Jan 2017 – Rali – Venpa

ராலியின் வேண்வெண் முயற்சி #241:

நம்பிக்காய் பால்பழம்

    உண்டாய் உனதருமைத்

தம்பிக்காய்ப் பெண்ணைத்

    துரத்தினாய் ஔவையைத்

தும்பிக்கை ஏற்றி

    அனுப்பினாய் அப்பனே

நம்பினேன் கைவிடாதே

    என்னை.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #242:

விற்பாய் விறகு

    நடந்து தெருத்தெருவாய்

விற்பாய் வளையலை

    வீடுவீடாய் மாணிக்கம்

விற்பாய் அரசனுக்குப்

    போதும் வியாபாரம்

கற்பிப்பாய் பக்தி

    எனக்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #243:

மதியாத மாமனாரும்

    காலால் மிதியும்

சதியென ஓடும்

    மகனும் முதுகில்

பதிந்த பிரம்படியும்

    தன்தலைநீ கிள்ள

விதியின் சதியாம்

    கவனி.

(விதி = ப்ரஹ்மா.  ப்ரஹ்மாவுக்கு 5 தலைகள். அவர் பொய் சொன்னதால் ஸ்வாமி ஒரு தலையைக் கிள்ளி விட்டார்)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #244:

எளிதில் களிக்கும்

    தனிகுணமும் வெள்ளைப்

பளிங்கொத்த மேனியும்

    கல்லால் அடியில்

தெளிவூட்டும் மோனமும்

    தேவ நதிநீர்

தெளிக்கும் சடையும்

    கழுத்தை வளைத்து

நெளிந்திடும் பாம்பும்

    அணிவாய் அருள்வாய்

துளியேனும் பக்தி

    எனக்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #248:

யாரும் வராத

    அமைதி நிலவுமிடம்

ஊருக்கு அப்பால்

    மயானமென்று போனாய்நீ

தீருமுயிர் தீர்ந்தபின்

    நிச்சயம் அத்தனை

பேரும் வருவோமே

    அங்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #249:

படமெடுத்து என்னுள்ளே

    உன்னை நிறுத்தி

விடவிடாது ஆடுமுன்

    திட்டம் அறிந்தேன்

படமெடுக்க மாட்டேன்

    பயமின்றி உந்தன்

நடனம் நிறுத்தி

    அமர்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #250:

நான்யாரென் றேகேட்டுப்

    பேருண்மை காணுதல்

தான்வாழ்வில் பேரின்பம்

    என்றுரைத்த மெய்ஞ்ஞானக்

கோன்ரமணா உன்னடி

    போற்றி.

 

 

நூல்கோத்த ஊசியின்

    பின்னே அறுந்திடாது

நூல்போகச் செய்யிறை

    வாழி.

 

வங்கக் கடல்கடைந்த

    மாதவன் ஆசியவன்

தங்கை மணாளனென்

    நாதனீசன் ஆசியுடன்

செங்கதிர் சூரியன்

    ஆசிசேர்ந்து பொங்கட்டும்

மங்களம் எங்கும்

   மிகவே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #253:

ஏகா அநேகா

    திருவடி வேண்டினேன்

மாகாளி தோற்கவெட்டா

    தூரம்கால் தூக்கினாய்

ஆகாது நான்தொடல்

    என்றே உமையொரு

பாகா மறுகால்

    தொலைத்தாய்.

 

@ தமிழின்ப அன்பர்காள்:

தமிழின்ப அன்பர்கள்

    இல்லத்தே பொங்கட்டும்

தமிழுடன் பொங்கலும்

    சேர்ந்து.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #254:

நெகிழ்ந்துனைப் பாடிய

    சுந்தரர் வாட

மகிழ மரத்தில்

    ஒளிந்தவரை ஏய்த்து

மகிழ்நல் மனத்துடையோன்

    வாழி.

 

⁠⁠⁠ராலியின் வேண்வெண் முயற்சி #256:

தருமத்தின் மேன்மை

    அறிவோம் இறைவன்

வருதல் உலகில்

    முயன்று உழைத்தல்

தருமத்தைக் காக்கவே

    என்றுணர்ந்து காப்போம்

தருமம் உயர்ந்தது

    என்றே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #257:

ஆனந்தத் தாண்டவம்

    கண்டதும் கண்ணனும்

ஆனந்தம் கொள்ளநீ

    கண்ணனின் காளிங்க

ஆனந்த நாட்டியம்

    கண்டுவக்க வந்தது

ஆனந்த பக்திபாவம்

    மண்ணில்.

 

அவல்தந்த ஏழை

    குசேலனுக்குக் கண்ணா

நவநிதி தந்தாய்நீ

    வாழி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #259:

விண்ணில் வளரும்

    பிறைமதியும் விண்ணின்கீழ்

மண்ணில் வளரும்

    இறைநதியும் மண்ணின்கீழ்

மண்ணுள் வளரும்

    இரைப்பாம்பும் மேலணிந்து

அண்ணலிம் மூவுலகும்

    காப்பான்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #260:

ஒருபிள்ளை அத்தை

    கணவனைக் குட்ட

ஒருபிள்ளை மாமா

    கரணமிடச் செய்ய

ஒருதலையை மைத்துனன்

    வாடநீ கிள்ள

இருமாது சக்களத்தி

    சண்டை இடவுன்

திருக்குடும்பம் தெய்வீகம்

    தான்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #262:

பாண்டியன் வேண்ட

    இடதுகால் தூக்கிய

தாண்டவம் மாற்றி

    வலதுகால் தூக்கிய

தாண்டவம் செய்தருள்

    செய்த மதுரைவாழ்

ஆண்டவா உன்னிருகால்

    போற்றி.

 

⁠⁠⁠ராலியின் வேண்வெண் முயற்சி #263:

தாழ்ந்தது உன்னுலகு

    என்றே அகத்தியனை

வாழ்த்திநீ இவ்வுலகு

    தாழ்த்த அனுப்பினாய்

தாழ்ந்துதாழ்ந்து தாழ்ந்தேதான்

    போனது போதுமையா

தாழ்த்தியது வேண்டும்

    உயர்த்த.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #264:

சம்பந்தி வேடுவன்

    வந்தமைந்த இன்னொரு

சம்பந்தி சாபம்

    பலபெற்ற இந்திரன்

சம்பந்தம் எல்லாம்

    சம்மதமே என்றாலென்

சம்பந்தம் வேண்டாம்

    எனாதே.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #266:

வறுத்தும் வினையொரு

    நாளொழியும் என்று

பொறுத்தாரே பூமியாள்வார்

    காண்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #268:

சிரித்தாய் குமிண்சிரிப்பாய்

    மூன்று புரத்தை

எரித்தாய் மதயானை

    போர்த்திய தோலை

உரித்தாய் பெருமானே

     நால்வர் அறிய

விரித்தாய் மறைப்பொருள்

    அன்று.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #270:

இருமணம் கண்ட

    பொழுதும் முதலில்

ஒருமணம் கண்ட

    பொழுதும் இராத

ஒருசுகம் கண்டாயோ

    ஆண்டியாய்க் கந்தா

ஒருவனாய் நின்ற

    பொழுது.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #271:

தனித்துநான் யாவுமாய்

    நின்றபோதும் இன்றும்

பனித்தலையன் பாதம்

    துணை.

 

 

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s