Sep 15, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #16:

உன்னைச் சிறிதேனும்

      நம்பாது தன்செயல்

தன்னைநம் பும்கசிபு

      வையே கிழித்தநீ

உன்னையும் நம்பாது

      என்னையும் நம்பாத

என்னைக் கிழிப்பது

      என்று?

 

பித்தன் 32.

இச்சையுடன் பத்தினியை பக்கத்திலே நிறுத்தி

அச்சமின்றி அரிசிதனை இருவேளை தீயிலிட்டு

முச்சந்தியையும் முனகாமல் நீ முடித்தால்

மிச்சமுள்ள நாட்களை நீ மகிழ்ச்சியாக வாழ்ந்திடலாம்

 

பித்தன் 33.

(ஒரு கிராமத்தின் கற்பனை).

காவிரியில் நீராடி காலாற நான் நடக்க

ஆவியுடன் காபிதனை என் மனைவி தானளிக்க

ஆவிபறக்கும் செய்திகளை எந்தை தான்படிக்க

நீவிவிட்ட கூந்தலுக்கு எண்ணையை என் தாயளிக்க

கூவிவிற்கும் காய்கனியை என் அத்தை தான் வாங்க

தாவிக்குதித்து பாண்டியை என் மகளாட

பாவிப்பயல் படிக்காமல் மிதிவண்டியில் என் மகன் ஓட

காவிப்பல் தெரிய வெற்றிலையை என் பாட்டி இடிக்க

பாவிஎமன் வந்திடுவான் கூட்டுக்குடும்பம் தனைக்கலைக்க

கூவிடுவீர் அதற்குமுன் கோவிந்தன் நாமம் ஆயிரத்தை.

 

பித்தன் 34

பத்தாம் வயதினிலே குறும்புகளை நிறுத்தி

இருபதாம் வயதினிலே கல்விதனை கற்று

முப்பதாம் வயதினிலே அம்மிதனை மிதித்து

நாற்பதாம் வயதினிலே நன்மக்களை பெற்று

ஐம்பதாம் வயதிலே அளவுடன் பொருள் சேர்த்து

அறுபதாம் வயதினிலே அலுவலகம் தான் விடுத்து

எழுபதாம் வயதினிலே இந்திரியங்கள் பழுதடைந்து

என்பதாம் வயதை நான் அடையுமுன் எனைக்

காக்க ஒரு குரு வருவாரா எனக் காத்திருப்பேன் பக்தியுடன்.

 

பித்தன் 35.

பாசமுடன் பசு ஒன்று வளர்த்தேன் பால் அளித்தது

நேசமுடன் நாய் ஒன்று வளர்த்தேன் வீட்டை காத்தது.

தாஸனாக கிளி ஒன்று வளர்த்தேன் திரும்ப பேசியது

ஆசையுடன் காளை ஒன்று வளர்த்தேன் நிலத்தை உழுதது

எனை வளர்த்த இறைவனுக்கு நான் என்ன அளிப்பேன் நின்

நாமம்தனை ஜபிப்பேன் காத்தருள் புரிந்திடுவாய்.

 

SKC:

மெட்டுக்குப் பாட்டெழுதி

மீதியை நூலாக்கி

கட்டுக் கட்டாய் விற்கும்

கவிஞர்கள் நடுவினிலே

எட்டும் அறிவு வரை

ஏற்றமிகு தமிழில்

இட்டுக் கட்டி இங்கு

என்னால் இயன்றதனை

தொட்டெழுதப் பணித்தவனை

தும்பிக்கை நாதனை தலை

குட்டிப் பணிந்து

கும்பிட்டு அவன் தாளை

விட்டு விடாது என்

வினை தீர்க்கப் பணிந்திடுவேன்.

 

ராலி க. நி. தெக்காலம்  #389

காமமும் கோபமுமாய்ச்

    செல்லும் வாழ்வு

ஈமச்செயலுடன் முடியும்

    சட்டென சற்றும்

தாமதமிலாது நல்வழிநாட

    ராலி சடையுள்

சோமனை வைத்தானை

    வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #390

இயங்கும் பொருளில்

    எலாம் உள்ளிருந்து

மயக்கும் பொருளில்

    எலாம் உள்ளிருந்து

தயங்காது தருணத்தில்

    அருளும் அட்ட

புயங்கப் பிரானை ராலி

    பிடிப்ப தெக்காலம்?

 

BKR:

காரணமே இன்றிக் கருணைமிகக் கொண்டுநமைப்

பூரண மாக்கும் புனிதனவன் – நாரணனும்

நான்முகனும் காணாத சோதியாய்ப்  பூமியொடு

வான்முகமாய் நின்ற  சிவன்.

 

BKR:

தடியால் அடித்தாலும் நீர்விலகா தங்ஙனமே

படியாது பாய்மனமி ருந்தும் – அடியேனை

நாளுமே நீங்கார் குருநாதர் நானுமவர்

தாளினை நீங்குவதும் இல்.

 

BKR:

@SKC,

தும்பிக்கை யான்மீது

          நீங்காது நீவைத்த

நம்பிக்கை காக்கும் உனை

 

SKC:

@BKR !

வாழும் இவ்வாழ்வில்

வழி நடத்துவதென்னை

வேழ முகத்தோன் துணை

 

Rali:

@BKR

தளைபிழை நான்காணும்

      முன்நீ திருத்தல்

விளையாட்டோ உந்தனுக்கு

      சொல்.

 

Suresh:

தேடிப்பிடித்து சொல்போடு முன்னே

ஓடிப்பிடித்து குறைகூறல் என்னே

நாடிப்பிடித்து நல்லகவி யமுதம்

கூடிப்பருகி குலவுவோம் கண்ணே

 

Suresh:

ஓமென்ன ஒலியா சொல்லா அறிந்திலனே

நாமென்ன உருவா அறிவா தெளிந்திலனே

நீ எந்தன்  குருவா பரமா உணர்ந்திலனே

தாயென்றே அறிவேன் அரனே உன்சரணே.

 

BKR:

@சுரேஷ்

அரனைத் தாயென் றறிந்தபின் வேறு

அறிதற்கொன் றுண்டோ புகல்.

 

SKC:

வாடிய பயிர் கண்டு

வாடும் குணம் விடுத்து

மூடு பனி வாழ்வில்

முயங்கியே இம்மாந்தர்

ஓடி அங்கிங்கு

உடல் இளைத்தே அலைந்து

வீடு மனை வாங்கி

வீணடித்து தம் வாழ்வை

காடு வழி போகும்

காட்சியைக் கண்டு உனைத்

தேடியே சரணடைந்தேன்

தென்மதுரை நாயகியே !

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s