Feb 2017 – Exchanges

கடைக்கண்

Suresh:

மாதவம் செய்தவன் மாதவன் கண்டிலன்

மால்மகன் கண்டதாய் விண்டனன் கண்டிலன்

தேவரும் அசுரரும் கண்டிலா ஈசனை

தீதறு திருக்கடை யூரபி ராமியின்

போதுறை மலர்த்திருக் கடைக்கண் கண்டதென்?

 

BKR:

அண்ணல் உயர அபிராமி கண்ணோக்க

என்ன வியப்பதிலே கண்டீரோ –  என்றும்

உடலின் வலப்பாகம் ஓங்கச் சமமாய்

இடமும் வளர்தல் இயல்பே.

 

Rali:

அண்ணலை ஆக்கியதே

அன்னைதான் என்பதால்

அண்ணல் உயர்வதோ

அன்றி உடல்சிறுக்கப்

பண்ணுவதோ அன்னையைக்

கேட்டே.

 

Suresh:

காட்சி அறிவன கண்களே தானெனினும்

காதல் துளிர்ப்பதோ கடைவிழியில் மட்டுமன்றோ?

ஆதிக் காதலி அவளன்று என்பீரேல்

மேதினியில் உயிர் தோன்றிய. தெங்கனம்?

ஆடியின் வீதியில் தோன்றிய காதலைப்

பாடிய பரஞ்சோதி பொய்யுரைத் தவரோ?

இரண்டெனத் தோன்றி திருவிளை யாடிக்கூடி

இரண்டறக் கலந்தபின் இடமென்ன வலமென்ன?

கூடியே பிரிதலும் பிரிந்தவர் கூடலும்

வழுவில காதல் வகையினானே.

 

Suresh:

@Rali:

நடுவர் தீர்ப்புக்கு நன்றி.

நடுவரே ஆயினும் விடுவரோ நக்கீரர்?

 

Rali:

@Suresh:

நக்கீரர் என்பதுடன் சொக்கன் தரப்புக்கு

வக்கீலும் என்பதால்சந் தேகம்.

 

BKR:

சொக்கனுக்கும் அன்னைக்கும் பேதம் வரின்அங்கு

வக்கீலுக் கில்லை இடம்.

 

SKC:

@rali

நக்கீரன் என்பீர் நான்மாடக் கூடல்

சொக்கனுக்கு வக்கீல் என்பீர்

வழக்காடும் முறை கண்டு – எக்காலும்

பணியார் இவர் தம் போக்கில் பைந்தமிழ்க் கவி மீது

தணியாது இவர் தாகம் காண்.

 

Suresh:

நாக்கில் நற்றமிழும் வாக்கில் வாணியுமாய்

நக்கீர வக்கீ லிவர்காண்.

 

SKC:

@BKR

சும்மா …

 

BKR:

@SKC

நீர்சும்மா என்றால்நான் நம்புவனோ எந்நாளும்

பாரும்மைச் சும்மா விடேன்

 

SKC:

@BKR

சும்மா இருத்தல் சுகமென்று

எம்மான் ரமணர் எடுத்துரைக்க

உம்மேல் பழி சொல்வேனோ? நீர்

நம்மாள் என்பதறியேனோ?

 

BKR:

@SKC

சும்மா இருசொல் லறவென் றுகுகன்

எம்மான் அருண கிரிக்குரைத்தான் –  நம்போன்ற

இல்லறத்தான் சும்மா இருத்தல் – சுகமன்று

சொல்லறவும் வாழ்தலே நன்று

 

Rali:

சொல்லற வாழாத இல்லறத்தான் இந்நாளில்

பல்லற வாழவேண்டி வரும்

 


 

இரவா தோசை

GRS:

இரவா தோசை முறுகலாய் வேண்டுமெனும்

அவாவையும் வெண்பாவினுள்- சவாலாய்

அப்போது சிந்திக்க வைத்தீர் ராலி ஸார்

இப்போது சந்தோஷம்தானே?

 

VKR:

 

இரவா வரத்தைக் கேட்டவரை அறிவோம்

இரவா தோசை இனி.

 

 

GRS:

இரவா வரம் அறிகிறேன் அறிவாய்…

இரவா தோசை அறிகிறேன் உணர்வாய்…

இரவா வரம் உணர்வாய் அறிய ஆசை

அருளட்டும் அன்னை இயல்பாய்…..

 

BKR:

இரவாவின் தோசை இனிதே மனையாள்

பரிமாற உண்ட கணவர் –   சுரருலகின்

சாவா அமுதும் விரும்பிடார் என்பதுவே

நாவாற நாமுணர்ந்த உண்மை

 

Rali:

அவாவொழித்த மேலோரும்  எண்ணுவர் என்றும்

ரவாதோசை வேண்டும்  எனக்கு.

 

 

BKR:

@ராலி

இரவாவின் தோசையைநீ யாரிடமும் வேண்டி

இரவாது பெற்றிடஎன் வாழ்த்து.

 

Pithan:

பொய்யாமொழிப்புலவர்  ராலியவர்களுக்கு

நெய்ரவாவா அன்று மேனிகுலுங்க சிரிக்கும்

அவருக்கு ஆனியன்

ரவாவா என்று  அறிய அவா.

 

GRS:

எல்லோர் பதிவையும் கேட்க ஆசை…

சொல்லாமல் சும்மாயிரு என்றேனும் – மெல்லாமல்

பதிந்தால் அடங்கி ஒடுங்குவேனுள்ளே

அதிராமல் குழுவிலே அடங்கி…

 

Suresh:

இரவாவின் தோசையே இலக்காயின் மாந்தர்க்கு

பிறவாழி நீத்த லரிது

 

Rali:

தூக்கம் வராது  இரவைப் பகலெனப்

போக்கி அமெரிக்க  வாழ்க்கை அதிகமாய்த்

தாக்காது தப்பயிங்கு  தேடினேன் உம்கவிதை

ஏக்கம் வராது  தரவும்.

 

Gopi:

இரவைப்பகலாக்கி இரவாதோசையை

இராவாக இரண்டை இரவிலுண்ணும்

இராலி

 

 

Rali:

அறவாழி அந்தணனும் ஏற்பான் முறையாய்

இரவாதோ சைநாம் படைத்தால்.

 

Rali:

ரவாதோசை நாணமசால் தோசை மனிதர்

அவாவுறச் செய்தென்றும் வென்றதே,

 

SKC:

பிறவா நிலை எய்தி பேரின்பம் கொள்ளாது

இரவா தோசை இவ்வேளை நமக் கெதற்கு ?

 

 

SKC:

அவாவா ஆத்தில் ஆனந்தமாய் அமர்ந்து

ரவா தோசை உண்டு ராப்பகலாய்த் தவியாது

சிவா சிவா எனச் சொல்ல சிந்தை தெளிவாமே.

 

 

SKC:

சிவாய நம என சிந்தித் திருப்போர்க்கு

ரவா தோசையே சித்திக்க

தவாவில் வார்த்து தன்னிறைவு தான் பெறுவீர்.

 

 

SKC:

நிலைய வித்வானை நித்தம் நாம் உண்டு

அலைவதென்ன கொடுமையோ ?

அதற்கு முன்னுரிமையோ ?

 

 

SKC:

கடன் பட்டார் நெஞ்சம் போல்

கலங்கினான் இலங்கை வேந்தன் – கம்பன்

ரவா உண்டோர் வயிறு போல்

ராவணன் கலங்கி நின்றான் – வம்பன்

 

 

Pithan:

இரவாதோசை இனி வேண்டாம்

இறவாத வரமும் பிறவா வரமும் வேண்டி

மறவாமல் மேகசனை  மண்டியிட்டு

நரனாய் இனிப்பிறவாமல்

துறவறம் பூண்டு நாம்

துன்பம் நீங்கி வாழ்ந்திடுவோம்.

 


 

 தமிழ்மெகா சீரியல்

Rali:

சோர்விலா சண்டை அனுதினம் போடுமொரு

போர்க்கோல மாமியார்  மாட்டுப்பெண் ஆனாலும்

சேர்ந்தமர்ந்து சோகத் தமிழ்மெகா சீரியல்

பார்ப்பதில் ஒன்றாய் இணைவர்.

 

 

Rali:

புகாதொரு சண்டை மருமகள் மாமி

மெகாசீ ரியல்பார்க் கையில்.

 

 

Rali:

மருமகள் மாமியார் ஒற்றுமை ஓங்க

தருவீர் மெகாசீ ரியல்.

 

GRS:

ஆர்வமாய் சண்டையவர் போடுதல்

பூர்வ வினையோ பண்போ -சேர்க்கையோ

பெஸ்ட் ப்ராக்டீஸோ செய்வினையோ

ஐஸ்ட் ஃபார் ஃபன்னோ?

 

Rali:

@GRS:

ஆர்வமாய் சண்டை அவரென்றும் போடுதல்

பூர்வவினை செய்வினை பண்போ எதுவுமில்லை

தீர்வதுண்டோ பூனை எலிவிரோதம் கூடவே

சேர்ந்து வருமியற்கை காண்.


தெரு நாய்

Rali :

தூக்கம் வருவதில்லை வேர்வை கொசுப்படை

தாக்கம் தெருநாயின் சத்தம் இவைவேண்டி

ஏக்கமாய் உள்ளது இங்கு.

 

Pithan:

தெருநாய் கொசுப்படைக்கு விசா அனுப்பினால்

பெருமளவில் அனுப்பி வைப்பேன்.


 

                                                  கூவத்தூர் கூத்து

VKR:

மாட்டினை அவிழ்த்துவிட்டு மகிழ்வுற்ற மாநிலமே /

மாந்தரை கட்டியது ஏன்?

 

 

Rali:

மதிநிலை கெட்டயிம் மாந்தரைக் கொண்டு

சதிசெய்யும் கும்பலை ஏன்பெற்றோம் சீதா

பதியே தமிழ்நாடு கா.


 

                                                     தனிமை

Rali:

பனியும் குளிரும் விறைக்கவே உங்கள்

இனிக்கும் கவிச்சுவை வேண்டினேன் உள்ளம்

கனிந்து தமிழின்பம் தந்திடுவீர் கொஞ்சம்

தனியே விடாதீர்க ளென்னை.

 

BKR:

பனியும் குளிரும் பணியணிவோன் தங்கும்

பனிமலையைக் கண்முன் நிறுத்தக்

–  கனிவாய்ச்

சிவநாமம் செப்பிச் சிறந்திருக்கத் தானே

அவன்தந்த திந்தத் தனிமை?

 


 

                                                        சட்டை சபை

SKC:

சட்டை தாமே கிழித்து சடுகுடு ஆடி

திட்டம் போட்டு திருட நினைத்து

வட்ட மிடும் வஞ்சகர் தம்மை

இட்டமாய் ஏற்போம் இது நம் விதியாம்.

 

நமக்கு நாமே சட்டை கிழித்து

சுமக்கும் சிலுவை சோர்விலாது ஏந்தி – நமர்க்கும்

அஞ்சாது அரசியல் செய்து கண்

துஞ்சா திருப்பர் காண்.

 

சட்டமன்றம் இன்று சட்டை மன்றம் ஆனதும்

கட்டவிழ் காளையாய் கட்டியே புரண்டதும்

மட்டமாய் அரசியல் மகிழ்ந்திவர் செய்வதும்

சட்டமாய் போனதே சகத்திலே வாழ்வதும் நாம்

பட்டிடும் துயரதை பரமனும் களையவே

கெட்டவை அகன்றிட கேட்பதோர் வரமதும்

கிட்டிடும் நாள் வரும் கேடினி இல்லையே !

 

VKR:

சொக்கன் வரமாட்டான் சோர்வினை நீக்கிடவே

மக்கள் எழுச்சியே மருந்து -தக்கதொரு

தலைதனை உருவாக்கி தானையும் எழுவித்து

கரைதனை நீக்குவோம் வாரும்.

 

SKC:

திக்கெட்டும் தீமை தலைவிரித்தே ஆட

இக்கட்டில் சொக்கனை இறைஞ்சியே அழைத்தேன்

– மக்கள்

தமக்கொரு தலைமை தாமே தேர்ந்தெடுப்பின்

எமக்கென்ன மனக்கவலை இங்கு.

 

Rali:

எட்டாதே நல்லறிவும் ஞானமும் நாட்டினது

சட்டம் பெரும்பாலாம் மக்களுக்கு ஓட்டவர்

இட்டு நடக்கும் ஜனநா  யகமுறை

முட்டாள் தனமன்றோ சொல்.

 

 

SKC:

பரங்கியருக் கெதிரே பாரதி முழங்கியது போல்

அரங்கம் அதிர ஆலோலம் பாடியிங்கு

உறங்கிய உலக நாயகர்கள் உயிர்த் தெழுதல் வேடிக்கை

குரங்கு மனமிதனைக் குறை சொல்லலாமோ?

சிரங்கினைச் சொறிய சீழ்தானே வரும் இவர்

இரங்குதல் உண்டோ எண்ணிப் பாரும் நேர்மை

உறங்கும் அந்நேரம் சட்டை (உடல்) சட்டையைக் கிழித்தது.


 

                                               பதில் பேசாத பதி

BKR:

பதிசொல் தவறாத பெண்டிர் அடைவார்

அதிசயமாம் ஆற்றலென் றாயின் – சதிசொல்

கடக்காது வாழும் கணவர்க்கு மட்டும்

கிடைக்காத தேனந்தப் பேறு?

 

 

Suresh:

நான் மாடக் கூடலின் நாற்சதுர வீதிகளில்

கான்மாறி ஆடினான் ஆடல் பல புரிந்து

கோனாகி யுயர்ந்தான் கோணாது தன்சதியாம்

மீனாளின் சொல்லென்றும் மீறாத வெம்சொக்கன்.

 

 

Rali

@BKR:

சதிசொல் தவறா கணவர் எதற்கும்

பதில்பேசா வாழ்ந்து வசவும் அடியும்

மிதியும் பெறாதின் புறுவர் அறிவாய்

இதிலும் உயர்வேது சொல்.

 

 

BKR:

மீனாள்சொல் மீறாத சொக்கன் பெருமைகொண்டு

கோனா யுயர்ந்ததுவும் உண்மையே

–  ஆனாலும்

பாதிப் பெருமைதான் ஈசர்க்கு மற்றதெலாம்

பாதியுடல் கொண்டஉமைக் கே!

 


 

துறவு

BKR:

இல்லத் துறவோ டினிதாக வாழ்ந்தேபின்

இல்லத் துறவேற்றல் நன்று.

 

 

Rali:

இல்லாள் கொடுங்கோலில் வாழும் கணவர்க்கு

இல்லம் துறத்தல் எளிது.

 

 

BKR:

@ராலி

இல்லாளுக் கஞ்சித்  துறவேற்றல் எந்நாளும்

நல்லவழி யாகாது நண்பரே –  எல்லா

அனுபவமு மேற்றபின் மெய்யுணர்ந்து அன்பால்

மனம்விரிய நேரும் துறவு.

 

Rali :

இல்லம் துறந்திடும் வல்லவர் ஆயினும்

வெல்லம் துறத்தல் அரிது.

 

BKR:

@ராலி

முக்திச் சுவைநாடி இல்லம் துறந்தவர்

சிக்கார் உலகத் தளையதனில் – எக்காலும்

சொர்க்கத்தில் பாதி கொடுத்தாலும் வேண்டாது

சர்க்கரைதான் தேடும் எறும்பு.

 

 

Pithan:

சர்க்கரை வேண்டி சாலையில் சென்றான்

நிற்க மனமின்றி நீண்டவரிசை கண்டான்

பற்றறுத்து சுவையை பயமின்றித் துறந்தான்

பற்றுவைத்த இல்லறத்தை பயந்தான் துறக்க.

 

 

Pithan:

சர்க்கரையாய் சுவைத்தது சம்சாரம் முதலிலே

பொற்கால மதுவென்று பெருமை கொண்டேன்

சொற்போரில் தொடங்கி சோதனைகள் கடந்து

பற்றறுக்க பயந்தேன்நான் குரங்கின்வா லாப்பாக


 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s