Mar 2017 – SKC

 

உடுக்கை ஒலி

உடுக்கை ஒலியே ஓமென் றுணர்நது என்

இடுக்கண் களைய இறையை எண்ணி மனம்

ஒடுக்கியே நானும் ஓய்ந்தேன் சிலகாலம் கவி

தொடுக்கும் உன் வேகம் தொடர இவ்வேளை அரவில்

படுக்கும் பரந்தாமன் பதமலர் பணிவேனே!


 

 

இடுக்கண் களைந்த உடுக்கை

 

இடுக்கண் வருங்கால் இறையுணர்வு கொண்டு

உடுக்கை ஒலி கேட்டு உய்வோரும் உண்டு அருள்

– கொடுக்கும்

திட்டை நாதனை தேடிப் பின் தினம் தொழுதேன் கண்

கெட்ட பின் கதிர் தொழும் நான்.


 

 

நலம் தரும் பாதுகை

 

நடமாடும் தெய்வமதன் நலம் தரும் பாதுகையை

படம் கொள் அரவின் படுக்கைதனில் கண்டு

இடமிது காலடியோ என்றே நான் வினவ

இடமாது கொண்ட ஈசன் நகைத்தான்

திடமாய் நீ கொள்வாய் தீயவை அகற்றி

புடமாக்கி இங்கு புண்ணியம் நல்கும்

இடமிது காலடியே னஎன்றான் எம் ஈசன்.

தேனம்பாக்கத்தில் பெரியவா பாதுகா தரிசனம்).


 

 

காலத்தை வென்றவன்

 

கூற்று வந்து இங்கு கொண்டு ஏகும் நாளை

மாற்றல் எளிதாமே

– போற்றி

சிற்றம் பலத்தானை சிந்தையில் நினைந்து

சற்றும் மறவா திரு.


 

காத்திருந்த காலன்

 

ஆத்திரமே கொள்ளாது அறிவதனைக் கொண்டு

காத்திருந்த காலனையும் ஏய்த்தவர் தம் காதையினை உன்

பாத்திறனால் நீ பகர பரவசமும் அடைந்தேன் சிவ

தோத்திரமும் செய்வோரை தொடுவானோ அக்காலன் ?


 

சிவம்

 

அன்பே சிவமா ? சிவமே அன்பா ?

நண்பா சொல்வாய் நானும் கொள்வேன் அரன்

அன்பாய்க் கொண்ட அன்னை உமையும்

தன்பால் விழைந்து தவிப்போர்க் அருள்வாள்

அன்பில்லாளோ ? அடியேன் அறியேன்

அன்பாய்ச் சிவமும் அருள்வது உண்டு

சிவமே அன்பாய் ஆவது முண்டோ ?

வம்பே செய்தேன் வழி தெரியாமல்

நண்பா ! நீயும் நன்றே பகர்வாய்.


 

அட்சய பாத்திரம்

 

அட்சய பாத்திரம் அன்னையின் அருளே பார

பட்சமே இன்றி பாரினில் காக்கும்

– தட்சனின்

மகளைப் பணிவோம் மானுடம் உய்ய நெஞ்

சகத்தில் தினமும் நாம்.

 


 

 

கண்டவர் விண்டிலர்

 

கண்டதைத் தின்று கழுத்தில் இறங்க அவன்

உண்டதை நிறுத்தி உயிர் காத்த அன்னையை

விண்டவர் உண்டோ வியந்திங்கு நானுமச்

சண்டியின் பாதம் சரண் அடைந்தேனே.


 

 

ஒளிவதற்கு இடமில்லை

 

தலையில் ஒருத்தியைத் தனியே மறைத்து

சிலையாய் அமர்ந்த சிவனவன் தன்னை

மலை மாமகளும் மன்னித் தருள

அலைகடல் துயில் அரங்கன் தங்கை

இலை இவள் போல ஈங்கோர் தெய்வம் என

மலையோன் மகளை மனதில் பணிந்தேன்.


 

 

அரி யாதவன் வாயில் மண்

 

அரி யாதவன் வாயை ஆவெனத் திறக்க

தெரியா உலகைத் தெரிந்தாள் அன்னை

அரியும் சிவனும் அறிவேன் ஒன்றே

சரி அதை விடு சங்கரனும் உமையும்

சரி பாதி அன்றோ சரியாய் சொன்னால்

சங்கரி அவளும் தெரிவாள் அன்பாய்

தெளிந்தேன் தவறோ?


 

 

என்னைத் தோண்டி இறையைக் கண்டேன்

 

கண்ணைத் தோண்டி உன்னைத் தொழுதான்

கண்ணப்பன் என்றோர் வேடன் விண்ணைத் தோண்டி

வேதனை யுற்றான் விடை தெரியா அயனும் அன்றே

மண்ணைத் தோண்டி இரையைத் தேடும்

மண்ணின் புழுவாய் நானும் என்னைத் தோண்டி

இறையை அறியேன் இன்னல் களைவாய் எம்பிரானே !


 

 

வீடு பேறு

 

வந்த வீடு சொந்த மின்றி

வெந்த பின்பு இந்த உயிர்

எந்த வீடு சொந்த மென்று

முந்தை வினை பந்தம் கொண்டு

அந்த மின்றி சிந்தை செய

இந்த நிலை தந்த குகா !

இந்த வினை வந்தழிக்க

கந்தனே நீ வந்திடுவாய்

எந்தனையே தந்திடுவேன்

உந்த னருள் தந்திடுவாய் !


 

 

ஆசை அறுமின்

 

ஈசனோ டாயினும் ஆசை அறுமின்

என்றதோர் காலம் போய் ஆசைப்படு அத்தனையும்

அதுவே வாழ்வென்று அறிவித்த நிலை கண்டு

தேசமே போனதை திகம்பரனே அறிவாய்

நேசமாய் நின்னையே நிதமும் நான் தொழுது

தாசனாய் ஆவதன்றி தரணியில் வேறறியேன் என்

பாசமும் பந்தமும் படைப்பும் தானறுத்து

ஈசனே ! எனக்கு என்றும் நீ அருள்வாய் !


 

 

சந்ததம் பந்தத் தொடராலே

 

அந்தம் இன்றி சந்தக் கவி வந்து விழ உந்தல் அவன்

தந்த முகன் சொந்த மவன் சுந்தரன் என் சிந்தனையில்

சந்தமது தந்த குகன் எந்த நிலை வந்திடினும்

கந்தனை நான் நிந்தனையாய் நொந்த துண்டோ ? முந்தி இது

எந்தன் நிலை உந்தன் கவி தந்த பொருள் விந்தை யிது !

விந்தை யிதாம்.


 

 

உடன் பிறப்பு

 

உடன் பிறப்பே ! வருந்தாதே ! உன்னை நானறிவேன்

கடன் பட்டேன் உனக்கிங்கு கவியொன்று முளைத்ததுவே

வாழ்வின்

தடம் பட்ட வேதனையில் தாளாது நானெழுத என்னை

புடமிட்ட புண்ணியனே ! போற்றினேன் நீ வாழி !


 

 

படித்தாலே இனிக்கும்

 

இனித்தது உன் கவிதை என்னருமை நண்பா !

பனித்தலையோன் புகழ் பாட பாரினில் ராலி கண்டு

தணிக்க தமிழ் தாகம் தடுமாறி நானெழுத

பணித்தான் அக்குமரன் பாவமொன் றறியேன் நான்.


 

 

மயில் வாகனம்

 

சுப்பிர மணியன் இவன் சொல்வதை நம்பாதீர்

முப்புரம் எரித்தவனே முயன்றும் தோற்க பழநி

– தப்பிய

இளையவன் மயிலுக்கு இணையாமோ இங்கு

எலியெனும் மூஞ்சுறு தான்.


 

 

அன்னை பிறந்தாள்

 

அன்பே சிவமென்ற அருமை நண்பா !

உன்பால் இங்கு உளம் கனிந்து வந்து

அன்பாய் பிறந்தாள் அன்னை காமாக்ஷி

 

 

தந்தாய் நீயெமக்கு தடையிலா மகிழ்ச்சி

வந்தாள் எம்அன்னை வஸந்த நவராத்திரி.


 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s