Dec 2016 – Exchanges

நஞ்சு

ராலியின் வேண்வெண் முயற்சி #185:

நஞ்சைக் குடிப்பானேன்

      கைகால் உடம்பெல்லாம்

கெஞ்ச விறகுமண்

      எல்லாம் சுமப்பானேன்

துஞ்சா திரவிலாடு

      வானேன்பின் ரௌத்ரமாய்

எஞ்சாதெல் லாமழிப்

      பானேன்?

 

BKR:

@ராலி

நஞ்சோ சகம்காக்க மண்மதுரை வந்திக்காம்

துஞ்சாது ஆடல் உலகியங்க – மிஞ்சா

தழித்தல் அவனுள் லயித்தே வினைகள்

கழிக்கச் செயவென் றுணர்.

 

ஆன்ட்ராய்ட் – ஐஃபோன்

 

SKC:

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் கவிதை

ஆன்ட்ராய்டில் பார்த்ததால்.

 

BKR:

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்படைப்பை

ஆன்ட்ராய் டில்பார்த்த கவி்.

 

Rali:

ஐபோனுள் ளோரும் எளிதாய்க் கவிபடிக்க

வைப்போர் தொழில்நுட்பம் வாழி.

 

SKC:

வைஃபை இல்லாது வாசிக்க இயலுமோ

ஐபோன் இருந்தும் கவி.

 

தோசை

S K Chandraseka: #ப.பி.

பணியாரம் தோசையி லக்கொங்கை

தோய்ந்திடப் பார்ப்பர் பல்லி

பணியாரம் தோசையிலாச் செந்துவாய்ப்

பிறப்பார்க ளென்னோ

பணியாரம் தோசைமுன் னேனுனக்

கிட்டேத்திப் பழனிச் செவ்வேள்

பணியாரம் தோசைவரா காரன் னோர்க்

கென்ன பாவமிதே.

–  அந்தகக் கவி வீரராகவ முதலியார்

(விநாயகனுக்கு நிவேதனம் செய்து பழநி முருகனை வணங்காது பெண் இன்பமே பெரிதாய் எண்ணி அலைபவர் வெறும் செந்துவாய்ப் பிறந்து உழல்வர்.)

 

Rali:

@SKC:

என்ன இதநியாயம் பிள்ளையார் பூஜை

இன்னல் கொடுக்குமோ என்றும்?

 

Rali:

@SKC :

முழுமுதல் தெய்வத்தைப் பால்பழம் தந்தே

தொழுபவர் பல்லியாய்ப் பின்னர் பிறத்தல்

இழுக்கென்பான் தம்பிசாமி யே.

 

சிலேடை

BKR:

@ராலி

சிலேடைக் கவி செய்வது

இலேசு அல்ல என்றாலும்

கிலேசம் இன்றி முயன்றால் படிப்போர்

பலே எனப் பாராட்டுவர்.

 

SKC:

@ BKR

மூச்சு முட்டக் கவி படித்து

முழிபிதுங்கி உடல் வேர்த்து

பேச்சில்லாமல் தவித்து

பேரின்பம் அடைந்த வேளை

சீ சீ பழம் புளிக்குமென

சிந்தனை செய்யாது

ஆச்சு போதும் சிலேடையென

அலுக்காது மனமகிழ்ந்தேன்.

Rali:

@ சிலேடை ரசிகர்களே:

அத்திக்காய் காய்ஆலங் காய்புரிய வேயறு

பத்தோராண் டாச்சு எனும்போது என்தலை

சுத்தவைக்கும் பாட்டெதுவும் சற்றும் புரியாது

ஒத்து நமக்கு சிலேடை.

 

Rali:

பல்விதமாய்த் தன்னைச் சுவைப்போர் எண்ணவே

பல்பொருள் கொண்ட சிலேடை கிளர்ச்சியாம்

இல்ல குலப்பெண்போல் காண்போம் ஒரேபொருள்

நல்கவிதை யின்னெளிமை யாம்.

 

குளிர்

Rali:

ராலியின் வேண்வெண் முயற்சி #192:

பனிமலைப்பெண் மேனி தழுவிட இன்னோர்

பனிமலைப்பெண் நீராய்த் தலையில் அமர

தனியுலா தண்ணிலா ஒன்றும் அமர

அனிலமுண் பாம்பின் குளிர்மேனி ஊர

மனிதரும் நில்லாது நீருன்மேல் கொட்ட

இனிதாங்கா தேகுளிரென் றேநீ நடுங்க

இனிதாங்கா திவ்வாழ்வின் தாபமென இங்கே

தனித்துநான் சூடாய் விடும்மூச் சுனக்கு

இனியிதமாய் நன்றாய் இருக்கும்.

 

BKR:

@ராலி

சிவனுக்காக வக்கீலின் வக்காலத்து:

இமயத்தின் உச்சிமீது உருகிடாப் பனியதன்மேல்

உமையொடு உதகதேவி உடனுறைந் துவந்திருக்க

உதிரமும் உறையும் மண்ணில் உறைவிடம் கொண்டநாதன்

அதிகமாம் குளிரதொன்றே ஆனந்தம் என்றிருக்க

நிதம்நிதம் கவலைகொண்டு நீவிடும் தாபமூச்சு

இதம்தரும் சிவனுக்கென்று எண்ணுதல் நியாயமாமோ?

நித்தமுன் மூச்சால் சிவனின் நீளுடல் வேர்த்திடாதோ?

அத்தனின் அருளுக்காக அனல்மூச் செறியவேண்டாம்

உருகிடாப் பனியின்மீது உட்கார்ந் திருந்தபோதும்

உருகிடும் உள்ளம்கொண்டான் உண்மையாம் பக்தருக்காய்

ஆதலால் நண்பநீயும் அன்புடன் அவனைநோக்கிக்

காதலாய்ச் சிரித்தால்போதும் கனிவுடன் தருவான் தன்னை.

 

சொல்லடி

 

ராலியின் வேண்வெண் முயற்சி #193:

மாண்டதும் சாம்பலாய் ஆகப் போகுமென்னை

ஆண்டவா மூடியவுன் நெற்றிக்கண் சுட்டிடவே

சீண்டினேன் சற்றே கவிதையில் உன்தீக்கண்

தீண்டத் தகுமோயென் மேனி.

 

Suresh:

கல்லடி பட்டான்

பிரம்படி ஏற்றான்

சொல்லடி தாங்குவ னோ?

 

BKR:

@ராலி:

கல்லால் பிரம்பால் அடிபட்ட தெல்லாமே

நல்ல அடியார்க் கருளவெனில் – சொல்லால்

வலிக்க அடிப்பின் முனிவானோ உன்னைப்

புலித்தோல் அமர்ந்த சிவன்.

 

Rali:

கல்லால் பிரம்பால் அடிபட்டது அர்ச்சுனன்

வில்லால்வன் சொல்லால் அடிபட்ட தெல்லாமே

நல்லடி யாராலே நான்சற்றும் பக்தியே

இல்லேன் கதியென்னா கும்?

 

புத்தாண்டு

Rali:

வருஷம் புதுசு பிறக்குது என்றே

ஓருகவிதை நீவிர் கவிஞர்காள் நன்றே

தருவீர் மறவாதே நன்றி.

 

Rali:

நிதியோ மதியோ பிறப்புடன் வந்த

விதிமாற்ற ஏதோ வழியோ வேண்டேன்

பதினேழாம் ஆண்டினில் பார்வதி தேவி

பதியுன்மேல் பக்தியைத் தா.

 

BKR:

@ராலி

புத்தம் புதுவருடம் பங்குனி தீர்ந்துவரும்

சித்திரையில் தானே தமிழர்க்கு? – முத்தாய்ப்

புதியகவி பாடி அதனை அழைக்க

அதற்குள் அவசரமேன் சொல்.

 

BKR:

ஜனவரி மாதம் ஜனித்திடுமோ புத்தாண்

டனல்பறக்கும் சித்திரையில் அன்றோ? – எனவேநாம்

ஏவிளம்பி ஏப்பிரலில் தான்பிறக்கு மென்றுணர்ந்து

ஆவலுடன் காத்திருப்போ மே?

 

Rali:

@BKR:

நன்றாகச் சொன்னாயென் நண்பாயிப் புத்தாண்டு

அன்னியர் போற்றும் புதுஆண்டு என்றாலும்

சின்ன வயதில் இருந்தே பழகிப்போய்ச்

சொன்னேன் இதுபுத்தாண் டென்று.

 

Rali:

சத்துவ எண்ணம் வளர்ந்துநம் வாழ்வில

சத்து அறிந்து  உதற பதினேழாம்

புத்தாண்டில் புத்தி பிறக்கப் புதிரான

பித்தனடி போற்றுவோம் வாரீர்.

 

SKC:

வருடம் பதினாறில் வந்த துன்பம் யாவும்

உருகும் பனித்துளியாய் ஒரு நொடியில் மறைய

உறுமீன் வருமளவும் ஓய்ந்திருந்த நாரையென

இரும் மற்றோர் நாள் இங்குமக்கு புது வருடம்

வரும் பதினேழென்றே வாடும் மானிடர்காள்!

தரும் செல்வம் யாவும் தரணியில் தழைத்திடவே.

 

 

பித்தன் 123.

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்

தாண்டிவந்த நாட்கள் மனதிலசை போட

ஈண்டுவரும் நாட்கள் இனிதாய் இனிக்க

வேண்டிநிற்போம் நாம் வேங்கடவனை தினம்.

 

Rali:

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தீர்

அதிலும் பெரிதாய்ப் பெருவாழ்வு வாழ்வீர்

பதினேழாம் ஆண்டில் இனி.

 

பித்தன்:

@BKR

பதினாறு பேறுகள் நாமறிவோம்

பதினேழாம் பேறு யாமறியோம்

பதினேழாம் ஆண்டில் அறியவேண்டிய

புதியபேறை எமக்கு கூறலாமோ?

 

Rali:

பதினாறு பேறு அறிவோம் அறியோம்

பதினேழாம் பேறு எதுவென்று கேட்பின்

பதில்சொல்வேன் இத்தமிழ் இன்பக் குழுமப்

பதிப்பைப் படிப்பது தான்.

 

SKC:

நாளொரு படியென நாமும் கடந்து

வாழ்வினில் எல்லா வளமும் அடைந்து

கோள்வினை தீர்க்க குமரனை நினைந்து

சூழ் உலகெல்லாம் சுற்றம் நிறைந்து இவ்

வேளையில் மகிழ்வோம வேதனை மறந்து

நாளை பிறக்கும் நல் வருடத்தில் எந்

நாளும் நமக்கு நல்ல நாளே.

 

Suresh:

அரிதான பணமும் அதன்பின் னணியேதும்

அறியாத சனமும் மர்மம் விலகாத

பிரிவாலே வாடுநல் தமிழான குடியும்

துர்முகி யதுதந்த துயரத்தின் பாதியில்

வர்தாவும் விட்டெறிந்த விருட்ச மலைகளிடை

கிரிதரனைக் கோபாலன் குடை நிழலைக் காணாது

பதினாறு போயென் பதினேழு வந்தென்?

 

SKC:

அரிதான பணமும் அடுக்கியே பதுக்கும்

சிறியோரின் செயலால் செயலது இழக்கும்

விரிவானில் கிளை கொண்ட வெண்மேகம் போலே

தெரியாது உண்மைகள் தினந்தோறும் தவிக்கும்

அறியாத மாந்தரையும் அரசியல் பலதிசை இழுக்கும்

புரியாத பணமுடக்கம் புரிந்து கொள்ளப் பிடிக்கும்

குறையேதும் இல்லா வாழ்வொன்று உண்டோ

வரும் நாளை எண்ணி வாழ்ந்திடுவோம் நாமே.

 

Rali:

பதினெட்டு நேர்படி மீதுள்ளான் வாழ்த்த

பதினேழு நல்ல படியாய் அமைந்து

பதினாறு பேறுபெற்று இக்குழும அன்பர்

பதினைந்து பேர்களும் வாழி.

 

Rali:

பித்தனை நித்தமும் பாடி ஒருகடுகு

அத்தனை பக்தியேனும் பெற்றிட வேண்டுமெனும்

உத்தம லட்சியம் ஒன்றுநான்கைக் கொண்டயிப்

புத்தாண்டே ஓடி வருக.

.

VKR:

காலமெனும் சோலையிலே பூத்ததொரு புதுமலரோ

அன்றி நாட்குறிப்பில் கிழிந்ததொரு நாளேடோ

நம்பிக்கை வாழ்த்தெல்லாம் நட்பின் கடனோ

ஞாலமெல்லாம் வைபோகம் ஞாயமோ ஏமாற்றோ

கடந்துவிட்ட நாட்களுக்கு கடைசி நாளோ

மிஞ்சிவிட்ட நாட்களுக்கு முதல்நாள் தானோ

மாலையும் போனதிலே மயக்கமோ மற்றுமொரு

காலையும் வந்திடுமோ காண்.

 

Rali:

@VKR & Suresh:

யதார்த்தம் தினமும்நாம் பேசுவதால் இன்று

யதார்த்தம் மறப்போம் மறந்து கனவுப்

பதார்த்தம் சமைப்போம் உலகெலாம் மக்கள்

சதாமகிழும் புத்தாண்டு என்று.

 

நல்ல கவி

VKR:

சொல்லும் பொருளும் உடைத்தாயின் அதுவே

நல்ல கவியென் றுணர்.

 

Rali:

சொல்லும் பொருளும் உடைந்திருப்பின் அஃதேநம்

ராலியின் பாட்டென் றுணர்.

 

சொல்லும் இறையுணர்வும் கொண்டிடின் அஃதே

மிகநல்ல பாடல் உணர்.

 

சொல்லும் நயமுமில் லாதாயின் அஃதே

புதுக்கவி தையென் றுணர்.

 

BKR:

@ராலி

உண்மை உடைத்துரைக்க உன்போல் உலகினிலே

நண்பாயார் உள்ளார் நவில்?

 

Rali:

@BKR:

உண்மை உறுத்திடினும் ஆண்மைக் கழகந்த

உண்மையை ஒத்துக் கொளல்.

 

SKC:

மீசை கொண்டு பாரதியை முன்னறிதல் புதுக்கவிதை

ஓசையின்றி உட்பொருளை ஒரு வரியில் இங்கு

பேசுவதும் புதுக்கவிதை ஈசனையே எண்ணி இயம்பும் ஓம் புதுக்கவிதை

காசளவு நேசமெனக் கவிதைகள் வரக் கண்டு

மோசமெனச் சொல்வீரோ முழுவதும் புதுக்கவிதை

 

சிம்மராசி

பித்தன் 118.

சிம்மராசியில் பிறந்து சிம்மமாக வாழ்ந்து

சிம்மமாகவே மறைந்து

தம்மையே குடும்பம் ஏதுமின்றி நாட்டுக்கு

     அற்பணித்த

செம்மையான ஓர் அன்னையின் ஆன்மா

     சாந்தியடைய

நம் ராலி தமிழின்பம் சார்பில்  இறைவனை

     இறைஞ்சுவோம்.

 

Rali:

எல்லாம் அவன்செயல் என்பதை அன்றிவேறு

சொல்ல எதுவுமறி யேன்.

 

SKC:

கண்ணிமைக்கும் நொடியில்

காத்திருக்கும் மரணமென

கண் இமைக்காது அங்கு

காத்திருந்த மாந்தர் பலர்

மண் இருக்கும் வரை இவரின்

மாண்பிருக்கும் இந்தப்

பெண் உறக்கம் கொண்டதனால்

பிறர் உறக்கம் தொலைந்ததுவே.

 

VKR:

ஆநிரை குன்றாமல் அறுதொழிலோர் மறவாமல்

காவல் காத்தாள் அவள்.

 

உயிரிங்கு

SKC:

உறைத்தது உண்மை இன்று

உயிரிங்கு என்னதன்று

நரைத்திங்கு நானும் ஓய்ந்து

நலிந்தபின் மறைவதன்று

மரத்தினைக் குடைந்து இரையை

மரங்கொத்தி தேடும் அந்தக்

கருத்தினை மனதில் கொண்டு

கட்புலன் அடக்கி என்றும்

புறத்தினில் இறையைத் தேடி

பூசையே செய்ய எண்ணி

சிரத்தினால் உன்தாள் பணிந்து

சேவித்தேன் சிவனே உன்னை.

 

S K Chandraseka: @BKR

அறிந்தேன் தவறை அலையாய் மனதில்

விரிந்த எண்ண விதையின் வேகம்

சரியே என்றே கவியும் புனைந்தேன்

இருந்தும் நீரதை ஏற்றது மகிழ்ச்சி.

 

BKR:

@SKC

இனிதோ அன்றிக் கடிதோ எந்தன்

மனதில் தோன்றும் எண்ணம் மறைக்கா

துனக்கே உரைத்தேன் உடனே யானும்

முனியா தென்னை முழுதும் புரிந்து

கனிவோ டேற்று மகிழ்ந்தாய் உந்தன்

இனிய குணத்திற் கெந்தன் நன்றி!

 

கல்லால்

Suresh : கல்லா லடியுண்ட

கனிவான தெதுவோ

கல்லாத வேடன்கா

லணியான ததுவே

கல்லான களிறுக்கும்

கரும்பான அமுதே

கல்லா லடியமர்

குருவான பொருளே.

 

BKR:

வில்லேந்தும் விஜயனுடன் விளையாடும் விமலா

சொல்லாடிக் கீரனுடல் சுட்டதமிழ்ச் சிவனே

நில்லாத நதிசடையில் நிறுத்தியதத் பரனே

நல்லோர்கள் நலம்பெறவே நடனம்பயின் றருளே.

 

Suresh:

கல்லா லடியினி லமர்ந்தவ னவனே

நல்லோர் நலம்பெற  நடம்புரி சிவனே

நில்லா நதிசடையில் நிறுத்திய தத்பரனே

 

BKR:

ஒத்த மனம் கொண்டோரை

ஒன்றிணைக்கும் தளம் வாழ்க!

நூலிழையாய் நமையிணைக்கும்

ராலியெனும் கவி வாழ்க!!

 

ராலி ஒரு வான்கோழி

Rali:

மாசெல்லாம் மனத்தினில்

மிகவடைந்து மெள்ளவே

மலைபோலே வளர்ந்ததால்

மொத்தம் அத்தனையும்

மிஞ்சாமல் எரிக்கவே

மகாதேவன் மலைமகள்

மயங்கிடும் மணாளனே

மலையாக வாழ்ந்திடு்ம்

மலையாம் அண்ணாமலை

மீதேற்றிடும் கார்த்திகை

மங்களமாம் தீபமே.

 

BKR:

@ராலி

தான்தோன்றி யானசிவன் தங்கும் அருணையினை

தேன்தோய் தமிழாலே பாடியநீ – வான்கோழி

ஆகுவையோ? ஆறுமுகன் ஆசனமாய் ஆடிவரும்

தோகையையே தோற்கடித்தாய் நீ !

 

Suresh:

நான்குவரி கவியெழுத

நான்பட்ட பாடென்ன

வற்றாத அருந்தமிழில்

நற்றாள் தொழுதெழுந்த

நானூறு நற்கவிகள்

நாவூரும் தீங்கனிகள்

வான்கோழி யல்லநீராலி

முருகுநிறை மருகனவன்

அருகிலமர் வண்ணமயிற்

றோகை விரித்தாடு

இன்னும் கவிபாடு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s