எது கவிதை?

எம்மாதிரி கவிதைகளை இந்த அரங்கு தமிழ்க்கவிதை என்று கருதுகிறது என்பதற்கான ஒரு விளக்கம்:

கவிதை கூடிய மட்டும் தமிழ் யாப்பிலக்கண விதிகளைப் பின்பற்றி இருக்க வேண்டும். “கூடிய மட்டும்” என்றால் கவிதை  இலக்கண விதிகளை பின்பற்ற முயற்சித்திருக்க வேண்டும். அல்லது எதுகை, மோனை எல்லாம் நயமாக இருக்க வேண்டும்.

தற்காலத்தில் “கவிதை” அல்லது “புதுக்கவிதை” என்று ஜனரஞ்சக இதழ்களில் வெளிவருவன பெரும்பாலும் இந்த அரங்கைப் பொறுத்தவரை கவிதை என்று ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.

எது தமிழ்க் கவிதை எது இல்லை என்னும் வழக்கில் கீழ்க்கண்ட “சர்ச்சை”யில் சோவின் கருத்தே இந்த அரங்கின் கருத்தும் ஆகும்.

 சோ மற்றும் கவிஞர் சுரதா இடையே நடந்த கவிதை சர்ச்சை!

(Refer:

http://www.vikatan.com/news/politics/74370-debate-on-poetry-between-cho-ramasamy-and-suratha.art)

அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர், நாடக எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதாசிரியர், நாவலாசிரியர் என பல்வேறு முகங்களைக் கொண்டவர் சோ. அரசியல், ஆன்மீகம், மத ஆச்சாரங்கள் பற்றி ஏராளமான விவாதங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கியவர் கவிதையையும் விட்டு வைக்கவில்லை.

1971-ம் ஆண்டில் வெளிவந்த ஆனந்த விகடன் இதழ்களில் கவிஞர் சுரதா, அவ்வப்போது நடக்கும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கவிதைகள் எழுதி வந்தார். அதை தொடர்ச்சியாக வாசித்த, சோ, சுரதாவின் கவிதையை விமர்சித்து வழக்கமான நையாண்டித் தன்மையோடு, “இதுதான் கவிதையா” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். அதற்கு, “பழுதென்ன கண்டீர் என் பாட்டில்” என்ற தலைப்பில் கவிஞர் சுரதா கவிதையாலேயே பதில் தந்தார். பல கவிஞர்கள் சுரதாவுக்கு ஆதரவாக எழுதத் தொடங்கினார்கள். அவர்களுக்கெல்லாம், “நாலு பேருக்கு நன்றி” என்ற தலைப்பில் பதில் கவிதை எழுதினார் சோ.

சோவின் நினைவாக, கவிதையைப் பற்றி நடந்த கவிதை சர்ச்சை மீண்டும்..!

19.09.1971 ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த “சோ”வின் கவிதை

இதுதான் கவிதையா

‘சோ’வின்(கேள்விக்) கவிதை

“கவிதை என்றால் என்னவென்று இத்தனை

நாள் சரியாக எனக்குப் புரியாமல் இருந்தது.

சில வாரங்களாக ஆனந்த விகடனில் சுரதா

எழுதிய கவிதை படித்தேன். கவிதையென்றால்

என்னவென்று இப்போது புரிந்தது.

 

எழுதுவதை எழுதிவிடவேண்டும்-எதுகை மோனை

நடை தாளம் எல்லாம் மண்ணாங் கட்டி!

மறக்காமல் ஒன்று மட்டும் செய்ய வேண்டும்

எழுதிய  ‘எஸ்ஸே’யின் வார்த்தைகளை உடைக்க வேண்டும்

வரி வரியாகப் பிரிக்க வேண்டும்! அச்சுக்கு

அனுப்ப வேண்டும் அதுதான் கவிதை.

 

வார்த்தைகளை உடைப்பதும் வரிவரியாகப் பிரிப்பதும்

கவிஞனும் செய்யலாம்! கம்பாஸிடரும் செய்யலாம்!

தற்காலக் கவிதைகளைத் தருபவர்  கவிஞரல்ல… கம்பாஸிடர்தான்

என்ற உண்மையை உடைத்துக்காட்டிய சுரதாவிற்கு நன்றி! விகடனுக்கு நன்றி!

 

கவிதை என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு

சுரதா சுலபமாக கவிதையெழுத கற்றுத் தந்துவிட்டார்

இதுவே அவர் பாணியில் நான் எழுதிய கவிதை!

மற்றவற்றை கம்பாஸிடர் கவனிக்க வேண்டுகிறேன்!

 

அதே இதழில் வெளிவந்த  சுரதாவின் பதில் கவிதை

பழுதென்ன கண்டீர் என் பாட்டில்?

சிலரெழுதக் கூடாது; மேடை ஏறிச்

சிலர்பேசக் கூடாது; சிறிதே கற்றுப்

பலரெழுதிக் கெடுக்கின்றார்! துக்ளக் என்னும்

பத்திரிகை நடத்திவரும் நண்பர் சோவோ,

அலைவரிசை வசனந்தான் கவிதை என்னும்

அவதாரம் என்றிங்கே வாதிக்கின்றார்!

தலைவரிசைக் கவிஞர்களைத் தாக்குகின்றார்

தாக்குமிவர் தாக்கெல்லாம் பள்ளத் தாக்கு!

தாக்குவதைத் தொழிலாகக் கொண்டு, இங்கோர்

தாள்நடத்தி வருமிவரோ, சொற்கள் சேர்த்து,

நேர்க்கோடு போலவற்றை அமைத்து விட்டால்,

நிச்சயமாய் அது கவிதை ஆகும் என்றே

ஊர்க்குருவி வேதாந்தம் பேசுகின்றார்.

உள்ள படி சொல்லுகின்றேன் துக்ளக் தோழர்,

பார்க்கின்ற பார்வைகளே சரியா யில்லை!

பாட்டென்ன, வசனத்தால் வளரும் கோடா?

 

யாரதிகம் கற்றவரோ அவரை யெல்லாம்

ஆதரித்தான் மகமது பின் துக்ளக். அன்று,

பேரதிகம் கொண்ட-இபன் படூடா என்னும்

பெருங்கவியை ஆத்தானப் புலவ ராக்கிச்

சீரதிகம் செய்தானாம்! இவரோ நன்மை

செய்வதுவாய்த் தெரியவில்லை! எனினும், ஏட்டில்

நாரதநா டகம்நடத்து கின்றார்! இந்த

நண்பர்க்குக் கவிதைபற்றிச் சொல்லு கின்றேன்.

 

மண் வேறு; மண்ணோடு கலந்தி ருக்கும்

மணல்வேறு; பனித்துளியும் மழையும் வேறு;

புண்வேறு; வீரர்களின் விழுப்புண் வேறு;

புகழ்வேறு; விளம்பரச்செல் வாக்கும் வேறு

எண்வேறு; நாமெழுதும் எழுத்தும் வேறு –

எழில்வேறு ;செயற்கைமுறை அழகும் வேறு.

கண்வேறு; கல்விக்கண் வேறு; கற்றார்

கவிநடையும் உரைநடையும் வேறு வேறு!

ஆக்கும்வரை நாமதனை அரிசி என்றும்,

ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்.

பூக்கும்வரை அரும்பென்றும், பூத்த பின்பே

பூவென்றும் சொல்லுகின்றோம். அதுபோல், சொல்லைச்

சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை

சேர்க்காமல், அடியளவை அறிந்தி டாமல்,

வார்க்கின்ற வடிவந்தான் வசனம். யாப்பில்

வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும்.

 

பழுத்திருந்தால் சாறு வரும்; வயலில் தண்ணீர்

பாய்ந்திருந்தால் ஏர்கள் வரும்; அதுபோல் இங்கே,

எழுத்திருந்தால் அசைகள் வரும்; இரண்டு சீரின்

இடைவெளியில் தளைகள் வரும்; தளைகள் சென்றே

அழைத்திருந்தால் அடிகள் வரும்; அடியின் கீழே

அடியிருந்தால் தொடைகள்வரும்; தொடைகள் நன்கு

செழித்திருந்தால் பாக்கள் வரும்; இவற்றை எல்லாம்

தெரிந்தவனே பாட்டெழுதிக் காட்ட வேண்டும்.

 

தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்;

சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்;

ஏமாந்தால் தளைதட்டும்; வெள்ளைப் பாட்டின்

இறுதிச்சீர்  காசுதரும்; செடியில் பூத்த

பூமீது வண்டுவந்து தங்கும்; நல்ல

புலவர்களின் பாடல்களில் கீர்த்தி தங்கும்;

சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம்

தமிழ்க்கவிதை தரவேண்டும் இந்த நாளில்!

 

ஆனந்த விகடனில்யான் எழுது கின்ற

ஆசிரியப் பாக்களிலே, எதுகை மோனை

ஊனமுண்டா? ஓட்டையுண்டா? கம்பாசிட்டர்

உதவியெனக் கெதற்காக? இவர்க்குச்  சொல்வேன்:

மீனெதற்குச் சைவனுக்கு? விளக்கைக் காட்ட

விளக்கெதற்கு? பாப்புனையும் நூல்கள் கற்றே

நானெழுதி வருகின்றேன். நீரூற்றாமல்

நகம்தானாய் வளராதா? வளரு மன்றோ?

 

என்பாட்டை இவர்படித்துப் பார்த்திட் டாராம்;

எழுதுதற்கு முயன்றாராம்; எழுதி னாராம்;

பொன்பாட்டாம் என்பாட்டோ, விளக்கின் உச்சிப்

புகைப்பாட்டாம்! புதுவசனப் போர்வைப் பாட்டாம் ?

என்பாட்டு வசனமென்றால், துக்ளக் தோழர்

எழுதுவது வசனமல்ல விசன மாகும்!

தன்பாட்டைத் திருத்தட்டும் முதலில்; பாட்டுச்

சண்டைக்கு வரட்டுமிவர் அதற்குப் பின்னர்!

 

ஆடுதற்குத் தெரியாத பருவமங்கை,

அழகான முற்றத்தைக் கோணல் என்றால்

வீடுகட்டி வைத்தவர்கள் சிரிப்ப தன்றி

வேறென்ன செய்வார்கள்? இலக்கியத்தில்

ஈடுபடா திருக்குமிவர் என்றன் பாட்டை

எடைபோட வந்துவிட்டார்! எந்த நாளும்

மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வ  தில்லை!

மாணிக்கம் கூழாங்கல் ஆவ தில்லை!

 

03.10.1971 இதழில் வெளிவந்த “சோ”-வின் பதில் கவிதை

 

நாலு பேருக்கு நன்றி

 

கவிதை என்றால் என்னவென்று தெரியாது

என்ற என் சுயசரிதையை சொல்லித்தான்

‘சுரதா’ கவிதையை கம்பாஸிடர் கவிதையா?

என்று கேட்டேன் நான்.

வரிந்து கட்டிக்கொண்டு இப்போது சுரதாவிற்கு

பரிந்து பேசும் கவிஞர்கள் என் கம்பாஸிடர்

கவிதையின் முதல் வரியை படிக்கவில்லை, வருந்துகிறேன்.

எழுத்தை எழுதுவதில்தான் அவசரம்

எழுதியதைப் படிப்பதிலுமா அது தேவை?

இலக்கண மென்றும், ஆசிரியப்பா வென்றும்

இலக்கியமென்றும், யாப் பென்றும்

தெரிந்தவர்கள் பேசினால் சரி; அதுவே

பிலாக்கண மாகும் தெரியாதவர் பேசினால்,

அவைபற்றி எழுதவில்லை நான்—-

தீதோ, நலமோ அவை நானறியேன்.

யாப்புமறியேன் நான், இவர்களைப்போல்

“டுப்பு மறியேன் நான்!

 

“பழுதென்ன கண்டீர் என் பாட்டில்?’

சுரதா கேட்கின்றார் — கேட்கட்டும்

பாட்டல்ல உமது கம்பாஸிடர் கவிதைகள்

அழுதென்ன பயன், நான் கண்ட குற்றம் அதுவே!

 

தளை, சீர், அசை, தொடை, அடிகள்,

என்றோரிடத்தில் மார் தட்டும் சுரதாவிற்கு

களை கட்டும் பதில் சொல்ல விரும்பி

சான்றோர் ஒரு புலவரிடம் சென்றேன்.

 

இலக்கணம் முறையாகப் பயின்றவர்

விளம்பரம் அவ்வளவாக இல்லாதவர்

பாவேந்தனாவார் என்று பாரதிதாசனால்

போற்றப்பட்ட புலவர் அவர்

‘கோ வேந்தன்’ எனும் பெயருடையார்

தூற்றுகிறார் கம்பாஸிடர் கவிதையை

தாங்குவது எழுதியவர் பொறுப்பு

ஏங்குவது யாரோ எனக்கென்ன தெரியும்?

 

“பாப்புனையும் நூல்கள் கற்றே

நான் எழுதி வருகின்றேன்’ என்பது சுரதா கூற்று

‘யாப்புச் சிதைவு, மொழி நுட்பம் தெரியாமை, இவை

முறையான பயிற்சியின்மைக்கு சான்று’ இது கோவேந்தனார் கூற்று.

“ஆசிரியப் பாவிற்கு உரிய ஒசை ஒன்றுண்டு

அது அகவலோசை. 5-9-71 சுரதா கவிதையில்

ஓர் அடியிலும் காணவில்லை, அந்த இனிய ஒசை!

முப்பத்துமூன்று அடிகளை உடைய சுரதாவின் அகவற்பாவில்

இருபத்தேழு காய்ச்சீர்கள் வேற்றொலிக்கு வித்திட்டு

யாப்போசை வீணையோடிசைக்கும் பறையோசையாயிற்று

ஆகையால் அது ஆசிரியப்பா இல்லை!

 

காய்ச்சீர் மிக இருப்பினும்

தளைதட்டுவதினால் செப்பலோசையுடைய

பஃறொடை வெண்பாவும் இல்லை.”

 

இது கோவேந்தனார் கண்ட குற்றம்!

இது மட்டுமல்ல அவர் கண்ட குற்றம்

கூண்டில் நிறுத்தி விட்டார் சுரதாவை!

 

“தலைமை உரையில் கண்கெட்ட குருடரின்

நிலையை விளக்கி நெடுநேரம் பேசினர்”

என்கிற சுரதாவின் அடிகளில்

மோனையின் ஊனமுண்டென்பதை

சுரதா அறியட்டும் என்றும் சாடுகிறார் கோவேந்தனார்!

 

மரபு விலகி சுரதா போட்ட சொற்களை

சுட்டிக் காட்டியிருக்கிறார் கோவேந்தனார்

பிழைத்துப் போகட்டும் கவிஞர் என விட்டு விடுகிறேன் அவற்றை:

 

‘பிறமொழிப் பெயர்களை தமிழில் எழுதும்போது

தற்சமம், அல்லது தற்பவத்தில் எழுத வேண்டும்’

கோவேந்தனார் கற்றுத்தரும் பாடம் இது

சுரதா மறந்து விட்டார் இதை 5-9-71 கவிதையில்.

 

ஆசிரியப்பாவின் இறுதிச் சொல் ‘ஏ, ஒ’ என்ற

ஒசை கொண்டு முடிவதுதான் மரபு.

‘வந்தது’ என்ற உரைநடை முடிவை

தந்திருக்கிறார் அதே கவிதையில் சுரதா

மொட்டையாக ஏன் முடித்தார்-பாட்டிலக்கணம் தெரியாதோ!

 

‘ஏமாந்தால் தளை தட்டும்’ என

எழுதத் தெரிந்தது சுரதாவிற்கு

ஏமாந்தாரோ, ஏமாற்றுகிறாரோ

தளை கழன்று தன் பாட்டு ஒடுவதை காணவில்லை அவர்!

 

19-9-71-ல் அவரே எழுதிய எண்சீர் விருத்தம்

நான்காம் பாட்டில் அவர் தலையையே தட்ட

தளைகள் கழண்டு ஒடுவதை யார் எடுத்துச் சொல்வதோ!

இதுவும் கோவேந்தனார் கண்ட குற்றமே-மேலும்

கூறுகிறார் அந்த கற்றறிந்த புலவர்

 

எண் சீர் விருத்தத்தில் ஓரசைச்சீருக்கு

இடமே இல்லை. சுரதா 19-9-71-ல் கவிதையில் நான்காம் பாட்டில்

நான்காம் வரியிலும், முன்றாம் அடியில்

நான்காம் சீரிலும் ஓரசையே நிற்கிறது.

 

இலக்கண மறியாமையே காரணமன்றோ?

கேட்பது நானல்ல–கோவேந்தன்.

 

‘மாடுமுட்டி கோபுரங்கள் சாய்வதில்லை’

என்ற கூற்றிலும் கூடவா தவறு?

மாடு ஒருமை – கோபுரங்கள் பன்மை

ஏனிந்த முரண்பாடு, ஐயா சுரதா?

 

கோவேந்தனார் கூறியவை இருக்கட்டும், சுரதா

‘சோ’ வேந்தனாக்கி விட்டாரேஎன்னை இப்பிரச்னையில்

மாணிக்கம் கூழாங்கல்லாவதில்லை என்று

சுரதா பாடியது என்னைப்பற்றித்தான்

இருக்க வேண்டும் என்பது இப்போதறிந்தேன்

மனம் விட்டுப் பாராட்டிய கவிஞருக்கு மனமார்ந்த நன்றி!

சுரதாவின் பாடல்களில் குற்றம் கண்டது

கோவேந்தன் – நானறியாத குற்றங்கள் அவை

“தரதரா’ வென எழுதி விட்டால் கவிதையா

சுரதா அதற்குத் தேவையா,

அச்சுக்கோப்பவர் போதுமே’ என்பதே நான் கேட்ட கேள்வி

 

இது கேட்ட கவிஞர்கள் ‘இலக்கணம், இலக்கியம்

அது இது’ வென படை திரண்டு வந்தனர்

அச்சமில்லை என எண்ணியே புலவர்

கோவேந்தனிடம் சென்றேன் — குற்றங்கள் காட்டி விட்டார்!

மிச்சமிருக்கின்றனபல குற்றங்கள்-எழுத இடம்தானில்லை.

வாலி, சுப்பு, லட்சுமணன் என்று வந்து

எண்ண முடியாத வார்த்தைகளை எழுதிக் கொட்டியுள்ள

கவிஞர்களுக்கு ஒரு சில வார்த்தைகள்

 

ஐயா கவிஞர்களே! நீவிர் ஏன் ஒன்று

சேர்ந்தீர்? இலக்கணமறியாத என்னைக்கண்டு

‘தையா தக்கா’ என்று குதித்தீர்

நான் கண்ட ஒரே குற்றம் சுரதாவின் பாட்டு 

உரைநடை என்பதே! கம்பாஸிடர் கவிதை என்பதே!

சுரதா மட்டும் சுமந்துவந்தார் கம்பாஸிடர் கவிதை ஒன்றை

‘சேர்ந்தே சுமப்போம் என்று சேர்ந்தீரே மூன்று கவிகள்

சுரதாவோடு மூவர் சேர்ந்து நால்வர் ஆனிர்:

சுமந்து வந்தீரே நால்வரும் சேர்ந்து

கம்பாஸிடர் கவிதையைத்தான் – உங்கள் தோள்மீது!

 

ஐயா நால்வரே, நீவிர் கண்ட பலன் என்ன? நால்வர்

சுமந்தால் சென்றிடும் இடம் எது?

சிந்தித்துப் பார்க்காமல் ஏன் சுமந்தீர் ஐயா?

நால்வரும் சுமந்து அக்கவிதையை எக்கதிக்கு

கொண்டு போய் விட்டீர்! நால்வர்

சுமக்கலாகாதய்யா எதையும்!

அது சரி, கோவேந்தன், சுரதாவின்

பாட்டை மட்டும் படிக்கவில்லை. உங்கள்

மூவர் பாட்டையும் படித்து விட்டார்! – நான்

 

என்ன செய்ய?

 

சீற்றம் கொண்டெழுந்த மூவர் பாடல்களிலும்

குற்றங்கள் கண்டிருக்கிறார் கோவேந்தன்

அறிந்து, திருந்த வேண்டுமென்றால்,

அவர் அட்ரஸ் கேளுங்கள் தருகிறேன்

தெரிந்து சென்று பிழை திருத்தி வாருங்கள்—-

என் பாட்டில் குற்றம் கண்டு பயனில்லை!

நான் கவிஞனல்ல; எழுதியது கவிதையென்று

மார் தட்டவுமில்லை நான்! என்

குற்றங்களுக்கு கோவேந்தனும்

பொறுப்பல்ல – அவரிடம் நான் கவிதை

கற்கவில்லை – சுரதாவின் குற்றங்களையே கற்றேன்

 

சுரதாவை மதிக்கிறேன் – நான்

அவர் கவிதைகளை மதிக்கிறேன்

ஆனால் சமீபத்தில் அவர் எழுதிய கவிதைகள்

கம்பாஸிடர் கவிதைகளே! இது என் கருத்து – மாற்றமில்லை.

 

“தமிழ் மகளின் முக மலரில் ஏற்பட்ட

தீப்புண் ‘சோ’ வின் பாட்டு” என்று வாலி கூறுகிறார்

தமிழ் மகளின் முக மலரில் ‘கம்பாஸிடர் கவிதை’

என்ற நோய் வந்தது- என் பாட்டு என்ற

தீப்புண் தேவைப்பட்டது.

நோய் தீர்த்த எனக்கு தமிழ் மகள்

நன்றி கூறுவாள்.

 

“கவிபோற்றும் நாமெல்லாம்

கை கட்டி நிற்பதுண்டோ’ என்கிறார் வாலி

கை கட்டி நின்ற கவிஞரை யெல்லாம்

தோள் தட்டி வரச் செய்தது என் வெற்றி!

 

ஜாம் பஜார் ஜக்கு பற்றி பாடியவரை

கவிதை பஜாருக்கு இழுத்து வந்தேன் அது என் வெற்றி!

“மோதுவது யாருடனே என்பதுதான் வாதம்”

என்பது வித்துவானின் வாதம் – அது வெறும் முடக்கு வாதம்

“மோதுவது எந்தக் குற்றத்தைக் கண்டு?’’

என்பதுதான் என் வாதம் – அது பிடிவாதமா?

நெற்றிக்கண் காட்டினும் குற்றம், குற்றமே

நாலு கவிகள் புறப்பட்டு வரினும்

நான் கண்ட கவிதை, கம்பாஸிடர் கவிதையே!

 

Advertisements