Nov 2016 – Exchanges

நரி பரி

ராலி:

ரியைப் பரியாக்கிக் காத்தபின் நீயேன்

பரியை நரியாக்கி வெஞ்சிறை இட்டாய்

புரியவில்லை உன்செயல் ஈசா.

 

BKR:

வாசகர்க் கோருதவி செய்தாலும் பாண்டிய

தேசத்தைக் கைவிடல் ஆகாதென்- றீசன்

நரியைப் பரியாக்கி னாலும் அவரைச்

சரியாய்த்தான் வைத்தான் சிறை.

 

ம்பிரானுக் காலயம் கட்டிடினும் தன்னையே

நம்பியவர் ஏமாறச் செய்ததனால் வம்பாய்

அசுவத்தை மீண்டும் நரியாக்கிற் றந்த

விசுவன் விதித்த விதி.

 

ராலி:

புரியவில்லை என்றுதான் கேட்டேன்நான் நண்பா

பரிநரி ஆக்கிய மோசடியா ளுக்கு

வரிந்துகட்டும் உன்பதில் நன்று!

 

BKR:

புரியா தெளிதில் அவன்செய்கை ஆனால்

சரியல்ல தாகாதெந் நாளும் – பரிவுக்கும்

நீதிக்கும் பாதியிடம் தந்தவன்தான் மங்கைக்குப்

பாதியுடல் தந்த சிவன்.

 

ராலி:

ரியாக ஆக்கியோ ஆயிற்று என்று

பரியாய் அவைகளை விட்டு இருந்தால்

தெரிந்து இருக்காதே எல்லாமே அங்கே

சரியாய் இருந்திருக் கும்!

 

BKR:

சொந்தமில்லாக் காசுகொண்டு கோவில் எழுப்புவது

எந்த விதத்தில் சரி?

 

ராலி:

ந்தப் பணம்வரியாய் மக்கள் அரசுக்குத்

தந்த பணமென்றே மக்களுக் காய்க்கட்டித்

தந்தார் அவரந்தக் கோயில்.

 

BKR:

கோவில் எழுப்பிடச் செல்வம்  அவரந்தக்

கோவிடமே கேட்டல் முறையன்றோ? – பாவம்

குதிரைக்காய்த் தந்தபணம் கோவிலுக்கென் றாயின்

பதறாதோ மன்னன் மனம்?

 

VKR:

ரியாகும் பரியாகும் மாந்தர்தம் உள்ளம்

பரியாகும் பொதுநலம் நாடில் – மீண்டும்

நரியாகும் பிறர் பொருளை வீழின் இதையே

சரியாக அறிவோம் நாம்.

 

SKC:

ரிமையே இல்லாத இன்னொருவர் பொருள் கொண்டு

சரியில்லை பூசித்தல் சகத்தினில் எனில் உலகின்

பொருளெதுவும் நமதில்லை யிங்கு.

 

BKR:

டைத்தெடுத்த உண்மையீ தென்றாலும் பாரில்

கடைத்தேங்காய் கொண்டுகணே சர்க்கு – உடைப்பவனை

ஊரார் உதைத்திடுவர் உன்கூற் றுயர்ந்ததாம்

வேறோர் தளத்திற் பொருந்தும்.

 

SKC:

ப்பொருள் நான் கொண்டேன் ஆயினும் தன் தொண்டன்

எப்பொருளும் எனதன்று என்றே மனத்தெண்ணி

இப்படிச் செய்தல் இயலுமென் றீசன்

தப்பெனக் கொள்வரோ தான்.

 

ராலி:

முதுமறையோன் கோயில் எழுப்பவதின் ஏதும்

பொதுநல எண்ணமுண்டோ துன்பத்தில் வாடும்

பொதுமக்கள் போய்முறையிட் டுத்துயர் தீர்க்க

இதுபோலே தும்வழி உண்டோ?

 

SKC:

ரியோ நரியோ

உரியோன் ஒருவன்

சரியோ தவறோ

அறியார் எவரும்

விரியும் சடையோன்

விளையாடலிலே

கரையும் மனமும்

கதியானதுவே.

 

 

பிட்டு

 

ராலி:

ல்லால் அடிபட்டுக் காலால் உதைபட்டுக்

கொல்லும் விடமுண்டும் நம்மையொன் றும்செய்ய

வில்லை முதுகிலடி பட்டது மட்டுமேன்

எல்லோர்க்கும் பட்டது சொல்.

 

BKR:

ன்றாம் பிரம்படிக்கே ஓய்ந்த உலகம்நீ

தின்றபிட்டின் தீஞ்சுவையைக் கண்டிருப்பின் – இன்னுமென

வந்திக்குத் தொல்லைதரு மென்றோ அரனேநீ

அந்தச் சுவையொளித்தாய் சொல்.

 

ராலி:

பிட்டின் சுவையாரும் சற்றும் அறியாது

விட்டதோடு விட்டு இருந்தால் நியாயமே

பட்ட அடியை உலகமெங்கும் நீபங்கு

இட்டது தானநியா யம்.

 

BKR:

னக்காய்ப் பரிந்துநான் என்னவுரைத் தாலும்

மனதாற ஏற்கவில்லை ராலி – எனவே

பிரம்படியை ஊர்க்களித்த காரணத்தை ராலிக்

கரன்நீயே சொல்லி விளக்கு.

 

பித்தன்:

க்தனுககோர் அடி விழுந்தால் பகிர்ந்து

          ஏற்பான் இறைவன்

பக்கமாய் பார்த்துநின்ற ஊரார்க்கும் பகிர்ந்து

          அளிப்பான் பரிசதனை.

 

ராலி:

மனம்போன போக்கில்

திருவிளை ஆடல்

தினமாடும் ஈசா

உனக்குப் பரிந்து

தினம்பேசும் பீகேயா

ரைக்கா!

 

 

ராலி:

பிட்டு கொடுத்தது கல்லால் அடித்தது

தொட்டுப்பின் காலால் உதைத்தது அன்பரின்

மட்டிலா பக்தியாலாம் மன்னனோ அன்றுகோபப்

பட்டடிக்கப் பட்டோம் அடி.

 

BKR:

பிட்டுப் பிரம்படி லீலையை ராலிக்கு

எட்டும் படிவிளக்க யான்வேண்டதட்டாது

தாமத மின்றித் தெரிவித்தென் நண்பனைத்

தாமெழுத வைத்தாய் கவி.

 

ராலி:

நானும் இருந்திருப்பேன் நீஅடி பட்டபோது

நானும் அடிபட்ட தெண்ணி மகிழ்கிறேன்

மீண்டும் அதுபோல் அடிபட வேண்டும்நான்

மீண்டும் அடிபட நீ வா.

 

சந்தித்தல்

 

BKR:

ஒத்த மனமுள்ள நண்பர்நாம் சந்திக்கச்

சித்தம் எனவுரைத்த தோழர்காள் – எத்தனை

பேர்எங்கு எப்போது சந்தித்தல் கூடுமென

நீர்இன் றுரைத்தால் நலம்.

 

BKR:

சந்தத்தில் சிந்திக்கும் சந்திர சேகரரே

சந்திப்பில் சேர்வீரோ நாளை.

 

SKC:

@BKR

பாசமுடன் அழைத்த

ராசகோபாலரே !

ஈசன் அருள் அதுவெனில்

இணைந்திடுவேன் நானும்.

 

Rali:

கவிதையில் பேசமாட்டேன்

      நாளை அறிவீர்

தவித்திடுவேன் மீதிப்பேர்

      பேசினீர் என்றால்

உரையாடல் வேண்டாம்

      கவிதையில் நேரில்

உரைநடையே போதும்

      நமக்கு.

VKR:

எமக்குத் தொழில் கவிதையல்ல மென்மபொறியே

நமக்கு நாளெல்லாம் நாட்டம்-உரைநடையே

சரக்காகும் நம்தொழின் சந்தையிலே இதையே

உரக்கச் சொல்வோம் உரையில்.

 

BKR:

ராலி,

கவிகாள மேகமுடன் காளியின் தாசன்

புவிபோற்றும் கம்பனொடும் வந்தால் – தவிப்புறலாம்

தெள்ளுதமிழ் வாரிதியில் தேடிக் கிளிஞ்சலைக்கொள்

பிள்ளைகளைக் கண்டேன் பயம்?

 

Suresh:

எங்கும் நிறை ஈசன் புகழ்பாடி

பங்கம் எதுமில்லாதே சந்தம் தோய்த்த

தங்கம்நிகர் தேன்சொல்லால் கவிகள் யாத்து

சங்கம்வளர் புலவீரே சாதித்தீரே.

 

Rali:

இரவலேதும் இல்லா

      சுயமாம் கவிதை

சுரக்கும் தமிழின்பக்

      கூட்டமின்று மாலை

சரவண என்னும்

      பவனில் இனிதே

பரந்த சேதிபேசி

      னோம்.

 Rali:

ஆயிரம் ஐநூறு

      பற்றியே பேசாது

ஆயிரம் வேறு

      கதைகள் பேசுதற்கு

இந்நாட்டில் நம்மைத்

      தவிர வேறெவரும்

பின்னாலும் சேர்தல்

      அரிது.

 

SKC:

ஈராயிரம் தந்து இருந்த சில்லரை பெற்று

ஆறாத சிற்றுண்டி அளித்தே மகிழ்வித்து பிறர்

பாரா எம் கவிதை பாருக்கே அளிக்க

சீராய் செப்பிய சிநேகிதனைக் கண்டு

மாறாக் காதலுற்றேன் மாலை இவ்வேளை நான்.

 

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ

 

BKR:

எல்லா அறமும்விட் டுன்னைச் சரணடைந்தால்

அல்லவை நீக்குவே னென்றுரைத்தாய் – அல்லவை

நீக்கிடுவாய் ஐயமில்லை எஞ்சிடும்  நல்லதும்நீ

போக்கினால்தா னேயெனக்கு முக்தி?

 

Rali:

இருமையே பாவமாம் வேறொன்றும் இல்லா

ஒருமையே முக்தியாம் கேள்.

 

பித்தன்:

கலியுகக் கண்ணன் பி.கே.ஆர்.

வலிமையான கருத்து உம்முடையது.

இருமையே பாவ புண்ணியமாம் இரண்டுமற்ற

வொருமை முக்தியாம்.

 

Rali:

@VKR :

நானேதான் எல்லாமே என்ப தொருமையாம்

நானில்லை ஏதுமில்லை என்னும் வெறுமை

கடவுளும் இல்லையே என்னும் அதைப்போய்க்

கடவுள் எனலாகா தே.

 

BKR:

வண்ணம் கலைந்துவெறும்

     காட்சிகள் நின்றபின்னே

 மின்னிடும் வெள்ளைத்

         திரையதுபோல் – எண்ணங்கள்

மஞ்சாய் மறைந்திடவும் மாறாத்

                        தனிமையிலே

எஞ்சிநிற்கும் வானம்

“அது”.

 

Rali:

நெஞ்சம் அறிவதும் மற்றுமறி யாததும்

மிஞ்சி இலாது மறைந்தபின் ஒன்றாக

எஞ்சியுள்ள ஒன்றை  மறுத்து எதுவுமே

எஞ்சாது என்பது சூன்யம்.

 

Rali:

இச்சகத்தில் நாம்மனத்தால்

      வாயால் தொடுவதாய்

மிச்சமின்றி எல்லாப்

      பொருட்களும் உள்ளதால்

எச்சப் படாதிருக்கும்

      ஒன்றேயொன் றாம்பொருள்

அச்சச் சிதானந்த

     மே.

Suresh :

இரண்டோ அன்றோ இன்னும் பலவோ

இறையோ குருவோ எதுவும் இலையோ

அரண்டவர் மனதுறை இருளை அகற்றிடு

விளக்கே ஒளியோ விளம்புவர் யாரோ

 

Suresh :

அலைவது மனமதில் ஆயிரம் மொக்குகள்

விளைவதும் வீழ்வதும் விரிந்திடு மாயை

மலையது பரிதியை விழுங்குதல் உண்டோ

தொலைந்திடப் பிறவிபின் விளங்கிடு மாமே

 

Suresh:

அத்து விதவத் துவித விசேட

தத்து வங்கள் யார் எவர்க்கு?

செத்துவிட ஊனுடம்பு

செப்பிடுமோ பேதமதை

கல்லாதான் ஒட்பந்தான்

சொல்லாமல் சொல்லிடுவேன்

கொள்ளுவரோ தள்ளுவரோ

யானறியேன் யானறியேன்

கட்டிடமே எழுப்பவொரு

தேவைதான் சாரமே

கட்டியே முடித்தபின்

தேவையேன் பாரமே ஆயின்

முடித்தவர் யாருளர்?

முடிந்தவர் தானுளர்

 

ஆழம் அறியவொண்ணா

ஆசையாம் ஆழியில்

நாழியால் முகப்பரோ

நாமறியோம் நாமறியோம்

 

Suresh:

ஆழியின் ஆலமுண்  டமர்ந்தவென் ஈசனும்

ஆலிலை மேவிய கோகுல பாலனும்

இலையெனு மொருநிலை இருந்திடு மாமெனில்

மலையென நம்பிடு மாந்தரென் செய்வார்

உலையிடு அரிசி போலுணர் வாரே

 

புத்தன்

 

SKC:

தத்துவச் சாறினை தம்பி நீ தந்தனை

உத்தமம் உன்னுரை உவந்தேன் ஆயினும்

செத்த பின் சீவனும் செல்லுமோ வேறுடல்

மத்திலே கடையவே மாறிய வெண்ணையாய்

சித்தமும் தெளிந்து சிவனடி சேருமோ ?

புத்தனும் சொல்லுவான் “புரிந்து கொள் உண்மையை

அத்தமும் அற்றதாய் ஆத்துமன் இவ்வுடல்

மொத்தமும் அழிந்தும் பின் முன்வினைப் பயனதால்

நித்தமும் தோன்றிடும் நிலையிலா வாழ்க்கையாம்

சத்தியம்” என்றனன் சஞ்சலம் நீக்கவே.

 

BKR:

புத்தன் உரைத்தமொழி தத்துவமா காதென்றால்

பித்தன்நான் என்பீரோ நண்பர்காள் – சத்தியமாய்

தத்துவமென் றால்பொருளும் நீஅதுதான் என்றாக

அத்வைதம் அன்றோ அது?

 

Rali:

அம்பும் அதையெய் தவனும் தனதுடம்பில்

அம்புதைத் தோனும்அவன்வலியும் எல்லாமே

ஒன்றெனும் உண்மை உணர்ந்தவர் துன்பமின்பம்

என்றெதையும் காண்பதில்லை காண்.

 

அமுதா

ராலி க. நி. தெக்காலம்  #421

அள்ள அள்ளக்

      குறையா அமுதாயென்

உள்ளமெலாம் நிறைந்து

      அமர்ந்து அதன்

கள்ளமெலாம் நீக்குவா

      யென மழபாடியுள்

வள்ளலை ராலி

      வேண்டுவ தெக்காலம்?

 

பித்தன்:

@Rali

“அமுதாகவென் உள்ள மெல்லாம்” என்று எழுதலாம்

அமுதாயென் உள்ளமெல்லாம் என்றால்

உங்காத்து மாமி சண்டைக்கு வரலாம்

 

VKR:

கள்ளமெல்லாம் நீக்குவாய் என்று

சொன்ன பிறகு அதற்கு இடமில்லை அல்லவா!

 

Rali:

@பித்தன், VKR:

வள்ளலைப் பாடப்போய் மாட்டினேன் நானேதோ

கள்ளத் தனம்செய்தாற் போல்.

 

BKR:

@ராலி

வள்ளலைப் பாடினாலும் சொற்களைத் தெள்ளத்

தெளிவாய் அமைத்தல் நலம்.

 

Rali:

@அமுதாய்க் கவியெழுதும் நண்பர்காள் :

அமுதாயென் உள்ளமெலாம் என்றதைநான் யாரோ

அமுதாவைப் பற்றித்தான் சொன்னேன் எனநீர்

தமுக்கு அடிக்கலா காது,

 

VKR:

எங்கெங்கு நோக்கிடினும் சாம்பல் நிறம்

இருளுமற்ற ஒளியுமற்ற சாம்பல் நிறம்

உயிர்பச்சை நீத்ததொரு விபூதித் தூவல்

ஒவ்வொன்றாய் வீழ்ந்துவரும் இலையின் சோகம்

நேரகால நிறமணங்கள் காய்ந்துவிட்ட வெறுமை

நெடியதொரு பயணத்தின் இறுதிக் காண்டம்

எஞ்சியுள்ள இலைகள் விழக் காத்திருக்கம் நேரம்

எல்லாமே பார்த்துவிட்ட வாழ்வின் திகட்டல்

வாழ்ந்த பின்னர் வாழ்விலென்ன எஞ்சிடும் சாரம்

வசந்தகாலம் நோக்கிநிற்கும் ஒருதுளி ஈரம்.

 

Rali:

வாழ்ந்தபின் வாழ்வினில்

    எஞ்சுவது என்னவென்று

வாழ்வினில் கேட்டவண்ணம்

     எண்ணிய வண்ணமாய்

வாழ்வதே வாழ்வினில்

      சாரம்.

 

BKR:

உதிர்ந்திடுவோம் என வருந்தியே வாடும்

முதிர்ந்த இலைகளின் கூட்டத்தினூடே

சிதறாச்சிந்தனைச் சிரிப்புடன் ஓரிலை

பதறாதிருக்கும் பக்குவம் கண்டேன்

எதனாலிந்தச் சமநிலை என்னவும்

இதமாய்ச் சிரித்தே இயம்பிய திலையும்

அடுத்த நிலைதனை அறிந்தவர் தமக்கு

விடுத்து விலகுதல் விசனம் தராது

வேரிடம் செல்வது அன்றி விழுந்தால்

வேறிடம் செல்ல வாய்ப்பிலை யன்றோ?

வீழ்ந்தபின் மண்ணில் வேர்க்குர மாகி

வாழ்ந்திடும் தாய்மரக் கருவறைபுகுந்தே

சிசுவாய்த் தோன்றிஅத் தருவின் கிளையினில்

பசுங்கொழுந் தெனவே பரிமளிப்பேனே

வற்றிய இந்த உடலினை நீங்கி

முற்றிலு மிளைய வடிவினைப் பெறுதல்

எற்றுணை யின்பம் என்பதை நோக்கின்

பற்றுவதும் நமைப் பரவசம் தானே?

இலையதன் கூற்று இயம்பிடும் ஞானம்

நிலையாம் வாழ்க்கைச் சுழலது வன்றோ?

இலைகளுக் காகும் நீதி மனிதனின்

குலமதற்காகி நிற்பதை யறிந்தேன்

பிறப்பது இறைவன் கருணைய தாயின்

இறப்போ அவனின் அதிபெரும் கருணை.

அறிவோ மிதனை அவனது அருளை

நெறியோ டமைந்த வாழ்வதன் பொருளை.

 

 

 

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s