Nov 12 – Nov 30, 2016

பித்தன் 103.

பூதமைந்தும் கூட்டுசேர்ந்து

படைத்திட்ட பாரினிலே

வேதங்கள் வகுத்திட்ட

விதியின் வழியினிலே

நாதமொன்று சக்தியாக

வழிநடத்திச்

செல்கையிலே

பேதமென்ன பிரிவென்ன

பாசமாக

வாழ்ந்திடுவோம்.

 

பித்தன் 104.

சுற்றித்திரிந்தேன்

சுகமாய் நான்

சுதந்திரப்

பறவையாய்

சுற்றங்கள் ஒன்று

சேர்ந்து என்

கைகளிலே

விலங்கிட்டு

விற்றுவிட்ட மத்தளம்போல்

இருபுறமும் அடிவாங்கி

கற்றறிந்த கல்வியின்

பயனற்று

வாழ்வதுதான்

திருமணமாம்

திருமணமாம்

தெருவெங்கும்

தோரணமாம்.

 

பித்தன் 105.

ஒரு மைந்தனின் ஏக்கம்.

1) அன்னை என்னை

மடியிலேந்தி

அழகான பாடலினால்

அருந்துயில்

ஏகவைத்து

அரவணைத்துக் காத்த

உன்னை இன்று

என்மடியில் இறந்த

உன் தலைவைத்து

இதமாக உன்

காதினிலே இ

ராம

நாமம் கூறிடுவேன்

குறையேது நான்

செய்யினும் நிறையாக

ஏற்று நீ நற்கதி

அடைந்திடுவாய்.

2) வெள்ளைப் பொன்னி

அரிசிதனை வாகாக

வேகவைத்து

வெள்ளித்தட்டினிலே

வெண்தயிருடன்

கலந்து

வெள்ளி நிலா காட்டி

வாயிலெனக்கு

அளித்தாயே

இன்று உன் வாயினிலே

வேகாத அரிசியை

வீசிநான் அளித்தாலும்

வெறுப்பின்றி ஏற்பாயா

எனை ஈன்ற தாயே.

3) எந்தவேலையானாலும்

எந்தவேளையானாலும்

பசித்துநான்

இருந்தபோது

பரிவுடன் எனை

எடுத்து மார்பினிலே

எனை ஏந்தி

அமுதமெனக்கு

அளித்தாயே

இன்று உன் மார்பினிலே

தீயை நான் அளிக்க

என்னபாவம் செய்தேனோ

எனை ஈன்ற தெய்வமே.

 

பித்தன் 106.

காலையிலே மாலைவந்து

கழுத்திலுனக்கு

விழுந்தபோது

அலையலையாய்

கூடிநின்று ஆர்பரித்த

கூட்டம்தான்

மாலையிலே காலைநீட்டி

மரக்கட்டையாய் நீ

.இருந்தபோது

மாலைகளைக்

கையிலேந்தி

மௌனமாக

வந்தனர்.

(இதுதான் வாழ்க்கை).

 

பித்தன் 107.

கார்த்திகை முதல்நாள்

கருத்துடன்

மாலையிட்டு

நாற்பத்தெட்டுநாள்

நல்லதோர்

நோன்பிருந்து

பார்க்குமிடமெல்லாம்

பக்தர்கள்

கூடிநின்று

பார்த்திபன் மகனை

பார்த்து

மகிழ்ந்திடுவோம்.

 

பித்தன் 108.

பாலளித்த பசுவையும்

பாலூட்டிய தாயையும்

பாதுகாக்க மறந்தவனை

படைத்தவனே

நினைத்தாலும்

பாதுகாக்க

முடியாது.

 

ராலி க. நி. தெக்காலம்  #417

அருமறையின் ஒலியிலும்

      அயரா அலையிலும்

இருமையிலா நிலையிலும்

      நோக்கும் உருவிலுமோர்

உருவிலாது ஈரேழுல

      கெங்கும் மேவும்நீறேறு

திருமேனியானை ராலி

      தொழுவ தெக்காலம்?

 

VKR:

அலையலையாய் எழும்பிறவிக்

கடல்கடக்க என்றென்றும்

மலைமகள்கோன் பெருமானே

நடம்புரியோய் என்நாவில்.

பித்தன் 109.

மல்லிகைப்பூப்

பந்தலிட்டு மாவிலைத்

தோரணம் கட்டி

தில்லைவாழ் அந்தணர்

திரளாக்கூடிநிற்க

எல்லா தெய்வங்களும்

தேவர்களும்

முனிவர்களும்

உடனிருக்க

வல்புலிக்கால் முனிவரும்

பதஞ்சலியும்

பார்த்திருக்க

நல்லகணேசன்

நளினமாய் தாளமிட

தில்லைக்கூத்தன்

தன்னுடனுறை

சிவகாமியுடன்

திருவாதிரை நன்னாளில்

திருநடன ஆட்டத்தை

கண்டுமகிழ்ந்திட

அருள்புரிவாயா

கனகசபேசனே.

 

பித்தன் 110.

ஆயிரம் ஐநூறு இரண்டு

ஆயிரம் யாம் வேண்டோம் பல்

ஆயிரம் பலகோடி நூறு

ஆயிரம் கவிதைகள் நாம்

புனைந்து இனிது

வாழ்ந்திட

தாயினும் சாலச்சிறந்த

கலைவாணியை

வணங்கிடுவோம்.

 

பித்தன் 111:

வரமொன்று வேண்டிக்

காஞ்சி மாமுனியைக்

காணச்சென்றேன்

கரமதை அபயமாக்கிக்

கருணையுடன் காட்சி

அளித்திட்டார்

வரமதை மறந்த நான்

வீட்டிற் கேகிவிட்டேன்

இரவுக்குள் நான்

எண்ணம் நிறை

வேறப்பெற்றேன்

வரமாக நாமடைந்த

கருணைக்கடல்

காஞ்சி முனிவரை

மறவாமல் வாழ்ந்திடுவோம்.

 

Gopi:

விவரமறியா வயதில் வரமுனியை தரிசித்தேன்.

பேர்கேட்டார்  ஊர்கேட்டார் புரியாமல் திகைத்தேன்.

திகைத்ததினால் புரிந்தருளினார்

மலையூரான் பதமே நமதூரென.

அவன் பேர் பறைத்தலே நற்பிறவிப்பேரெய்த வழியென

திகைத்ததினாலேயே பெரும்பேரு பெற்றேனோஎன

திகைத்தலே மிச்சம்.

 

பித்தன் 112.

கன்னத்தில் கன்னம்

வைத்து

கருத்தினில் உன்னை

வைத்து

சினக்குழந்தையாக

மாறிவிட்டேன் நான்

மின்னலைப்போன்ற

.உந்தன்

புன்னகையைக்கண்டு

என்னையே நான்

மறந்திருந்தேன்

என்ன தவம் செய்து

உனை அடைந்தேனோ

முந்தைத்தவம் புரிந்து

எனை அடைந்தாயோ.

 

பித்தன் 113.

தினையளவுன் குறைகளை

பனையளவாக் கொள்ளும்

புவியினிலே

பனைமறத்தடியில் நின்றுநீ

பாலருந்தினாலும்

நினைவென்னவோ

கள்ளாக கொண்டிடுவர்

வினைதனை விதைக்காது

உனையே நீ நினைந்து

நினைவதனை இறையருள்

நிறுத்தி

மனைதனிலே மகிழ்வாக

வாழ்ந்திடலாம்.

 

பித்தன் 114.

ஏட்டிலுள்ள சுரைக்காய்

எக்கறிக்கு முதவாது

பாட்டிசொன்ன கதைகள்

பாதியிலே மறந்திடும்

காட்டினுள்ளே கடுமையாக

தவமியற்ற சென்றாலும்

வீட்டிலுள்ள மக்களின்

நினைவுன்னை

வாட்டிடும்

கூட்டினுள்ளே ஒளிவீசுமுன்

குலதெய்வம் தன்னை

காட்டியருளுமோர் நற்

குருவைநீ நாடிடுவாய்.

 

பித்தன் 115.

கொள்ளை கொலை

புரிந்திட்ட

கள்ள மகன் ஒருவனை

நல்லதோர் வீணை

ஏந்திய நாரத மாமுனி

இல்லத்தின் தத்துவத்தை

இனிமையாக விளக்கி

வால்மீகி என்ற மஹா

முனிவராக்கி

நல்லதோர் ராமகாவியம்

நாமடையச்

செய்திட்டார்.

 

பித்தன் 116.

பிள்ளை யாருக்குக்

கனி கிடைத்தது

பிள்ளையாருக்குக்

கிடைத்தது

அன்னையிடம் வேல்

வாங்கியவன்

சின்னவன் சிங்கார

வேலன்

தன்னந்தனியாய்

மலையில் நின்றவன்

மூன்றாமவன் முகுந்த

பாலன்

மூவரும் தேவரும்

போற்றும்

மூவரையும் வணங்கி

வாழ்ந்திடுவோம்.

 

Rali:

மலைவாழ் இருதம்பி சூழவாழ் யானைத்

தலைவரிக்கும் ஐங்கரன் வாழி.

 

Rali:

@BKR :

நயமில்லை ஓசையில்

      என்றாலும் சற்றும்

தயங்காது நான்பாவம்

      என்றென்னை மெச்சும்

உயர்ந்த பாவம்

      உனக்கு.

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s