Jun 2017 – Rali – Venpa – Modi

ராலியின் வேண்வெண் முயற்சி #416:

இரண்டு மகன்கள் இருக்க மலைமகள்

பரமன் வயலில் உழுதது ஏண்டி

அரனடியே சிந்தித் தவர்க்காய் நடத்திய

பரமனின் நாடகம் தாண்டி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #417:

தெள்ளு ரசம்சாம்பார் மோர்சோறை விட்டுவிட்டு

பிள்ளைக் கறியீசன் கேட்டது ஏண்டியப்

பிள்ளையின் பெற்றோர் பெயர்கீர்த்தி இவ்வுலகு

உள்ளளவும் நின்றோங்க வேண்டி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #418:

தாமழிந்தோம் என்றழுத

    தேவருக்காய் அம்புவிட்ட

காமனைக் கண்ணால்

    எரித்தது ஏண்டிதுளி

காமமோ கோபமோ

    கண்டால் எரித்திடல்

வாமன் வழக்கமது

    தாண்டி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #419:

நான்முகத்தால் ஓதுபவர்

    நம்மைப் படைத்தவர்

கோனவர் நற்சிரம்

    கிள்ளலா மோடிநீள்

வான்புகழ் வேதங்கள்

    நான்கினை ஓதவே

நான்குமுகம் நன்றுபோது

    மேடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #420:

பாடல் பொருள்பேசித்

    தீர்க்காது கீரனை

மாடமர்வான் சுட்டுப்

    பொசுக்கலா மோடிபெற்ற

கேடது தீரத்

    திருமுருகாற் றுப்படை

பாடவைக்க லாமென்று

    தாண்டி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #421:

பழையவோடு கேட்டு

    அடம்பண்ணி என்றும்

பிழையாத அன்பரழச்

    செய்யலா மோடி

பழையபடி அன்பர்

    இளமையாய் வாழ்வில்

தழைத்திடச் செய்யவே

    தாண்டி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #422:

கவர்ந்திழுக்கும் மோஹினி

    யாரென் றறிந்தும்

அவள்பின் மயங்கியீசன்

    ஓடலா மோடி

சிவவிஷ்ணு அம்சமாய்

    ஐயப்ப சாஸ்தா

அவதாரம் பண்ணவேண்டு

    மேடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #423:

ஆறுதலாய் நாலுவார்த்தை

    சொல்லிவீடு விட்டன்று

ஆறுமுகன் போகாது

    செய்யவேண்டா மோடிவண்ண

ஏறுமயில் வேந்தன்

   குமரன் குடியிருக்க

ஆறுபடை வீடுவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #425:

தனிமையில் காட்டில்

    இருக்கவேண்டும் என்றால்

வனிதையின் கைப்பிடிப்

    பானேண்டி போற்ற

மனிதர் நமக்கெல்லாம்

    ஓரம்மை அப்பன்

தனியாக வேண்டுமென்று

    தாண்டி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #428:

இருகண் முகத்துக்குப்

    போதுமே இன்னும்

ஒருகண் நுதலில்

    இருக்கவேண்டு மோடி

இருகண் படைத்துப்பின்

    காக்க உலகை

ஒருகண் அழிக்கவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #429:

தந்தைதன் வாய்பொத்திப்

    பிள்ளைவாய்ப் பாடமொன்று

எந்த உலகிலும்

    கேட்டது உண்டோடி

எந்த நிலையிலும்

    பாடம் பணிந்துகேட்டல்

சந்தமென்று காட்டவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #430:

இருகண் முகத்துக்குப்

    போதுமே இன்னும்

ஒருகண் நுதலில்

    இருக்கவேண்டு மோடி

ஒருகண் இருகண்ணா

    எல்லோர் திருஷ்டி

ஒருகண் எரிக்கவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #432:

ஒருபிழை செய்யாத

    சுந்தரர் வாட

திருமணம் வீணே

    நிறுத்தலா மோடி

திருமணம் சுந்தரர்

    செய்திருந்தால் சைவத்

திருமுறை இன்றிருக்கு

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #433:

இருமணம் கொண்டயீசன்

    சுந்தரர் வாட

திருமணம் வீணே

    நிறுத்தலா மோடி

ஒருமணம் இன்னும்

    ஒருமணம் என்று

இருமணம் பண்ணிவைத்தா

    ரேடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #435:

மன்னுலகில் நேரடியாய்

    கங்கை குதிக்காது

மன்னன் சடைக்குள்

    விழவேண்டு மோடியம்

மன்னனின் மேல்பட்டு

    நம்பாவம் போக்கிடும்

தன்மை பெறவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #436:

கண்ணினிலி ரத்தம்

    வரவைத்துத் தன்கண்ணைக்

கண்ணப்பன் தோண்டவே

    செய்திடலா மோடியக்

கண்ணப்பன் பக்தியை

    ஊரறிய ஈசனே

பண்ணிய நாடகம்

    தாண்டி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #438:

தம்மை வணங்கினால்

    ஞானம் வழங்கிடும்

நம்கணேசர் ஞானப்

    பழம்வேண் டலாமோடி

அம்மையும் அப்பனும்

    தானுலகு என்னுமுண்மை

நம்மை அடையவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #440:

விடமெரிக்கும் ஆற்றல்

    இருந்தும் இறைவன்

விடமுண்டு நாடகம்

    ஆடிய தேண்டி

இடம்தந்தார் கங்கைக்கு

    கோபித்த இல்லாள்

தொடவணைக்க வைக்கவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #443:

வழுதியின் கேள்விக்கு

    உரிய பதிலை

எழுதிநேரே தந்திருக்க

    லாமேடி தன்முன்

அழுமேழை பக்தனோர்

    ஆயிரம்பொன் பெறவே

எழுதித் தரவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #445:

பண்டைய பாவங்கள்

    மன்னித் திடாதீசன்

தண்டனை இங்கு

    தரவேண்டு மோடியெங்கும்

கண்டதே காட்சியென்னும்

    நம்மை ஒருவழிக்குக்

கொண்டு வரவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #446:

எட்டிரண்டு ஆண்டு

    சிறுவனைக் காலதேவன்

சட்டமென்று கட்டினால்

    ஈசன் உதைத்ததேண்டி

கட்டி அணைத்தான்

    அவனரனை என்றுகண்டு

விட்டு விடவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #447:

எல்லோர்போல் இல்லாது

    ஈசனிடு காட்டிலுயிர்

இல்லாப் பிணங்களுடன்

    நாள்கழிப்ப தேண்டிமக்கள்

எல்லோரும் உய்ய

    அவர்காதில் ராமநாமம்

சொல்லிபந்தம் போக்கவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #448:

அரிமகனேன் ஈசன்

    தவத்தைக் கலைத்தல்

சரியில்லை என்றறிந்தும்

    செய்தாண்டி மீண்டும்

எரிகிற வேள்வித்தீ

    குண்டத்தில் பாய்ந்து

பிரிந்தவளைச் சேர்க்கவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #451:

தாய்போல்தான் ஈன்றுபின்

    காத்த உலகைப்போய்க்

காய்ந்து அழித்திடத்

    தான்வேண்டு மோடியுயிர்

மாய்ந்து பிறந்துமீண்டும்

    மாயும் நமக்கெல்லாம்

ஓய்வு தரவேண்டா

    மோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #424:

ஆண்பாதி பெண்பாதி

    ஆகலாமா பெண்தாயார்

ஆண்தந்தை என்றே

    இருக்கவேண்டா மோடியேன்

வீண்பேச்சு உண்மை

    இரண்டில்லை ஒன்றேதான்

ஆண்டவன் என்றறியா

    யோடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #426:

(சிவவாக்கியர் அத்வைத அனுபூதியை விட்டு விசிஷ்டாத்வைதம் சார்ந்து ஆழ்வாரான சேதி பற்றி)

 

உப்புபொம்மை மீண்டும்

    கடலில் இருந்தொருநாள்

தப்பியே வந்திருக்க

    லாமேடி வந்தாலும்

உப்புக் கடல்வேறு

    தான்வேறு என்றது

தப்பித மாயெண்ணு

    மோடி.

 

இப்படிநான் கேள்விகேட்டு

    நானே பதில்சொல்லல்

எப்படிச் செய்யலாண்டி

    கூடாது தானானால்

அப்படியே பண்ணிப்

    பலநாள் பழக்கமானால்

தப்பென்று சொல்லலா

    மோடி.

 

திருமகள் மாதவன்

    வாணி பிரமன்

இருவரும் மன்னர்

    உடையுடன் தங்கம்

அரும்முத்து மாலை

    அணிந்திருக்க ஈசன்

ஒருதுணி போர்த்தியென்பு

    மாலை அணிந்து

இருப்பதால் இல்லாள்

    மனம்வாடும் என்று

ஒருதரம் எண்ணவேண்டா

    மோடி.

 

 

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s