April 2017 – SKC

 

இருந்தேன் நுகர்ந்தேன்

 

இருந்தேன் இங்கு மறந்தே இனிய உன் கவிதை

நுகர்ந்தேன் இது இனிய விருந்தென மகிழ்ந்தேன்

இனி வேறு கவி

அருந்தேன் நானிங்கு பொருந்தேன் என எழுதல்

மறந்தேன் வேறென் செய்வேன் ?


 

 

சிவசாமி அருள்

 

மாமி ஊரில் இல்லையென மகிழ்ந்தே நீயும் சிவ

சாமியை நாளுமிங்கு சிக்கெனப் பிடித்தனை

ஆமிது உண்மையாம் ஆறாய் உன் கவிதை

பூமியில் பெருகியே பொங்கிடும் வேகமும்

நாமிங்கு காணலும் குரு நாதனின் அருளதாம்.


 

 

சோதனை மேல் சோதனை

 

பாதுகை பரதன் பறிக்க மாதினை மானும் மயக்க அச்

சூதினில் உழன்று நீயும் காதலில் தவித்திருக்க

சோதனை கண்ட பின்னும் சோர்வின்றி

சேதுவை அமைத்து இந்த வேதனை தந்த வாழ்வை

வேண்டியதேனோ சொல்வாய் ?


 

கேட்டால் கிடைக்கும்

 

கேட்கத் தந்தான் பாதுகையை அசுரன்

கேட்டே கொடுத்தான் அடைக்கலமே துகில்

கேட்டாள் கொடுத்தான் கண்ணன் தான்

கேட்டதும் தந்தான் கீதை தான்

கேட்டுப் பெறுவது ஞானம் தான்

கேட்பதும் அந்தக் குருவிடம் தான்

கேட்டே இவர்கள் பெற்ற கதை

கேளாய் மனிதா ! நீயுந்தான்

நாட்டு நடப்பை நீயறிந்து

கேட்டுப் பெறுவாய் மெய்யருளே

கேட்டே கிடைக்கும் காலமிதாம்.

 


 

 

கேளாய் மகனே

 

கேட்டுப் பெற்றனர் அடியாரும்

கேளாதிருந்தனர் ஞானியரும் இங்கு

கேட்டும் அருளே கிட்டாதெனின்

கேளாமல் நான் என் செய்வேன் ?


 

 

சொல்லால் அடியுறலால்

 

சொல்லால் அருச்சித்து சுமைகூட்டும் பெண்ணே

இல்லாள் எனப் படுபவள்.

 

அகமுடையாள் அருச்சனையும்

சகத்தில் இல்லா வாழ்வுமுண்டோ ?


 

ஆட்டுவித்தால் ஆரொருவர்

 

அன்னை ஆட்டுவிக்க ஆடிய கால் தாழ்த்தாமல்

இன்னுமிங்கு தூக்கியதும் இமையவள்தன் கட்டளையோ ?

உன்னை நான் பாடி உருகியே நினைத்து

பின்னையுன் நிலை கண்டு பெண்ணவளைப் பணிந்தேன்

அன்னையே ! நீ மனமிரங்கி ஆடிய பாதமதை

அண்ணலும் தாழ்த்த அன்புடன் பணித்திடுவாய் !


 

 

இடது பதம் தூக்கி ஆடும்

 

இல்லாளோ உடையவனோ எல்லோரும் ஒன்று இங்கு

எல்லாப் பொறுப்பிலும் இருவரும் சமமெனவே

பொல்லாத பரமனவன் சொல்லாமல் கால் தூக்க

தள்ளாத வயதில் எல்லாப் பணியும்

இல்லாளும் தந்து விட எல்லாம் அவனரு ளெனவே

கல்லாய் அமர்ந்தவனை இல்லாது இருந்தவனை

சொல்லால் துதித்து ஆடல் வல்லானை வணங்கி நின்றேன்.

 


 

 

தள்ளாதே

 

உள்ளது நீவிர் உரைத்தீர் எதையும்

தள்ளாத வயதுமிது தானே.

 

தள்ளாத வயதிலும் தசமுகனை எதிர்த்த

புள்ளும் உண்டங்கு போற்றும் ராம காதையில் வாலைத்

தள்ளாத வீமனை எள்ளி நகையாடிய

பொல்லாத குரங்குண்டு பாண்டவர் சரிதையில் புறந்

தள்ளாது வள்ளியும் தழுவினள் விருத்தனை இவை

எல்லாமிங் கெமக்கு தெள்ளறிவு தந்திட

தள்ளுதல் ஆகுமோ தரணியில் முதுமையை.


 

தள்ளி வைத்த தேர்தலும் ஆளைத் தள்ளுமிந்த வெம்மையும்

கதவில்

“தள்ளு” என்றே எழுதித் தான் அழைக்கும் அலுவலரும்

தள்ளச் சொல்லி நம்மை தவிக்க விடும் பேருந்தும்

தள்ளுவதில் பலவகை தள்ளும் இவை யாவும்

தள்ளி நின்றே காண தரும் நமக்கே உவகை.


 

தள்ளு தமிழ்க் கவிதை

 

தள்ளாமல் உள்ளே தந்ததே போதை

கள்ளாம் உன் கவிதை அதைக்

கொள்வதன்றி வேறு சுவை

குவலயத்தில் உண்டோ ?

 

தள்ளு தள்ளு என்று தமிழ்க் கவிதை இங்கு

கொள்ளாமல் வந்து குவிந்தது கண்டு

அள்ள அள்ளக் குறையா அமுத சுரபி என்று

தள்ளு முள்ளு தாளாது திணறுதல் கண்டு

மெள்ள நீயும் முத்தாய்க் கோர்த்த கவி நன்று.


 

சொட்டும் கவிதை

 

சொட்டு மருந்தென சிறு கவிதை வரும் வேளை

கட்டவிழுமுன் கவிதை காட்டாறு ஒத்ததென

பட்டமிது தந்தார் பாரதுவே உண்மை !

தொட்ட தெல்லாம் தமிழாய்

தொடரட்டுமுன் பணி தமிழ்க்

குட்டுப் பட்டவன் நீ குமரனருளே வேறில்லை.


 

சொக்கனின் வக்கீல்

 

சொக்கனை நீ பாட சுவையென்று

வக்கீலே சொல்ல வாதமெதற்கு.

 


 

வினை எதிர் வினை

 

வெண்ணை யுண்ட அரங்கன் வெண்ணையால் அடி கொள்ள

மண்ணைத் தின்ற கண்ணன் மண்ணில் கிடந்துயிர் நீக்க

– திண்ணமிது

மெய்யெனச் சொன்னார் பெரியோர்

செய்த வினைய தெனவே.


 

பொய்யாய் பழங்கதையாய்

 

செய்தொழில் ஏதுமின்றி சேவகமே செய்து யாவும்

பொய்யெனவே வாழ்ந்து பொழுதொன்று கழியாமல்

உய்யவும் உள்ளத்து ஒருபோதும் தவறாது

அய்யன் எம் ஈசனை அகம் பணிந்தேனே !


 

கவிதை மழை

அஞ்சனை மைந்தன் செல்ல அவனுடன் நீர் கடக்க

விஞ்சிய வேகம் கொண்டு விரைந்துவீழ் மரங்கள் போல்

தமிழ்ப்

பஞ்சமும் இன்றி உந்தன் பனிமழைக் கவிதை கண்டு

மிஞ்சுதல் தவிர்த்து யான் முன்இவண் செயல் மறந்தேனே.


 

சங்கரன்

 

காலடியில் உதித்தவன் ஆலடியில் அமர்ந்தவன்

நாலடிக் குறுமுனி போலடியார் துதித்தவன் அவன்

தாளடி தேடி மால் கீழ் அடி குடைய

மேல் அடி மறைத்தவன் பிரம் பாலடி பட்டவன் அரன்

காலடி பற்றி நான் களித் திருப்பேனே.


 

வாடகைக் கூடு

 

வாடகைக்கு உடலெடுத்து வாழுமோர் வாழ்வுமிது

வீடு விட்டு வீடு மாறும் விந்தை நிறை வாழ்வு போல்

கூடு விட்டுக் கூடு பாயும் கோலமது கொண்டும் ஞானம்

தேடுதற்குத் தவியாது தினந்தினம் வாடும் மனம்

நாடுதற்கு நல்வேத நாயகன் துணையிருக்க

பீடுடைய பெம்மானை பேணுதலும் முறையன்றோ ?


 

பழுதோ பாம்போ

 

பழுதைப் பாம்பென்று பரிதவிக்கும் நிலையுண்டு

அழுகும் உடல் கண்டு அதுவும் நிலையென்று

அழுதே புலம்பும் அறியாமை கொண்டு

பழுதாய்ப் பார்த்திங்கு புறம் அகம் வேறென்று

எழும் சிந்தனை உண்டு இல்லாததும் இருப்பதென்று

முழுவதும் பிரம்மமென்று முன்னறிவாய் நீ இன்று.


 

நீயே அதுவாய்

உடையாப் பானைக்குள் ஒளியக் கண்ட வெளி

உடைந்ததும் சேரும் ஒன்றாய் அகண்ட வெளி

தடையாம் இவ்வுடலைத் தவிர்த்த பின் சீவன்

தடையறச் சேரும் நிலை தத்வமஸி எனவே

கட மாயை என்று கனிந்தார் நம் குருவும்

புடமாகி போதனையால் பொலிவுறுவோம் இவ்வேளை.


 

சதா ஜபியென் நாவே

 

ஷண்முகப் பிரியனின் சரவண பவனம்

இன்முகம் காட்டி எம்மை அழைக்க

பன்முகம் கொண்ட பதினான்கு இட்லி

என்மனம் நோகாது எமக்கீந்த ராலி

ஷண்முகன் உனக்கு சகலமும் அருள்வான்.


 

முடியா முடியும்

 

வேதியர்க்கு கூந்தலுண்டு விந்தை மாதருக்கோ சரி

பாதியாய்க் கேசம் உண்டு பாரிங்கு அதுவும் கண்டு

மேதினியில் போதுமென்று முடியிழந்தார் பலர் இன்று

ஆதி சிவன் காலமதில் அத்தனைக்கும் நேரமுண்டு

ஏதிங்கு நேரமென்று இவர் எள்ளி நகையாடக் கண்டு

பாதி உமை கொண்டவனும் பரிதவித்தான் இங்கு.

 

 

வீரமணி கண்டஞ்சி வெறுத்தனர் தங்கூந்தல்

நாரியர் இன்று காண்.


 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s