MAY 2017 – BKR – வெண்பா

ஆடினான் ஐயனும் ஆனந்தக் கூத்தொன்று

ஓடினான் சுந்தரர் ஊடலைத் தீர்க்கவே

சாடினான் முப்புரம் சாய்க்கவே நிம்மதி

நாடினான்என் உள்ளம் அமர்ந்து.

 

 

ஆசைச் சடலம் அறிவுத்தீ கொண்டெரித்து

தூசாய்க் கிளம்பும் சினம்நீர்த்த நீறணிந்து

ஈசனவன் நின்றெழுந் தாடு மயானமதே

மாசறுத்த மாந்தர் மனம்.

 

 

 அஞ்சினன் அக்கரத்தால்* அண்டமெல் லாம்கடந்து

விஞ்சினன்  விஞ்சைமண்ணை ஊழியில் உள்ளடக்கி

எஞ்சினன் எந்தையாய் என்னுளம் ஏகினன்அக்

குஞ்சரன் தந்தையாம் ஈசன்.

*அக்கரம் – அக்ஷரம்

 

 

மாதிலொரு பாதியவன் பேதமிலாச்  சோதியவன்

ஆதியுமாம் மீதியுமாம் போதனவன் – வேதமெலாம்

ஈதெனவே ஓதவொணான் பேதையையும் ஆதரித்துக்

காதலினால் கைதுசெய்த நாதன்.

 

 

கணந்தான் வழுத்த மணந்தான் அணங்கை

பணந்தான் சரமாய் அணிந்தான் – துணிந்தான்

பிணந்தான் எரியும் வனந்தான் தனையே

இணங்கார்க்கும்  இன்பமருள் ஈசன்.

 

 

காயத் திரியினுயர் மந்திரமில் காசினியில்

தாயிற் சிறந்ததோர் தெய்வமுமில் – தூயதாம்

மாகாசி கங்கையினும் தீர்த்தமில் இல்லையே

ஏகா தசிக்குநிகர் நோன்பு.

 

 

சரீரம் ஸுரூபம் ததா வா களத்ரம்

யச: சாருசித்ரம் தனம் மேருதுல்யம்

மன: சேத் ந லக்னம் குரோரங்க்ரி பத்மே

தத:கிம்? தத:கிம்? தத:கிம்? தத:கிம்?

 

                     மொழிபெயர்ப்பு

வனப்பாய் உடலும் வடிவாம் மனையும்

மணக்கும் புகழும் மலைபோல் தனமும்

தனதாய்ப் பயனென் குருவின் பதத்தில்

மனந்தான் லயிக்கா விடின்?

 

வேறு வடிவம்

வனப்பேகொளும் உடலும் வடிவாமொரு  மனையும்

மணமேவிய புகழும் மலைபோல்வெகு தனமும்

இருந்தும்மனம் குருதாளினைப் பொருந்தா துறுமாயின்

பிறகென்அதில் பிறகென்அதில் பிறகென்அதில் பயனே?

குறிப்பு: தத:கிம் = பிறகு என்ன?

 

 

பேயன் பிரம்படிக் காயன் ஒருகைமேல்

தீயன் தொழுவோர்க்கு நேயன் உலகழிக்கும்

மாயன் விடமுண்ட வாயன் எனைப்பிரியாத்

தாயன்அத் தூயன் சிவன்.

 

 

மூலன் மிடறுற்ற நீலன் எமனுக்குக்

காலன் அயனுக்கு மேலன் அரிகாணாக்

காலன் கரமேந்தும் சூலன் இமயமாம்

சைலத் தமர்ந்த சிவன்.

 

 

ஆட்டத் தலைவன் சிரமீ தமர்குளிர்

கோட்டப் பிறையன் அடியார் நலந்தனில்

நாட்டம் உடையன் அகலா தெனதுள

வீட்டில் உறையும் சிவன்.

 

 

சந்திரனைச் சூடியவன் அந்தகனைச்  சாடியவன்

இந்திர போகமும்விட் டோடியவன் – சுந்தரப்பொன்

வெள்ளிசபை ஆடிடினும் பிள்ளைக்கு வேடுவச்சி

வள்ளியைப்பெண் கொண்ட சிவன்.

 

 

ஆதிய னாதியும் வேதமாம் நீதியும்

மாதொரு பாதியும் சாதகர் பூதியும்

பேதமில் சோதியும் போதமாம் மீதியும்

நாதனும் ஆவான் சிவன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s