Jun 2017 – Rali – Venpa

ராலியின் வேண்வெண் முயற்சி #403:

வரிஏய்ப்பார் மக்கள்

    நலமெண்ணார் மண்ணை

அரிப்பார் பெருந்திருட்டு

    செய்வார் சமூகம்

பிரிப்பார் கொலைபுரிவார்

    நல்லவராய் வேடம்

தரிப்பார் வினைப்பயன்

    பற்றியெல்லாம் சொன்னால்

சிரிப்பார் பலருள்ளார்

    ஈசாநீ இங்கு

எரிக்க நிறையவே

    பாக்கி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #404:

நிம்மதியாய் பிட்டுண்ண

    வேந்தன் விடவில்லை

நிம்மதியாய் நஞ்சுண்ண

    இல்லாள் விடவில்லை

நிம்மதியாய் சோறுண்ண

    அன்பன் விடவில்லை

நிம்மதியாய் ஊனுண்ண

    பட்டர் விடவில்லை

நிம்மதியாய் பாலுண்ண

    எச்சன் விடவில்லை

எம்மகம் வாரும்நீர்

    உண்ண.

(அன்பன் = விறல்மிண்ட நாயனார், எச்சன் = சண்டேசுவரர் தந்தை, பட்டர் = கண்ணப்பர் மலைக்கோயில் பட்டர்)

 

ஞாயிறும் திங்களும்

    கண்ணெனக் கொண்டவன்

வெள்ளி மலையெ‌ன்

    இருப்பிடம் என்றவன்

அற்புத செவ்வாய்

    மலைமகள் காதலன்

தாவியாழங் காணா

    கடலினைத் தாண்டுவான்

ஆவியாம் ராமனின்

    நாமமே விண்டவன்

சனிக்கிளையோன் அஞ்சவே

    ரௌத்திரம் கொண்டவன்

நாளும் கிழமையும்

    நீயே.

 

மந்தநடை நீண்டசெவி

    ஆழ்விழி சூரியன்

நந்தன் கறுத்த

    சனைச்சரனை செய்திடுவோம்

வந்தனை இன்று

    சனி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #405:

(சனிக்கிழமை special)

தனியே வருவாயோர்

    ஏழரை ஆண்டு

மனிதரை வாட்டும்

    கதிரவன் மைந்தா

சனிநீயுன் தம்பி

    மெதுவே வரட்டும்

கனியும் அதற்கொரு

    காலம்.

 

(இன்று மாலை சேதி)

மழைநாளை சென்னையில்

    சொன்னது வெள்ளையன்

பிழையாத பீபீசி

    ஆஹா

 

ராலியின் வேண்வெண் முயற்சி #406:

வாமனும் நீகீத

    சாமனும் நீசடை

சோமனைச் சேர்த்தவன்

    நீகாமன் கூற்றுநீ

சேமநிதி வாமனன்

    சாமிநீ காத்திட

தாமதம் செய்வதேன்

    நீ.

 

ஞாயிறு பல்லைத்

    தகர்த்தவன் உன்தமிழ்

ஞாயிறு வாரக்

    கவிதனைக் கேட்டின்று

தேயினும் தோன்றிடும்

    திங்கள் சிந்திடும்

மாயினும் மீண்டும்

    உயிர்த்திடும் அமுதமாம்

பாயிரம் இன்னமும்

    கேட்பான்.

 

ஊதல் உறிஞ்சல் இவைவேண்டா சீக்கிரம்

சாதல் விரும்பா விடின்.

 

உறிஞ்சாதீர் நீரை நிலத்திருந்து வான்நீர்

நெறியுடனே சேர்க்கா விடின்.

 

தூரின்றி ஏரிகளைச் செய்துநீர் சேர்க்காது

நீரின்றி வாடுவதேன் நாடு.

 

மழையழைப்போம் வேண்டுதல்

    வேள்வியால் மக்கள்

பிழைமறந்து கொட்டும்

    மழை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #407:

சுடுகாட்டில் ஏதும்

    பிடுங்கல் கிடையா

படுத்தார் சிறிதும்

    படுத்தார் இவர்கள்

நடுவினில் வாழ்தல்

    பெரிதா சிறிதே

படுநாட்டில் எங்களைப்

    போலே துணிந்து

விடுவென்று ஓடுவாய்

    ஓடி இரக்கப்

படுவாய் மனிதரின்

    மேலே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #408:

பயமற்று வேதன்

    தலையை அறுத்தாய்

பயமற்று ராவணன்

    தோளை நெரித்தாய்

பயமற்று காமனைக்

    கண்ணால் எரித்தாய்

பயமற்று சூரியன்

    பல்லை உடைத்தாய்

பயமற்று கூற்றை

    உதைத்தாய் எனக்குள்

பயமற்று ஆடிடும்

    பேய்க்குணம் கண்டு

பயங்கொண்டு தள்ளியே

    நிற்பாய்.

 

இச்சை ஒழியவும் ஓரிச்சை வேண்டுமவ்

விச்சை பெறுதல் அரிது.

 

இச்சை ஒழியவும் ஓரிச்சை வேண்டுமவ்

விச்சை பெறவே பெறுவோம் தலையோட்டில்

பிச்சை பெறுவான் அருள்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #409:

உண்மைநான் சொல்வேன்கேள்

    நஞ்சுண்ட நாடகம்

மண்ணழித்து விண்ணழிக்கும்

    மன்னவனை ஏதேனும்

பண்ணுமோ நஞ்சதை

    நன்றாய்ச் செரித்திடவே

உண்ணாது பாதியிலே

    நின்றிடச் செய்திட்டாள்

கண்ணாள் பலநாளாய்த்

    தன்கணவன் சுந்தரன்

மண்ணிலும் விண்ணிலும்

    பெண்களெல்லாம் மையலுற்றுக்

கண்ணடி பெற்றது

    தாளாது நீலநிற

வண்ணத்தால் இட்டாள்

    திருஷ்டி.

 

அருமை எனக்கற்றோர்

    வாய்க்கேட்டல் என்றும்

பெருமையும் ஊக்கமும்

    ஊட்டும்.

 

தங்கத்தை வார்த்தது

    போல்மேனி எப்போதும்

மங்காது பொங்கும்

    கருணை துறவறத்து

சிங்கம் மறைமறை

    யாதிருக்க பாரதம்

எங்கும் நடந்த

    பெரியவா நம்நெஞ்சில்

தங்கி நடமாடும்

    தெய்வம்.

 

பெரியவா என்றதுமே

    ஆண்டவனை எண்ணி

விரியாத உள்ளமும்

    உண்டோ.

 

பெரியவா சொன்னதைப்

    படித்தல் நமது

அறியாமை போக்கி

    விடும்.

 

இருதாரம் கொண்டான்

    அதனாலே சாந்தி

ஒருபோதும் இல்லான்

    உடம்பில் சரியாய்

ஒருபாதி இல்லான்

    உடைந்த நிலவு

சொருகி சடைதாழ

    நின்றான் அரையில்

ஒருநல் துணியின்றி

    கோவணம் போர்த்தி

நெருப்பைக் கையிலும்

    நெற்றியிலும் ஏற்றான்

ஒருபோதும் துஞ்சான்

    பித்தனாய் மேய்ந்தான்

ஒருகுறை இல்லை

    அவனுக்கு என்றால்

ஒருவருக்கும் இல்லை

    குறை.

 

தப்பாய் நினைத்துச்

    சினந்த பழனி

அப்பன் ஒருபக்கம்

    இல்வாழ்வு வேண்டாது

அப்பம்‌ பொரிதின்று

     வாழ்ந்திடும் பிள்ளையார்

அப்பன் ஒருபக்கம்

    சொல்லியும் கேளாது

அப்பனின் வீடுசென்ற

    இல்லாள் ஒருபக்கம்

தப்படா இல்லறம்

    என்றோடி‌ அப்பனே

தப்பினாய் நீயே

    குரு.

 

(கங்கா தேவி ஆதங்கம்)

‌மனதே வராதுநான்

    தேவலோகம் விட்டு

ஜனங்கள் வளமுடன்

    வாழவிங்கு வந்தேன்

உனக்காய் பகீரதா

    ஈசனுக்கு பாரம்

எனயென்னை மானிடர்

    சொல்வது நன்றோ

எனக்கிது தேவையா

    சொல்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #414:

பண்ணினேர் சொல்லாள்

    உமைபங்கன் தன்னுதல்

கண்ணினால் காய்ந்த

    கயிலாயன் மண்மகள்

மண்ணினால் பண்ணியயி

    ராமலிங்கம் தாளடி

எண்ணினால் போதுமே

    வாழ்வில்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #415:

மைத்தடங் கண்ணினாள்

    நங்கையின் பொன்வளைக்

கைத்தலம் பற்றியயென்

    நாதன் விழியென்மேல்

தைத்தது கண்டு

    சிலிர்த்துநான் கூத்தாடிப்

பைத்தியம் ஆவது

    என்று.

 

அப்பனாய் அம்மையாய்

    ஆன இறைநம்மை

எப்போதும் காத்தலே

    உண்மை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #427:

நாளவன் வானம்சூழ்

    கோளவன் நுண்ணிய

தூளவன் பந்தமறு

    வாளவன் எல்லோர்க்கும்

கேளவன் மிஞ்சிடும்

    ஆளவன் சாய்ந்திடும்

தோளவன் தாள்தினம்

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #431:

காண்டவன் புத்திரன்

    பாண்டவன் மோதிய

ஆண்டவன் மாந்தரில்

 ‌‌‌  மாண்டவர் பூமியில்

தாண்டவன் நிற்காது

    நீண்டவன் சந்திரன்

பூண்டவன் சேவடி

    போற்றி.

(காண்டவன் = இந்திரன்)

 

அழகு மயில்சிறகன்

    கண்ணன் மருகன்

அழகு மயிலழகன்

    போலழகு ஏது

அழகு இவரிருவர்

    அன்றோ.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #434:

ஆடுபவன் மோஹினிபின்

    ஓடுபவன் பக்தரைத்

தேடுபவன் சாமகானம்

    பாடுபவன் வேதவிதி

போடுபவன் அண்டமெலாம்

    மூடுபவன் ஞானியர்

நாடுபவன் பெண்பிரிந்து

    வாடுபவன் காமனைச்

சாடுபவன் பார்வதி

    கூடுபவன் கொன்றைப்பூ

சூடுபவன் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #437:

அறுபத்து மூவர்

    வணங்கும் இனிய

அறுபத்து நான்கு

    திருவிளை ஆடல்

பெறுமூர் மதுரை

    நகர்நாதன் பந்தம்

அறுத்து அடியவரைக்

    காப்பான்.

 

மாதவன் தாரைநீர்

    வார்க்க அருகினில்

மாதவள் நாணிநிற்க

    மாப்பிள்ளை தோரணையில்

நாதனும் நிற்கும்

    மணக்கோலம் பாடினீர்

ஆதவன் உள்ளவரை

    வாழி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #441:

பெண்ணுனக்கு மேனியில்

    பாதி வலம்நான்தான்

பெண்நீ இடம்கொள்வாய்

    என்றுரைப்பார் உன்நாதன்

பெண்ணேநீ நம்பாதே

    ஏற்கனவே கங்கையாம்

பெண்ணுக்குத் தந்தார்

    இடம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #442:

நடமாடும் தெய்வம்

    பெரியவாளைக் காஞ்சி

மடத்திலும் கோயிலிலும்

    வேறிடம் தனிலும்

கடவுளாய்க் கண்டோரைப்

    பார்த்து வரட்டும்

திடமாய் எனக்கிறை

    பக்தி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #444:

(கள்ளங்கபடில்லா எளியோர்க்கு முருகன்‌ ஒருவனே தெய்வம் என்கிற ஸுப்ரஹ்மண்ய புஜங்க ஸ்லோகத்தை வைத்து)

சந்தவேதம் ஓதுவார்

    முத்தீ தினம்வளர்ப்பார்

சொந்தசெல்வம் கொண்டுகோயில்

    சேவைகள் நன்றுசெய்வார்

சந்தமுடன் பக்திப்பா

    பாடுவார் இப்பெரியோர்

வந்தனை செய்துய்ய

    வேறுதெய்வம் இங்கிருக்க

எந்தவொரு ஞானமின்றி

    கள்ளமின்றிப் போற்றிடும்

அந்த எளியமாந்த

   ருக்கென்றும் நீமட்டும்

கந்தா கடவுளாய்

    உள்ளாய்.

 

தமிழ்தமிழ் என்னும் சுயநலக் கள்ளர்

ஒழிந்து தமிழ்நாடு வாழ்க.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #449:

வெள்ளத்தால் ஊர்தவிக்க

    பிட்டுதின்று துள்ளியாடி

வெள்ளம் அடக்காது

    பார்த்திருந்தாய் இங்கெனது

உள்ளத்துள் பொங்கிடும்

    தீராத ஆசையாம்

வெள்ளமேனும் நீயடக்கப்

    பார்.

 

பாதத்தால் மூவுலகும்

    அன்றளந்த வாமனனின்

நாதனீசன் உங்களைக்

    காப்பான்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #450:

இறையவன் கங்கைத்

    துறையவன் நான்கு

மறையவன் இல்லாக்

    குறையவன் சென்னிப்

பிறையவன் எங்கும்

    உறையவன் எல்லாம்

நிறையவன் உள்ளச்

    சிறையவன் தீராப்

பொறையவன் தேவர்க்

    கிறையவன் கண்டக்

கறையவன் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #452:

சடையாட அங்கே

    நதிகங்கை ஆட

உடைந்த மதியாட

    மானாட பக்கம்

இடையிலா பார்வதி

    ஆடநின்று பாறைக்

குடைபிடித்த கோவிந்தன்

    ஆடயிடை ஒற்றை

உடையாட சைவப்

    படையாட நந்தி

விடையாட பாம்பு

    அரையாடத் தில்லை

நடையாடும் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #453:

எரிந்தது அண்டம்

    எரிந்தது பிண்டம்

எரிந்தனர் தேவர்

    எரிந்தார் அசுரர்

எரிந்தது தண்ணீர்

    எரிந்தது காற்று

எரிந்தது தீயும்

    எரிந்தது சாம்பல்

எரிந்தது பேச்சு

    எரிந்தது எண்ணம்

எரிந்தது மூச்சு

    எரிந்தது மண்ணும்

எரிந்தது பாவம்

    எரிந்த தறமும்

எரிந்தது காலம்

    எரிந்தது தேசம்

எரிந்தது காட்சி

    எரிந்தது கேள்வி

எரிந்தது உள்ளம்

    எரிந்தது எல்லாம்

எரித்தாயுன் கண்ணால்

    எரித்தபின் நீயும்

எரிந்தாய் இருந்தது

    நான்.

 

சொல்லொணாச் சுகத்தினைச்

    சொல்லும் விதமறிந்த

நல்லோர் உளரேல்

    அவர்பாதம் பற்றுதல்

அல்லதறி யேனடி

    யேன்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #454:

மட்டுவார் கூந்தலன்னை

    நாடிடும் காதலன்

செட்டிப்பெண் காக்கவந்து

    தாயுமான ஆண்டவன்

குட்டுகேட்கும் உச்சிப்பிள்

    ளையாரைப் பெற்றவன்

நட்டநடு ஆற்றினில்

    ஆழ்துயில் மாதவன்

திட்டமிட்டும் காணாத

    மாத்ருபூ தேசுவரன்

விட்டுவிடா தென்னைத்

    தகப்பனாய்த் தாயுமாய்க்

கட்டிப்போட் டுக்காப்

    பவன்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #455:

வாளையும் வெட்டுமிரு

    கண்ணினாள் காதலன்

தோளை அரவுதீண்டும்

    வெண்மதி சேகரன்

தாளைப் பணிந்தோர்

    துயர்தீர ஒன்பது

கோளை நகர்த்தும்

    சிதம்பரத் தாண்டவன்

ஊளை நரிக்காட்டில்

    ஆடிடும் ஆண்டவன்

நாளை மறுநாளை

    இன்றுமென்றும் காப்பவன்

காளைமேல் ஊருவான்

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #456:

சதிதான் அணைத்தான்

    நதிதான் ஒளித்தான்

துதிதான் பெறுவான்

    திதிதான் வளர்த்தான்

நிதிதான் அருள்வான்

    பதிதான் உறைவான்

மதிதான் உடுத்தான்

    விதிதான் ஒறுத்தான்

கதிதான் தருவான்

    துணை.

 

சடைவிரித்துப் பின்சடை

    தான்மழித்து சங்கரராய்

விடையெல்லாம் தந்தவர்

    போற்றி

 

ராலியின் வேண்வெண் முயற்சி #457:

உன்மகனைக் கேட்பேன்

    மனைவியும் தாவென்பேன்

உன்பெண்ணின் கூந்தலைக்

    கேட்பேன் சபைநடுவே

உன்னையே கேட்பேன்நான்

    என்னுமுன் போக்கறிந்து

உன்பக்கம் யாரும்

    தலைவைக்க எண்ணுவரோ

உன்னடியார் நல்லோரை

    சோதித்தாய் அன்றின்று

உன்பெயர் இப்படி

    ஆச்சு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #458:

தாமரை பூத்தான்

    தலைகிள்ளி அம்பிட்ட

காமனைச் சுட்டுச்

    சடையில் வளர்பிறை

சோமனைச் சூட்டி

    உலகெலாம் காத்திடும்

மாமறைக் காடன்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #459:

தலையெடுத்தான் கண்ணால்

    மதனவேள் மோக

வலைதடுத்தான் ஆய்ந்த

    கலைகளில் ஆடல்

கலைகொடுத்தான் ஒன்றே

    இரண்டல்ல என்னும்

நிலைகொடுப்பான் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #460:

பாட்டுடையான் சங்கத்து

    ஏட்டுடையான் தன்கையில்

ஓட்டுடையான் ஊரெல்லைக்

    காட்டுடையான் நந்தியெனும்

மாட்டுடையான் கைலாய

    வீட்டுடையான் தென்பாண்டி

நாட்டுடையான் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #461:

என்னப்பன் பிச்சாண்டி

    என்னம்மா சீர்ச்சண்டி

என்தம்பி கோவணாண்டி

    என்மாமன் மாயாவி

என்குலம் கோத்திரம்

    ஒன்றுமே கேட்காதீர்

என்பசிக்கு மோதகம்

    அப்பம்‌ பொரிலட்டு

இன்னும் பழம்தந்து

    என்னை கவனிக்க

அன்பாய் ஒருபெண்

    தருவீர்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #462:

பிறவா வரம்வேண்டேன்

    மீண்டும் பிறந்து

இறவா வரம்வேண்டேன்

    பொல்லாத வர்க்குத்

திறவா சுவர்க்கமும்

    வேண்டேன்நான் நோற்ற

துறவால்மெய் பக்தியால்

    உன்னடிசேர் நல்லோர்

உறவாடும் வாழ்வுமுன்

    பாதமலர் சற்றும்

மறவா வரமும்

    மறவாது ஈவாய்

அறவாழி அந்தணா

    நீ.

 

தேனினும் இன்சுவை

    சொட்டும் திருமுறைகள்

வானினும் மேலுறை

    உன்வீட்டில் இன்றொலிக்க

ஏனிதுயின் றென்றெண்ண

    தில்லையில் இன்றுனக்கு

ஆனித் திருமஞ்

    சனம்.

 

பற்றற்றான் பற்றினைப்

    பற்றாதார் நாவினில்

கொட்டாது சந்தக்

    கவி.

 

பூசலார் நாயனார்

பூண்டிருந்த பக்தியின்

வாசமும் அண்டா

திருப்பதேன் நான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s