May 2017 – Rali – Venpa

என்னயிது காத்தல்

    தவிர்த்துத் தீய்க்கிறாய்

தென்னாட் டுடைய

    சிவனே.

 

காரணம் இன்றிக்

    கருணைசெய் ஈசனின்று

தூரவைத் தானோ

    கருணை?

 

ராலியின் வேண்வெண் முயற்சி #349:

ஜகமுடையான் மீனாள்

    அகமுடையான் காணும்

இகமுடையான் பொய்ச்சொல்

    அயன்தலை கிள்ளும்

நகமுடையான் ஏகனாய்

    தன்னில் திளைக்கும்

சுகமுடையான் பாதம்

    பணி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #350:

அஞ்சினாள் உன்மேனி

    பாம்பூரக் கண்டவள்

அஞ்சினாள் நீயுரித்த

    யானையைக் கண்டவள்

அஞ்சினாள் ராவணன்

    கத்திடக் கண்டவள்

அஞ்சினாள் ஆலகாலம்

    நீயுண்ணக் கண்டவள்

அஞ்சினாள் ஆசையாய்

    நீயணைக்கப் பெண்சாதி

அஞ்சினால் ஆனந்தம்

    தான்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #351:

நதியுவந்தான் தட்சன்

    வளர்த்த மகளாம்

சதியுவந்தான் தேவர்

    குலம்காக்கும் சேனா

பதியுவந்தான் கண்ணப்பன்

    வைத்த ஒருகால்

மிதியுவந்தான் நான்கு

    முகத்தால் மறைசொல்

விதியுவந்தான் மாதம்

    பிறைபதி நான்காம்

திதியுவந்தான் தேவார

    வாசக நால்வர்

துதியுவந்தான் தாருகம்

    என்னும் வனத்து

யதியுவந்தான் தானாடக்

    கேட்கும் நடன

ஜதியுவந்தான் பாதியாம்

    சீதள வெண்மை

மதியுவந்தான் பாதம்

    பணி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #352:

ஓடுமுன் பாம்புகண்டு

    பிள்ளையார் மூஞ்சூறு

ஓடுமுன் பாம்பு

    மயில்கண்டு அம்மயில்

ஓடுமுமை சிங்கமஞ்சி

    இச்சத்தம் தாங்காது

ஓடுவாய்நீ காடொன்று

    தேடி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #353:

உயர்ந்தவன் நால்வர்

    உரைத்த பதிகம்

நயந்தவன் ஊழியின்பின்

    மீண்டும் உலகு

பயந்தவன் வெள்ளிமலை

    விட்டொரு காடு

பெயர்ந்தவன் நால்வர்

    உணரவட ஆல்கீழ்

அயர்ந்தவன் பாதம்

    பணி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #354:

பெற்றவன் ஆதியந்தம்

    அற்றவன் அன்பருக்கு

உற்றவன் சீடனாய்க்

    கற்றவன் தென்மதுரைக்

கொற்றவன் முப்புரம்

    செற்றவன் பற்றறுக்கும்

பற்றவன் பெற்றோரு

    மற்றவன் நல்விறகு

விற்றவன் பாதம்

    பணி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #355:

வம்பிழுத்தார் மாமனார்

    வம்பிழுத்தார் நாரதர்

வம்பிழுத்தான் ம‌ன்மதன்

    வம்பிழுத்தார் சுந்தரர்

வம்பிழுத்தான் ராவணன்

    இவ்வாறே நானுமுன்னை

வம்பிழுக்க நீவரம்

    தா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #356:

மூத்தவன் அண்டமெலாம்

    ‌‌பூத்தவன்‌ பூத்தபின்

காத்தவன் காத்தபின்

‌‌‌‌‌    தீர்த்தவன் தன்னையே

மீத்தவன்‌ பாடலை

    யாத்தவன் கீரனைக்

காய்த்தவன் தேவியை

  ‌ ஈர்த்தவன் காமனைப்

பார்த்தவன் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #357:

ஆறினில் ஊறினன்

    ஈறிலன் ஏறினில்

ஏறினன் பெண்ணொரு

    கூறினன் காமனைச்

சீறினன் பெண்கண்டு

    ஆறினன் ஓட்டினில்

சோறினன் தீத்தூணாய்

    மாறினன் பொய்த்தலை

கீறினன் ஆலின்கீழ்

    கூறிலன் தேவியருட்

பேறினன் தானின்றி

    வேறிலன் வெண்சாம்பர்

நீறினன் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #358:

இறந்திடுவோம் என்றுதேவர்

    அஞ்சநஞ்சு உண்டாய்

சிறந்ததாம் இத்தியாகம்

    எண்ணவே தேவர்

மறந்து பறந்தனர்

    தட்சனின் வேள்வி

பிறந்தது நன்றி

    மறத்தல்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #359:

அரவினன் கண்ணன்

    உறவினன் தூங்கா

இரவினன் ஏகமாம்

    மெய்யென எங்கும்

பரவினன் ஏகமாம்

    மெய்யொடு மாயை

விரவினன் தேவர்

    புரவலன் வேத

மரபினன் பாதம்

    பணி.

 

தூறலும் சாரலும் கொஞ்சம் மரபு

மீறலும் சார்தலும் செய்தே கவிதை

தீரலின்றிப் பார்த்திடல் செய்வீர்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #360:

மழுவினன் பாலன்

    குளக்கரை மீது

அழுதிட பால்தர

    ஓடினன் பாவம்

கழுவிடும் கங்கை

    சுமந்தவன் ஒன்றும்

பழுதிலன் வெள்ளி

    இமவான் மகளைத்

தழுவினன் கற்றபின்

    வேத வழியில்

ஒழுகிடும் மாந்தரின்

    உள்ளத்தே தன்னை

எழுதினன் ஐந்தெழுத்து

    ஓதும் அடியார்

குழுவினர் போற்றும்

    அரனே.

 

போற்றுதற்கோ தூற்றுதற்கோ

    ஆண்டவனை எண்ணுதல்

மாற்றுமே நம்வாழ்வை

    நன்றே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #361:

ஏற்றமுள்ளான் மார்க்கண்டன்

    அஞ்சிடும் கூற்றின்மேல்

சீற்றமுள்ளான் என்றுமே

    மாற்றமில்லான் சுந்தரத்

தோற்றமுள்ளான் என்றுமே

    தேற்றமுள்ளான் கொன்றைப்பூ

நாற்றமுள்ளான் பாதம்

    சரண்‌.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #362:

ஆடினான் ஊரெல்லை

    ஓடினான் தீச்சுடலைக்

காடினான் அக்காடே

    வீடினான் காலனைச்

சாடினான் பொன்மானைத்

    தேடினான் தங்கையை

நாடினான் பின்பிரிந்து

    வாடினான் ஊடல்பின்

கூடினான் காதோடு

    தோடினான் பட்டருக்காய்

பாடினான் ஆல்கீழ்வாய்

    மூடினான் கொன்றைப்பூ

சூடினான் பாதம்

    சரண்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #363:

எரித்திடும் தீகையில்

    சுற்றிலும் மேனி

எரித்திடும் தீநடுவே

    உள்ளேன் எவரும்

எரித்திடும் கோடை

    அணுகிடார் என்றே

சிரித்தல் அழகா

    உனக்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #364:

பொறுத்தவன் பாலனஞ்சும்

    ‌‌காலனின் செய்கை

தெறுத்தவன் தேவருக்காய்

    நஞ்சுண்டு கண்டம்

கறுத்தவன் பொய்ச்சொல்

    பிரமன் தலையை

அறுத்தவன் வாதாடும்

    கீரனைக் கண்ணால்

ஒறுத்தவன் அம்பெய்த

    காமன் உடலை

வறுத்தவன் தட்சனின்

    யாகசாலை செல்ல

மறுத்தவன் சம்சார

    சாகர வாழ்வை

வெறுத்தவன் நாம்தினம்

    செய்யும் கருமம்

நிறுத்தவன் நாம்பாவம்

    செய்தும் நம்மைப்

பொறுத்தவன் பாதம்

    சரண்.

(பொறுத்தவன் = சுமந்தவன்)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #365:

வேதத்தான் பல்வேறு

    வேடத்தான் ஆதார

நாதத்தான் கைலாய

    பீடத்தான் தேவார

கீதத்தான் அம்பலத்தே

    ஆடத்தான் தில்லையுள்

பாதத்தான் மாலயன்

    தேடத்தான்  தீயெனும்

பூதத்தான் பட்டருக்காய்ப்

    பாடத்தான்  ஏமனுடன்

மோதத்தான் நான்மாடக்

    கூடத்தான்  பன்னிரு

மாதத்தான் இல்லத்தார்

    போடத்தான்  கையோட்டில்

சாதத்தான் சாமவேத

    பாடத்தான்  வெள்ளிமலை

சீதத்தான் பாதம்

    பணி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #366:

பாதியில் உன்கோயில்

    நோக்கித் திரும்பினாய்

சேதியென்ன சொல்லுவாய்

    கள்ளழகா நீயுமுன்

சாதிசனம் சேரும்முன்

    சொக்கர் மதுரையில்

பாதிநீயே என்றுனது

    தங்கையை கைபிடித்தார்

ஏதிது அநியாயம்

    என்றா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #367:

ஆயிரம் ஆண்டுமுன்

    தோன்றி சிவபிரான்

கோயிலுக்குள் செல்லாதீர்

    என்றவர் சீடர்கள்

வாயிலாய்க் கள்ளழகர்

    மீனாளின் தென்மதுரைக்

கோயிலுக்குள் செல்வது

    நின்றதோ இல்லையோ

ஆயினும் கொண்டேன்நான்

    ஐயம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #368:

பொல்லார் ஒருவுண்மை

    சொல்லார் மறைநெறி

நில்லார் இரக்கமே

    இல்லார் ஒருவருமே

நல்லார் எனும்படி

    இல்லார் மனிதர்கள்

எல்லார் குணங்கண்டு

    வல்லான் சினங்கொண்டு

எல்லார் பொருட்டென்றே

    தொல்லாம் உலகினில்

எல்லார்க்கும் பொய்த்தான்

    மழை.

 

வருணா சிறிதே கருணை பொழியும்

தருணம் இதுவே பொழி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #369:

நீரான் நிலவினொரு

    கீறான் அவன்யாதும்

ஊரான் எவருக்கும்

    பேறான் மறைவிரிக்கும்

பேரான் அசுவமேதம்

    நூறான் வணங்கிடும்

சீரான் சடையிடை

    ஆறான் தனதாயுள்

தீரான் தலையோட்டில்

    சோறான் வெளிவேடம்

பாரான் அடியார்சொல்

    மீறான் ஒருபொருளும்

சாரான் மலைமகளோர்

    கூறான் மலைமேரு

தேரான் மறைநான்கின்

    சாறான் உலகுக்கே

வேரான் அரனே

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #370:

காலமானான் ஓமெனும்

    ஓலமானான் சன்னியாச

கோலமானான் பொய்மாயா

    ஜாலமானான் சீலரின்

சீலமானான் சூக்குமத்துத்

    தூலமானான் கண்டத்து

நீலமானான் சம்சார

    பாலமானான் அண்டத்து

மூலமானான் பாதம்

    பணி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #371:

ஓதல் பொருளீட்டல்

    இல்லறம் காத்தலுடன்

ஈதல் எனவே

    பெருங்கடன் செய்தற்குப்

போதவில்லை நேரம்

    எமக்கிங்கு நாள்தோறும்

நாதன்நீ மட்டும்

    இருசும்மா அண்டமெலாம்

மீதமின்றிக் காய்த்தல்

    வரை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #372:

தீயுமாகி ஆகாயம்

    நீர்நிலமும் ஆனவன்

சாயும் மரம்சாய்

    வளித்திறன் ஆனவன்

காயும் கனியும்

    அடிவேரும் ஆனவன்

தேயும் வளரும்

    நிலவொளி ஆனவன்

மாயும் பிறக்கும்

    உலகங்கள் ஆனவன்

தாயுமானான் போற்றிப்

    பணி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #373:

வகுத்தான் படைத்துப்பின்

    காத்தழிக்கும் திட்டம்

தொகுத்தான் சிவாகமம்

    நானிலம் போற்ற

பகுத்தான் அரியவுண்மை

    மாயை அறுத்து

உகுத்தான் தலையில்

    இருந்துநீர் கங்கை

மிகுத்தான் அடியார்கண்

    அன்பு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #374:

திரியாமல் பாற்கடல்

    நஞ்சுமிழ தேவர்

புரியாமல் ஓலமிட

    நீயோ உமைக்குத்

தெரியாமல் உண்ணயெண்ண

    தேவி கழுத்து

நெரியாமல் கொஞ்சம்

    பிடிக்கச் சிறிதும்

எரியாமல் உண்டாய்

    விஷம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #375:

விளைத்தவன் கங்கை

    அழைத்தவன் ஆடி

இளைத்தவன் நன்மை

    இழைத்தவன்  ஆல்கீழ்

களைத்தவன் ஓயா

    துழைத்தவன்  தன்னில்

திளைத்தவன் அண்டம்

    தழைத்தவன் மூன்றூர்

துளைத்தவன் மாயை

    நுழைத்தவன் வில்லை

வளைத்தவன் வீட்டில்

    பிழைத்தவன் தோளை

வளைத்தவன் நீறு

    குழைத்தவன்  தானே

முளைத்தவன் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #376:

நீண்டவோய்வு வேண்டி

    உடம்பில் விஷப்பாம்பு

தீண்டவைத்துப் பார்த்தாய்நீ

    ஆகாயம் மேலிருந்து

தோண்டிதோண்டி ஆகநீருன்

    மேல்விட்டும் பார்த்துவிட்டாய்

மூண்டதீயைக் கையிலேந்தி

    வைத்திருந்து பார்த்துவிட்டாய்

ஆண்டியாய்ப் பேய்க்காட்டில்

    வாழ்ந்துகூடப் பார்த்துவிட்டாய்

சீண்டும் விதியையே

    சீண்டியும் பார்த்துவிட்டாய்

தூண்டவந்த மன்மதன்

    அம்புபட்டும் பார்த்துவிட்டாய்

மாண்டிடச் செய்யும்

விஷம்குடித்தும் பார்த்துவிட்டாய்

வேண்டாத வேலை

    மறந்திடு வாயுனக்கு

ஆண்டவா என்றுமில்லை

    ஓய்வு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #377:

தேர்ந்தவன் தானாக

    நேர்ந்தவன் எண்ணங்கள்

தீர்ந்தவன் ஆலின்கீழ்

    சோர்ந்தவன் அன்பரைச்

சேர்ந்தவன் வேதங்கள்

    சார்ந்தவன் வெள்ளேறு

ஊர்ந்தவன் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #378:

கதைத்தவன் ஐந்தாம்

     சிரத்தினைக் கிள்ளிச்

சிதைத்தவன் பாலன்

    அழத்துரத்தும் சாவை

உதைத்தவன் பூக்கணை

    அம்புவிட்ட காமம்

வதைத்தவன் தட்சனின்

    வேள்வி அறிந்து

பதைத்தவன் ஈரேழு

    அண்டம் அனைத்தும்

விதைத்தவன் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #379:

சகித்தாள் சுடுகாட்டில்

    நீபோடும் ஆட்டம்

சகித்தாள் தலையோட்டில்

    நீகேட்கும் பிச்சை

சகித்தாள் தலைமேல்

    உடைந்த நிலவை

சகித்தாள் ஒருகோ

    வணமணிந்து நிற்றல்

சகித்தாள் விஷப்பாம்பு

    இப்படி எல்லாம்

சகித்தாள் ஒருநாள்

    சடைக்குள்ளே பார்த்து

தகித்தாள் ஒளித்தபெண்

    கண்டு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #380:

அட்டவன் அண்டம்

    அனைத்தும் விதைத்துப்பின்

நட்டவன் வேதமோடு

    ஆறங்கம் சொற்சட்டம்

இட்டவன் வேந்தனைச்

    சீண்டிப் பிரம்படி

பட்டவன் காமம்

    பிறக்க மலரம்பு

விட்டவன் சாம்பலாகத்

    தன்நெற்றிக் கண்திறந்து

சுட்டவன் எண்ணும்

    அடியாரின் நெஞ்சினைத்

தொட்டவன் சேவடி

    போற்றி.

(அட்டல் = அழித்தல்)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #381:

நடித்தவன் நஞ்சு

    குடித்தவன் அண்டம்

வடித்தவன் பின்னே

    கடித்தவன் பின்னே

‌முடித்தவன் சீதை

    பிடித்தவன் சிக்கித்

துடித்தவன் தோளை

    மடித்தவன் வேதம்

படித்தவன் மன்னன்

    அடித்தவன் மூன்றூர்

இடித்தவன் சேவடி

    போற்றி.

(கடித்தல் = துண்டித்தல்)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #382:

சாத்திரம் ஒன்றும்

    அறியேன் எனக்காக

மாத்திரம் காத்திடான்

    காலனென்று எண்ணுமொரு

ஆத்திரம் இல்லா

    ஜடமானேன் நல்திட

காத்திரம் பக்திதரும்

    ஈசன் கருணைக்குப்

பாத்திரம் ஆவது

    என்று.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #383:

ஏகன் எனினும நேகன் உமையொரு

பாகன் மலைமகள் மோகன் மறைசாம

ராகன் திருநீற்று தேகன் திருமுறை

தாகன் அரனடி போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #384:

ரதிரம்பை வாழுலகில்

    நான்மகிழ்ந்து வாழ்ந்தேன்

குதித்தேன் பகீரதன்

    வேண்டவே கங்கை

நதியாய்ப் பரமன்

    பரிவுடன் தாங்க

கதியிதுபோல் ஆகுமென்று

    எண்ணவில்லை இங்கே

விதிமுடிந்தோர் மேனி

    சுமந்து அவர்க்குத்

திதிதருவோர் பாவம்

    கழிப்போர் குளிக்கும்

நதியானேன் போதாக்

    குறைக்கு மலைவாழ்

சதிக்கென்மேல் கோபமாம்

    என்னதான் செய்தேன்

மதியணிவாய் யார்க்கும்

    எனக்கும் இறைநீ

விதியோ  விளையாட்டோ

    சொல்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #385:

சடையுடையான் யார்க்கும்

    அடையுடையான் பொன்னார்

இடையுடையான் ஒற்றை

    உடையுடையான் வைரக்

கடையுடையான் கொற்றக்

    குடையுடையான் தீராக்

கொடையுடையான் மந்த

    நடையுடையான் அண்டத்

தடையுடையான் சங்கத்

    தொடையுடையான் வீர

நடையுடையான் வெல்லும்

    படையுடையான் ஓட்டில்

மடையுடையான் கேள்வி

    விடையுடையான் வெள்ளை

விடையுடையான் சேவடி

    போற்றி.

(மடை = சோறு; தொடை = பாடல்; அடை = அடைக்கலம்)

 

 

ஒட்டும் உதடுள்ளம்

    பெண்டாட்டி என்கையில்

ஒட்டுமே பிள்ளைபெண்

    என்றுநாம் சொல்கையில்

ஒட்டுமே பேரனென்

    பேத்தியென்று சொல்கையில்

ஒட்டா துறவு

    எனில்.

 

பெண்டாட்டி என்கையில் என்பவர்‌‌ ஈரேழு

அண்டத்தில் யாருமே இல்லை.

 

பெண்டாட்டி என்கையில் என்றவர் பொய்யுரைப்பார்

வண்டவாளம் பின்னே தெரியும்.

 

பெண்டாட்டி என்கையில் என்றவள் முன்னுரைப்பர்

கண்டால் கலிதீரும் என்பேன்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #385:

இறையனார் வேத

    அறையனார் கோயில்

உறையனார் கண்டம்

    கறையனார் சென்னி

குறையனார் தேட

    மறையனார் நந்தன்

பறையனார் உள்ளச்

    சிறையனார் கொல்லும்

துறையனார் கொன்றை

    நறையனார் எங்கும்

நிறையனார் சென்னிப்

    பிறையனார் தீராப்

பொறையனார் ஞான

    மறையனார் பாடும்

முறையனார் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #386:

அன்று விடமுண்டு

    தேவரைக் காத்திடவே

நன்றிகொண்டு தேவரும்நீ

    சொல்வதெல்லாம் செய்திடுவார்

என்றெல்லாம் கேட்பதைக்

    கண்மூடி நம்பினோம்

நின்று வறுக்கிறது

    வெய்யில் பெருமானே

இன்றே மழைபெய்யச்

    சொல்.

 

இன்று மழைபெய்யச்

    சொன்னால் உடனேநீ

அன்று மழைநிறுத்தச்

    சொன்னது நீதானே

என்றும் மழைநிறுத்தச்

    சொன்னால் உடனேநீ

அன்று மழைபெய்யச்

    சொன்னது நீதானே

என்று படுத்தாதே

    நீயீசா வேகிறது

இன்றே மழைபெய்யச்

    சொல்.

 

தேடலும் சேர்த்தலும் செய்வார் அறிகில்லார்

கூட வராது பணம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #387:

திருவுடையான் கொன்றை

    மருவுடையான் நான்கு

தெருவுடையான் கல்லால்

    தருவுடையான் பிள்ளை

குருவுடையான் வேதக்

    கருவுடையான் அல்குல்

ஒருவுடையான் காணா

    உருவுடையான் காணும்

அருவுடையான் சேவடி

    போற்றி.

(அரு = மாயை)

 

புரிந்தவன் தானாய்

    விரிந்தவன் வீட்டைப்

பிரிந்தவன் காட்டில்

    திரிந்தவன் மென்னி

நெரிந்தவன் வேதம்

    தெரிந்தவன் அன்பைச்

சொரிந்தவன் கண்ணால்

    எரிந்தவன் கண்ணே

பரிந்தவன் கண்டம்

    கரிந்தவன் சென்னி

அரிந்தவன் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #389:

அத்தன் பிறப்பறுக்கும்

    முத்தன் களித்தாடும்

மத்தன் பழையதாம்

    புத்தன் புரிபடா

பித்தன் மலைமகள்

    பத்தன் முடிவிலா

நித்தன் அழுக்கிலா

    சுத்தன் தலையாய

சித்தன் விளையாடும்

    எத்தன் உலகிற்கோர்

வித்தன் அரனடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #390:

தகப்பன் தலைகிள்ளிப்

    பின்மகற்கு ஆல்கீழ்

மிகவரிதாம் ஞானம்

    கொடுத்தாய் விரோதி

தகப்பனின் யாகம்

    கலைத்து அவன்பெண்

அகமகிழ்க் காதலன்

    ஆனாய் விசாரன்

தகப்பனின் கால்களை

    வெட்ட மகிழ்ந்து

மிகவரிதாம் சண்டீசப்

    பேறு கொடுத்தாய்

தகப்பனும் தாயுமற்றாய்

    அன்பரைப் பெற்ற

தகப்பர்கள் மேலென்ன

    கோபம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #391:

பாட்டுடையான் செந்தமிழ்

    ஏட்டுடையான் கையிலோர்

ஓட்டுடையான் பிச்சையாம்

    ஊட்டுடையான் தீச்சுடலைக்

காட்டுடையான் பேய்களின்

    கூட்டுடையான் பெண்கவர்ந்த

கேட்டுடையான் வீழ்ந்திறந்த

    தீட்டுடையான் போற்றிடும்

மேட்டுடையான் தன்னடிமைச்

    சீட்டுடையான் தென்பாண்டி

நாட்டுடையான் பிட்டுண்ணத்

    தேட்டுடையான் கைலாய

வீட்டுடையான் சேவடி

    போற்றி.

(மேட்டு = மேன்மை, தேட்டு = விருப்பம்)

 

 

ராலியின் வேண்வெண் முயற்சி #392:

விண்கொண்டான் ஐந்தெனும்

    எண்கொண்டான் நெற்றியில்

கண்கொண்டான் பார்வையில்

    தண்கொண்டான் மாறாத

தெண்கொண்டான் ஆயிரம்

    புண்கொண்டான் இல்லத்துப்

பெண்கொண்டான் மூன்றடி

    மண்கொண்டான் போற்றிடும்

பண்கொண்டான் சேவடி

    போற்றி.

(தெண் = தெளிவு)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #393:

ஆணுமாய்ப் பெண்ணுமாய்

    அண்டத்தே பூத்தவன்

பூணும்மான் பாம்பு

    மழுவும் அணிசெய்ய

நாணும் மலைமகள்

    பக்கம் இருந்திட

காணும் உலகமும்

    காணா உலகமும்

பேணும் தொழிலே

    புரிவான் சடையுறை

கோணும் பிறையான்

    துணை.

 

காபி போற்றுதும்:

கோபியர் உன்னிடம் கொண்டகாதல் நானிங்கு

காபியிடம் கொண்டேன் கிருஷ்ணா.

 

மாரிமாரி என்றால் வருமோ மழைமக்கள்

மாறியறம் செய்யா விடில்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #394:

பள்ளிகொண்டான் நாபியில்

    பூத்த அயன்தலை

கிள்ளிகொண்டான் கூவிவிற்க

    வேண்டித் தலைமீது

சுள்ளிகொண்டான் தேன்தினை

    சேர்க்கும் குறமகள்

வள்ளிகொண்டான் போற்றும்

    இமயப் பனிமலை

வெள்ளிகொண்டான் அஞ்சேல்

    எனும்தன் கரமதில்

கொள்ளிகொண்டான் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #395:

ஆதியவன் ஊழியில்

    மீதியவன் வேதங்கள்

ஓதியவன் ஆதிரை

    தேதியவன் மாமனார்

மோதியவன் எல்லோர்க்கும்

    நாதியவன் நாவலூர்

வாதியவன் முப்புரம்

    ஊதியவன் தீச்சுடர்ச்

சோதியவன் தெய்வமாம்

    சாதியவன் வெண்ணீற்று

பூதியவன் மெய்சேர்க்கும்

    வீதியவன் நேர்மாறா

நீதியவன் வேதத்துள்

    சேதியவன் மங்கையோர்

பாதியவன் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #396:

உபதேசம் செய்வாளுன்

    அப்பனுக்கு அம்மை

உபதேசம் செய்வாருன்

    அம்மைக்கு அப்பன்

உபதேசம் செய்வாருன்

    தம்பிக்குத் தந்தை

உபதேசம் செய்வானுன்

    தந்தைக்குத் தம்பி

உபதேசம் வேண்டிராப்

    பூரணன்நீ அன்றோ

உபதேசம் உன்னிடம்

    வாங்கநான் உள்ளேன்

உபதேசம் செய்வாய்

    கணேசா.

(கல்லால்கீழ் சுவாமியிடம் உபதேசம் பெற்ற சனத்குமாரர் பின்னர் குமரனாய் அவதரித்தார்)

 

அறிவாய்நான் எல்லோருக்

    குள்ளுமுள்ளேன் ஆக

சிறியர்யார் சொல்பெரியர்

    யார்?

– பகவான்‌ கிருஷ்ணர் (பாகவதம்)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #397:

சாகையில் உன்னெண்ணம்

    மோக்ஷம் தருமென்றாய்

நோகையில் உன்னைநான்

    சாடி வழக்கமானால்

போகையில் அஞ்சி

    அலறுதல் தான்நடக்கும்

சாகையில் உன்னெண்ணம்

    கொள்ளல் முடியாது

ஆகையால் வேறுவழி

    சொல்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #398:

வென்றவன் வேதமாம்

    குன்றவன் வேழத்தைக்

கொன்றவன் ஊரெல்லை

    சென்றவன் சீர்தில்லை

மன்றவன் முப்புரம்

    பொன்றவன் பிட்டுவாயில்

மென்றவன் மெய்ப்பொருள்

    ஒன்றவன் தீச்சுடராய்

நின்றவன் நஞ்சன்று

    தின்றவன் காத்திட்டான்

அன்றவன் காத்திடுவான்

   இன்றவன் அன்பேநான்

என்றவன் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #399:

நஞ்சுக்கோர் மாற்றுவேறு

    நஞ்சென்பார் கேட்டிலையோ

நெஞ்சின்மேல் தேக்கினாய்

    நஞ்சன்று இன்றுமுண்டு

நெஞ்சில்நான் தேக்கினேன்

    வேறுநஞ்சு கொஞ்சமுன்

நஞ்சுகொல்லக் கொள்ளுவாய்

    ஈசா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #400:

காணலாம் தாழம்பூ

    ஆறுகங்கை உன்முடி

காணலாம் மார்க்கண்டன்

    நன்றாக உன்பதம்

காணவிடாய் மைத்துனன்

    மாதவன் உன்பதம்

காணவிடாய் மாப்பிள்ளை

    நான்முகன் உன்முடி

காணவிட்டால் என்ன

    உனக்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #401:

(கொஞ்சம்‌ உள்ளூர் சுவாமியை கவனிப்போம்)

வங்கக் கடலோரம்

    நங்கநல்லூர்க் கோயிலில்

அங்கிங்கு என்னாது

    எங்கும் உறைந்தருளி

கங்கை மதியணிந்து

    மங்களம் தந்திடும்

மங்கையோர் பாகன்

    துணை.

(அர்த்தநாரீசுவரர் கோயில்)

 

 

ராலியின் வேண்வெண் முயற்சி #402:

நர்த்தனம் நள்ளிரவு

    ஆடுகின்ற ஆதிமுதற்

கர்த்தன் பதினான்கு

    லோக நடுவினில்

மர்த்திய மண்ணிலோர்

    புண்ணிய நங்கநல்லூர்

வர்த்தனை பெற்றோங்கக்

    கோயில் உறைந்தருள்

அர்த்தநாரி ஈசுவரன்

    போற்றி.

( மர்த்திய‌ம் = பூமி, வர்த்தனை = செல்வம், வளர்ச்சி)

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s