Mar 2017 – Exchanges

                                                                                உடுக்கை

Rali:

தடுமாறும் உள்ளம்

படைத்த மனிதர்

படுந்துயர் தீர்க்கவே

ஈசா பரிவாய்

நடுநிசியில் கூத்தாடி

நன்மை தரவே

உடுக்கடித்தும் தூங்கினேன்

நான்.

 

 

BKR:

@ராலி

பொருள் கொள்வதில் ஒரு சிறு சந்தேகம்

ஈசன் நடுநிசியில் கூத்தாடி நன்மை தந்ததால், உடுக்கடித்தபோதும் நிம்மதியாக உறங்கினேன்  எனப் பொருள் கொள்வதா

அல்லது

கூத்தாடி நன்மை தருவதற்காக ஈசன் உடுக்கடித்தபோதும் அதை உணராது உறங்கினேன் எனப் பொருள் கொள்வதா?

பாடல் இரண்டு விதமாகவும் பொருள் கொள்ள இடம் தருகிறது.

“நன்மை தரவே” என்ற பதத்தினால் வரும் ambiguity இது.

 

 

Ravindran K:

நிம்மதி இல்லையென்றால் சிறு துரும்பு அசைந்தாலும் உறக்கம் வராதே.

உடுக்கடித்தால் ?

ஆக நிம்மதி இருப்பது தெளிவு.

 

 

BKR:

உடுக்கடிககும் ஈசனின் கூத்து நமக்கு நன்மை தந்து உயர்த்துவதற்கே என்பதை உணராத பேதைமையும் உறக்கத்திற்குக் காரணமாயிருக்கலாமே?

 

 

Ravindran K:

மன்னிக்க,

உடுக்கை ஓசை கேட்பதற்குக் கோடி புண்ணியம் வேண்டுமே.

அந்நிலை பெற்றோர் அரியோர் பெரியோராய் எப்போதும் விழிப்பு நிலையிலே இருப்பர் என்பது கேள்வி.

 

 

Gopinath M:

தடுமாறும் மக்களுக்கு தூக்கம் வருவது கடினம். பாட்டை எழுதியது ராலி. அவருக்கு தடுமாற்றம் இல்லை. உடுக்கைநாத லயத்திலேயே உறங்கியிருக்கவேண்டும்.

 

 

Ravi K:

உடுக்கை ஓசை அவருக்குத் தாலாட்டு.

 

Rali :

@BKR:

உடுக்கை சப்தம் கேட்டும் உணராத பேதைமை கொண்டவன் என்கிற அர்த்தத்தில் தான் எழுதினேன்.

உடுக்கையடிப்பானை உணரா ஜட குணமும் உறக்கமெனும் தாமஸ குணமும் ஒருங்கே அமைந்த பெருமை ஒன்றே எனக்கு!

 

 

Suresh :

உடுக்கை ஒலியை உணராத மாந்தர்க்கு

இடுக்கண் களைவதாம் நட்பு.

 

 

Rali :

உடுக்கொலி கேட்டும் உறங்கும் மனிதர்

படுந்துயரும் தீர்ப்பான் பரமன்.

 

வதஞ்செயும் சம்சாரம் விட்டு உயிர்போய்

பதஞ்செயும் தீக்குள் கிடக்கும் எனக்கு

இதஞ்செயும் நாட்டியம் ஆடினாய் ஆனால்

எதற்காய் அடித்தாய் உடுக்கு.

 

BKR:

உடுக்கை ஒலியை உணராத பேர்க்கும்

இடுக்கண் களைவான் சிவன்.

 

உடுக்கையொலி யண்டத்தைத் தோற்றிப் புரந்தே

ஒடுக்கிடும் ஓங்கார மாம்.

 

 

Rali:

உடுக்கொலி கேளா மனிதர் அடையும்

இடுக்கண் களைவதாம் நட்பு.

 

 

BKR:

உடுக்கொலி கேளா மனிதர் அடையும்

இடுக்கண்  எதுவென் றுரை.

 

 

Rali:

@ BKR:

உடுக்கொலி கேட்பின் அனைத்துத் துயரும்

விடும்நம்மை கேளா மனிதர் பிரமன்

இடுந்துயர் எல்லாம் படஅவர்க்கு நேரும்

இடுக்கண் களைவதாம் நட்பு.

 

 

Rali:

உடுக்கொலி பற்றித் தெரியா துளற

படும்பேஜார் வேண்டும் எனக்கு.

 

GRS:

உடுக்கையுடன் மான்மழு ஏந்தி

இடுப்பசைத்தாடும் நாதனே – கிடக்கை

ஆய்ந்து தெளிந்து அறம் செய்ய

பாய்ந்து அருள் செய்…

 

 

SKC:

@rali

உடுக்கை ஒலியே ஓமென் றுணர்நது என்

இடுக்கண் களைய இறையை எண்ணி மனம்

ஒடுக்கியே நானும் ஓய்ந்தேன் சிலகாலம் கவி

தொடுக்கும் உன் வேகம் தொடர இவ்வேளை அரவில்

படுக்கும் பரந்தாமன் பதமலர் பணிவேனே!

 

 

BKR:

@SKC

உடுக்கை ஒலியதுவே ஓமென் றுணர்ந்தார்க்

கிடுக்கண் வருமோ பகர்வீர் –

படுக்கை

அரவில் துயில்வார்க்கும் ஆனந்தம் அந்த

அரனின் உடுக்கொலியன் றோ?

 

 

S K C:

@BKR

இடுக்கண் வருங்கால் இறையுணர்வு கொண்டு

உடுக்கை ஒலி கேட்டு உய்வோரும் உண்டு அருள்

– கொடுக்கும்

திட்டை நாதனை தேடிப் பின் தினம் தொழுதேன் கண்

கெட்ட பின் கதிர் தொழும் நான்.

 

 

Ravi K:

கற்றவரும் நற்றவத்தினரும் இவ்வரங்கினில்

நவின்றிடும் நற்பாக்களை

தித்திக்கும் தேனமுதெனப்

பருகிடுவேன் பாங்குடனே.

உடுக்கையோ படுக்கையோ ஓங்காரமோ ரீங்காரமோ

சொற்பதங்கடந்த விடமுண்ட கண்டனோ

நன்று நன்று ஆம் உம் பதம் நன்று

என்றுரைப்பன் நான் ஏழுலகும் என்றுமே.

ஆயின்

புலமையிலா இவ்வேழை புலம்புவதை யாரறிவார் ஈசனே.

நள்ளிரவு நட்டம் பயின்றாடுமென் நாதனை

நாவிலே நயம்பட போற்றிப் புகழ்ந்திட

உள்ளூற இச்சை மங்கை பங்க,

போடுவாயோ பிச்சை.

இவ்வரங்கில் சொல்வித்தை நயமுடனே அள்ளிவிடும்  இறையன்பர் நல்வாழியவே.

 

 

Rali :

@ ரவி:

ரவியுன் நறுங்கவி கண்டேன் இனிமேல்

குவியட்டும் உன்கவி இங்கு.


 

பிரமம்

BKR:

அரவாய் அலங்கலது தோன்றினாற் போலப்

பிரமமுல காய்த்தோன்று தென்பர் –

அரவை

அலங்கலது ஒக்கும் உருவில் பிரமம்

உலகினை ஒத்தவிதம் சொல்.

 

 

Rali :

இரவில் கனவினில் நானென்னைக் கண்டு

சிரமுதல் கால்வரை ஒத்தது போலே

பிரமமும் ஒக்கும் உலகு.

 

 

BKR: நான் சொல்ல வந்த கருத்தை சரிவரப் பதிவு செய்தேனா என்று தெரியவில்லை.

இருட்டில் மாலை பாம்பாய்த் தெரிவது போல, பிரமம் மாயையால் உலகமாகத் தெரிகிறது என ஞானிகள் கூறுவர்.

இந்த ஒப்பீட்டில் என் ஐயம்:

மாலை பாம்பாய்த் தெரிவதற்கு இருட்டைத் தவிர, உருவ ஒற்றுமை ஓர் அடிப்படைக் காரணம்.

அங்ஙனம் நோக்கிடில் ப்ரம்மம் உலகமாகத் தெரிவதற்கு இரண்டுக்கும் பொதுவான ஒரு தன்மை இருக்க வேண்டும். ஆனால் உலகின் எந்த தன்மையும் ப்ரம்மத்துக்குப் பொருந்தாது.  எனவே பிரம்மம் உலகமாகத் தோன்றும் ஒப்பீட்டைப் புரிந்துகொள்வதெங்ஙனம்?

இதை வெளிப்படுத்தத்தான் என் குழப்பம் போல் தோன்றும் பதிவு.

இதைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் எனக்குத் தோன்றிய பதில்கள்:

1. மாயை வெறும் இருட்டைத் விடச் சற்றே சிக்கலானது

2. வாக்கினால் விளக்க முடியாத ப்ரம்மத்தைச் சொற்களால் விளக்க        முயலும்போது ஏற்படும் இயலாமை இது.

இதுவரை பொறுமையாகப் படித்திருந்தால்……….

நன்றி

 

 

GRS:

நான் புரிந்து கொண்டது இவ்வாறு:

பிரம்மம் : ஆதியும் அந்தமமுமில்லா ஸத்யம்

மாயை : பரம்மத்தின் இயல்பான ஸக்தி

அவித்யை: ஜீவனுடன் தொடர்புடைய அஞ்ஞானம்.இதுவே ஜீவன் இரண்டற்ற நிலையை உணர முடியாமல் செய்வது.

மாயை பிரம்மத்தை ஆதாரமாகக் கொண்டிருந்தாலும் பிரம்மத்தை கட்டுப்படுத்தாது.( பாம்பின் விஷம் பாம்பை ஆதாரமாக் கொண்டிருந்தாலும் பாம்பை ஒன்றும் செய்யாது போல)

ஜீவனோ அவித்யையின் பிடியில்…

வெளிச்சம் வந்ததும் இது பாம்பில்லை என்று புரிகிறது…

இந்த விவர்த்த வாதத்தில்

பிரம்மம் – கயிறு

அவித்யை – இருள்

மாயை – பாம்பின் தோற்றம்

வெளிச்சம் – ஞானம்

கயிறில்லாமல் பாம்பின் தோற்றம் சாத்தியமில்லை என்பதை உணரலாம்…

இந்த விவர்த்த வாதத்தை ஒட்டிய கருத்துக்களை சில சித்தர் பாடல்களில் படித்த நினைவு… இது என் புரிதல் மட்டுமே…

 

 

– Rali :

உப்பாலே ஆனபொம்மை பற்றி அறிந்தவர்

தப்பு பிரமமா ராய்தல்.

 

நட்டுவன் இன்றியாடும் ஈசனை எண்ணினால்

விட்டுவிடும் பாசபந்தம் அன்றோ.

 

 

BKR:

பாம்பும் கயிறுமே கண்டறியாப் பிள்ளையொன்று

பாம்பைக் கயிற்றில்கண் டஞ்சிடுமோ – நாமும்

பிரமம் உலகிவற்றின் தன்மையறி யோமே

மிரளுவதே னிவ்வுலகு கண்டு?

 

 

BKR:

@ராலி

கயிறோடு பாம்பைக் கருத்தாய்வு செய்ய

சுயம்புவாம் ஈசன் இசைவான்  –

நயந்தே

கயிறான பாம்பைக் கழுத்தணிந்தோன் தானே

கயிலாயம் வாழும் சிவன்.

 

 

– Rali :

@BKR:

பாம்பைக் கருத்தாய்வு செய்யுமுன் சொல்லவும்

நாம்தள்ளி நின்று களிக்க.


 

அன்பே சிவம்

 

Rali :

நிலவுலகில் நான்படும் பாட்டை நினைந்து

உலகழிக்கும் அன்பே சிவம்.

 

இகவாழ்வில் நம்மை வினைசுடக் கண்டு

ஜகமழிக்கும் அன்பே சிவம்.

 

கனவிலும் நிம்மதி இல்லாதார் வாழ

மனமழிக்கும் அன்பே சிவம்.

 

இன்றுசெத்து வெந்தநான் வந்திடாது அண்டமெல்லாம்

நின்றழிக்கும் அன்பே சிவம்.

 

 

SKC:

அன்பே சிவமா ? சிவமே அன்பா ?

நண்பா சொல்வாய் நானும் கொள்வேன் அரன்

அன்பாய்க் கொண்ட அன்னை உமையும்

தன்பால் விழைந்து தவிப்போர்க் அருள்வாள்

அன்பில்லாளோ ? அடியேன் அறியேன்

அன்பாய்ச் சிவமும் அருள்வது உண்டு

சிவமே அன்பாய் ஆவது முண்டோ ?

வம்பே செய்தேன் வழி தெரியாமல்

நண்பா ! நீயும் நன்றே பகர்வாய்.

 

 

Rali :

@SKC

அறியாயோ அன்பும் சிவமுமொண்ணு இஃதை

அறியாதார் வாயிலே மண்ணு.

 

 

SKC:

@ராலி

அரி யாதவன் வாயில் மண்

அரி யாதவன் வாயை ஆவெனத் திறக்க

தெரியா உலகைத் தெரிந்தாள் அன்னை

அரியும் சிவனும் அறிவேன் ஒன்றே

சரி அதை விடு சங்கரனும் உமையும்

சரி பாதி அன்றோ சரியாய் சொன்னால்

சங்கரி அவளும் தெரிவாள் அன்பாய்

தெளிந்தேன் தவறோ?

 

 

Rali :

தவமறியார் கொல்லாமை ஒன்றே தமது

தவமென்பார் பல்வித புலாலுண்ணல் செய்வார்

சவம்மேல் சாதனை செய்வார் சிறிதும்

சிவமுமில்லா அன்புமில்லா பௌத்தர்.

 

 

VKR:

அன்பே சிவம் என்பது ஒரு romanticised,sanitised,brahminical version of hinduism.மறிகளைப் பலியிட்டுத் தொழும் கோரங்களை இன்றும் கல்கத்தாவிலும் கௌகாத்தியிலும் காட்மாண்டிலும் இன்றும் காணமுடியும்.கருத்தியல் ரீதியாகவும் ஞான ரீதியாகவும் இந்துமதம் முழுமையாக அகிம்சையை வலியுருத்தியது கிடையாது.கீதையே இதற்குச் சான்று.

 

 

Rali :

@SKC:

அரியும் சிவபிரானும் ஒன்று அரனின்

சரிபாதி அன்னையும் அப்பனும் ஒன்று

அரிதங்கை நாரா யணியும் திருமால்

அரியுமே ஒன்று இதைதினம் எண்ணும்

பெரியோர் அனைவருமே ஒன்று.

 


 

கூற்று

 

S K C:

கூற்று வந்து இங்கு கொண்டு ஏகும் நாளை

மாற்றல் எளிதாமே

– போற்றி

சிற்றம் பலத்தானை சிந்தையில் நினைந்து

சற்றும் மறவா திரு.

 

 

Rali :

@SKC:

கூற்று பற்றியுன்

கூற்று பேஷபேஷ்!

 

Rali:

காலமானோர் பற்றி எரியும் இடுகாட்டில்

ஆலவாய் அண்ணலே ஆடியது போதும்நீ

ஓலவொலி கேட்டிலையோ காலன் அலறவே

பாலனைக் காக்கப்போய்ச் சேர்.

 

கயிலாய நாதனுக்காய் மார்க்கண் டனுக்கும்

உயிரெடுக்க விட்டிடா சாவித் திரிக்கும்

வயிறு பசித்த நசிகே தஸுக்கும்

துயிலறியா நானஞ்சும் சோகக் கதையைப்

பயின்றீரோ நான்பாவ மன்றோ?

இப்படிக்கு,

உங்கள் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கும்

யமதர்மராஜன்.

 

 

SKC:

@ Rali

ஆத்திரமே கொள்ளாது அறிவதனைக் கொண்டு

காத்திருந்த காலனையும் ஏய்த்தவர் தம் காதையினை உன்

பாத்திறனால் நீ பகர பரவசமும் அடைந்தேன் சிவ

தோத்திரமும் செய்வோரை தொடுவானோ அக்காலன் ?

 

 

BKR:

@ராலி

எமபயம் கொண்டஞ்சும் மாந்தர் நடுவே

எமனின் பயமுரைத்தாய் வாழி.


 

சிவனுக்கு வக்காலத்து

 

Rali:

வாட்டம் எதுவுமிலா தேவர் உலகத்தில்

ஆட்டமும் பாட்டமும் என்றும் சுகவாழ்வு

ஈட்டினார் சூழாங்கே ஆட்டம்நீ போடாது

போட்டுப் படுத்தும் நிலவுலகில் நள்ளிரவில்

சூட்டுடன் வேகும் பிணத்தருகில் பேயுடன்

ஆட்டமேன் ஐயா உனக்கு.

 

 

 

BKR:

@ராலி

அத்தனை வம்புக் கிழுக்காதே என்றுநான்

எத்தனைதான் சொன்னாலும் கேளாயோ

– சித்தனன்றோ

பேயோடும் அந்தப் பிணத்தோடும் ஆடுவான்அத்

தேயாப் பிறைசூடும் தேவன்.

 

ஆருக்கும் தொல்லையின்றி ஆனந்த மாயாட

ஆரூரன் தேர்ந்தான் சுடுகாட்டை

–  சீரரங்கன்

தங்கச்சி கைப்பிடித்தும் தாழ்ந்து எளிமைசொன்ன

என்கட்சிக் காரன் சிவன்.

 

 

 

SKC:

கண்டதைத் தின்று கழுத்தில் இறங்க அவன்

உண்டதை நிறுத்தி உயிர் காத்த அன்னையை

விண்டவர் உண்டோ வியந்திங்கு நானுமச்

சண்டியின் பாதம் சரண் அடைந்தேனே.

 

 

BKR:

@  SKC:

இறப்பே இலாதான் விடமுண்டால் காக்க

இறைவி மிடறுபற்ற வேண்டுமோ என்னில்

முறையதுவே காணீர் எமனையவன் எற்றி

எறிந்த திடக்காலால் தான்.

 

 

Rali :

@BKR

முக்கால ஞானியர்க்கும் ஒன்றும் புரியாத

சிக்கல் நிறைந்தான் பெரும்பித்தன் ஆயினும்

வக்காலத் தோவாங்கு வாய்.


 

நாத்திகம்

 

SKC:

நாத்திகம் பேசும் நல்லோர் இவரும்

சாத்திரம் ஏதும் சற்றும் அறியார்

நாத் திறம் ஒன்றே  நம்பிய துணையாய்

வாய்த்ததோர் பிறவியில் வாதம் செய்து உயிர்

மாய்த்தும் இறையை மதியார் எனினும்

ஆத்திகம் மறுத்து ஆயிரம் முறை சிவ

தோத்திரம் செய்து தூயோர் ஆனாரே !

 

 

BKR:

@SKC

நாத்திகம் இந்நாளில் வாய்ப்பேச்சே நானிலத்தில்

நாத்திகனாய் நின்றோன் ஒருவனே

– ஆர்த்த

நரஅரியை நேர்கண்டும் நம்பிக்கை கொள்ளா

இரணியன்போல் நாத்திகனைக் காட்டு.


 

தமிழா தமிழா

VKR:

வானுறை வானவரும் வாழ்த்துவரோ நாமறியோம்

தேனுயர் கவிசேய்யும் நண்பர்காள்

-உய்வதற்கு

வெண்ணீரும் நாமமும் வேண்டுமோ ஐயமின்றித்

ண்ணீரைத் தருமே தமிழ்.

 

 

BKR:

@VKR:

மொழியொன்று வேண்டுமோ மௌனமாய் நோக்கப்

பொழிவான் அருளைப் பெருமான் –

அழியாத

மெய்யன்பு கொண்டவர் மூங்கையோர் ஆயினும்

உய்விப்பான் உள்ளுறை நாதன்.

 

 

Rali :

வெண்ணீறும் நாமமும் இட்டார் வளர்த்ததே

பண்ணும் தமிழும் இறைபக்தி இல்லாத

மண்ணில் தமிழும் வளராது வேறொரு

மண்ணும் வளராது திண்ணம்.

 

 

Rali :

@VKR:

தண்ணீர் தரும்தமிழ் என்றாய் நம்மக்கள்

கண்ணீர் சொரிந்தும் பக்கத்து நாட்டவர்

தண்ணீர் தரவில்லை அன்றோ.


 

கந்தனை நிந்தனை

 

SKC:

வந்த வீடு சொந்த மின்றி

வெந்த பின்பு இந்த உயிர்

எந்த வீடு சொந்த மென்று

முந்தை வினை பந்தம் கொண்டு

அந்த மின்றி சிந்தை செய

இந்த நிலை தந்த குகா !

இந்த வினை வந்தழிக்க

கந்தனே நீ வந்திடுவாய்

எந்தனையே தந்திடுவேன்

உந்த னருள் தந்திடுவாய் !

 

 

Suresh :

@SKC:👏👏

சந்த முந்தன் சொந்த மென்று

வந்து இங்கு இந்த வேளை

நந்தி சிவன் சொந்த மகன்

கந்த வேளை நொந்த தென்ன?

சந்தமது தான் போக இந்த வுயிர்

பந்த மெலாம் தந்த குகன்

எந்தை புகழ் சந்ததமும்

சாற்றிடுவாம்.

 

 

Rali :

@SKC, Suresh:

அண்ணனின் சந்தமும் தம்பியின் சந்தமும்

எண்ணயெண்ண ஆனந்தம் தா‌ன்.

 

SKC:

@Suresh

அந்தம் இன்றி சந்தக் கவி

வந்து விழ உந்தல் அவன்

தந்த முகன் சொந்த மவன்

சுந்தரன் என் சிந்தனையில்

சந்தமது தந்த குகன்

எந்த நிலை வந்திடினும்

கந்தனை நான் நிந்தனையாய்

நொந்த துண்டோ ? முந்தி இது

எந்தன் நிலை உந்தன் கவி

தந்த பொருள் விந்தை யிது !

விந்தை யிதாம்.

 

 

Suresh :

@SKC:

கந்தனையோ அன்றி உந்தனையோ என்றும்

நிந்தனைதான் செய்ய உவந்திடுமோ நெஞ்சம்?

செந்தமிழ்க் கவியென்றாலே சந்தமாய்ப் பொழிவதங்கே

சந்திர சேகரன்றிவே றெந்தவோர் கவியுமறியேன்.

உந்துதல் தானெனக்கு தந்தவுன் கவியால்நானும்

சந்தமாய் எழுதவெண்ணி நொந்துதான் போனேனந்தோ!

 

 

 

SKC:

@Suresh

உடன் பிறப்பே ! வருந்தாதே ! உன்னை நானறிவேன்

கடன் பட்டேன் உனக்கிங்கு கவியொன்று முளைத்ததுவே வாழ்வின்

தடம் பட்ட வேதனையில் தாளாது நானெழுத என்னை

புடமிட்ட புண்ணியனே ! போற்றினேன் நீ வாழி !

 

 

BKR:

சந்தங்கள் தேனாகத் தானாய்க் கவிதைதனில்

முந்தி விழுமந்த விந்தைகண்டேன் –

இந்திரனும்

சந்திர சேகரனும் சேர்ந்துகவி பாடுவது

செந்தமிழ்த்தாய் தந்த வரம்.

இந்திரன்= சுரேசன்

 

 

Suresh :

@BKR:

அண்ணணின் சட்டைநானும் அணிந்திட விழைவதுண்டு

சின்னவன் தானே நானும் அண்ணனுக் கிணையாவேனோ?

சொன்னவர் நீர்வசிட்டர் அன்னவர்க் குரைத்தேன்நன்றி.

 

 

SKC:

@ BKR

இனித்தது உன் கவிதை என்னருமை நண்பா !

பனித்தலையோன் புகழ் பாட பாரினில் ராலி கண்டு

தணிக்க தமிழ் தாகம் தடுமாறி நானெழுத

பணித்தான் அக்குமரன் பாவமொன் றறியேன் நான்.

 

 

SKC:

@BKR

சுப்பிர மணியன் இவன் சொல்வதை நம்பாதீர்

முப்புரம் எரித்தவனே முயன்றும் தோற்க பழநி

– தப்பிய

இளையவன் மயிலுக்கு இணையாமோ இங்கு

எலியெனும் மூஞ்சுறு தான்.

 


 

பிணப்புகை

 

Rali :

பிணப்புகை தானோ மறைத்தது ஆடும்

பணப்படம் தானோ மறைத்தது நம்முள்

பிணக்கமோ உன்முன்பன் னாள்நின்றும் நீயோர்

கணமேனும் பாராத தேன்.

 

 

 

BKR:

ராலிக்கு என் கட்சிக்காரர் பதில்:

பிணப்புகையும் அன்றி பணப்படமும் நாளும்

எனக்கும் உனக்குமிடை வாரா –

துனக்காயுன்

உள்ளே உறைந்தென்றும் உன்னையே பார்க்குமெனைப்

பிள்ளைநீ பாராத தேன்?

 

 

Rali :

@BKR:

சிக்கா தொளிந்திடும் சித்தனுக்காய் எத்தனை

வக்காலத் தாய்வாங் குவாய்?


 

தாத்தாவின் பேத்தி

 

Rali :

@தமிழின்பன்பர்காள்:

 

ஆட்டமாடும் நாதன் அருளால் அடியவன்

பாட்டனானேன் இன்று இனிதே.

 

 

 

BKR:

ஆரூரன் நல்லருளால் தோன்றிய அக்குழந்தை

பேரனா பேத்தியா கூறு.

 

பேரனோ பேத்தியோ     நின்செல்வி பெற்றசிசு

சீர்பெற்று வாழி சிறந்து.

 

 

 

Suresh :

பேரனோ பேத்தியோ இல்லா ஈசனப்

பேரினை உனக்களித்தான்.

 

 

 

SKC:

ஆத்தா அபிராமி தருவாய் ராலித்

தாத்தாவுக் கென்றும் மகிழ்வு.

 

 

Rali :

@BKR, SKC, Suresh

 

ஏத்திடுவேன் ஈசனை அன்பாய் எனக்கொரு

பேத்தியைத் தந்தான் அவன்.

 

 

BKR:

@ராலி

ஈடிலா ஈசன் அருள்பெற்றுன் பேத்தியும்

நீடூழி வாழ்க நிலைத்து.

 

 

VKR :

பேத்தி வளர்ந்து பெயரெடுப்பாள் திண்ணம்

தாத்தன் என்னோற்றான் என.

 

 

SKC:

@ராலி

 

அன்பே சிவமென்ற அருமை நண்பா !

உன்பால் இங்கு உளம் கனிந்து வந்து

அன்பாய் பிறந்தாள் அன்னை காமாக்ஷி.

 

 

தந்தாய் நீயெமக்கு தடையிலா மகிழ்ச்சி

வந்தாள் எம்அன்னை வஸந்த நவராத்திரி.

 

 

Rali :

என்னோற்றேன் நானுங்கள் தீந்தமிழ் வாழ்த்துக்கள்

இந்நேரம் இங்கே பெற.

 

 

Pithan:

@Rali

அன்னை இராஜராஜேஸ்வரி இது நாள்வரை எந்த எதிர்

பார்ப்புமின்றி தாங்கள் செய்த தொண்டினை

ஏற்று தங்களுக்கே  பேத்தியாக வந்து

தங்களுடன் விளையாட அவதரித்து விட்டாள்.

வாழ்த்துக்கள்.

 

 

Rali :

@VKR

இரவா எனுமொரு வார்த்தை சொல்லி

இரவா எனுமிரவா தோசையைச் சொன்னாய்

பரவாயில் லையுந்தன் திட்டம் அறிந்தேன்

தரமாயோர் ஓட்டலில் மீண்டும் பார்க்க

வரவாயென் றாய்நானும் எண்ணினேன் அஃதே

வரவேண்டும் நண்பர்காள் மீண்டும்.

 

 

 

SKC:

இறவா வரம் வேண்டும் இன்ன பிறர் போல்

பிறவா வரம் கேட்டு பெம்மானை இறைஞ்ச

மறவாத நீ இங்கு மகிழ்வுடன் தரும்

திறவாது மடங்கி திளைக்கும் எண்ணையில்

இரவா தோசையை எண்ணியே நானும்

இரவாய் பகலாய் ஏங்கித் தவித்தேன் வெறும்

இரவா தானா ? ஏதும் இனிப்பும் உண்டோ ?

பரவாயில்லை உனைப் பார்த்தலே மகிழ்ச்சி புது

வரவால் உந்தன் வாழ்வு செழிக்க

மறவாது தினம் மாலவனைப் பணிவேன்.

 

 

Rali :

@SKC:

இனிப்புமுண்டு நீவருவாய் என்றாலோ ஃபோர்ட்டீன்

மினியிட் லியுமுண்டு நண்பா.

 


 

 

 

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s