Jun 2017 – Suresh

வாலைச் சுட்டதீயாலொரு

வம்சம் அழிந்ததுகரி

காலைச் சுட்டதீயாலொரு

கல்லணை பிறந்ததுபாவை

மாலைசுட்ட தீயாய்

அரங்கனில் கலந்ததின்று

சேலை சுட்டதீயில்

சென்னை தீய்ந்தது.

 

தீயது பற்றித்

தீயது விலகுமோ?

தீயது பற்றித்

தீயது அழியுமாம்

தீயது பற்றித்

திருவளர் மேனி

தீயுமுன் பற்றுக

திருமலர்த் திருவடி.

 

நீறுதான் பூத்ததோ

நீருந்தான் போதுமோ

நீரதே உணவென்றநிலை

நேருமோ நெசவாளிக்கு

நீயிதை விதியென்பாயோ

விளம்பிடு ஹேவிளம்பி

 

தணலெறி ஞாயிறு

கண்ணுத லாகி

தண்ணொளி இருவிழி

திங்களு மாகி

சிறுநகை செவ்வாய்

இதழ்க்கடை தேக்கி

பரவழி விழைவார்க்

கற்புத னாகி

குரவர்க ளருள்கவி

யாழனு மாகி

சிரமெனும் வெள்ளிப்

பனித்தலை உடையவன்

சிரமங்கள் தருசனி

விலக்கிட வருக

 

பிச்சை பிழையல்ல

பேணுமொரு தர்மமாம்கேள்

பரமனே யாயினும்

பாமர னாயினும்

சாத்திரம் உரைத்திடும்

ஆத்திரம் தவிர்த்திடு

பாத்திரம் அறிந்திடு

பிச்சை யெனப்பெற்றான்

ஒருசிறுவன் சிறுநெல்லி

பிச்சை யெனக்கேட்டான்

அரசகுரு பெருவிரலை

கர்ணன் கவச

குண்டல மிழந்ததும்

கண்ணனின் மாயையால்

பண்ணிய வெல்லாப்

புண்ணியம் ஈந்துபின்

இன்னுயிர் இழந்ததும்

மகுட மிழந்தேராமன்

மரவுரி தரித்ததும்

கோட்டினைத் தாண்டிசீதை

கேட்டினை அடைந்ததும்

மாவலியின் சிரமதனில்

மாலவனின் காலடியென

நீளுமிவ் வரலாறு

என்றாலும் நேரிழையே

இட்டார் பெரியோராம்

இடாதார் இழிகுலமாம்

இட்டுவிடு இருகரமும்

ஏந்தியொரு ஏழைவர

கிட்டுவது என்றுனக்கும்

பொன்நெல்லி யாகட்டும்.

 

இருதார மவனுக்குண்டு

இருபிள்ளை யவையாண்பிள்ளை

இருப்பது குளுகுளு இமயம்

இருள் இல்லை

தலையில் மதியன்

பெரு நெருப்

புடையான் கண்ணில்

மறுபேச்சு சொல்வாரில்லை

இன்னும் என்ன

குறைதான் கண்டீர்

இறைவனாம் சிவனின்

வாழ்வில்?

 

இரண்டொரு வார்த்தைசொல்லி

இருமுக மத்தளமானேன்

இனியுமொரு முறைதான்சிவனை

குறைகூறத் துணிவேனோசொல்

 

சதியினால் சரிந்திடாரே

சனியினால் கலங்கிடாரே

விதியினை மாற்றும்திருகண

பதிகாதை அறியாயோநீ?

 

தென்னாட்டுடைய சிவனையெவரும்

பண்ணாலடித்தால் சினந்தேயெழுவார்

 

ஒரு பழம் காட்டித்தானே

இருவரை அனுப்பிவிட்டு

புருவவில் நல்லாளோடு

இருந்திட விழைந்தானெந்தை

 

பாதியை யுமைக் களித்தான் தனது

மீதியை ஈந்தான் பரந்தா மனுக்கு

ஆதியு மந்தமு மீதியுமிலா னெனினும்

நாதியவனேயாவான் நமக்கென்றும்

சோதியுருவான சிவன்

 

வீதியில் ஓடேந்தி இரந்து உண்டானவன்

வாதினில் தோற்று கீரனுக் கருதினான்

ஆதிசேடனின் ஆயிரநாவினால்

ஓதியுரைக்க வொண்ணா

சோதியுருவான சிவன்

 

 

தோரண மாயிரம் சூடிய கூடலில்

வாரண மாயிரம் வரிசையில் வணங்கிட

பூரண பொற்குடம் போலவாம் மங்கை

நாரணன் தங்கை நற்கரம் பற்றினன்.

 

ஆயிர மாயிரம் பேரிகை முழங்கிட

பாயிர மாயிரம் அடியவர் பாடிட

வேயுறு தோளினள் சாய்ந்திடு மார்பினன்

பெய்திட பூமழை தீவலம் வந்தனன்

 

நாரணன் கொண்டிட மீதியைத் தந்தவன்

காரண காரியம் ஆனவன் பூரணன்

நாணமாம் அணிபுனை நங்கைமீ னாளெனும்

ஆரணங் கவளொடு மாலைகள் மாற்றினான்

 

தாயவள் திருக்கரம் மாயவன் தந்திட

தாயுமா னவனதைத் தன்கரம் ஏந்திட

தாயவள் திருமணம் சேயவர் காண்பரோ

நாயினேன் கண்டிலேன் நானிலம் கண்டதை.

 

மத்தளம் ஒலித்திட மலர்மழை பொழிந்திட

நித்திலம் பிழைத்திடு பாண்டியன் மகளவள்

கைத்தலம் பற்றிநாண் கழுத்தினில் சூட்டியே

வைத்தனன் குங்குமம் வையகம் வாழ்த்திட

 

அஞ்சன மையிடு

அஞ்சுக விழிமலர்

தஞ்சமென் றுறைந்தவள்

நெஞ்சகம் நிறைந்தவன்

பிஞ்சொரு பாலகன்

அஞ்சியே கெஞ்சிட

வெஞ்சினம் கொண்டொரு

கூற்றினை அழித்தவன்

மஞ்சன தரிசனம்

மனமதில் நிறைந்திட

எஞ்சிய நாளிதை

எண்ணியே கழிந்திட

அஞ்செழுத் தையேநின்

ஆடலும் கண்டிட

கொஞ்சமே னும்கருணை

கொண்டெம்மை காத்தருள்வாய்

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s