவாய்

 

உருவாக்கும் தன் இழை உள்ளிழுக்கும் சிலந்தி போல்

விரிவாக்கும் தன் திரை விழுங்கும் வெண்கடலும் போல்

கருவாக்கும் இவ் வுலகை காலமதன் இறுதியில்

அருவாக்கி அழித்திடும் ஆதி மூல சோதியும்

எருவாக்கி ஞானமும் என்னுள் இருத்துமே.

 


 

உறங்காப் புளி

மெல்லணையில் உறங்கிய மைதிலி நாயகன் கானகக்

கல்லணையில் உறங்கும் காட்சியைக் கண்டு

வில்லணிந்த இளவலும் வேதனை கொண்டு

நில்லென உறக்கம் நிறுத்தியே அங்கு

உள்ளம் ஒருங்கிணைத்து உறங்காப் புளியானான்.


 

கச்சியே இச்சகம்

உச்சி மேல் கூரையில்லை ஓரிடமும் சொந்தமில்லை

மெச்சுமோர் வாழ்வு மில்லை மேதினியில் பெருந்தொல்லை

எச்சமாய் இருந்துண்டு ஏதும் பயனில்லை

கச்சியம் பதியுறை காமாக்ஷி அன்னையும்

நிச்சயம் அருள்தர நினைப்பதன்றி வேறில்லை.


 

முக உரை

 

நான்முகனை நாரணனும் நாபியிலே தான் ஏந்த

தான்முகமாய் நான்முகனும் தானியங்கி வானமர

ஊன்முகமும் கொண்டு மனம் ஒரு முகமாய் நிறுத்தி

யான் முகமாய் வேண்டுவனே நான்முகனின் நாயகியை.

 


 

அவலும் கீரையும்

 

மூடிய பானையில் முன்னர் வெண்ணை

தேடித் திருடி திளைத்து மகிழ்ந்தான்

வாடிய குசேலர் வருத்தம் உணர்ந்து உடன்

கூடியும் அவர் கொணர் அவலும் உண்டான் கோதை

சூடிய மாலையை சூட்டிக் கொண்டான் அடி

தேடியப் பாத்திரக் கீரையும் உண்டான் சபரி

பாடியவன் புகழ் பகிர்ந்த கனியும்

நாடியே புசித்து நற்கதி தந்தான் மறை

ஏடும் போற்றும் எந்தன் பெருமான்.


 

ஆடிய பாதம் அம்பலத்தில்

 

ஆடும் திருச் சிற்றம்பலத்தை தினம்

சாடும் நிலையும் வரவேண்டா

– ஏடும்

நன்றே சொல்லுமே நாளுமவன் புகழ்

அன்றி வேறுண்டோ ?


 

திருமழிசை கேட்ட வரம்

 

வைக்க வைகுந்தமென வரம் கேட்டு அவன் மறுக்க

உய்க்க ஒரு வரம் இன்றேல் ஊசியில் நூல் கோர்த்துத்

தைக்கவே வழி கூற திருமழிசை வேண்ட

பொய்க்கோபம் கொண்ட சிவன் பொறிநெருப்புக்

கண் திறந்தும்

வைக்கும் தலை கங்கை வெள்ளம் வரவழைக்க

மெய்க்கொரு தீங்கின்றி முன்னவர் நிற்க அவர்

உய்க்கவே வரமீந்து உளம் கனிந்தார் சிவனன்று.

 


 

புள்ளரையன்

 

புள்ளின் வாய் பிளந்தானை

புள்ளின்மேல் அமர்ந்தானை

பள்ளும் பாடி தினம் பரந்தாமனைப் பணிந்து

உள்ளுவதே அன்றி ஒரு வழியும் வேறில்லை

விள்ளுதல் இங்கு வேறுண்டோ இவ்வாழ்வில்.

 

# கண்ணன் கொக்கு வடிவில் வந்த பகாசுரன் வாய் கிழித்தான்.

 


 

 நட்ட கல்லும்

 

நட்ட கல்லைப் பற்றியே நாலு வார்த்தை சொன்னவர்

சட்டெனச் சங்கரன் சங்கடம் என்றுதான்

பட்டர்பிரான் கோதையின் பரந்தாமனைத் தொழ

விட்டு உடன் சைவமே வீர வைணவராகியே

இட்ட பெயர் மாற்றியே எழில் மணிவண்ணனை

கட்டளை இடுவதோ கச்சி உடன் நீங்கவே.


 

இதயம் ஒரு கோயில்

 

ஈசனை மனதில் எண்ணி எழில்மிகு கோயில் கண்டு

பூசனை செய்து நாளும் புண்ணியக் குடமுழுக்கு

ஆசையாய் செய்ய வேண்டி அன்னவர் நாள் குறிக்க

பூசலார் பக்தி கண்டு புரவலன் கனவில் தோன்றி

ஈசனும் வந்து சொல்ல எழுந்ததே கோயில் அங்கு

ஈசனும் உளமகிழ்ந்து ஈங்கவர் செயலதனால்

வாசமே செய்யவே வந்தது நின்றவூராம்.

 


 

கைத்தலம் பற்ற

 

அண்ணனவன் கண்டிலன் அன்னவனும் கண்டிலன்

முன்னரக் காதையில் முரண் உண்டன்றோ ?

மன்னர் அவரிருக்க மாலன் முன்வந்து

கன்னியவள் நாணக் கைத்தலம் ஈவனோ ?

முன்னுரிமை தந்தைக்கோ ? முகுந்தன் அவனுக்கோ?

அன்னவன் கரம் ஈந்தால் அலைமகள் ஏன் உடனில்லை ?

அன்னையே நீ சொல்வாய் !

 


 

ஆனித் திருமஞ்சனம்

 

நாணமுடன் ரசித்திருக்க நாயகி அன்னையவள்

தேனமர் மலருடையாள் திசை நோக்கியே அங்கு

கூனலிளம் பிறை முடித்து குறுநகை முறுவலித்து

வானவர் தாம் மகிழ வளைத்ததொரு பாதமொடு

மான்மழுவும் கொண்ட சிவன் மனமகிழ்ந்தே ஆட

தானியங்கும் உலகுமிவன் தனித்ததொரு அசைவு கண்டு

ஆனித் திருமஞ்சன அண்ணலை நான் பணிந்தேன்.

 


 

பொற்றாமரை நாயகி

 

கஞ்சமலர்க் கரையில் மிஞ்சும் எழிலுடையாள்

அஞ்சன மை கொண்டு கொஞ்சி உடனமைய

நஞ்சு உண்ட நாதன் மஞ்சனமும் கண்டு

நெஞ்சில் நிலை நிறுத்தி தஞ்சமிங்கு அடைந்தேன்.

 


 

Advertisements

May 2017 – Exchanges

 

அஞ்சுவது அஞ்சாமை

 

Rali :

அஞ்சினாள் உன்மேனி பாம்பூரக் கண்டவள்

அஞ்சினாள் நீயுரித்த யானையைக் கண்டவள்

அஞ்சினாள் ராவணன் கத்திடக் கண்டவள்

அஞ்சினாள் ஆலகாலம் நீயுண்ணக் கண்டவள்

அஞ்சினாள் ஆசையாய் நீயணைக்கப் பெண்சாதி

அஞ்சினால் ஆனந்தம் தான்.

 

 

SKC:

@ Rali:

அஞ்சன மையுடையாள் அஞ்சுவளோ அரவு கண்டு

அஞ்செழுத்து மந்திரமே அவள் நெஞ்சில் நிறைந்த பின்பு.

 

 

Pithan:

@Rali

இரண்டாம் வரி

“பாம்பூரக் கண்டவள்” என்றால் சரியாக இருக்குமா.

உங்கள் ஐந்து அஞ்சுதல்களில் முதல் இரண்டும் கடையிரண்டும் உமையைக்குறித்தால் நடுவிலுள்ளது சீதையைக் குறிப்பதாக உள்ளதோ?

தயவுகூர்ந்து விளக்கவும்.

 

 

Rali :

@Pithan:

ராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முயற்சி செய்யும் போது மலைமகள் அஞ்சியதாக‌ப்‌ பல தேவாரப் பாடல்களில் காணலாம்.

ஸ்வாமி தன் கட்டை விரலால் லேசாய் அழுத்த அவன் தோள் சிக்குண்டு கத்தினான்.

அந்த அலறலையும் கேட்டு தேவி அஞ்சியதாகச் சொன்னது என் கற்பனை.

 

 

Pithan:

@ராலி

மன்னிக்கவும் நான் ராமாயணத்தில் அசோக வனத்தில் ராவணன்

கத்தியதாக தவறாக புரிந்துகொண்டுவிட்டேன்.

 

 

Rali :

@SKC

Wonderful!

தேவாரத்தில்‌ பல‌ சந்தர்ப்பங்களில் ‌ம்லைமகள் அஞ்சியதாக வருகிறது.

 

 

BKR:

@Rali :

அரவத்தைக் கண்டும் அரவத்தைக்  கேட்டும்

அரவமுமிழ் ஆலமதைக் கண்டும் –

அரளுவளோ

அஞ்சா தரனோடு ஆரிருளில் ஆடும்தாய்

கொஞ்சமும் நம்பா துலகு.

 

BKR:

By the way, ஊர்பாம்பு என்பது கருதிய பொருளைத் தராது. ஊருபாம்பு என்பதுதான் சரி.

பாம்பூர என்பது மிக நன்றாகப் பொருந்தும்.

@பித்தன்

இந்த இடத்தில் அலறிடக் கண்டவள் என்பதில் வெண்பாவின் தளை சேராது.

 


 

வம்பு

 

Rali :

வம்பிழுத்தார் மாமனார் வம்பிழுத்தார் நாரதர்

வம்பிழுத்தான் ம‌ன்மதன் வம்பிழுத்தார் சுந்தரர்

வம்பிழுத்தான் ராவணன் இவ்வாறே நானுமுன்னை

வம்பிழுக்க நீவரம் தா.

 

 

BKR:

@ராலி

அழகுநீ கேட்டவரம் ஆதிசிவன் உன்னை

வழக்குரைக்க மன்றுக் கழைத்தால் –

தொழில்முடித்து

பேரக் குழந்தைமுகம்  கண்டு களிப்பதன்மேல்

நேரமதற் கேது உனக்கு?

 

 

Rali :

@BKR

சொக்கனின் வக்கீல் மனதில் எதனாலோ

அக்கறை வம்பிழுப்போர் மேல்.

 

 

BKR:

வக்கீல் சிவனுக்காய் ஆனதால் பக்தர்மேல்

அக்கறை கொள்ளல் இயல்பே

 


 

கவி மழை

 

Rali :

@Pithan, , Suresh,GRS:

வாடினோம் உங்களைக் காணாதே கோடைக்கு

ஓடினீரா ஊட்டிகொடைக் கானல்.

 

 

Pithan:

@Rali

சென்னையிலே கவிதை மழை பொழியும்போது

யாராவது ஊட்டி கொடைக் கானல் செல்வார்களா.

மழை பொழிவதைவிட மழையில் (கவிதை)

நனைவது சுகமாக உளது.

 

Rali :

@Pithan:

சென்னையில்‌ மழையில்லை.

நீங்கள்‌ கொஞ்சம் கவித் தூற்றலாவது போடக்‌கூடாதா?

 

 

Shanthi:

இது தூறலன்று; கவிதைச் சாரல்; எங்கு சென்றாலும் அடிக்கும்!

 

 

Rali :

@Shanthi, Pithan மற்றும் தமிழின்பன்பர்களுக்கு:

 

தூறலும் சாரலும் கொஞ்சம் மரபு

மீறலும் சார்தலும் செய்தே கவிதை

தீரலின்றிப் பார்த்திடல் செய்வீர்.

 

 

BKR:

@Rali :

கவித்தூற்றல் வேண்டினைநீ கற்றதமிழ் கொண்டு

கவிபாடித் தூற்றல் அழகோ

– பவவினைக்குக்

மாற்றாகி நின்றதோர் மாதேவன் மாண்பினையே

போற்றிக் கவிபுனைவோம் நாம்.

 

 

Pithan:

 

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கிறேன்

ஆற்றிலும் நீரில்லை ஊற்றிலும் நீரில்லை

போற்றிப் புகழ்ந்திட பாரோர் நெஞ்சிலும் நீரில்லை

தேற்ற மனமின்றி  தவிக்கும் மாதர் கண்களிலோ

ஊற்றாக வெள்ளம் தேற்றி அணைத்திட தேடியும் யாருமில்லை

நற்கருணை நமச்சிவாயம் நல்லருள் புரியட்டும்.

 

 

 

Rali :

போற்றுதற்கோ தூற்றுதற்கோ ஆண்டவனை எண்ணுதல்

மாற்றுமே நம்வாழ்வை நன்றே.

 


 

[வானமென்னும்] குடைக்குள் [வாராதோ] மழை

 

Pithan:

தண்ணீரை வேண்டி கண்ணீர் வடிக்கிறோம்

முன்பென் பாட்டனாரதை ஆற்றில் கண்டார்

என்றுமென் தந்தையதை கிணற்றில் கண்டார்

இன்றுநானதை குழாயில் காண்கிறேன்

என்னுடைய குழந்தைகள் குடுவையில் காண்கின்றனர்

பின்னாள் சந்ததியரதை பார்ப்பது எத்திரையில்.

 

 

Rali :

@Pithan:

 

தண்ணீர் பெருகிட ஈசனை வேண்டுவோம்

வெண்ணீ  ரணிவான் சரண்.

 

 

SKC:

@Pithan:

 

நீரின்றி அமையாது உலகு

நீ(வி)ரின்றி அமையாது கவிதை.

 

SKC:

வேக வதியெனும்  வைகை இறங்கிய

நாகப் படுக்கைகொள் நாரணன் எங்களின்

தாகமதைத் தீர்ப்பான் தினம்.

 

 

SKC:

விழாத மழை தந்த வேதனையால் இங்கு

குழாயில் நீரும் கொள்வதும் போனதால்

எழாது துயில் கொண்ட இறையோனாம் அத்

துழாய் அணிவோனை துதித்திருப்போமே !

 

SKC::

நீரின்றி இங்கு நித்தம் யாம் தவிக்கப் பால்

நீரைக் கடலாக்கி நீண்டங்கு கிடந்த

காரிருள் தோன்றல் கண்ணன் அவன்தன்

பேரருள் வேண்டிப் பெய்யாத மழையைத்

தாரும் என்றவன் தாள் பணிந்தேனே !

 

SKC:

மேகத்திற்கு தாகமுண்டு மேதினியில் சொல்வதுண்டு

ஆகட்டும் அதற்காக அத்தனை நீரையும்

ஏகமாய்ப் பருகி எமைத் தவிக்க விட்டு

காகமது கொள்ளும் கண்ணீரளவு நீர் எம்

தாகம் தணிக்கத் தருவதும் தகுமோ !

நாகம் அணிந்தோனே நம்மைக் காத்திங்கு

மேகத்தைப் பிளந்து மழை தந்தருள

வேகமாய்ப் பணிதல் வேண்டும் இவ்வேளை.

 

Rali:

@ SKC:

மழைவேண்டும் நின்கவியின் செந்தமிழ்ச் சந்தம்

இழுத்துவரும் இன்றே மழை.

 

 

 

Pithan:

வாடிநின்ற பயிரைக்கண்டு வாடினார் வள்ளலார்

ஆடிநின்ற தேரதனை முல்லைக்களித்தான் பாரிவள்ளல்

கூடிச்சென்ற மக்களுக்கு மரங்கள் நட்டான் மாமன்னன்

மாடிவீடு கட்டிடவே மரங்களை யழித்தான் மாமனிதன்

வாடிநீ வதங்கினாலும் வந்திடுமோ நீருனக்கு?

 

 

VKR:

உழவருக்கு இரங்கல்

–——-–———-

பொய்யா மழையேன் பொய்வளையே சொல்வாயோ

உய்யா தினிமேல் ஓராண்டும் காய்வோமோ

– நல்லாரே

இல்லையோ நானிலத்தில் அதுகாரும்

எல்லோர்க்கும் பொய்க்குமோ மழை.

 

 

Rali :

பொல்லார் ஒருவுண்மை சொல்லார் மறைநெறி

நில்லார் இரக்கமே இல்லார் ஒருவருமே

நல்லார் எனும்படி இல்லார் மனிதர்கள்

எல்லார் குணங்கண்டு வல்லான் சினங்கொண்டு

எல்லார் பொருட்டென்றே தொல்லாம் உலகினில்

எல்லார்க்கும் பொய்த்தான் மழை.

 

 

SKC::

@VKR:

அழையா திங்கு மழைதான் வருமோ ?

பிழை நம்மீதே விழைவோம் நாமே

குழை செவியோனை அழைத்தே இங்கு மனம்

உழைதல் நீங்கி மழைதான் பெறுவோம்.

உழைதல் – துயருறுதல்

 

 

Rali :

@SKC:

வருணா சிறிதே கருணை பொழியும்

தருணம் இதுவே பொழி.

 

 

SKC:

வானம் பார்த்து வாடி இருந்து

தானாய் மழைவரத் தவித்து நின்றதைக்

– காணாது வெறும்

காற்றுடன் கலந்து காணுமத் தூறல்

மாற்றுமோ நம் துயர்தான்.

 


 

திரும்பிய திருமால்

 

 

BKR:

மாதிலொரு பாதியவன் பேதமிலாச் சோதியவன்

ஆதியுமாம் மீதியுமாம் போதனவன் –

வேதமெலாம்

ஈதெனவே ஓதவொணான் பேதையையும் ஆதரித்துக்

காதலினால் கைதுசெய்த நாதன்.

 

 

Rali:

பாதியில் உன்கோயில் நோக்கித் திரும்பினாய்

சேதியென்ன சொல்லுவாய் கள்ளழகா நீயுமுன்

சாதிசனம் சேரும்முன் சொக்கர் மதுரையில்

பாதிநீயே என்றுனது தங்கையை கைபிடித்தார்

ஏதிது அநியாயம் என்றா.

 

 

SKC:

தெய்வத் திருமணம் தென்மதுரை காண

ஐவரைக் காத்த அரங்கன் வருகையால்

சைவமும் வைணவமும் சமமாய்த் தழைத்ததுவே.

 

 

SKC:

சூடிக் கொடுத்தவள் தோள் மாலை சுமந்து

ஆடிக் களித்து வந்த அழகா நீயிங்கு

கூடிக் களிக்காது கோபமாய் செல்ல

வாடிக் கிடக்குமோ உன் தங்கை வதனம் ?

 

 

BKR:

@SKC:

நீர்வார்த்துத் தங்கைகரம் ஈசன்பால் சேர்த்துமணம்

நாரணன் தானே நடத்திவைத்தான்

– ஊராரோ

அண்ணனவன் இல்லாத கல்யாணம் என்றுரைத்தார்

உண்மை உரைத்திடுவேன்  நான்.

 

 

தங்கைமணம் கண்டபின்னர் தன்னூருக் கேகியமால்

மங்கைக்காய் மேலும்சீர் கொண்டுவர –

அங்கோர்

உதரம் பருத்தவன்கை பட்டுநதி பொங்கக்

குதிரை திரும்பியதே உண்மை.

 

 

SKC:

@BKR:

இரு காதை இங்குண்டு எது உண்மை ஆரறிவார் ?

மறுக்காது உன் கூற்றும் மகிழ்வோடு ஏற்றேன் நான்

ஒருக்காலது உண்மையெனில் உடன் மாலும் திருமணத்தில்

இருக்காமல் போனதேன் இந்நாளில் நீ பகர்வாய்.

 

 

BKR:

@SKC

மாலவன் இல்லாத  கல்யாணக் காட்சியும்

ஆலயத்தில் காணாத தேன்?

 

 

SKC:

@BKR:

 

சிலையுண்டு கோவிலில் சேர்த்து வைக்கும் கோலமதில்

இலையவனும் திருமணத்தில் இந்நாளில் காரணமும்

சொல இங்கு யாருளர் ? சொன்னால் நானறிவேன்.

 

 

SKC:

@BKR:

இந்நாள் நதி நீரில்லை இருந்து விருந்துண்டு

தன்னால் இயன்ற சீர் தங்கைக் காங்கீந்து

பின்னால் தன் குடிலும் போவதே முறையன்றோ ?

சொன்னாரோ ஈசனவள் சோதரன் தனை நிறுத்தி நீ

சொன்னால் நான் கொள்வேன் சொல்வாய் என் நண்பா !

 

 

BKR:

இல்லா  நிகழ்வென்றால் எல்லோரும் காணஅதைக்

கல்லில் வடிப்பாரோ கூறு.

 

 

SKC:

@BKR:

கல்லிலே வடிப்பது உண்டு கற்பனைக்கு மேனி தந்து கவி

சொல்லிலே புனைந்து சொல்வதும் இங்கு உண்டு

மல்லிகை நாயகியே மறுபடியும் வந்து

சொல்லித் தீர்த்தலும் சுவையாம் நன்று.

 

 

BKR:

@SKC

அண்ணலுக்கும் கண்ணனுக்கும்  ஆதரவாய் வாதிடநான்

பண்ணிய கற்பனையே என்கவிதை –

எண்ணவில்லை

சத்தியமாய்க் கேள்விமேல் கேள்வியாய் நீயிதற்கு

இத்தனைப்பா தந்திடுவாய் என்று.

 

 

SKC:

@BKR

 

கேள்வியில் பிறக்குமிங்கு கிடைக்காத ஞானமென்று

கேள்விப்பட்ட பின்பு கேட்டேன் பல கேள்வி இங்கு

தாள் பணிந்து சங்கரனைத் தான் வேண்டி நானுமிந்

நாளதனில் கேட்பேன் நல்லதோர் ஞானமிங்கு.

 

 

Rali :

ஆயிரம் ஆண்டுமுன் தோன்றி சிவபிரான்

கோயிலுக்குள் செல்லாதீர் என்றவர் சீடர்கள்

வாயிலாய்க் கள்ளழகர் மீனாளின் தென்மதுரைக்

கோயிலுக்குள் செல்வது நின்றதோ இல்லையோ

ஆயினும் கொண்டேன்நான் ஐயம்.

 


 

ஈசனுக்கு இல்லை ஓய்வு

 

Rali:

நீண்டவோய்வு வேண்டி உடம்பில் விஷப்பாம்பு

தீண்டவைத்துப் பார்த்தாய்நீ ஆகாயம் மேலிருந்து

தோண்டிதோண்டி ஆகநீருன் மேல்விட்டும் பார்த்துவிட்டாய்

மூண்டதீயைக் கையிலேந்தி வைத்திருந்து பார்த்துவிட்டாய்

ஆண்டியாய்ப் பேய்க்காட்டில் வாழ்ந்துகூடப் பார்த்துவிட்டாய்

சீண்டும் விதியையே சீண்டியும் பார்த்துவிட்டாய்

தூண்டவந்த மன்மதன் அம்புபட்டும் பார்த்துவிட்டாய்

மாண்டிடச் செய்யும் விஷம்குடித்தும் பார்த்துவிட்டாய்

வேண்டாத வேலை மறந்திடு வாயுனக்கு

ஆண்டவா என்றுமில்லை ஓய்வு.

 

 

 

BKR:

@Rali:

 

கங்கைகொண்டான் வக்கீல் கணம்ஓய்வு கொள்ளவிடாக்

கங்கணம்தான் கொண்டாயோ நீ?

 

 

நீண்டதோர் ஓய்வெடுக்க நாதன்செய் தந்திரமாய்

நீண்டதொரு பட்டியலை நீவிரித்தாய் –

ஈண்டவனின்

எல்லாச் செயலும் எடுத்துரைத்த நீயின்னும்

சொல்லாத தொன்றுண்டு கேள்.

 

நின்றுநடம் ஆடிடினும் நீள்ஆல்கீழ் தங்கிடினும்

புன்னகைதான் மாறியதோ பொன்முகத்தில்? –

மன்னனவன்

எத்தொழிலின் மத்தியிலும் ஒட்டாது ஓய்வுவக்கும்

முத்திரைதான் அந்த நகை.

 

 

Rali:

@BKR:

ஓய்ந்து இளைப்பாற வேண்டும் பரமனுக்காய்

பாய்ந்து பரிந்துரைத்தாய் நீ.

 


 

கங்கைக்கு வக்கீல்

 

Rali:

ரதிரம்பை வாழுலகில் நான்மகிழ்ந்து வாழ்ந்தேன்

குதித்தேன் பகீரதன் வேண்டவே கங்கை

நதியாய்ப் பரமன் பரிவுடன் தாங்க

கதியிதுபோல் ஆகுமென்று எண்ணவில்லை இங்கே

விதிமுடிந்தோர் மேனி சுமந்து அவர்க்குத்

திதிதருவோர் பாவம் கழிப்போர் குளிக்கும்

நதியானேன் போதாக் குறைக்கு மலைவாழ்

சதிக்கென்மேல் கோபமாம் என்னதான் செய்தேன்

மதியணிவாய் யார்க்கும் எனக்கும் இறைநீ

விதியோ  விளையாட்டோ சொல்.

 

 

 

BKR:

@Rali:

அன்னமாய் மாறிஅயன் காணாச் சிரமீதில்

அன்னையை அந்தசிவன் வைத்திருக்கத் –

தன்னிலே

முங்கிக் குளிப்போர் வினைதீர்த்தும் மாசுபடாக்

கங்கை கலங்குவளோ கூறு.

 

 

Rali :

@BKR

கங்கா தரனுக்கும் வக்கீல் சடையுறை

கங்கைக்கும் வக்கீல் ஒருவரே என்பதை

மங்கை அறிந்தால் மகேசன் நடுங்கவே

பொங்கிடுவாள் என்றறி யாயோ.

 

 

BKR:

@Rali:

கடம்பவன நாயகனை நாடுபவர் யார்க்கும்

குடும்பவக்கீல் நானென் றுணர்.

 


 

ஒட்டுதல்  ஒட்டாமை

 

Pithan:

தரத்தில் உயர்ந்த காஞ்சி நகரிலே

அறவாழி அந்தணர் வருணனை வேண்ட

வரதராசன் அருளிட வாசலில் வந்திட

வரங்களை நாங்கள் வேண்டிக் கேட்டிட

சரங்களை எடுத்து வருணன் வீசிட

கரங்களை உயர்த்தி அருளினாள் அன்னை.

 

மேற்கண்ட கவிதையில் உள்ள சிறப்பு அம்சம்

கவிதை முழுவதும் படிக்கையில் உதடுகள்

ஒட்டாது.

 

 

SKC:

@Pithan:

திட்டந்தான் தீட்டியே தீங்கவியை நீர்தந்தீர்

ஒட்டா உதடுகள் கொண்டு.

 

SKC:

உதடொட்டாச் சொற்கொண் டொருகவிதை

தந்தீர்

அதற்கென் அளவிலா நன்றி.

 

SKC: ஒட்டா உதடுக்கு உளம் கனிய நீர் தந்து

எட்டாப் புகழ் அடைந்தீர்.

 

 

Rali:

உதடும் மனதும்நன் கொட்டும் கவிதை

இதமாய் இருந்தது நன்று.

 

 

Rali :

ஒட்டும் உதடுள்ளம் பெண்டாட்டி என்கையில்

ஒட்டுமே பிள்ளைபெண் என்றுநாம் சொல்கையில்

ஒட்டுமே பேரனென் பேத்தியென்று சொல்கையில்

ஒட்டா துறவு எனில்.

 

 

SKC:

@ Rali :

 

ஒட்டும் மனதில் உன்கவியும் நன்கு

ஒட்டா உறவு கண்டு.

 

 

Pithan:

ஒட்டும் மனைவியும் ஒட்டும் பிள்ளைகளும்

ஒட்டும் சுற்றமும் நம்மை ஓட்டி விட நினைத்தால்

கூட்டி நம்மை காத்திடுவார் குருநாதர் ஒருவரே

நாட்டமுடன் குருவின் பதமலர் தொழுது

கேட்டவரம் அடைந்திடுவோம்.

 

 

Pithan:

பெண்டாட்டி கணவன் என்கையிலே

பிள்ளை பெண் தந்தை என்கையிலே

பேரன் பேத்தி தாத்தா என்கையிலே

உதடு ஒட்டாவிடினும் ஒட்டும் உள்ளம் நிச்சயமாய்.

 


 

பெண்டாட்டி

 

Rali :

@Pithan:

பெண்டாட்டி என்கையில் என்பவர்‌‌ ஈரேழு

அண்டத்தில் யாருமே இல்லை.

 

 

Rali :

பெண்டாட்டி என்கையில் என்றவர் பொய்யுரைப்பார்

வண்டவாளம் பின்னே தெரியும்.

 

 

Rali :

பெண்டாட்டி என்கையில் என்றவள் முன்னுரைப்பர்

கண்டால் கலிதீரும் என்பேன்.

 

 

SKC:

@ Rali :

 

ஆட்டுவித்தே தில்லையில் ஆடினரோ நல்வழி

காட்டும் உமையவள் கொண்டு.

 


 

பெய்யா மழை

 

Rali:

அன்று விடமுண்டு தேவரைக் காத்திடவே

நன்றிகொண்டு தேவரும்நீ சொல்வதெல்லாம் செய்திடுவார்

என்றெல்லாம் கேட்பதைக் கண்மூடி நம்பினோம்

நின்று வறுக்கிறது வெய்யில் பெருமானே

இன்றே மழைபெய்யச் சொல்.

 

 

BKR:

@Rali:

ராலிக்கு ஈசன் பதில்

நின்று வறுத்திடும் வெய்யில் தணிக்கவே

இன்று மழைபெய்ய வேண்டுகிறாய் –

அன்றொருநாள்

நிற்காது பெய்துனது ஊர்நிறைத்த மாரிதனை

நிற்கச்செய் என்றதும்நீ தான்.

 

 

Rali :

@BKR

இன்று மழைபெய்யச் சொன்னால் உடனேநீ

அன்று மழைநிறுத்தச் சொன்னது நீதானே

என்றும் மழைநிறுத்தச் சொன்னால் உடனேநீ

அன்று மழைபெய்யச் சொன்னது நீதானே

என்று படுத்தாதே நீயீசா வேகிறது

இன்றே மழைபெய்யச் சொல்.

 

 

BKR:

@Rali :

ஒருமுறை சொல்லி மறுமுறை மாற்றிப்

பிறிதொன்று சொல்வாய் அறிவேன் –

இருந்தாலும்

வறுக்காதே எனரவிக்கும் நீர்வார்க்க வென்றே

வருணனுக்கும்  நான்சொல்வேன் நம்பு.

 

 

SKC::

@BKR

வறுப்பதும் வார்ப்பதும் இவ்வுலகில் கண்டு

பொறுப்போம் அதுநம் கடன்.

 

Suresh :

மாதம் மும்மாரி பேராசை கொண்டிலேம்

போதும் ஒருமாரி என்றே இறைஞ்சினோம்

ஏதுமறி யாதவள்போல் ஏனிந்த நாடகமோ

சூதறியா சனம்மகிழ பொழிந்திடுக தேன்மாரி

 

Suresh :

நல்லவர் பொருட்டிங்கு அல்லவர்க்கும் பெய்யுமாம்

வல்லவர் கூறிய நல்லறம் அறிந்தோம்.

நல்லதோர் மானிடர் இல்லையோ ஆயினும்

புல்லுண்டு பூவுண்டு நல்லபல நிழல்மரங்கள்

சொல்லொணாத் துயருற்று அல்லாடும் விலங்கினங்கள்

பொல்லாத வெயிலில் நில்லாமல் ஊர்வனவும்

நல்லுயிராம் இன்னபிற பல்லுயிரும் வாழ்ந்திடவும்

சில்லென்று மழைபொழிய சிவனருளை வேண்டுவனே.

 

 

Pithan:

 

விளைநிலங்கள் மாறி வீடுகள் வானளாவின

சாலையோர மரங்கள் விளக்கு தூண்களாயின

காலைமாலை அந்தணர் தீவணங்க மறந்தனர்

விலையின்றி அரசாள வந்தவர் யாருமில்லை

தொலைதூரம் சென்ற மழைதான் வந்திடுமோ .

 

 

SKC:

மாரியும் வந்துதான் மலர்ந்தாள் மலைக் கோட்டையில்

ஊரிலே மாரியே உன்னத தெய்வமே முளைப்

பாரி கொண்டாடிடும் பாங்கினைக் கண்டவள்

ஏமாறி இம்மானிடர் ஏங்குதல் இன்றி மும்

மாரியாய்ப் பெய்துமே மகிழ்வினைத் தருவளே.

 

 

Rali :

மாரிமாரி என்றால் வருமோ மழைமக்கள்

மாறியறம் செய்யா விடில்.

 

 

BKR:

@Rali :

வேண்டுதல் வேண்டாச் சிவன்நம் உடனிருக்க

வேண்டுதலும் வேண்டுமோ சொல்.

 

 

Suresh :

உடனிருக்கும் ஈசனை உள்ளுணர்ந்தார்க்

கென்றும்

கடனில்லை வேண்டு வது.

 


 

பணம்

 

SKC::

வானமெனும் கூரையின் கீழ் வாழும் மானிடரும்

பேணுகின்றார் பூமியிலே பேதைமையாய் நாலு இடம்

ஆனமுதல் பூமியிலே அதிகம் பொருளீட்டி

போனதிசை தெரியாது போவதிவர் அறியார்

நாணமுறச் செய்யுமன்றோ நல்மனிதர் இவர் செய்கை ?

 

 

 

Rali:

@SKC::

 

தேடலும் சேர்த்தலும் செய்வார் அறிகில்லார்

கூட வராது பணம்.

 


 

 

 

April 2017 – Exchanges

பெண்ணொன்று காண

Rali:

காலமின்னும் அண்டம் அழிக்க வரவில்லை

காலம்நாம் போக்குவோம் ஓடொளித்து துண்டொளித்து

பால‌ன் கறிகேட்டு என்று அழவிட்டாய்

சீலராம் அன்பரை போதுமந்த வேலைநீ

வேலனண்ணன் உன்மூத்த பிள்ளைக்குப் பெண்பார்த்தல்

ஆலவாயா உன்பொறுப் பன்றோ.

 

 

– BKR:

@ராலி:

 

ஆனைமுகம் கொண்டான் அரசின் அடிகண்டான்

பானைவயிற் றண்டம் பலகொண்டான்

– காண்போர்

தலைகுட்டச் செய்யுமிவன் கைப்பிடிக்கப் பெண்தான்

உலகில்யார் உள்ளார் உரை.

 

 

Rali:

@ BKR:

சொக்கனுக்கு வக்கீல்நீ முக்காலம் சிக்கல்தான்

எக்காலம் ஓய்வெடுப்பாய் நீ.


 

உண்மை! வெறும் புகழ்ச்சி யில்லை

 

 

Rali:

BKR:

கோணலாம் எம்கவிதை கண்டு குறைகளைக்

காணலேதும் செய்யாது நேசத்தால் பாராட்டி

நாணவைத்துப் பார்ப்பதோ நண்பா.

 

Rali:

BKR:

அண்டர்கோன் சீரங்கன் ஆக்கும்கோன் நான்முகன்

பண்டொரு நாள்தேட நீண்டுநின்ற நீலநிற

கண்டன் அருளுனக் குண்டு.

 

Rali:

Suresh:

 

வாழ்க நீ !

புனைந்தாய் மிகச்சிறப்பாய் நினைந்தின்னும் எழுதுயாவரும்

நனைந்திட மகிழ்ச்சியில்.


 

அரன்

 

Suresh:

@BKR:

வேண்டாம லீவான்தான் வெண்பிறை யணிந்தோன்

வேண்டாம லிருக்குமோ சேய்?

 

@Suresh:

ஈவானும் அவனே ஈந்து மீந்து

ஈவா னவனும் சிவனே.

 

Rali:

தேவாரம் அவனே ஈவானும் அவனே

தேவாதி தேவனும் அவனே.

 

BKR:

அரனவன் தில்லைப் பரனவன் மூலப்

பிரணவன் மானும் மழுவுமே ஏந்தும்

கரனவன் சந்ததம் சிந்தித்து வாழச்

சரணவன் பாதம் எனக்கு.

 

Rali:

@BKR:

அரணவன் அந்தக் கரணவன் எண்ண

முரணவன் சரணம் கதி.

 


 

ஒளிவதற்கு இடமில்லை

 

Rali:

சடைவிரித்து அம்பலத்தே வேகமாய் ஆடல்

சடைக்குள்ளே வேறொருத்தி இல்லைபார் நீயே

அடையாதே  கோபமென்மேல் என்றுசொல்லி நீயுன்

உடையாளைத் தேற்றுதற் கோ?

 

 

BKR:

@ராலி

 

மீண்டும் வழக்குரைஞருக்கு வேலை வைத்தனையே!!

ஆனந்தம் மீறவே ஆடிய ஆட்டத்தில் தானே விரிந்த சடைகாட்டி –

வீணே

உனதன்னைக் கென்மேல் சினமெழச் செய்ய

உனக்கென்ன ஆசையோ சொல்.

 

Rali :

@BKR

அழகனுக் கப்பன் இருளில் நடனம்

பழகிடும் நாதன் நடராஜன் அன்பு

நிழலாய்த் தொடரட்டும் உன்னை.

 


 

மாமியும் சிவசாமியும்

 

Rali :

@SKC:

 

சந்தத் தமிழ் சொந்த மென்னும்

சந்துரு உந்தன் கவியின்றி

நொந்த எங்கள் மந்தகதி நீக்கியா

னந்தம் தந்திடு.

 

 

SKC:

@Rali :

 

இருந்தேன் இங்கு மறந்தே

இனிய உன் கவிதை

நுகர்ந்தேன் இது இனிய

விருந்தென மகிழ்ந்தேன்

இனி வேறு கவி

அருந்தேன் நானிங்கு

பொருந்தேன் என எழுதல்

மறந்தேன் வேறென் செய்வேன் ?

 

SKC:

@Rali :

மாமி ஊரில் இல்லையென மகிழ்ந்தே நீயும் சிவ

சாமியை நாளுமிங்கு சிக்கெனப் பிடித்தனை

ஆமிது உண்மையாம் ஆறாய் உன் கவிதை

பூமியில் பெருகியே பொங்கிடும் வேகமும்

நாமிங்கு காணலும் குரு நாதனின் அருளதாம்.

 

 

BKR:

@SKC

மாமி அகத்திலையேல் சாமிக் கருச்சனையாம்

மாமியிருந் தாலோ நமக்கு.

 

SKC:

@ BKR:

 

அகமுடையாள் அருச்சனையும்

சகத்தில் இல்லா வாழ்வுமுண்டோ ?

 

 

BKR:

@SKC:

சகமுடையார்க் கன்பர் அருச்சனையே இன்பம்

அகமுடைடையாள் செய்தால் நமக்கு.

 

SKC:

@BKR:

 

சொல்லால் அருச்சித்து சுமைகூட்டும் பெண்ணே

இல்லாள் எனப் படுபவள்.

 

BKR:

‘வை”க்குப் பதில் “மை”.

எழுத்துப் பிழையோ??

 

 

SKC: :

இடம், பொருளுக்கேற்ப மாறுதலுக்கு உரியது.

 

 

BKR:

சரிதான்.

நாம் நிற்கும்  “இடமும் “, இல்லாள் கையிலிருக்கும்

“பொருளும்” பொருத்தது.

 

 

SKC: :

ஒன்றே கூறினும் நன்றே கூறினீர். சந்தேகமில்லாமல் நீர் காளமேகம் தான்.

 

BKR:

ஆம். சில விஷயங்களை விளக்க அனுபவம் தேவையில்லை. அனுமானமே போதுமானது

 


 

கேட்டதும் கொடுப்பவன்

 

SKC:

கேட்கத் தந்தான் பாதுகையை அசுரன்

கேட்டே கொடுத்தான் அடைக்கலமே துகில்

கேட்டாள் கொடுத்தான் கண்ணன் தான்

கேட்டதும் தந்தான் கீதை தான்

கேட்டுப் பெறுவது ஞானம் தான்

கேட்பதும் அந்தக் குருவிடம் தான்

கேட்டே இவர்கள் பெற்ற கதை

கேளாய் மனிதா ! நீயுந்தான்

நாட்டு நடப்பை நீயறிந்து

கேட்டுப் பெறுவாய் மெய்யருளே

கேட்டே கிடைக்கும் காலமிதாம்.

 

BKR:

@SKC

ராமனிடம் கேட்ட கேள்விக்கு, பரதன் பாதுகை பறிக்குமுன்பே நடந்ததை கைகேயி மனமாற்றத்தைக் கூறி அதற்கு விளக்கமும் தந்துள்ளார்.

அரக்கர் பாவமும் அல்லர் இயற்றிய அறமும்

துறக்க நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்

இரக்கமின்மையன்றோ இன்றிவ் வுலகங்கள் இராமன்

பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே!!

 

 

BKR:

கேட்டுப் பெறுதல் வழக்கெனினும் மெய்நிலையைக்

கேளா தருள்வார் குரு

 

SKC:

@BKR:

கேட்டுப் பெற்றனர் அடியாரும் கேளாதிருந்தனர் ஞானியரும் இங்கு

கேட்டும் அருளே கிட்டாதெனின் கேளாமல் நான் என் செய்வேன் ?

 


 

பாராமுகம் ஏனோ

 

Rali :

பையன் அயனைச் சிறையிலிட்டான் மாலையைங்

கையனவன் தோப்புக் கரணம் இடச்செய்தான்

தம்பியும் அண்ணனும் பண்ணுமிந்த அட்டகாசம்

சம்புநீ கண்டென்ன செய்தாய்.

 

BKR:

@ Rali :

வேதனைத் தண்டித்த காரணத்தை வேலனுமென்

காதிலுரைத் தான்கண்டேன் நீதியதில்

– மோதகனோ

கேட்டதில்லை யாரையுமே தோப்புக் கரணமிட

வேட்டவர்தாம்  செய்தார் அதை.

(வேட்டவர்- விருப்பப்பட்டவர்)

 


 

ஆட்டுவித்தால் ஆரொருவர்

 

SKC:

அன்னை ஆட்டுவிக்க ஆடிய கால் தாழ்த்தாமல்

இன்னுமிங்கு தூக்கியதும் இமையவள் கட்டளையோ ?

உன்னை நான் பாடி உருகியே நினைத்து

பின்னையுன் நிலை கண்டு பெண்ணவளைப் பணிந்தேன்

அன்னையே ! நீ மனமிரங்கி ஆடிய பாதமதை

அண்ணலும் தாழ்த்த அன்புடன் பணித்திடுவாய் !

 

 

BKR:

@SKC

தூக்கியதோர் இடதுபதம் தாயவளின் பாதமன்றோ

தீக்கண்ணன் திருவடியோ திண்புவியி லூன்றிநிற்க

நாக்கிரண்டாம் நாகம்அணி நாதன்தாள் தாழ்த்தலெங்கே?

பாக்கியமே என்றுவந்து பதஞ்சலியார் பார்த்தநடம்

ஆக்குவதும் ஆக்கியதை நீக்குவதும் செய்யுநடம்

நோக்கியது போதுமென நிறுத்திடவும் வேண்டுவதோ?

ஊக்கமுடன் ஊழிநடம் ஆடும்உமை பாகனையே

நீக்கமற நெஞ்சிறுத்தி நீடூழி வாழ்ந்திடுவோம்

 

SKC:

BKR:

ஒரு சந்தேகம்..அப்படியென்றால் பெண்ணுக்கு கால் தரையில் நிற்காது..ஆண் பொறுமைசாலி என்று ஆகிறதோ ?

 

BKR:

@SKC:

இந்த மாதிரி தவறான interpretation வரக்கூடாது என்றுதான் ஈசன் மதுரையில் கால்மாற்றி ஆடினார் போலும் !!

 

SKC:

மதுரையோ சிதம்பரமோ மகாதேவனே அறிவார்

 

 

BKR:

@SKC

 

பாரபட்சம் இல்லாப் பரமனவன் பாரினிலே

பாரம் சுமந்திடவும் பாதிப் பொறுப்பென்ற

சாரம் உணர்த்தவும்தான் செய்ததந்தக் கால்மாற்றம்.


 

தள்ளுவதோ முதுமை

 

 

SKC:

இல்லாளோ உடையவனோ எல்லோரும் ஒன்று இங்கு

எல்லாப் பொறுப்பிலும் இருவரும் சமமெனவே

பொல்லாத பரமனவன் சொல்லாமல் கால் தூக்க

தள்ளாத வயதில் எல்லாப் பணியும்

இல்லாளும் தந்து விட எல்லாம் அவனரு ளெனவே

கல்லாய் அமர்ந்தவனை இல்லாது இருந்தவனை

சொல்லால் துதித்து ஆடல் வல்லானை வணங்கி நின்றேன்.

 

 

BKR:

@SKC

 

தள்ளா வயதென் றுரைத்திடும் சேகரரே

உள்ளதுரைத் தீரோ இயம்பிடுவீர் –

மெள்ளவே

தள்ள விழும்வயதைத் தள்ளாத தென்பீரேல்

பிள்ளைகளும் நம்பா திதை.

 

 

SKC:

@BKR

 

உள்ளது நீவிர் உரைத்தீர் எதையும்

தள்ளாத வயதுமிது தானே.

 

 

BKR:

தள்ள வலுவில்லா தேகங்கொள் மாந்தர்க்கே

தள்ளா வயதாம் அது.

 

 

BKR:

எதையுமே தள்ளா மனத்தோர் வயதால்

முதிர்ந்தும் முதிராதோர் தான்.

 

 

VKR:

தள்ளென்றார் மருத்துவரும் தாங்காது உமக்கினி

தள்ளென்றாள் இல்லாளும் தாத்தன் ஆகிவிட்டீர்

தள்ளென்றார் வரிசையிலே தடுக்காதீர் அடுத்தவரை

தள்ளாத வயதென்றால் தகுமோ?

 

 

SKC:

தள்ளாத வயதிலும் தசமுகனை எதிர்த்த

புள்ளும் உண்டங்கு போற்றும் ராம காதையில் வாலைத்

தள்ளாத வீமனை எள்ளி நகையாடிய

பொல்லாத குரங்குண்டு பாண்டவர் சரிதையில் புறந்

தள்ளாது வள்ளியும் தழுவினள் விருத்தனை இவை

எல்லாமிங் கெமக்கு தெள்ளறிவு தந்திட

தள்ளுதல் ஆகுமோ தரணியில் முதுமையை.

 

 

SKC:

தள்ளி வைத்த தேர்தலும் ஆளைத் தள்ளுமிந்த வெம்மையும் கதவில்

“தள்ளு” என்றே எழுதித் தான் அழைக்கும் அலுவலரும்

தள்ளச் சொல்லி நம்மை தவிக்க விடும் பேருந்தும்

தள்ளுவதில் பலவகை தள்ளும் இவை யாவும்

தள்ளி நின்றே காண தரும் தனி உவகை.

 

 

Rali:

தள்ளலும் கொள்ளலும் வேண்டா ஒருமொந்தை

கள்ளையுள் தள்ளி விடின்.

 

 

-VKR:

தெள்ளு தமிழ்க்கவி திகட்டிப்போய் சற்றே

தள்ளு தமிழ்கவி நன்று.

 

 

SKC:

@Rali:

 

தள்ளாமல் உள்ளே தந்ததே போதை

கள்ளாம் உன் கவிதை அதைக்

கொள்வதன்றி வேறு சுவை

குவலயத்தில் உண்டோ ?

 

 

Suresh :

தள்ளாடும் கள்ளுண்ட பொன்வண்டு தள்ளாடும்

உள்ளாடும் உறவெண்ணி நிறைமாது தள்ளாடும்

தள்ளாடும் தென்றலிடை நதிநாணல் தள்ளாடும்

கண்ணோடு கண் நோக்க இறைநெஞ்சும் தள்ளாடும்.

 

 

SKC:

Suresh

 

தள்ளு தள்ளு என்று தமிழ்க் கவிதை இங்கு

கொள்ளாமல் வந்து குவிந்தது கண்டு

அள்ள அள்ளக் குறையா அமுத சுரபி என்று

தள்ளு முள்ளு தாளாது திணறுதல் கண்டு

மெள்ள நீயும் முத்தாய்க் கோர்த்த கவி நன்று.

 


 

அடுக்குமொழி அரசன்

 

Rali:

பித்தன் மறையுறை வித்தன் நெருப்பினும்

சுத்தன் இடைவிடா நித்தன் புரிபடா

சித்தன் மலைமகள் பத்தன் அனைவர்க்கும்

அத்தன் அரனவன் போற்றி.

 

BKR:

@Rali:

தமிழின்ப அன்பர்கள் சார்பாக உனக்கு ” அடுக்குமொழி அரசன்” என்ற பட்டத்தைப் பரிந்துரை செய்கிறேன்.

 

 

Rali:

@ BKR, SKC::

திட்டமிட்டு இன்றென்னை வம்பிழுக்க மெச்சியோர்

பட்டமிட்டுப் பார்க்கிறாய் நீயறிந்த உண்மைகேள்

சுட்டுப்போட் டும்வராது நற்கவிதை என்றுணர்ந்து

மெட்டுமின்றி கட்டுமின்றி ஏதோயெட் டுக்கட்டும்

சட்டமிலாப் பொய்ப்புலவன் யான்.

 

 

SKC:

சொட்டு மருந்தென சிறு கவிதை வரும் வேளை

கட்டவிழுமுன் கவிதை காட்டாறு ஒத்ததென

பட்டமிது தந்தார் பாரதுவே உண்மை !

தொட்ட தெல்லாம் தமிழாய் தொடரட்டுமுன் பணி தமிழ்க்

குட்டுப் பட்டவன் நீ குமரனருள் வேறில்லை.

 

 

BKR:

@Rali:

பிழையைத் திருத்தினேன் நக்கீரன் என்றாய்

பிழைதிருத்தல் மட்டுமே அல்ல –

அழகான

தேன்கவியைக் கண்டுவந்து போற்றி யுரைப்பதுவும்

தானிந்தக் கீரன் இயல்பு.

 

 

 

SKC:

Rali:

சொக்கனை நீ பாட சுவையென்று

வக்கீலே சொல்ல வாதமெதற்கு.

 


 

தாவி வந்த ஏவிளம்பி

 

Pithan:

தள்ளிடுவோம் துர்முகியை தயவுட னின்றிரவே

மெல்லநடை நடந்துவரு மேவிளம்பி யாண்டினை

சொல்லமுதக் கவிதையை செல்லமா யுதிர்த்து

வெல்லமுடன் வேப்பம்பூ விருந்து முண்டு

நல்லபடி நலம்பெறுவோம் நயமான கவிஞர்களே.

 

 

Rali:

தாவிவந்தாய் தானாய்நீ நன்மையே செய்திடுவாய்

கோவில் அயோத்தியில் கட்டும் அரும்பணி

காவி அணிபவர் செய்ய அருளுவாய்

தூவி மலரினைச் சேர்த்தே வரவேற்றோம்

ஏவிளம்பி புத்தாண்டு உன்னை.

 

 

SKC:

 

மாவிளங்காய் உடன் மாவெல்லப் பானகமும் வேம்

பூவிளங் கற்றையில் உடல் புடமிடும் சாறும் கொண்டு

நாவிளக்கும் தமிழில் நல்ல பல கவியெழுதி

காவிளங் குமரனை மனக் காட்சியில் நிறுத்தி

ஏவிளம்பி கண்டு இன்புறுவோம் நாமே.

 

 

உழலும் மனது ஒளிபெற ஏ

விளம்பி பிறந்தது இன்று.

 

 

 

Suresh:

தும்பிக்கை யானைத் தொழுது நல்லதொரு

நம்பிக்கை தானுடனே துவக்கிடுவோ மிந்நாளை

கோரப்புயல் வெள்ளமென வேரருத்தாள்  துர்முகியே

பாரத்தனையும் செழிக்க பாரியென வான்பொழிய

பேரெடுக்க வந்தவளே விளம்பியே நீவருக.

 

 

GRS:

ஓயா கால வெளியில் ஓடி

ஓயும் வாழ்வின் ஓசை – ஓயா

உள்ள அதீதம் உணர ஹேவிளம்பி

உள்ளம் உணர்த்து நீ…

 


 

வாடகை வீடு 

 

SKC:

வாடகைக்கு உடலெடுத்து வாழுமோர் வாழ்வுமிது

வீடு விட்டு வீடு மாறும் விந்தை நிறை வாழ்வு போல்

கூடு விட்டுக் கூடு பாயும் கோலமது கொண்டும் ஞானம்

தேடுதற்குத் தவியாது தினந்தினம் வாடும் மனம்

நாடுதற்கு நல்வேத நாயகன் துணையிருக்க

பீடுடைய பெம்மானை பேணுதலும் முறையன்றோ ?

 

 

BKR:

@SKC:

 

ஈசன் கருணையினால் இலவசமாய்த் தந்தகுடில்

வாசம் புரியஅவன் வாடகையே கேட்பதில்லை

கூசாமல் நூறுமுறை கூடுகளை மாற்றிடினும்

ஏசாமல் தந்திடுவான் ஏனென்று முனிவதில்லை

தேசுடையான் தேவையெனத் தேர்ந்துநமைக் கேட்பதெலாம்

நேசமாய் அக்குடிலை நெறியோடு பேணிஅதை

ஆசையிலா வினைபுரிய ஆர்வமுடன் பயன்படுத்தி

பாசப் பிணியறுத்துப் பரஞான நிலைகண்டு

பேசாப்பே ரநுபூதி பெற்றபின்னர் அவ்வுடலை

மாசற்றான் மலரடியில்  மகிழ்வோடு சேர்ப்பதொன்றே.

குறிப்பு:

ஆசையிலா வினை – நிஷ்காம்ய கர்மா

 


 

கவிதைச் சண்டை

 

Rali:

சண்டை கவிதை சரியென்று நீரிடுவீர்

சண்டை ஒருவேள்வி சென்றதற்கு நீரிடுவீர்

சண்டை அடிமைநீ வாவென்று நீரிடுவீர்

சண்டை பழம்துணி தாவென்று நீரிடுவீர்

சண்டை பழமோடு தாவென்று நீரிடுவீர்

சண்டை ஒருவேலை இன்றி.

 

 

BKR:

@Rali:

 

சண்டைக் கிழுத்தான் சதாசிவனும் அச்சண்டை

கொண்டதனால் கண்டபயன் காண்கிலையோ?

– அண்டியவர்

சாலச் சிறந்திடவே சாக்குரைத்துச் சண்டையிட்டான்

வேலையின்றிச் செய்தானோ சொல்.

 


 

இட்லி புராணம்

 

SKC::

@rali

 

ஷண்முகப் பிரியனின் சரவண பவனம்

இன்முகம் காட்டிஎம்மை அழைக்க

பன்முகம் கொண்ட பதினான்கு இட்லி

என்மனம் நோகாது எமக்கீந்த ராலி

ஷண்முகன் உனக்கு சகலமும் அருள்வான்.

 

 

Pithan::

சரவணபவ என்ற ஆறெழுத்து உணவகத்தில்

ஐந்துபேர் கூடி நான்குபேர் உணவருந்தி

மூன்றுபேர் காபி பருகி இரண்டுபேர் ஜூஸருந்தி

ஒன்றாகி மகிழ்ந்திட்டோம் வாழ்க வளமுடன்.

 


 

பிறரின்பம்

 

Rali :

வருமின்பம் பிறரின்பம் வேண்டின் அறிந்தேன்

வருந்துயரம் என்னின்பம் வேண்டின்.

 

 

BKR:

@ராலி:

 

நானின்பம் கொள்ளப் பிறரின்பம் வேண்டுவனேல்

நானிங் கடைவ தெது?

 

Rali : இன்பம்!

 

BKR:

ஆனால் எனக்கின்பம் வேண்டின் வருவது துன்பமென்றுதானே உன்கவி உரைக்கிறது?

 

 

Rali:

 

@BKR:

 

இன்பம்நாம் வேண்டிப் பிறரின்பம் வேண்டின்

இன்பம் பிறர்பெறுவர் திண்ணம் அதுவொன்றே

தன்னால் நடக்கும் நமக்கின்பம் வந்தடைய

அன்பர் பிறர்வேண்ட வேண்டுமென்னும் இவ்விதி

தொன்மையாம்.

 


 

கூந்தல் காவியம்

 

Rali :

இன்றிங்கு மன்னரில்லை ராணியில்லை பெண்களுக்கு

அன்றுபோல் கூந்தலில்லை கூந்தல்மேல் ஆண்களுக்கு

ஒன்றுமே கேள்வியில்லை கீரனைச் சுட்டெரித்து

நின்றநாள் சென்றபின் உன்நெற்றிக் கண்ணுக்கு

ஒன்றுமிங்கு வேலையும் இல்லை.

 

SKC::

 

வேதியர்க்கு கூந்தலுண்டு விந்தை மாதருக்கோ சரி

பாதியாய்க் கேசம் உண்டு பாரிங்கு அதுவும் கண்டு

மேதினியில் போதுமென்று முடியிழந்தார் பலர் இன்று

ஆதி சிவன் காலமதில் அத்தனைக்கும் நேரமுண்டு

ஏதிங்கு நேரமென்று இவர் எள்ளி நகையாடக் கண்டு

பாதி உமை கொண்டவனும் பரிதவித்தான் இங்கு.

 

SKC:

வீரமணி கண்டஞ்சி வெறுத்தனர் தங்கூந்தல்

நாரியர் இன்று காண்.