Apr 2017 – Rali – Venpa

ராலியின் வேண்வெண் முயற்சி #306:

சோதியான் நல்லோரை

    சோதியான் பார்வதி

பாதியான் ஆதியந்தம்

    ஏதிலான் எஞ்சிநிற்கும்

மீதியான் வேதத்து

    சேதியான் திக்கிலார்க்கு

நாதியான் நின்றுகாக்கும்

    நீதியான் தோடமர்ந்த

காதினான் பாதம்

    துணை.

 

விடையேறும் எங்கள்

    பரமனைத் தங்கு

தடையின்றி உள்ளம்

    உருக்கும் தமிழில்

மடைதிறந்த வெள்ளம்

    எனப்பொழி நண்பா

அடைவாய் அவனருள்

    இன்றே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #307:

ஓங்கினான் மாலயன்

    கண்டுவக்க தேவகங்கை

தாங்கினான் தன்சடையில்

    சுந்தரர் பாடலுக்காய்

ஏங்கினான் ஆலின்கீழ்

    நால்வர் விடைகாண

தூங்கினான் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #308:

காலமின்னும் அண்டம்

    அழிக்க வரவில்லை

காலம்நாம் போக்குவோம்

    ஓடொளித்து துண்டொளித்து

பால‌ன் கறிகேட்டு

    என்று அழவிட்டாய்

சீலராம் அன்பரை

    போதுமந்த வேலைநீ

வேலனண்ணன் உன்மூத்த

    பிள்ளைக்குப் பெண்பார்த்தல்

ஆலவாயா உன்பொறுப்

    பன்றோ.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #309:

அஞ்செழுத்தான் நெஞ்சினில்

    வஞ்சமின்றி தஞ்சமென்றார்

நெஞ்சடைந்தான் நெஞ்சடையா

    நஞ்சடைந்தான் நெஞ்செரிந்து

மிஞ்சிடும் வெஞ்சாம்பல்

    நெஞ்சணிந்தான் வஞ்சிவாழும்

செஞ்சடையான் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #310:

அண்டபிரான் முப்புரம்

    வென்றபிரான் வேதங்கள்

விண்டபிரான் தீத்தூணாய்

    நின்றபிரான் பேரூழி

கண்டபிரான் பிட்டுவாங்கித்

    தின்றபிரான் ஆலகாலம்

உண்டபிரான் பாதம்

    துணை.

(அண்டபிரான் = பூபதி)

 

கோணலாம் எம்கவிதை

    கண்டு குறைகளைக்

காணலேதும் செய்யாது

      நேசத்தால் பாராட்டி

நாணவைத்துப் பார்ப்பதோ

    நண்பா.

 

அண்டர்கோன் சீரங்கன்

    ஆக்கும்கோன் நான்முகன்

பண்டொரு நாள்தேட

    நீண்டுநின்ற நீலநிற

கண்டன் அருளுனக்

    குண்டு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #311:

ஆய்ந்தவன் முப்புரம்

    பாய்ந்தவன் பாரினில்

மாய்ந்தவர் சேருமிடம்

    சேர்ந்தவன் ஆலின்கீழ்

ஓய்ந்தவன் ஊழியில்

    மீந்தவன் வேதத்தில்

தோய்ந்தவன் சான்றோரைச்

    சார்ந்தவன் காமனைக்

காய்ந்தவன் பாதம்

‌‌‌‌    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #312:

பண்ணுடையான் ஐந்தென்ற

    எண்ணுடையான் பாதியொரு

பெண்ணுடையான் மேனியிலோர்

    மின்னுடையான் தூயதோர்

வெண்ணுடையான் விண்ணுடையான்

    மண்ணுடையான் நெற்றிமேல்

கண்ணுடையான் பாதம்

    துணை.

 

அரணவன் அந்தக் கரணவன் எண்ண

முரணவன் சரணம் கதி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #313:

சடைவிரித்து அம்பலத்தே

    வேகமாய் ஆடல்

சடைக்குள்ளே வேறொருத்தி

    இல்லைபார் நீயே

அடையாதே கோபமென்மேல்

    என்றுசொல்லி நீயுன்

உடையாளைத் தேற்றுதற்

    கோ?

 

அழகனுக் கப்பன் இருளில் நடனம்

பழகிடும் நாதன் நடராஜன் அன்பு

நிழலாய்த் தொடரட்டும் உன்னை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #314:

மேகத்தான் போற்றிடும்

    வேதத்தான் ஈரேழு

லோகத்தான் கையோட்டில்

    சாதத்தான் மேலூரும்

நாகத்தான் ஓமெனும்

    நாதத்தான் தீத்தழல்

தேகத்தான் ஆடிடும்

    பாதத்தான் மாதொரு

பாகத்தான் பாதம்

    துணை.

(மேகத்தான் = இந்திரன்)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #315:

பையன் அயனைச்

    சிறையிலிட்டான் மாலையைங்

கையனவன் தோப்புக்

    கரணம் இடச்செய்தான்

தம்பியும் அண்ணனும்

    பண்ணுமிந்த அட்டகாசம்

சம்புநீ கண்டென்ன

    செய்தாய்.

 

 

ராலியின் வேண்வெண் முயற்சி #316:

ஐந்தொழிலன் ஐந்தெழுத்தன்

ஐந்தலையன் ஐயனைநாம்

பைந்தமிழால் பாடுவோம்

இன்று.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #317:

அபாயம் அழிய உபாயம் மயிலை

கபாலி சரணம் பணிவதே எந்த

சிபாரிசும் இன்றியே காக்கும் அந்த

சபாபதி பாதம் துணை.

 

 

ராலியின் வேண்வெண் முயற்சி #318:

திருவெண்ணெய் நல்லூர்க்கல்

    ‌‌யாணம் நிறுத்தி

இருதாரம் சுந்தரர்க்கு

    ஏற்படுத்தித் தந்தாய்

தருவாய்நீ நல்ல

    மணவாழ்க்கை என்று

வருவோர்க்குக் கொஞ்சம்

    கலக்கம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #319:

குளித்தவன் மூன்றூர் அழித்தவன் வில்லை

நெளித்தவன் நாபி துளிர்த்தவன் காணா

களித்தவன் தட்சன் பழித்தவன் வேதம்

விளித்தவன் துண்டைக் கிழித்தவன் ஓட்டை

ஒளித்தவன் காலன் விளித்தவன் ஆயுள்

அளித்தவன் பாதம் துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #320:

பதிமூன்றாம் நாள்மாலை

    தேவர்கள் போற்ற

சதிராடும் உன்னை

    நினையா திருந்தேன்

கதியுண்டோ சொல்வாய்

    எனக்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #321:

ஆண்பால் ஒருபாதி பெண்பால் இறையவன்

காண்பது காணா ததுள்ளே உறைபவன்

தூண்பிளந்தான் வீண்பொய் உரைத்தான் இருவரும்

காண்ப தரியான் துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #322:

மாண்டார் தலையோடு

     கொண்டான் ஒருவரும்

வேண்டாத வற்றைத்தான்

    ஏற்றான் இறைபக்தி

தீண்டாநெஞ் சென்றென்னைத்

    தள்ளல் நியாயமா

சீண்டுவதோ சொல்தியா

    கேசா.

 

தள்ளலும் கொள்ளலும்

    வேண்டா ஒருமொந்தை

கள்ளையுள் தள்ளி

    விடின்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #323:

பிரமா பரமன் தலைமுடி காண

சிரமப் படாதே மதுரைத் தெருவில்

விறகுவிற்க இன்று வருவான் கவனி

பரமனெண் சாணுயரம் தான்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #324:

பித்தன் மறையுறை

    வித்தன் நெருப்பினும்

சுத்தன் இடைவிடா

    நித்தன் புரிபடா

சித்தன் மலைமகள்

    பத்தன் அனைவர்க்கும்

அத்தன் அரனவன்

    போற்றி.

 

திட்டமிட்டு இன்றென்னை

    வம்பிழுக்க மெச்சியோர்

பட்டமிட்டுப் பார்க்கிறாய்

    நீயறிந்த உண்மைகேள்

சுட்டுப்போட் டும்வராது

    நற்கவிதை என்றுணர்ந்து

மெட்டுமின்றி கட்டுமின்றி

    ஏதோயெட் டுக்கட்டும்

சட்டமிலாப் பொய்ப்புலவன்

    யான்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #325:

தாவிவந்தாய் தானாய்நீ

    நன்மையே செய்திடுவாய்

கோவில் அயோத்தியில்

    கட்டும் அரும்பணி

காவி அணிபவர்

    செய்ய அருளுவாய்

தூவி மலரினைச்

    சேர்த்தே வரவேற்றோம்

ஏவிளம்பி புத்தாண்டு

    உன்னை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #326:

ஆண்டவன் ஆபத்தில்

    பாந்தவன் தீத்தூணாய்

நீண்டவன் பேரூழி

    மீந்தவன் மன்றாடும்

தாண்டவன் வான்கங்கை

    ஈந்தவன் மான்மழு

பூண்டவன் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #327:

கங்கைநீர் எப்போதும்

    கொட்டிடும் உன்தலையில்

கங்காளம் நீரெடுத்து

    சன்னிதியில் கொட்டுவார்

தங்கிடும் ஈரம்

    துவட்டி உடையணிந்து

எங்கேநீ எங்களைப்

    பார்ப்பாய்.

 

காலகாலன் ஞாலமூலன்

    வேலனப்பன் நீலகண்டன்

ஆலவாயன் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #328:

விண்ணமர்வான் தீச்சுடலைக்

    கண்ணமர்வான் நெற்றிமேல்

கண்ணமர்வான் ஆலின்கீழ்

    மண்ணமர்வான் ஐந்தெனும்

எண்ணமர்வான் பாதியோர்

    பெண்ணமர்வான் பைந்தமிழ்ப்

பண்ணமர்வான் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #329:

கூடல்கோன் சைவத்து

    மூவரின் தேவாரப்

பாடல்கோன் கங்கை

    சுமந்து உமையிடம்

ஊடல்கோன் மன்றும்

    மயானத்தும் நள்ளிரவு

ஆடல்கோன் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #330:

(இந்த்ரன் புலம்பல்)

இம்பரெல்லாம் நம்பவொண்ணா

    செல்வமிகு சொர்க்கம்வாழ்

உம்பரின் தேவாதி

    தேவன்யான் அஞ்சிடுவர்

சும்பரும் என்னும்

    பெருமையும் கொண்டேன்யான்

வம்புதாங்க வில்லையேன்

    வீடுவீடாய்ப் பிச்சையென்

சம்பந்தி ஏற்கிறார்

    என்று.

 

(ஈசன் புலம்பல்)

மக்காம் புலவர்கள்

    வம்பிழுக்க இங்குநான்

தொக்கானேன் என்சார்பில்

    வாதிடும் பீகேயார்

வக்கீலும் கைவிட்டார்

    என்னை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #331:

பிறைகொண்டான் கங்கை

    தலைகொண்டான் வேத

மறைகொண்டான் மூன்று

    இலைகொண்டான் ஊழித்

துறைகொண்டான் மாய

    வலைகொண்டான் குன்றா

நிறைகொண்டான் ஒன்றாம்

    நிலைகொண்டான் தீராப்

பொறைகொண்டான் வெள்ளி

    மலைகொண்டான் நீலக்

கறைகொண்டான் பாதம்

    துணை.

 

மாணவன்யான் என்றிருந்தும்

    யாப்பறியும் நற்கவி

வாணன்நீ ஊக்கம்

    எனக்களிக்கச் சொன்னசொல்

நாணம் அளித்தது

    நன்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #332:

ஈன்றெடுத்தான் யார்க்கும்

    அடங்காதார் வாழுமூர்

மூன்றெரித்தான் யார்க்கும்

    புரியாத பித்தனைப்

போன்றிருப்பான் மாலயன்

    முன்னொரு தீத்தூணாய்த்

தோன்றிநின்றான் பத்துத்

    தலையலறத் தன்விரலை

ஊன்றிநின்றான் அண்டம்

    அனைத்துக்கும் என்றுமொரு

சான்றென்று நின்றான்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #333:

உள்ளான் அவனிருமை

    இல்லான் குறையேதும்

கொள்ளான் அவன்மறைச்

    சொல்லான் திருமுறைப்

பள்ளான் அவனாதி

    அல்லான் மரத்தின்கீழ்

விள்ளான் அவனோரூர்

    நில்லான் மதுரைமண்

அள்ளான் அவனருணைக்

    கல்லான் நெருங்கினால்

தள்ளா‌ன் அவன்தான்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #334:

ஏக்கமில்லான் நள்ளிரவில்

    மன்றாடி சற்றேனும்

தூக்கமில்லான் பேரூழி

    வந்தபோதும் சற்றேனும்

தாக்கமில்லான் மேல்விழும்

    கங்கை சடைதங்கும்

தேக்கமில்லான் மன்னனாய்

    மாளிகை வாழவொரு

ஊக்கமில்லான் அண்டபிண்டம்

    மெய்மறைக்கும் மாயமாம்

நோக்கமில்லான் அண்டபிண்டம்

    எங்கும் நிறைந்தொரு

நீக்கமில்லான் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #335:

வானமர்வான் மானமர்க் கையன் அடங்காத

மீனமர்வான் மாதமர் பாகன் வடஆல்கீழ்

தானமர்வான் பாம்பமர் மார்பன் பிணமெரி

கானமர்வான் தோடமர்க் காதன் திருமுறைத்

தேனமர்வான் ஏறமர் நாதன் எனதுநெஞ்சில்

ஏனமர்வான் அன்பினால் அன்றி.

 

நன்றென்றீர் நண்பர்காள்

    நானுவக்க என்றேநீர்

நன்றியென்றும் சொல்லுவேன்

    நான்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #336:

பாடவல்லீர் பாடினீர்

    ஏமநாதன் ஓடவே

ஆடவல்லீர் ஆடினீர்

    தேவரெலாம் காணவே

ஓடவல்லீர் ஓடினீர்

    அன்பன்‌ துரத்தவே

மூடவல்லீர் மூடினீர்

    லோக வியாபாரம்

நாடவல்லீர் நாடினீர்

    பிச்சை தலையோட்டில்

வாடவல்லீர் வாடினீர்

    இல்லாள் பிரியவே

கூடவல்லீர் கூடினீர்

    மாதொரு பாகனாய்

சாடவல்லீர் சாடினீர்

    காமனைக் கொன்றைப்பூ

சூடவல்லீர் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #337:

ஆய்ந்தவன் ஆக‌மம்

    தேர்ந்தவன் காமனைக்

காய்ந்தவன் காலன்மேல்

    பாய்ந்தவன் கங்கைநீர்

தோய்ந்தவன் மேதினியில்

    மாய்ந்தவர் பூமியில்

மேய்ந்தவன் ஆலின்கீழ்

    ஓய்ந்தவன் கொன்றைப்பூ

வேய்ந்தவன் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #338:

சண்டை கவிதை

    சரியென்று நீரிடுவீர்

சண்டை ஒருவேள்வி

    சென்றதற்கு நீரிடுவீர்

சண்டை அடிமைநீ

    வாவென்று நீரிடுவீர்

சண்டை பழம்துணி

    தாவென்று நீரிடுவீர்

சண்டை பழமோடு

    தாவென்று நீரிடுவீர்

சண்டை ஒருவேலை

    இன்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #339:

இடிகொள்வான் முட்டும்

    மலைவாழும் கங்கை

முடிகொள்வான் சாக்கிய

    நாயனார் கல்லால்

அடிகொள்வான் ஓட்டில்

    பிறரிடும் பிச்சை

பிடிகொள்வான் பொன்போலும்

    மேனியில் வெண்மைப்

பொடிகொள்வான் முப்புரம்

    சுட்டெரித்து வெற்றிக்

கொடிகொள்வான் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #340:

பரைகொள்வான் என்றும்

    பனிமூடும் வெள்ளி

வரைகொள்வான் மானிடர்

    அஞ்சும் அரவு

அரைகொள்வான் நான்குபேர்

    கற்றிட ஆல்கீழ்

தரைகொள்வான் பிள்ளையின்

    சீடனாய் வேத

உரைகொள்வான் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #341:

சடையான் படையான்

    தடைமுடை நீக்கும்

கொடையான் உடையான்

    முதலான் இடையான்

கடையான் கடையார்

    அடையான் அமர

விடையான் அவனே

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #342:

விற்றாய் விறகு

    முனைந்து ஒருவேளை

விற்றாய் வளையல்

    முனைந்து ஒருவேளை

விற்றாய் உயர்கல்

    முனைந்து ஒருவேளை

அற்றாய் எனக்கருளும்

    எண்ணம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #343:

அண்டத்தான் நூல்நான்கு

    தந்திட்டா‌ன் மெய்ப்பொருள்

விண்டத்தான் ஆல்கீழ

    மர்ந்திட்டான் பாற்கடல்

கிண்டத்தான் மேலுடன்

    வந்திட்ட நஞ்சிருள்

கண்டத்தான் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #344:

மனத்தகத்தான் உள்ளே

    உறையன் அடியார்

இனத்தகத்தான் மங்கா

    நிறையன் முனிகள்

சினத்தகத்தான் தீராப்

    பொறையன் விடியும்

தினத்தகத்தான் சென்னிப்

    பிறையன் சுடலை

வனத்தகத்தான் தோன்றா

    மறையன் அறமாம்

தனத்தகத்தான் கண்டக்

    கறையன் மறையுள்

கனத்தகத்தான் பாதம்

    துணை.

 

அரவணையான் தங்கை

    கரமணைத்தான் காட்டில்

இரவலைவான் பாதம்

    துணை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #345:

துரும்பில் துரும்பன் பெரிதில் பெரியன்

கரும்பில் இனியன் இரும்பில் வலியன்

அரும்பில் அரும்பன் திருவெறும் பூர்வாழ்

எறும்பீசன் பாதம் பணி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #346:

பாடவும்  செய்வாய்

    இயற்றவும் தான்செய்வாய்

ஆடவும் செய்வாய்

    விதவிதமாய் நாடகம்

ஆடவும் செய்வாய்

    சபைமுன் வழக்குகள்

போடவும் செய்வாய்நீ

    வாயாட அஞ்சாதும்

பாடம் படிக்கவந்த

    மாணவர்முன் நன்குவாயை

மூடலேன் செய்தாய்

    வினோதா.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #347:

வெண்ணீறு தோய்வெண்மை

    உன்மேனி உன்பாதி

பெண்சாதி பச்சை

    அவளண்ணன் நீலநிறக்

கண்ணன் இளையபிள்ளை

    குங்குமம்‌ போன்றொரு

வண்ணன் சசிவர்ணன்

    மூத்தபிள்ளை வர்ணபேதம்

பண்ணா குடும்பம்

    உனது.

 

 

வருமின்பம் பிறரின்பம்

    வேண்டின் அறிந்தேன்

வருந்துயரம் என்னின்பம்

    வேண்டின்.

 

இன்பம்நாம் வேண்டிப்

    பிறரின்பம் வேண்டின்

இன்பம் பிறர்பெறுவர்

    திண்ணம் அதுவொன்றே

தன்னால் நடக்கும்

    நமக்கின்பம் வந்தடைய

அன்பர் பிறர்வேண்ட

    வேண்டுமென்னும் இவ்விதி

தொன்மையாம் Catch

    22.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #348:

இன்றிங்கு மன்னரில்லை

    ராணியில்லை பெண்களுக்கு

அன்றுபோல் கூந்தலில்லை

    கூந்தல்மேல் ஆண்களுக்கு

ஒன்றுமே கேள்வியில்லை

    கீரனைச் சுட்டெரித்து

நின்றநாள் சென்றபின்

    உன்நெற்றிக் கண்ணுக்கு

ஒன்றுமிங்கு வேலையும்

    இல்லை.

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s