May 2017 – SKC

 

குற்றம் குற்றமே

 

பற்றிய வெந்தீயில் வற்றியது கண்ணீரும்

சுற்றிலும் வெம்மையாம் சூழ்நிலை கண்டு ஆடை

முற்றிலும் துறந்து யாம் முனிவராய்த் திரியும் நிலை

முற்றும் முன் முக்கண்ணா ! சற்றே மனமிளகி உன்

நெற்றிக்கண் மூடிக் கொள்.


 

அஞ்சுவது அஞ்சாமை

 

அஞ்சன மையுடையாள் அஞ்சுவளோ அரவு கண்டு

அஞ்செழுத்து மந்திரமே அவள் நெஞ்சில் நிறைந்த பின்பு.


 

 நாளாம் நாளாம் மண நாளாம்

 

அல்லல்தாம் களையும் அன்னையவள் எங்கள்

மல்லிகை நாயகியின் மெல்லிய கரம் பற்றி

நல்ல இந்நாளில் தில்லையின் நாயகன்

திருமணம் கொண்டதை சொல்லவும் வேண்டுமோ ?

சுந்தரன் சரிதையும் நல்லனவே தர

நாளும் நீ காண்.

 

திருமணம் முடிய நீர் தீராத (!) வைகையில்

விரும்பியே இறங்கிய வெண்புரவி அழகரும்

திரும்பியே சென்றதோர் தினமும் இந்நாளே.

 


 

வக்கீலுடன் வம்பு

வம்பிழுக்க வீகேயார் சிவன்

வக்கீலோ பீகேயார்

தம்பியும் அருணகிரியார்

தடையின்றி இங்கு

– அம்பெனப்

பொழியும் ராலியின்

புனல் கவியுமிங்கு

அழியாத தமிழ் இன்பமாம்.


 

கூற்றின் சீற்றம்

கூற்றின் கொடும்பிடியின் சீற்றம் தவிர்க்கவே

ஆற்றுப் படையானைப் போற்றிப் புகழ்தலின்

மாற்றுண்டோ மண்ணுலகில் தான்.


 

 

 

வேக வதியெனும்  வைகை இறங்கிய

நாகப் படுக்கைகொள் நாரணன் எங்களின்

தாகமதைத் தீர்ப்பான் தினம்.

 


 

அழகன்

பச்சைப் பட்டு உடுத்தி பச்சிளந் துழாய் அணி

பச்சை மாமலை யோனாம் அச்சுதனை நாளும்

அடி பணிந்தேனே !


 

 நீரின்றி அமையாது உலகு

விழாத மழை தந்த

வேதனையால் இங்கு

குழாயில் நீரும்

கொள்வதும் போனதால்

எழாது துயில் கொண்ட

இறையோனாம் அத்

துழாய் அணிவோனை

துதித்திருப்போமே !


 

 

நீரின்றி இங்கு நித்தம் யாம் தவிக்கப் பால்

நீரைக் கடலாக்கி நீண்டங்கு கிடந்த

காரிருள் தோன்றல் கண்ணன் அவன்தன்

பேரருள் வேண்டிப் பெய்யாத மழையைத்

தாரும் என்றவன் தாள் பணிந்தேனே !


 

மேகத்திற்கு தாகமுண்டு மேதினியில் சொல்வதுண்டு

ஆகட்டும் அதற்காக அத்தனை நீரையும்

ஏகமாய்ப் பருகி எமைத் தவிக்க விட்டு

காகமது கொள்ளும் கண்ணீரளவு நீர் எம்

தாகம் தணிக்கத் தருவதும் தகுமோ !

நாகம் அணிந்தோனே நம்மைக் காத்திங்கு

மேகத்தைப் பிளந்து மழை தந்தருள

வேகமாய்ப் பணிதல் வேண்டும் இவ்வேளை.


 

காதலன்

எத்தனை முறை கவி எழுதிய போதும்

பித்தனின் பெருமை போற்றும் இவரின்

சித்தம் அறியாது சிந்தை குழம்பிப் பின்

வித்தகன் உள்ளம் வியந்தே அறிந்தேன்

நர்த்தனம் ஆடும் நாயகன் இடமதில்

அர்த்த நாரியாய் அமர்ந்த அன்னையை

நித்தம் துதிக்கும் நெடியோன் ராலி

சக்தி உபாசகன் சரியே அதனால்

முற்றிய காதல் முறையிது தானே.


 

திருமால் திரும்பிய காதை

தெய்வத் திருமணம் தென்மதுரை காண

ஐவரைக் காத்த அரங்கன் வருகையால்

சைவமும் வைணவமும் சமமாய்த் தழைத்ததுவே.

 

சூடிக் கொடுத்தவள் தோள் மாலை சுமந்து

ஆடிக் களித்து வந்த அழகா நீயிங்கு

கூடிக் களிக்காது கோபமாய் செல்ல

வாடிக் கிடக்குமோ உன் தங்கை வதனம் ?

 

இரு காதை இங்குண்டு எது உண்மை ஆரறிவார் ?

மறுக்காது உன் கூற்றும் மகிழ்வோடு ஏற்றேன் நான்

ஒருக்காலது உண்மையெனில் உடன் மாலும் திருமணத்தில்

இருக்காமல் போனதேன் இந்நாளில் நீ பகர்வாய்.

 

சிலையுண்டு கோவிலில் சேர்த்து வைக்கும் கோலமதில்

இலையவனும் திருமணத்தில் இந்நாளில் காரணமும்

சொல இங்கு யாருளர் ? சொன்னால் நானறிவேன்.

 

இந்நாள் நதி நீரில்லை இருந்து விருந்துண்டு

தன்னால் இயன்ற சீர் தங்கைக் காங்கீந்து

பின்னால் தன் குடிலும் போவதே முறையன்றோ ?

சொன்னாரோ ஈசனவள் சோதரன் தனை நிறுத்தி நீ

சொன்னால் நான் கொள்வேன் சொல்வாய் என் நண்பா !

 

கல்லிலே கற்பனை வடிப்பதும் உண்டு கவி

சொல்லிலே புனைந்து சொல்வதும் உண்டு

மல்லிகை நாயகியே மறுபடியும் வந்து

சொல்லித் தீர்த்தலும் சுவையாம் நன்று.

 

கேள்வியில் பிறக்குமிங்கு கிடைக்காத ஞானமென்று

கேள்விப்பட்ட பின்பு கேட்டேன் பல கேள்வி இங்கு

தாள் பணிந்து சங்கரனைத் தான் வேண்டி நானுமிந்

நாளதனில் கேட்பேன் நல்லதோர் ஞானமிங்கு.


 

அழைப்போம் மழையை

அழையா திங்கு மழைதான் வருமோ ?

பிழை நம்மீதே விழைவோம் நாமே

குழை செவியோனை அழைத்தே இங்கு மனம்

உழைதல் நீங்கி மழைதான் பெறுவோம்.

உழைதல் – துயருறுதல்

 

 

வானம் பார்த்து வாடி இருந்து

தானாய் மழைவரத் தவித்து நின்றதைக்

– காணாது வெறும்

காற்றுடன் கலந்து காணுமத் தூறல்

மாற்றுமோ நம் துயர்தான்.


 

ஆண்டியப்பன்

இந்த இப்பிறவி தனில் பந்தமதை நானறுத்து

சிந்தையினில் தெளிவு பெற

அந்தமிலா சோதியவன் கந்தனவன் தந்தையவன்

முந்தி வரும் நந்தியுடன் சந்திரனைச் சூடியவன்

சுந்தரனும் மனமிரங்கி எந்தனையே காத்திடவே

சந்தமுடன் பாடி இவண் வந்தனமும் செய்திடுவேன்.

 

ஆண்டியப்பன் என்று தமிழ்

ஆசிரியர் அன்றிருந் தென்னைத்

தோண்டி எடுத்த தமிழ்

தோன்றும் புகழ் அவர்க் கேயாம்.

 

உண்மை இன்று உணர்ந்தேன் முக்

கண்ணன் மகன் வேலன்

– மண்ணுலகில்

என்னையும் காத்து எனக்கின்பத் தமிழ்

தன்னையே தந்தான் வாழி.


 

தாயா? தோழியா?

வரிசையில் நின்று வந்தனம் செய்ய

தரிசனம் தருவாள் தாய் காமாட்சி

கரிசனமாய் எனைக் கருவில் சுமந்து

அறுசுவை உணவும் அமுதென ஊட்டி

விரி சடையோனின் விந்தை விளக்கி இம்மெய்

பரிசென அளித்துப் படைத்த என் தாயும்

சரிசமம் என்னும் சத்தியம் உணர்ந்தேன்.

 

தாயே நல் தோழியாய் தரணியில் வந்தமைய

நாயேன் இவன் செய்த நற்றவம் வேறுண்டோ ?


 

இம்மையில் வெம்மை

 

வெம்மை தாங்காது கங்கை அம்மை தலை வைத்த

உம்மைப் பணிவேன் உய்யவே

– இம்மையில் யாம்

வருந்தும் நிலை மாற்றி நல் வாழ்விங்கு அருள்வாய்

அருந்தவே நல்நீர் தந்து.


 

ஒட்டும் கவி

ஒட்டும் மனதில் உன்கவியும் நன்கு

ஒட்டா உறவு கண்டு.


 

விடமுண்ட கண்டன்

எடுத்தான் விடமதைக் குடித்தான் உமையவள்

தடுத்தாள் கனியதைக் கொடுத்தான் கந்தனும்

விடுத்தான் கயிலை தொடுத்தான் காமன் கணை

முடித்தான் அவன் கதை அரவு படுத்தான் தங்கைக்கோ

கொடுத்தான் தன் பாதி பின் உடுத்தான் புலித்தோல் காண்.


 

தொட்டுக்கொள்ள

 

இட்டிலிக்குச் சட்டினியாய் என்கவி தந்திங்கு

மட்டிலா மகிழ்வுற்றேன் நான்.


 

திருவிளையாடல்

கட்டி அணைக்க பாலன் காலனை உதைத்தான் கிழவி

பிட்டு அளிக்கப் பிரம்படி பட்டான் கங்கை

கொட்டும் வேகம் குறுஞ்சடை அடைத்தான் தன்னைத்

திட்டிய மாமனை திருந்தச் செய்தான்

வட்ட வான்மதியை வளைத்துத் தலை வைத்தான்

நட்டதோர் கல்லில் நாதனாய் நின்றான்

அட்டமா சித்தியும் அருளுமென் ஈசன்.


 

பொருளில்லா வாழ்க்கை

 

வானமெனும் கூரையின் கீழ் வாழும் மானிடரும்

பேணுகின்றார் பூமியிலே பேதைமையாய் நாலு இடம்

ஆனமுதல் பூமியிலே அதிகம் பொருளீட்டி

போனதிசை தெரியாது போவதிவர் அறியார்

நாணமுறச் செய்யுமன்றோ நல்மனிதர் இவர் செய்கை ?


 

மாதம் மும்மாரி

மாரியும் வந்துதான் மலர்ந்தாள் மலைக் கோட்டையில்

ஊரிலே மாரியே உன்னத தெய்வமே முளைப்

பாரி கொண்டாடிடும் பாங்கினைக் கண்டவள்

ஏமாறி இம்மானிடர் ஏங்குதல் இன்றி மும்

மாரியாய்ப் பெய்துமே மகிழ்வினைத் தருவளே.


 

ஆறுமுகம்

சூரமுகம் தொலைத்த

ஆறுமுகனைக் காண

ஏறுமுகம் வாழ்விலென

கூறும் அகம் இன்று.


 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s