Featured

Welcome

cropped-tamil2Welcome to ராலி & தமிழ் இன்பம் – a blog dedicated to original Tamil poetry written by members of a WhatsApp group with the same name, on Hindu devotional/religious topics, adhering to Tamil Poetry grammar as much as possible.

Guidelines followed by the members of this WhatsApp Group:
• Contributions should, for the most part, comply with Tamil Poetry Grammar(யாப்பிலக்கணம்)
• Original contributions only.
• No forwards
• Subject should be Hindu devotional/religious/philosophical
• In addition to original contributions, members can post one “படித்ததில் பிடித்தது” piece of poetry that they like. Such postings should be prefixed with the tag “#ப.பி” . Only one “#ப.பி” posting per day per member

Postings of members of the ராலி & தமிழ் இன்பம் WhatsApp group post will be reposted here.

If you are interested in contributing, you will have to become a member of the ராலி & தமிழ் இன்பம் WhatsApp group. To do so, please indicate so in a comment here.

Advertisements

ராலியின் வேண்.க. கலித்துறை முயற்சி #1:

வேதம் வகுத்த வியாசரே

    சொல்ல எழுதியவர்

நாதன் மடியில் அமரும்

    அழகு மதக்களிறு

பேதம் எதுவும் இலாதே

    அனைவரும் வேண்டுவது

பூத கணங்கள் வணங்கிடும்

    துண்டி கணபதியே.

 

ராலியின் வேண்.க. கலித்துறை முயற்சி #3

காலத்தைத் தின்னும் கருணைக்

    கடவுள் சிதம்பரமே

ஞாலத்தைப் பெற்று வளர்த்து

    அழிக்கும் சிதம்பரமே

நீலத்தைக் கண்டத் தணியும்

    இறைவன் சிதம்பரமே

மூலத்தை ஆளும் புரியா

    புதிரும் சிதம்பரமே.

 

 

ராலியின் வேண்.க. கலித்துறை முயற்சி #4:

தங்கை கணவன் தலையை

    அறுத்து எறிந்திடுவீர்

மங்கை பிறந்ததன் வீட்டுக்குச்

    செல்லத் தடுத்திடுவீர்

கங்கையை ஊர்முன்னே கைசேரா

    தேநீர் ஒளித்திடுவீர்

நங்கை களையேனோ இப்படிப்

    பாடாய்ப் படுத்துவீரே.

 

 

ராலியின் வேண்.க. கலித்துறை முயற்சி #5

நங்கை திருமணத் தன்றவள்

    நீள்முடி கேட்டிடுவீர்

பொங்குநீர் கொள்ளமண் சேர்க்காது

    பெண்ணையே மாற்றிடுவீர்

மங்கைக்குத் தாலிகட் டும்முன்னே

    கல்யாணம் நிறுத்திடுவீர்

எங்குமே பெண்களை ஏனோநீர்

    பாடாய்ப் படுத்துவீரே.

:

ராலியின் வேண்.க. கலித்துறை முயற்சி #6:

உலகெலாம் பெற்று வளர்த்து

    அழிக்கும் நிலைப்பொருளே

நிலவினை பாதி தெரிய

    அணியும் வலமுறையே

வலம்வரத் தன்னிரு மைந்தரைச்

    சொன்ன குலநிதியே

குலம்தந்து ஞான நிலையும்

    தருமென் உலகொளியே.

 

 

Nov 2017 – Rali – Ekkalam

ராலி க. நி. தெக்காலம்  #469

ஆராலும் அறியவொணா

      அரும் பொருள்

தீராக் காதலால் அறியும்

      அருட் பொருள்

பேராயிரமான பொருளறிய

      நீள் சடைமுடி

நீரானை ராலி

      நினைப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #470

அலையாய் எழும்

      ஞாலத்துள் அசையா

சிலையாய் மோனத்தில்

      மகிழுமோர்

தலைவனைத் தேடியறிய

      கைலாய

மலையானை ராலி

      மெச்சுவ தெக்காலம்?

 

 

Nov 2017 – Rali – Venpa

ராலியின் வேண்வெண் முயற்சி #576:

பிள்ளைக் கறிகேட்க

    ஈசனே எப்படி

உள்ளம்தான் வந்தது

    உன்செயல் ஊரினில்

உள்ள புராணத்தில்

    இல்லாப் புதுவழக்கம்

பிள்ளையை வெட்டுதல்

    செய்வதார் என்றெண்ண

மெள்ள நினைவினில்

    வந்தது நீசொந்தப்

பிள்ளைத் தலைகொய்த

    சேதி.

 

 

அழையாத பேய்மழை தந்தெங்கள் எல்லாப்

பிழையும் கழித்திடுவாய் போற்றி.

 

வானாகிக் கோனாகித் தேனாகி ஊனாகித்

தானாகி யோனுனைக் காப்பான்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #577:

முந்தியவன் பாபுனைய

    உந்தியவன் முக்கால

சந்தியவன் கங்கைநீர்

    சிந்தியவன் நல்லோரின்

புந்தியவன் வேதவீணைத்

    தந்தியவன் முத்தொழிலில்

பிந்தியவன் ஆஞ்சநேய

    மந்தியவன் நாதனும்

நந்தியவன் காளையும்

    அந்தியவன் ஐங்கர

தொந்தியவன் அப்பனடி

    போற்றி.

(அந்தியவன் = நெருங்கியவன்)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #578:

ஆணவம் நீயடக்க

    வந்திடுவாய் இந்திரன்

ஆணவம் தட்சனின்

    ஆணவம் கீரனின்

ஆணவம் நான்முகன்

    ஆணவம் ஆழியின்

ஆணவம் மாமுனி

    ஆணவம் ஏமனின்

ஆணவம் ராவணன்

    ஆணவம் நானுமிங்கு

ஆணவம் பெற்றால்

     அடக்கநீ வருவாயே

ஆணவம் பெற்றிடச்

    செய்.

 

கந்தனும் அண்ணனும்

    நந்தனும் போற்றிடும்

சுந்தரன் வாழ்த்திட

    வாழி.

 

ஆவென்று வாய்பிளக்க நான்பார்க்க அந்தாதி

பாவென்று பாடிய பாவலன் நீயென்னை

வாவ்வென்று சொல்வதோ சொல்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #579:

இப்போது வாழ்த்தவோர்

    எண்ணம் உதித்தது

அப்பனே வாழ்த்தினேன்

    ஏற்றுக்கொள் ஏற்றதைத்

தப்பாமல் என்கணக்கில்

    சேர்த்துக்கொள் என்மனம்

எப்போது மாறுமோ

    நானறியேன் மாறிநான்

தப்பாய் உனையெண்ணித்

    தூற்றிடலாம் என்பதனால்

அப்போதைக் கிப்போதே

    சொன்னேன்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #580:

பேறானான் கங்கைநீர்

    ஆறானான் நற்சமயம்

ஆறானான் தீச்சுடலை

    நீறானான்  அண்டத்தின்

ஈறானான் வீரத்தில்

    ஏறானான் மங்கையோர்

கூறானான் வேதத்தின்

    சாறானான் நாமுண்ணும்

சோறானான் நூற்றுக்கு

    நூறானான் மாயைக்கு

வேறானான் சேவடி

    போற்றி

 

ராலியின் வேண்வெண் முயற்சி #581:

பாதிதான் கொண்டீர் தலையில் பிறைமதி

பாதிதான் கொண்டீர் உடம்பில் மலைமகள்

பாதிதான் கொண்டீர் உடம்பில் திருமாலை

பாதிதான் உண்டீர் திருப்பாற் கடல்நஞ்சு

பாதிதான் கண்டீர் அடியார் திருமணம்

பாதிதான் தந்தீர் அவரது கண்பார்வை

பாதிதான் செய்வீர் படைத்தழிக்கும் வேலையை

பாதிதான் செய்வீர் எதையும்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #582:

ஆட்டுவான் ஓட்டிலுண்டி

    ஈட்டுவான் பக்தியை

ஊட்டுவான் நல்வழி

    காட்டுவான் இன்னிசை

கூட்டுவான் ஆகமங்கள்

    தீட்டுவான் அன்பரிடம்

மாட்டுவான் பாலனாயுள்

    நீட்டுவான் நல்வீணை

மீட்டுவான் பார்நிலை

    நாட்டுவான் ஊழித்தீ

மூட்டுவான் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #583:

ஊரறிய ஈசனின்

    பாடலைத் தப்பென்றாய்

கோரகோரன் தன்நெற்றிக்

    கண்திறந்தும் குற்றமென்றாய்

நேரடியாய் ஈசனே

    கற்றுத் தரவிடாது

நீரடக்கும் குள்ளமுனி

    வாய்த்தமிழ்க் கற்றிடுவாய்

கீரனே நீயன்றோ

    வீரன்.

 

நம்கையில் இல்லைகாண்

    வாழ்வின் நிகழ்வேதும்

நம்கையில் உண்டுநம்

    செய்கை.

 

என்சாரம் உண்டெனினும்

    உன்சாரம் நன்றென்றும்

சம்சாரம் இன்றில்லை

    வாழ்வு.

 

நாரணன் தங்கையாம்

    வாரணன் அன்னையாம்

ஆரணங்கு வாழ்த்திட

    வாழி

 

ஆரணங்கு தேவியின்

    அம்சமே கட்டியநாம்

வேறணங்கைக் காணா

    தவரைநாம் கண்டாலோ

போரணங்கு ஆவாள்

    அவள்.

 

ஆசுதோஷி யாமவன்

    கூசுமின் தேவியண்ணன்

வாசுதேவன் அன்பனவன்

    வீசுதென்றல் போன்றவன்

தூசுமின்றிக் கொல்பவன்

    பூசுநீறில் வாழ்பவன்

மாசுமறு நீங்கியவன்

    பேசுதமிழ் தந்தவன்

பாசுபதம் ஏந்தியவன்

    போற்றி.

 

கல்யாணம் ஆனதும்

    காட்டுக்குப் போவென்ற

கல்மனம் கொண்டகுலம்

   பற்றிநான் பாடவோ

தில்லில்லை நண்பாநீ

    அன்றோ ஒருராமன்

கல்யாண ராமன்நீ

    பாடு.

 

நளாயினி husband புலம்பல்:

ஈரணங்கு கொள்வதே

    ஆண்கள் வழக்கமன்றோ

நாரணன் மால்மருகன்

    ஆதவன் சந்திரன்

கோரகோரன் அன்பனாம்

    சுந்தரன் அர்ஜுனன்

சோரன் யதுநந்தன்

    என்றெல்லா ஆண்களுமே

ஓரணங்கா கொண்டனர்

    ஏதோயென் பூர்வகதி

கோரநோய் உற்றேன்

    பழிசொல் லலாமாநீர்

ஓரவஞ்ச னையாயென்

    னையே.

 

இல்லாளைப் பாடுகையில்

    பொல்லாங்கு கூறினால்

பல்லேதும் மிஞ்சுமோ

    என்றுசொல்லி பூமியில்

வல்லாரும் அஞ்சுவர்

    என்றிருக்க இங்குநம்

இல்லாளைப் பொல்லாங்கு

    சொல்வோமோ நாம்மறந்தும்

தில்லாங்கு தீந்திமி

    தோம்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #589:

பெண்ணையே பாடுங்கள்

    இல்லையேல் உள்மனத்துப்

புண்ணையே பாடுங்கள்

    இல்லை அனந்தமாம்

எண்ணையே பாடுங்கள்

    இல்லையேல் நீலமேக

விண்ணையே பாடுங்கள்

    இல்லை இறைக்கடைக்

கண்ணையே பாடுங்கள்

    இல்லைகண் ணன்தின்ன

மண்ணையே பாடுங்கள்

    எல்லோரும் ஏதேனும்

பண்ணையே பாடுங்கள்

    இங்கு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #590:

ஆடுமண்ணல் யானைக்காய்

    ஓடுமண்ணல் தங்கையை

நாடுமண்ணல் பார்வதி

    கூடுமண்ணல் காலனைச்

சாடுமண்ணல் கொன்றைப்பூ

    சூடுமண்ணல் சட்டங்கள்

போடுமண்ணல் அண்டத்தை

    மூடுமண்ணல் கௌரிக்காய்

வாடுமண்ணல் நால்வரும்

    பாடுமண்ணல் ஞானியர்

தேடுமண்ணல் சேவடி

    போற்றி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #592:

ஆண்டவன் உள்ளான்

    இரணியன் போலின்று

ஆண்டவனெங் கேயென்று

    கேட்போரும் உள்ளனர்

வேண்டிய தூண்களும்

    உண்டு இனிவர

வேண்டுவது அச்சிறுவ

    னே.

 

நரஹரியைப் பாடினீர் நன்றாய் இகமும்

பரமும் மகிழ்ந்தே இருப்பீர்.

 

தியானம் தராது அமைதி எவர்க்கும்

தியாகம் தருமே அமைதி.

 

தரகனா வேண்டும் இறைவனைக் காண

நரர்நேரே செல்லலாம் அங்கே.

 

ஆரணங்கை அண்டினீர்

     என்றும் அருள்வாள்சம்

பூரணி ராணி

    அவள்.

 

எப்போதும் நம்முடன் கொள்ள இயலாத

எப்பொருள் மீதுமாசை கொள்வது வீணேகாண்

அப்பொருளைக் கொள்வதும் வீணே.

 

தீராதே ஏழ்மை பணத்தால் பணத்தின்மேல்

தீராத ஆசை ஒழித்திட்டால் மட்டுமே

சாராது போகுமாம் ஏழ்மை.

 

எண்ணிய வண்ணமே எல்லாம் நடந்திட

எண்ணும் வரையில்லை சாந்தி.

 

ஆசை அறுத்தல் தருமின்பம் இல்லையே

ஆசை நிறைவே றினால்.

 

அரிதெங்கும் சீடன் குருவன்று எங்கும்

அரிது பணிசெய்வோர் மேலாளர் அன்று

அரிதெங்கும் பக்தனிறை யன்று.

 

போகம் தனக்கு சுகவாழ்க்கை வேண்டுதல்

யோகம் பிறருக்காய் வேண்டல்.

 

யோகியாய்ப் பாதிபோகி யாய்மீதி உள்ளவர்

போகியே ஆவாருண் மையில்.

 

முடியாத துண்டோ இறைவனுக்கு உண்டு

அடியாரைத் தள்ளி இருத்தல்.

 

ஆசை அறுமின்னா

    சையறுமின் நன்றறுமின்

ஆசையீ சன்பாலே

    ஆயினும் என்றறைந்து

ஆசை விடச்சொன்ன

    நம்திரு மூலருக்கு

வீசை பெறுவரோ

    மாமிசம் தின்றுதலை

மீசை மழித்திடும்

   ‌பௌத்தர்.

 

புவிபோற்றும் கொல்லாமை

  ‌‌சொன்னபுத் தரைத்தான்

அவித்திறைச்சி தின்பரவர்

 ‌‌‌சீடர்.

 

யுகந்தோறும் மாறும்

    தருமம் சிறிதாய்

இகவாழ்வில் ஆடு

    அசுவம் இடுவர்

ஜகம்காக்க அந்தணர்

    அன்று சமைத்து

சுகம்காண அன்று

    அவர்யாகம் காக்கும்

முகமறியும் வைரிகொல்ல

    கொள்வார் படையை

முகமில்லா வைரிக்கு

    யாகம்.